மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 3

0

 

இன்னம்பூரான்
13 03 2018

 

இனி விஷயத்துக்கு வருவோம். மதாபிமானமும், சுயமரியாதையும் வாழ்வியலின் போக்கை நிர்ணயிக்கும் சக்தி உடையவை. அவற்றை விலக்கி வாழும் திறன் சாத்தியமெனினும், மிகவும் சிலரே அவ்வாறு வாழ்வதை இயல்பாக வைத்துக்கொள்கிறார்கள். தேசீய அளவில் பார்க்கப்போனால், இங்கிலாந்தில் அத்தகைய வாழ்வியல் தென்படுகிறது. அமெரிக்காவில் மிகவும் குறைவு; ஏன்? அங்கு பைபிள் பெல்ட் என்று வருணிக்கப்படும் மாநிலங்களில் மதவெறி தென்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் அவரவர் போக்கை அவரவர்கள் கடைபிடிப்பதில் சிக்கல் ஒன்றும் இல்லை. ஹிந்து சனாதன தர்மமோ, கிருத்துவமோ, இஸ்லாமியமோ, நாத்திகமோ மூளைச்சலவையில் ஈடுபட்டால், அது நலம் பயக்காது.
வாழ்வியலின் பரிமாணங்களில் மிகவும் உயர்ந்தது நன்னடத்தை. வாய்மை, நியாயம், சரியான அணுகுமுறை ஆகியவை அதில் அடங்கும். மதாபிமானம், சுயமரியாதை ஆகிவற்றை தவிர்த்து வாழக்கூட அவை உதவும். அண்ணல் காந்தி அதற்கு நல்லதொரு உதாரணம்; அவர் கூட தன்னை ஹிந்து என்று தான் அடையாளம் காட்டிக்கொண்டார். அந்த மதாபிமானம் அவருடைய வாழ்வியலுக்கு முட்டுக்கட்டை போடவில்லை. அந்த அணுகுமுறையை சிறிதேனும் கடைப்பிடிப்பது நல்லது.

இத்தருணம் ‘அறிவியல்’ என்ற சொல்லின் எல்லையைப் புரிந்து கொள்வோம். அது ‘விஞ்ஞானம்’ என்ற சொல்லின் ஒரு பின்னம் எனலாம். விஞ்ஞானமே அறிவியலின் பின்னம் என்பதில் முரண் ஒன்றுமில்லை. உபனிஷத்கள், சித்தர் பாடல்கள், திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூல்கள் அறிவியல் இல்லை என்று பிரசாரம் செய்வது மதியீனம். அதே சமயம் இன்றைய விஞ்ஞான புரிதல்கள், நிரூபணங்கள் நிரந்தரமானவை அல்ல. விஞ்ஞானத்தின் தனிச்சிறப்பே திறந்த அணுகுமுறை. அதை தவிர்த்து விட்டு தனது அபிப்ராயங்கள் தான் இறுதி முடிவு என்று பறை கொட்டுவதை போல் வாழ்வியலுக்கு முரண் யாதுமில்லை.

ஒரு சிறிய உண்மைச் செய்தி. பெங்களுரில் பேரின்பத்தைப் பற்றி, இன்பத்தைப் பற்றி, மனநிறைவைப் பற்றி ஒரு விஞ்ஞான ஆய்வு நடந்து வருகிறது, துறவிகள் வாழும் ஒரு பல்கலை கழகத்தில். அதன் பெயர் ஸாரா ஜே மடம் & பல்கலைக்கழகம். பெளத்த பிக்ஷுக்கள் அங்கு பெரும்பாலும் பிரார்த்தனை செய்த வண்ணம் இருப்பார்கள்; மதாபிமானம் நிறைந்த இடம் அது. பெளத்த மதம் சார்ந்த சடங்குகளுக்கு பஞ்சம் இல்லை. குரு-சிஷ்ய உறவு தான் அங்கு பிரதானம். அந்த பிக்ஷுக்கள் விஞ்ஞானத்தின் மீது தீராத காதல் கொண்டவர்கள்.
அங்கு என்ன ஆய்வு நடக்கிறது என்பதை உரிய நேரத்தில் கூறுகிறேன்.

(தொடரும்)

…தொல்காப்பியத்தின் மொழிநடையும், உள்ளுறையும் தமிழரின் தொன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தொல்காப்பிய மொழி… விழுமிய கருத்துக்களை இழுமென் மொழியாக எளிதில் மலர்விக்கும்…இத்தொன்மை வழிவழி வந்தவர் தமிழராவர். பழந்தூய தமிழரும், வழிவந்த தமிழரும், இடையே குடி புகுந்து நிலைத்த சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும்…கலப்பு என்பது இயற்கை. உலகில் எம்மொழியும், எந்நாடும் எவ்வினமும் தோன்றியவாறே கலப்பின்றித் தனிமைத் தூய்மையும் என்றும் ஒரு பெற்றியாய் நிலவுதல் அரிது.,,கலப்பால் வளர்ச்சியே உண்டு…தமிழ்நாட்டில் ஆரியர் தமிழர் பிரிவு பெரிதும் பேசப்படுகிறது… அதை வாழ்விடை ஏன் பாராட்டிப் பகைமை வளர்த்தல் வேண்டும்?…இப்போது தூய ஆரியர் இன்னார், தூயத்தனித்தமிழர் இன்னார் என்று எவரே பிரிக்க வல்லார்?…இயகை நிலை இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் வாழ்ந்து வரும் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் கலப்பு ஏற்பட்டிராதென்று கருதுவது மதியுடையாய்க் கொல்! எனவே தூய ஆரியராதல் தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்… பார்ப்பனர் பார்ப்பனல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது… வடமொழி பாரத நாட்டுக்குரிய பொது மொழி . ’ யாதும் ஊரே யாவருங்கேளீர்’ என்னும் விழுமிய கொள்கையுடைய தமிழர் வழிவழி வந்த இக்காலத் தமிழர் சிறுமைப் பிரிவுகளில் கருத்திருத்தல் அறமாகுது…”
தமிழ் தென்றல் திரு.வி.க. அவர்கள் ஜூலை 5: 1928, ஏப்ரல் 10,11,12: 1929 ஆகஸ்ட் 6 :1932 அன்று ஆற்றிய சொற்பொழிவுகளிலிருந்து.

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *