இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 262 )

0

அன்பினியவர்களே!

அன்பின் இனிய வணக்கங்கள். இதோ அடுத்த மடலுடன் உங்களுடன் உறவாட முனைகிறேன். நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது வாழ்க்கை ஓடிக் கொண்டேயிருக்கிறது. ஓடும் வேகத்தை எமது வசதிக்கு ஏற்ப குறைக்கவோ அன்றி கூட்டவோ எம்மால் முடிகிறதா? தானே தன்வழிக்கு ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வினை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது போன்ற ஒரு பிரமையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுக்கு எதிர்த்திசையில் நடந்து அடுத்த கரைக்குப் போவது மிகவும் சிரமமானது அதேபோல ஆறு ஓடும் திசையிலே அதன் போக்கிலே போய் அடுத்தகரைக்குப் போவது இலகுவானதும் எம்மால் அனுபவித்து பயணிக்கக் கூடியதுமாகும். அதுபோல ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் திசையில் அதற்கேற்ப எமது இலட்சியங்களை வகுத்துக் கொண்டு வாழ்வது எமது வாழ்க்கைப் பயணத்தை இலகுவாக்குகிறது.

எனது இவ்வார மடல் எதற்காக இத்தகைய பாதையினூடு தனது பயணத்தை ஆரம்பிக்கிறது எனும் ஐயம் ஏற்படுவது இயற்கையே! இன்றைய வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பலரும் தம் வாழ்வின் நிலைபற்றிச் சலித்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களேயன்றி வாழ்வினை எண்ணி மகிழ்வுடன் அதைப்பற்றிப் பிரஸ்தாபிப்பவர்கள் மிகவும் சொற்பமானவர்களே! எதிர்பார்ப்பவை எல்லாம் எதிர்பார்க்கும் வேளையில் எதிர்பார்க்கும் வகையில் நடந்து விட்டால் இன்றைய உலகு இத்தகைய ஒரு வளர்ச்சியைக் கண்டிருக்குமா என்பது சந்தேகமே! எத்தனையோ விஞ்ஞானிகளும், அவர்களின் கண்டுபிடிப்புகளும் எதிர்பாராத வகையிலேயே நிகழ்ந்திருக்கின்றன. பாடசாலையிலிருந்து நீக்கப்பட்ட ரிச்சார்ட் பிரான்சன் இன்று வெர்ஜின் எனப்படும் பல்துறை நிறுவனத்தின் முகவராகவும், ப்ரித்தானிய தொழிலதிபர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பதுவும் அவரால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டதொன்றல்ல. இன்றைய முன்னணி சப்ட்வெயர் கம்பெனியான மைக்ரோசாப்ட் பற்றி “Accidental Empire ஆக்ஸிடென்டல் எம்பயர் ” எனும் நூலே வெளிவந்துள்ளது.

எமது கண்முன்னாலேயே இத்தகைய சலிப்பான வாழ்வாகத் தொடங்கிப் பின்னர் மாபெரும் வெற்றிக்கதைகளை உருவாக்கியவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தகைய நிலையில்தான் இன்று நான் வாழும் இந்த இங்கிலாந்து நாட்டிலும் பலரின் பேச்சுக்களிலும் ஒரு சலிப்புணர்வு தட்டுப்படுகிறது. “ப்ரெக்ஸிட்” என்று பிரித்தானிய மக்களால் எடுக்கட்ட முடிவின் மீதான முன்னுக்குப்பின்னான, முரணான வாதங்கள் ஓய்ந்த பாடில்லாமல் ஊடகங்களில் அலைமோதிக் கொண்டிருப்பதே மக்களை இத்தகைய ஒரு சலிப்பினை நோக்கித் தள்ளிவிடுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா எனும் சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருக்க வேண்டும் என்றே வாக்களித்தவர்களில் நானும் ஒருவன். என் போன்றவர்களுக்கு அச்சர்வஜனவாக்கெடுப்பின் முடிவு ஒரு மாபெரும் ஏமாற்றமாக இருந்தது என்பது உண்மையே. இவ்வேமாற்றம் கொஞ்ச காலத்துக்கு ஒரு கசப்புணர்வாக இருந்ததும் உண்மையே! ஆனால் ஜனநாயக முறையில் மக்கள் எடுத்த பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்படுவதே ஒவ்வொரு நல்ல குடிமக்களின் கடமையாகும். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 2019ஆம் ஆண்டு மே மாதம் வெளியேறுவது தவிர்க்கப்பட முடியாத உண்மை.

இதை ஒரு பகுதியினருக்கு மற்றைய பகுதியினரின் மீதான வெற்றி என்று கூச்சலிடுவதையோ அன்றி நாம் தோற்று விட்டோம் எனும் வகையில் ஒதுங்கிக் கொள்வதையோ விடுத்து எமது நாடு தனது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை நோக்கி எடுக்க வேண்டிய ஒரு முக்கியமான முடிவினைச் சரியான வகையில் எடுக்க நாமனைவரும் எவ்விதம் எம்மாலான முழுப் பங்களிப்பையும் செய்வது எனும் வகையில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதே இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவையாகிறது. எடுக்கும் முடிவு சரியானதாக இருக்க எமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்க வேண்டியது எத்தனை முக்கியமோ, அரசு எதிர்நோக்கும் இடர்களை தீவிரப்படுத்துவதன் மூலம் இவ்வரசைக் கவிழ்த்து மீண்டும் ஒரு தேர்தலை உருவாக்கி நாம் பதவிக்கு வரவேண்டும் எனும் நோக்கில் எதிர்க்கட்சிகள் செயற்படுவது எமது நாட்டு முன்னேற்றத்துக்கு குந்தகம் விளைவிப்பதாகவே அமையும்.

ஒரு தேர்தல் ஏற்பட்டு எதிர்க்கட்சியாக இருக்கும் லேபர் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுகிறது என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொள்வோம். அதுவும் இந்த “ப்ரெக்ஸிட்” எனும் சிக்கலான தீர்வுக்கு விடைகாண வேண்டிய நிலையையே எதிர்நோக்கும். மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஜனநாயக அரசியலை முன்னெடுக்கும் அனைத்துக் கட்சிகளினதும் கடமையாகும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமுன் அதிர்ச்சிகரமான தாக்கத்தின் விளைவை எவ்வகையில் மிகவும் குறைந்த அளவுக்கு எதிர்கொள்ளலாம் என்தற்கான ஆலோசனைகளை ஆக்கபூர்வமாக வழங்குவதே இன்றைய எதிர்க்கட்சிகளின் புத்திசாலித்தனமான முன்னெடுப்புகளாக இருக்கும். இன்றும் இந்த இருபக்க வாதங்களிலும் மிகவும் தீவிரவாதப் போக்குகளைப் பிரஸ்தாபிக்கும் அரசியல்வாதிகளும், அரசியல் விமர்சகர்களும் இருக்கிறார்கள். இத்தகையோர் தமது சுயவிளம்பரத்துக்காகவும், தமது கொள்கைமீதான முரட்டு ஆதரவினாலும் சமுதாயத்தில் ஒன்றிணைந்து வாழும் பல்லின மக்களுக்கிடையிலான பேதங்களை விரிவாக்குகிறார்கள், விரிவான பேதங்களை மீண்டும் ஓர் இணைவான கோட்டிற்குக் கொண்டுவருவது எத்தனை சிரமம் என்பதனை இவர்களுக்கு வரலாறு எடுத்துக்காட்டும் துரதிர்ஷ்ட நிலை வந்து விடக்கூடாது.

ஆற்று வெள்ளத்தின் திசைக்கு எதிர்த்திசையில் அல்லல்பட்டு அடுத்தகரையை நோக்கி நடக்கப் போகிறோமா? அன்றி வெள்ளத்தின் போக்கோடு போய் எமது பயணத்தை இலகுவாக்கப் போகிறோமா? என்பதைத் தீர்மானிக்க வேண்டியது துரதிர்ஷ்டவசமாக அரசியல்வாதிகள் கைகளிலே . . .

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *