-எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

காசமெனும் நோய்தானும்
கதிகலங்க வைத்ததுவே
கவலையுடன் பலபேரும்
காசமதில் உழன்றனரே
மேதினியில் வியாதிபல
வந்துகொண்டே இருக்கிறது
விருப்புடனே வியாதிதனை
வரவேற்பார் யாருமுண்டோ!

என்றாலும் சிலபேர்கள்
இதைமனதில் கொள்ளாமல்
எவர்கருத்தும் கேட்காமல்
இறுமாந்தே நடக்கின்றார்
ஆரம்பம் நடக்குமுள்ளே
அவர்க்கு அதுதெரியாது
ஆபத்து மெள்ளவந்து
அங்கேயே அமர்ந்துவிடும்!

ஆபத்தாய் வந்ததுவே
அகிலமதை உலுக்கிநிற்கும்
ஆலகால விஷமான
புற்றுநோயின் வருகையதே
தப்பிதமாய் நடந்திடுவார்
புற்றுநோயைக் கண்டவுடன்
முப்பொழுதும் கவலையிலே
மூழ்கிடுவார் வாழ்வினிலே!

புற்றுநோய் வருவதற்குப்
பொதுவான காரணங்கள்
செப்பமாய்ச் சொன்னாலும்
சிலவுமிப்போ சேர்ந்துளது
மொத்தமாய் பெருகிவரும்
விஞ்ஞானக் கருவிகளும்
புற்றுநோய் பெற்றுத்தர
சற்றேனும் தவறவில்லை!

புகைப்பழக்கம் குடிப்பழக்கம்
புற்றுநோயை வரவழைக்கும்
என்றெங்கும் பரப்புரைகள்
ஏராளம் நடக்கிறது
வருகின்ற சினிமாக்கள்
புகைகுடியைக் காட்டிநின்றால்
வளர்ந்துவரும் தலைமுறைகள்
புற்றுநோய்க்கு என்னசொல்லும்!

ஊடகங்கள் அத்தனையும்
உழைப்பதற்கு இருந்தாலும்
கேடுதரும் விஷயங்களைக்
கிழித்தெறிந்து விடவேண்டும்
குடிபற்றி புகைபற்றி
விளம்பரங்கள் போடுவதை
அடியோடு அகற்றிவிட
அவையாவும் வரவேண்டும்!

புற்றுநோய் என்றதுமே
புலனெல்லாம் ஒடுங்குகிறது
உற்றவரும் மற்றவரும்
ஒருவாறு நோக்குகிறார்
பெற்றெடுத்த பிள்ளைகூட
சற்றுத்தள்ளி நிற்கின்றார்
மற்றநோயைப் புறந்தள்ளி
புற்றுயே நிற்கிறது!

நாகரிகம் எனக்கருதி
நாளும்பல செய்கின்றோம்
நமக்குநன்மை செய்தவற்றை
நாமொதுக்கி விட்டுவிட்டோம்
வாழ்வெல்லாம் பலநோய்கள்
வருவதற்கும் காத்திருக்கு
மனமதனை மாற்றுவதே
வாழ்வுக்கு  வழிவகுக்கும்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *