சக்தி சக்திதாசன்

 

அன்பினியவர்களே

 

அன்பான வணக்கங்களுடன் இந்த வார மடலிலே உங்களுடன் உறவாடுவதில் மகிழ்வடைகிறேன். காலம் யாருக்கும் காத்திராமல் அவசரமாக தனது பயணத்தை மேற்கொண்டு கொண்டிருக்கிறது. இக்காலத்தின் ஓட்டம் என்றும் ஒரே வேகத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் வித்தியாசமான காலக் கண்ணாடிகளுக்குள்ளாகப் பார்க்கும் போது எதோ சமீபகாலத்தில் காலம் மிகவும் விரைவாகக் கடந்து போய்விடுகிறது போலத் தோற்றமளிக்கிறது. இது ஒருவருக்கு மட்டுமல்ல, பலருக்கும் இதே உணர்வுதான் தோன்றுகிறது. எந்தவொருவருடனும் உரையாடும் போதும் “அப்பப்பா, நாட்கள் எத்தனை விரைவாக ஓடுகின்றன” என்பதுவே தவறாமல் இடம்பெறுகின்ற ஒரு உரையாடல்.

நூற்றாண்டுகள் 16,17,18,19,20,21 என்று நூற்றாண்டுகள் ஒவ்வொன்றாய் கடந்து ஓடிப்போய்விட்டன. ஆனால் அவை ஒவ்வொன்றும் தம்மோடு கொண்டு வந்து அகிலத்தில் விதைத்து விட்டுப் போன மாற்றங்கள் எத்தனையோ ! அம்மாற்றங்களின் மூலம் கிடைக்கப்பெற்ற நன்மைகளும், தீமைகளும் பலவே. இம்மாற்றங்களிலே மனித வாழ்க்கைக்கு இன்றியமையாததாககவும், மனிதர்களின் அன்றாடத் தேவைகளிலும், பழக்க வழக்கங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்றால் அது மிகையாகாது. மனித வாழ்க்கையின் பல அம்சங்களை மிகவும் இலகுவாக்கியதோடு மட்டுமல்லாமல் மனித வாழ்க்கையின் தேவைகளை அதிகரிக்கப் பண்ணி அத்தேவைகளுக்காக ஓயாத தேடல்களில் மனிதரை ஈடுபடுத்தியதும் விஞ்ஞானமே !

நான் இங்கிலாந்துக்கு வந்த காலங்களில்(1970களின் நடுப்பகுதியில்) இங்குள்ள பி.பி.ஸி தொலைக்காட்சியில் விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட”நாளைய உலகம்(Tomorrows world) “ எனும் ஒரு நிகழ்ச்சி வாராவாரம் நடைபெறுவதுண்டு. இந்நிகழ்ச்சியில் விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் புதிய கண்டுபிடிப்புகளையும், இக்கண்டுபிடிப்புகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் கொண்டுவரப்போகும் மாற்றங்களைப் பற்றியும் காண்பிப்பதுண்டு. அத்தகைய நிகழ்ச்சி ஒன்றில் கணணியின் வளர்ச்சி பற்ரிப் பேசும் போது , இனிவரும் காலங்களில் கணணியின் தானியங்கும் வளர்ச்சியினால் இன்று மனிதர்கள் ஆற்றும் பணிகள் பல கணணிகளால் ஆற்றப்படும் சாத்தியமுள்ளது என்று கூறினார்கள். இக்கூற்றின் வெளிப்பாடாக , இதனால் மக்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்காதா? எனக்கேட்கப்பட்ட கேள்விக்கு இல்லை இவ்வளர்ச்சியினால் பொருளாதாரம் மேலும் விரிவடையும், மக்களின் வாழ்க்கை வசதிகள் பெருகும் எனவும், வாரத்தில் 5 நாட்கள் பணிபுரிவோர் மூன்று நாட்கள் பணிபுரிந்து 5நாட்களுக்குரிய ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு பொருளாதரத்தில் நாடு முன்னேற்றமடையும் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டது.

அப்படியான ஒரு சூழலில் மனிதர்கள் அதிக ஓய்வினைப் பெறக்கூடிய வசதி உருவாகும் என்றும் கூறப்பட்டது. இன்றைய சூழலை அதன் பின்னனியில் எடுத்துப் பார்க்கிறேன். கணணியின் தாக்கம் மக்களின் வாழ்வில் இன்று எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது. ஆனால் அன்று அவர்கள் குறிப்பிட்ட அந்த வசதிப் பெருக்கம் மக்கள் வாழ்வினில் ஏற்படவில்லை. அதாவது 5 நாட்களுக்குப் பதில் மூன்று நாட்கள் வேலை செய்து அதிக ஓய்வு நேரம் கிடைக்கும் எனும் வாதம் மெய்ப்படவில்லை. பதிலாக வளரும் வசதிகளின் வாய்ப்புக்காக மனிதர்கள் இயந்திரங்கள் போல கிடைக்கும் நேரத்தையெல்லாம் பணியில் செலவு செய்து தீராத தேடல்களுடன் வாழ்வெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் தான் இங்கிலாந்து அரச போக்குவரத்து திணைக்களம் ஒரு புதிய சிக்கலை எதிர்நோக்குகிறது. லண்டன் பேரூந்து மற்றும் புகையிரதச்சேவை, பாதாள ரெயில்சேவை என்பவற்றினை லண்டன் மேயரின் கீழியங்கும் டி.எவ்.எல் (T.F.L) எனும் அமைப்பே நிர்வகித்து வருகிறது. கடந்த சில வருடங்களாக நாட்டின் பொருளாதாரச் சிக்கலின் நிமித்தம் மக்களின் ஊதிய உயர்வு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் பஸ், மற்றும் ரெயில் சேவைகளின் கட்டணமோ வருடா வருடம் சம்பள உயர்வுக்கு எவ்வகையிலும் ஒப்புமை இல்லாமல் உயர்த்தப்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் மக்கள் அனைவரும் கட்டண உயர்வு, ஜன நெருக்கடி போன்ற இடர்பாடுகளினால் அல்லல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையிலே தான் இங்கிலாந்து அரசின் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு தலையிடியைக் கொடுக்கும் வகையில் ஒரு புதிய சிக்கல் தோன்றியுள்ளது. சமீபத்திய ஆய்வு ஒன்று தொடர்ந்து இரண்டு வருடங்களாக லண்டன் பஸ்,இரெயில் மற்றும் பாதாள ரெயில் ஆகியவற்றை உபயோகிக்கும் மக்களின் தொகை கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவிக்கிறது. தமது சேவைகளின் மீது சுமத்தப்பட்ட இடநெருக்கடியைத் தீர்ப்பதற்காக பல புதிய இரெயில் வண்டிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இத்தகைய பாவனையாளைர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி மிகப்பெரிய சிக்கலைத் தோற்றுவித்துள்ளது.

மக்களின் இத்தகைய நடவடிக்கைக்கான காரணிகளாக பின்வரும் சிலவற்றைக் குறிப்பிடுகிறார்கள். முக்கியமாக இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இணையதள பாவனையின் வேகமான வளர்ச்சியால் பலர் இன்று தமது இல்லங்களில் இருந்தே பணிபுரியும் வசதிகளைப் பெற்றிருக்கிறார்கள். அடுத்து இதுவரை காலமும் நல்ல ஊதியம் கிடைக்கக்கூடிய பெரிய பதவிகள் லண்டனில் தான் கிடைக்கும் எனும் நிலைமாறி லண்டனை அண்மித்த பகுதிகளில் பல முன்னனி வியாபார ஸ்தலங்களும், நிறுவனங்களும் இயங்குவாதல் பலர் தாம் வசிக்கும் நகரங்களிலேயே நன்றாக உழைக்கக்கூடிய நல்ல பதவிகளைப் பெறக்கூடியதாக இருக்கிறது. அடுத்து இன்று மக்கள் தமது உடல்நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளார்கள். இவ்வுடல்நலனின் மீதான அக்கறையோடு, இயற்கைச் சூழல் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு பலர் இன்று சைக்கிள்கள் மூலம் பணியிடங்களுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்தக் காரணிகளின் கூட்டுச் சேர்க்கையே தற்போதைய பொது போகுவரத்துச் சேவைகளை உபயோகிப்போரின் எண்ணிக்கையின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள்

விஞ்ஞானம் அதுபாட்டுக்கு வளர்ந்து கொண்டு போகிறது அதன் வளர்ச்சியால் ஏற்படும் புதிய தேவைகளின் தேடல்களுக்காக மனிதர்கள் தம்மது உழைக்கும் திறனைக் கூட்டிக் கொண்டே போவார்கள். இந்த ஓட்டத்தை நிறுத்தி ஓய்வினை எடுக்கக்கூடிய ஒரு நிலையை மனிதர்களுக்கு விஞ்ஞான வளர்ச்சி எமது வாழ்க்கைக் காலத்தில் கொடுக்குமா? என்பது சந்தேகமே !

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *