நிர்மலா ராகவன்

 

உறவுகள் பலப்பட

`கணவன்-மனைவியாகட்டும், ஒன்றாக வாழும் இரு ஆண்களாகட்டும், அவர்களது உறவைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. பத்து நிமிடங்களுக்குள் அவர்களுக்குள் சண்டை வருகிறதா என்று பாருங்கள்!’ ஓர் உளவியல் நிபுணர் எனக்குத் தந்த குறிப்பு.

இரு மனிதர்கள் நெருக்கமாக வாழ்ந்தால், சிறு சண்டை பூசல்களைத் தவிர்க்க முடியாது. இதனால்தான் ஓரிரு தலைமுறைகளுக்குமுன் தம்பதிகளைப் பிரித்து வைப்பார்கள் — ஆடி மாதம், கர்ப்பமாகி ஐந்தாம் மாதம் என்று ஏதேதோ சாக்கில்.

சில தினங்களோ, மாதங்களோ அப்படிப் பிரிந்திருந்து, பிறகு புகுந்த வீட்டுக்கே ஒரு பெண் திரும்பி வரும்போது, மறைந்துபோன ஈர்ப்பு தம்பதிகளுக்குள் மீண்டும் தலைதூக்கும். சில காலமாவது நிலைத்திருக்கும்.

பத்து நாட்களுக்குள் மீண்டும் ஏதாவது அபிப்ராய பேதம் வரலாம்.

`குழந்தைகள்மேல் உனக்கு இருக்கிற அக்கறை எப்பவும் என்மேல் கிடையாது!’ என்று சாடுவான் கணவன்.

இந்த வாக்கியத்தில் `எப்பவும்’ என்று இருப்பதைத் தவிர்த்தால் சண்டை பெரிதாக வளராது.

`நீங்கள் மட்டுமென்ன? முன்பொருமுறை..,’ என்று மனைவி எதிர்த்து வாதாட இது வழி செய்துவிடுகிறது.

இப்படி இருவரும் மற்றவரது குறைகளையே, அல்லது தமக்குப் பிடிக்காதவற்றையே, பெரிதுபண்ணிக் கொண்டிருந்தால், இல்வாழ்க்கையில் அமைதி ஏது?

பணம் = அதிகாரம்

குடும்பத்தில் வரவு செலவைக் கவனித்துக்கொள்ளும்வரைதான் தன் அதிகாரம் நிலைத்திருக்கும் என்று கணக்குப்போடுவார்கள் சிலர். துப்பாக்கி வைத்திருக்கும் ஒருவன் பத்து பேரைத் தன் அதிகாரத்திற்குள் கொண்டு வருவதில்லையா, அது போல!

கதை

மனைவி சம்பாதிப்பதை அப்படியே வாங்கிக்கொண்டுவிடுவான் அகிலன். அவள் கொடுக்க மறுத்தால், அவள் நடத்தையைக் கேவலமாகப் பேசுவான். அது பொறுக்காது, `கேவலம், பணம்தானே! தொலையட்டும்!’ என்று கொடுத்துவிடுவாள் தாராவும்.

அகிலனின் அதிகாரத்தில், ஓயாத கட்டுப்பாட்டில், தாராவின் மன இறுக்கம் அதிகரித்தது.

`என்னுடன் படித்தவன் என்மேல் உயிராக இருந்தான். அவன் கேட்டபோது, அவனையே கல்யாணம் செய்துகொண்டிருக்க வேண்டும்!’ என்று அவள் யோசனை போயிற்று.

கணவன்மேல் அதிருப்தி, காழ்ப்பு இருக்கலாம். ஆனாலும், இத்தகைய எண்ணத்தால் என்ன பயன்? குழப்பம்தான் விளையும். காதலனாக இருப்பவன் கணவனானபின்பும் அப்படியே இருப்பான் என்று சொல்வதற்கில்லை. அதோடு, அவள்மேலும் குறை இருந்ததே! எதற்காக அவ்வளவு தூரம் விட்டுக்கொடுத்துப்போனாள்?

விவாகரத்து செய்யலாமா என்று அடுத்த யோசனை வந்தது. புதிய பாதையில் இன்னும் என்னென்ன இடர்கள் இருக்குமோ, இருக்கிறதையே செப்பனிட்டுக்கொள்ளலாம் என்று தோன்றிப்போயிற்று. கணவனை மாற்ற முடியாவிட்டாலும், நாம் மாறலாமே என்ற ஞானோதயம் ஏற்பட்டது தாராவிற்கு.

`நான் சம்பாதிப்பதை உங்களுக்கு எதற்குக் கொடுக்க வேண்டும்?’ என்று திமிறினாள்.

இவளுடன் சண்டை போட்டு வெல்ல முடியாது என்று புரிந்துகொண்டான் அகிலன். `நமக்குள் என் பணம், உன் பணம்னு என்னம்மா வித்தியாசம்?’ என்றான் குழைவாக. அதிகாரம் நிலைத்திருக்க வேண்டுமானால் கட்டுப்படுத்தும் முறைகளை மாற்ற வேண்டும்.

தாரா இணங்கவில்லை. மீண்டும் வாய்ச்சண்டை. இறுதியில், ஒரு மாதத்தில் மொத்த செலவு எவ்வளவு என்று உத்தேசமாகக் கணக்கிட்டு, அதை இருவருமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவள் ஓர் உபாயம் கூறினாள்.

அகிலனின் தந்தை மட்டுமே சம்பாதித்தபோது, அவரது கட்டுப்பாட்டில் குடும்பம் இருந்திருக்கலாம். ஆனால், காலம் மாற, மாற, அதற்கேற்ப மாறினால்தான் அமைதியோ, மகிழ்ச்சியோ தழைக்கும் என்றவரைக்கும் அவனுக்குப் புரிந்தது. புதிய ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொண்டான் – அரைமனதாகத்தான்!

அதன்பின், இருவருக்குமே பொருளாதார சுதந்திரம் இருந்தது. மனைவியிடம் தன் தவற்றை ஒத்துக்கொண்டான்: “கணவனுக்கு மனைவி அடங்கி நடக்க வேண்டும், அவன் சொல்வதையெல்லாம் கேட்பவள்தான் நல்ல மனைவி என்று நினைத்திருந்தேன்!”

(1981- ல், பிரிட்டிஷ் இளவரசி டயானா தன் கல்யாணத்தின்போது, `கணவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பேன்,’ என்று சபதம் செய்ய மறுத்துவிட்டதாகச் செய்தி வந்தபோது, அவளுடைய துணிச்சல் பெரும் புரட்சியாகக் கருதப்பட்டது).

உடலுறவும் சோர்வும்

உடல் சோர்வடைந்திருக்கும்போது, வேறு உறவில் எப்படி நாட்டம் போகும்? சீக்கிரமே படுத்துத் தூங்கிவிடுவது தாராவின் வழக்கமாக இருந்தது.

`ஏதாவது நடந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல!’ என்று கூறிப்பார்த்தான் அகிலன்.

`வெளியிலும் வேலை, வீட்டிலும் வேலை. எப்பவும் களைப்பாக இருக்கிறது!’ என்று தாரா அலுத்துக்கொண்டாள். கனமான வேலைகள் அவனுடையது, சமையல் அவள் பொறுப்பில் என்று பிரித்துக்கொண்டார்கள்.

`வீட்டு வேலை மாறுதல் இல்லாமல், ஒரேமாதிரி இருக்கிறதே! இவ்வளவு சலிப்பைத் தருவதாக இருக்கும் என்று நான் நினைத்ததே கிடையாது!’ என்று ஆச்சரியப்பட்ட அகிலன் மனைவியைப் புரிந்துகொண்டான். `ஓயாமல் என்ன வேலை! இன்று வெளியில் போகலாம், வா!’

வாரத்தில் ஒரு நாளாவது அவர்கள் தனித்து வெளியில் போனதால், நெருக்கம் அதிகரித்தது.

நண்பர்களுடனேயே காலத்தைக் கழிப்பவர்கள், முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்ளும் மனைவியிடம், `என் முகத்தையே பார்த்துப் பார்த்து உனக்குப் போரடிக்கவில்லை?’ என்று விளையாட்டுப்போல் கேட்பார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருப்பதால் ஏற்படும் சலிப்பைப் போக்க இருவருக்கும் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம். புதிய இடங்களுக்குப் பயணம் செய்தால், மனம் புத்துணர்ச்சி அடையுமே!

பேசும்போது கவனி

வாய் திறந்து பழிக்காவிட்டாலும், சில செயல்கள் தாம்பத்திய உறவில் ஏமாற்றத்தை விளைவிக்கின்றன.

மனைவி ஏதாவது சொல்லும்போது, நாளேடு, கைத்தொலைபேசி என்று ஏதாவது சாதனத்தில் மூழ்கி, `சொல்லு. காதில் விழுகிறது!’ என்பான் கணவன். இருந்தாலும், ஒருவர் பேசும்போது, கண்களைக் கவனித்துக் கேட்பது போலாகுமா?

ஓருயிர், ஈருடல்?

இது கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால் இன்றைய நடைமுறைக்கு ஒவ்வாது. ஒவ்வொருக்கும் தனிப்பட்ட இலக்கு இருந்தால்தான் அவருக்கு நிறைவாக இருக்கும். இல்லாவிட்டால், எதையோ இழந்த உணர்வைத் தவிர்க்க முடியாது.

இதற்காக, ஒரே குடும்பத்தில் இருக்கும் இருவர் வெவ்வேறு திசைகளில் பயணிக்க வேண்டுவது அவசியமில்லை. ஒருவரது தோற்றத்திலும் செய்கையிலும் மற்றவர் சிறிதளவு ஆர்வம் காட்டினாலே போதும்.

இப்போது வேண்டாம்!

`நான் சொல்வதை நீ அப்படியே கடைப்பிடித்து நடக்க வேண்டும்!’ என்று கணவர் சொல்வாரோ என்று பயந்து, படித்த பெண்கள் தற்காலத்தில் திருமணம் என்றாலே அஞ்சுகிறார்கள். முப்பது வயதுக்குமேல்தான் மணமுடிக்க இசைகிறார்கள் — நிறைய நிபந்தனைகளுடன். அதில் முக்கியமானது – கணவரது பெற்றோர் அவர்களுடன் சேர்ந்து இருக்கக்கூடாது.

ஏன் தனிக்குடித்தனம்?

கூட்டுக்குடும்பத்தில், `நான் செய்த தவற்றை நீங்களும் செய்துவிடக்கூடாது!’ என்று `நல்ல மனதுடன்,’ எந்தச் சிறிய காரியத்தையும் எப்படிச் செய்வது என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருப்பார் ஒருவர். வயதும் அனுபவமும் இருப்பதாலேயே ஒருவர் தலைவராக முடியாது.

அதைக் கேட்டு நடப்பவருக்கு ஆத்திரமும் குழப்பமும்தான் எழும். நாளடைவில் சுயமாக எதையும் செய்யும் ஆர்வமும் திறனும் அற்றுப்போகலாம்.

அவரவர் காரியத்தை முடிந்த அளவுக்குச் சுயமாகச் செய்தால்தான் நிறைவாக இருக்கும். உதவி தேவையென்றால் மட்டும் பிறரை நாடலாம்.

கல்யாணம் ஆனதால் மட்டும் ஒருவர் தன் தனிமனித சுதந்திரத்தை இழந்துவிட வேண்டுவதில்லை. அவ்வுணர்வு அளவு மீறினால்தான் பிரச்னை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *