நிர்மலா ராகவன்

 

`அம்மா’ என்றாலே கதாநாயகிக்குப் பின்னால், இருபது, முப்பது பேருடன் ஏதோ ஒரு மூலையில் நடனமாடுபவள்தான் என் நினைவுக்கு வரும். அப்போதெல்லாம் நான் சூப்பிக்கொண்டிருந்த கட்டைவிரலை எடுத்துவிட்டு, கதாநாயகி செய்வதையெல்லாம் செய்துபார்ப்பேன்.

சிரிப்புடன், `இது நடிக்கவே பிறந்திருக்கு! பெரிய நடிகையா வரும்!’ என்று அங்கிருந்தவர்கள் சிலாகிப்பார்கள். அம்மாவுக்கு அதுதான் டானிக். தன்னைத்தான் நடிகை என்று யாருக்கும் தெரியாமலே போய்விட்டது, மகளுக்கும் அதே நிலைமை வரக்கூடாது என்பதில் குறியாக இருந்தாள்.

அவர்கள் வாக்கு பலித்தது. எல்லாருக்கும் அபிமானமான குழந்தை நட்சத்திரமாக ஒளிர்ந்தேன்.

ஒன்பது வயதில் நான் வயதுக்கு மீறி உயர்ந்தபோது, எனக்குப் பெருமையாக இருந்தது. கலங்கியவள் அம்மாதான். போட்டி போட்டுக்கொண்டு என்னை ஒப்பந்தம் செய்ய வந்த திரைப்பட இயக்குனர்கள், `குழந்தைப் பாத்திரத்துக்குப் பொருந்தாது. பெரியவளாக இருக்கிறாளே!’ என்று ஒதுங்கிப்போனார்கள். அம்மாவின் கெஞ்சலுக்கு அவர்களில் யாரும் மசியவில்லை.

மகளால் இனி குழந்தையாகத்தான் நடிக்க முடியாது, ஆனால் வளர்ந்த மங்கையாக நடிக்க முடியுமே என்று அம்மாவின் புத்தி குறுக்கு வழியில் போயிற்று.

அரும்பாக இருந்த என் மார்புக்குள் எதையோ வைத்தார் மருத்துவர். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சிறு வயதிலிருந்தே, ` ஏம்மா எனக்கு மட்டும் உன்னைப்போல மார்பு பெரிசா இல்லை?’ என்று கேட்டவளாயிற்றே!

அப்போது எனக்குத் தெரியவில்லை, நான் அம்மாவின் கைப்பாவையாய், நிரந்தரமாக மனதளவில் குழந்தையாகவே இருப்பேன் என்று. ஒரு குழந்தையைப் பருவ மங்கையின் உடலில் அடைத்தார்கள் என்பது புரியும் வயதா அது!

பருந்தாக அலைந்த இயக்குனர்களின் கண்களுக்கு என் வளர்ச்சி தப்பவில்லை. அதிக சிரமமில்லாது என்னை நடிக்க வைக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரிந்த விஷயம். ஒரு காட்சியை விளக்கினால், அதை ஐந்து விதமாக நடித்துக் காட்டி, `உங்களுக்கு எது வேண்டும்?’ என்று கேட்கும் புத்திசாலி என்று பெயர் வாங்கியிருந்தேனே!

`மரப்பாச்சிக்குப் புடவை சுத்தினாப்போல இருக்கு!’ என்று சில மாமிகள் முணுமுணுத்தாலும், திரைப்பட ரசிகர்கள் என்னை, என் சுட்டித்தனத்தை, அடிக்கடி மாறும் முகபாவங்களை முழுமனதாக ஏற்றுக்கொண்டார்கள். (இதெல்லாம் விமரிசகர்கள் எழுதியிருந்தார்கள் என்று அம்மா பெருமையுடன் படித்துக் காட்டியது).

ஒரு நாளைக்கு இரண்டு ஷிஃப்ட். ஆனால், காமராவுக்கு முன்தான் நான் நானாக இருந்தேன். ஒவ்வொரு காட்சியிலும் வண்ண வண்ண ஆடைகளாக உடுத்தியபோது, எதையோ சாதித்த நிறைவு ஏற்பட்டது. (சிறு வயதில்கூட நான் பொம்மைகள் வைத்து விளையாடியதில்லை. `கடைக்குப் போகலாம், வரியா?’ என்று அம்மா என்னை எங்கும் அழைத்துப் போனதில்லை. பட்டும், பீதாம்பரமும் வாங்கித் தந்து, என்னை அழகு பார்க்கவில்லை. அதற்கெல்லாம் எங்கே நேரம்!)

`முகத்தில் அவ்வளவாக முதிர்ச்சி இல்லையே!’ என்று பெரிய தயாரிப்பாளர்கள் தயங்கினார்களாம். அம்மா பயந்து, என் முகத்தில் எந்தெந்த பாகத்தை செப்பனிட முடியுமோ, அதையெல்லாம் சீர்படுத்தச் செய்தாள். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்புகள் வரும்போது, லட்சங்களைப்பற்றி யாராவது யோசிப்பார்களா!

அம்மாவிற்கு லாபம் அளித்த ஒரே முதலீடு என் முகமாற்றம்தான். ஒன்றைப் பத்தாக்கலாம் என்று யாராவது ஆசை காட்டினால், உடனே நம்பி, மோசம் போகும் வர்க்கம் அம்மா. பொன்முட்டை இடும் வாத்தாக இருந்த நான் சம்பாதித்த கறுப்புப் பணமெல்லாம் அம்மாவின் பேராசையால் அழிந்துபோயிற்று.

`இரவு பகலாக நான் உழைத்துச் சம்பாதித்த பணத்தை என்ன செய்கிறாய்?’ என்று கேட்கும் அறிவோ, துணிச்சலோ, நேரமோ எனக்கு இருக்கவில்லை. அம்மாதான் சகலமும்.

`பத்திரிகைக்காரங்க எப்போ கல்யாணம்னு கேப்பாங்க. கலைத்துறைக்கே என்னை அர்ப்பணிச்சுட்டேன் அப்படின்னு சொல்லிடு!’ என்று அம்மா சொல்லிக்கொடுத்தாள். யார் யாரோ என் உடலைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா, என்ன!

என் வாய்ப்புகள் அதிகரித்தன. ஆனால், என் உடலில் இருந்த செயற்கையான பாகங்கள் அப்படியே மாறாது இருக்கவில்லை. முன்பு இருந்ததைவிட மோசமாக மாறின. மீண்டும் மீண்டும் அறுவைச் சிகிச்சை. வலி ஒருபுறமிருக்க, கண்ணாடியில் பார்த்துக்கொண்டபோது, எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை.

இப்படியே நாற்பத்தைந்து வயதை எட்டிவிட்டேன். என் இடத்தைப் பிடித்துக்கொள்ள சில அப்பாவிக் குழந்தைகள் விரைவாக பருவம் அடையும் வழிகளைத் தேடினர். எனக்கோ அக்காள், அம்மா போன்ற வேடங்கள்தான் கிடைத்தன. அதையும் சிறப்பாகத்தான் செய்தேன் என்று பத்திரிகைகள் பாராட்டின. என் கையிலிருக்கும் குழந்தையை என் கருவில் உருவாகி, அரைகுறையாக வெளியேற்றப்பட்டதாகவே பாவித்துக்கொண்டு, அன்பைப் பொழிவேன். ஆனாலும், படத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தவள் சில நிமிடங்களே தலைகாட்ட முடிந்தது அவமானமாக, வேதனையாக இருந்தது.

என்னைப் பிஞ்சிலேயே பழுக்க வைத்ததன் விளைவுகள் விரைவிலேயே தெரிந்தன. என் குரலிலும் தோற்றத்திலும் அகாலமான முதுமை! பற்கள் ஆட ஆரம்பித்தன. சற்றே வளைந்த முதுகு. குரலிலும் நடுக்கம். வாய்ப்புகள் அறவே நின்றன. பத்து வயதிலிருந்தே என்னை அரவணைக்கக் காத்திருந்தவர்கள் ஒதுங்கிப்போனார்கள்.

அதுவரை மிரட்டலாகவும், கொஞ்சலாகவும் என்னைத் தன்வழி நடத்திச்சென்ற அம்மாவும் மாறிப்போனாள். `கண்ணு’ என்றழைத்த நாக்கு இப்போது `சனியனே!’ என்றது.

இதற்கா சின்னஞ்சிறு வயதிலிருந்தே அவ்வளவு கஷ்டப்பட்டேன்?

நான் இழந்த குழந்தைப்பருவத்தை புகழும் பணமும் ஈடு செய்ய முடியவில்லையே! காலங்கடந்து வருத்தம் ஏற்பட்டது.

மாரடைப்பை உண்டுபண்ணி, ஆனாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று ஆராய்ந்து, அதைச் செயலிலும் காட்டினேன்.

அம்மாவின் மரணம் என்னை எவ்வளவு தூரம் பாதித்துவிட்டது என்று காட்டிக்கொள்ள அன்ன ஆகாரமில்லாமல் மூன்று நாட்கள். நான் கடைசியாக நடித்தது அப்போதுதான்.

ஆனால், நான் எதிர்பார்த்தபடி, எனக்கு நிறைவு கிட்டவில்லையே, ஏன்?

எதிர்காலத்தை நினைக்கவே பயமாக இருந்தது. இனி யார் என்னை ஒவ்வொரு நிமிடமும், `இதை இப்படிச் செய், இந்தக் கேள்விக்கு இப்படிப் பதில் சொல்லு!’ என்று வழிகாட்டப்போகிறார்கள்?

அடுத்த நாள்.

`முன்னாள் கதாநாயகி … தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு உறுதுணையாக இருந்த தாயின் மரணத்தைத் தாங்கமுடியாமல் போனதுதான் காரணம் என்று நம்பப்படுகிறது!’ என்ற இரண்டே வாக்கியங்கள் தினசரி ஒன்றின் நான்காம் பக்கத்தின் ஒரு மூலையில் இடம்பெற்றிருந்தது.

பலரும் அதைப் படிக்காது அசுவாரசியமாகப் பக்கங்களைப் புரட்டினாலும், சில மாமிகள், `இந்தப் பொண்ணுக்குத்தான் அம்மாமேல என்ன பாசம்!’ என்று பிரமித்து, `எனக்கும் வந்து பிறந்திருக்கே — வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்துப் பேசிண்டு!’ என்று தலையில் அடித்துக்கொண்டார்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *