தமிழக அரசகுடி மரபின் சிறப்பு

                                    -கணியன்பாலன்

பண்டைய தமிழக அரசகுடிகளான சேர, சோழ, பாண்டிய அரச குடிகள் 2000 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளன. உலகில் வேறு எந்த நாடுகளிலும் எந்த அரச குடியும் 1000 ஆண்டுகள் கூட இருந்ததில்லை. கி.மு. 8ஆம் நூற்றாண்டு தொடங்கி, கி.பி. 12ஆம் நூற்றாண்டு முடியம்வரை தமிழக அரச குடிகள் இருந்தன. பெரும்பாலும் சேர, சோழ, பாண்டிய அரச குடிகளால் தமிழகம் ஆளப்பட்டபோது மட்டுமே தமிழ் மக்களின் ஆட்சியாக அது இருந்தது, இல்லையெனில் அது அந்நிய ஆட்சியாகவே பிறமொழி ஆட்சியாளர்களின் ஆட்சியாகவே அது இருந்தது. தமிழக அரசகுடும்பங்களில் அரச பதவிக்காக ஒருவரை ஒருவர் கொல்வது என்பது இருக்கவில்லை. வேறுபல மேன்மைகளும் இருந்தன. அதற்குப் பண்டைய தமிழக அரசகுடிகள் பின்பற்றிய மரபுவழி சிறப்பு அரசுரிமைமுறைதான் காரணமாகும். பாண்டியர்களை முதுகுடிகள் என்கிறது சங்க இலக்கியம்.

பண்டைய தமிழக அரசுகளை, அசோகர் தனது கல்வெட்டுகளில் சோழர்கள், பாண்டியர்கள், சதிய புத்திரர்கள், கேரள புத்திரர்கள் எனப் பன்மையில்தான் குறிப்பிட்டுள்ளார். சங்ககாலத்தில் மூவேந்தர்கள் ஒவ்வொருவரிலும் பலர் இருந்து ஆண்டு வந்துள்ளனர். அதாவது சேரர்களில் மூன்று நான்கு பேரும், பாண்டியர்களில் மூன்று நான்கு பேரும், சோழர்களில் மூன்று நான்கு பேரும் இருந்து ஆண்டு வந்துள்ளனர். சேரர்கள் வஞ்சி, கரூர், போன்ற இடங்களிலும், பாண்டியர்கள் கொற்கை, மதுரை, போன்ற  இடங்களிலும், சோழர்கள் உறையூர், பூம்புகார், போன்ற  இடங்களிலும் மூன்று நான்கு சேர, சோழ, பாண்டிய அரசர்கள் ஆண்டு வந்துள்ளனர்.

சான்றாகச் சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வடக்கிருந்தபோது,  அவனது தம்பி பல்யானைச் செல்குழுகுட்டுவன், அவனது மூத்த மகன் களங்காய்கண்ணி நார்முடிச் சேரல், அவனது நடு மகன் கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவன், அவனது தாயாதித்தம்பி சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், அவனது கிளை வம்சத்தை சேர்ந்த பொறையர் குல அரசர்களான பாலைபாடிய பெருங்கடுங்கோவும், மாந்தரன் பொறையன்  கடுங்கோவும் என ஆறு பேர் ஆண்டு வந்துள்ளனர். ஆனால் பல்யானைச் செல்குழுகுட்டுவன் மட்டுமே வேந்தனாக இருந்துள்ளான். சேரன் செங்குட்டுவன் 9 சோழக்கிளை அரசர்களை வென்றான் என பதிற்றுப்பத்து பதிகம் கூறுகிறது. இதே போன்றுதான் பாண்டிய அரசும் இருந்தது. அதனால்தான் அசோகர் தனது கல்வெட்டுகளில் தமிழக அரசுகளைப் பன்மையில் குறிப்பிட்டுள்ளார். மூவேந்தர் அரசகுலங்கள் ஒவ்வொன்றிலும் ஒரே சமயத்தில் பல அரசர்கள் இருந்த போதிலும், ஒவ்வொரு குலத்திலும் ஒரு சமயத்தில் ஒரு வேந்தர் மட்டுமே இருந்தார். ஆனால் அனைத்துச் சேர, சோழ, பாண்டிய அரசர்களையும் சங்க இலக்கியம் வேந்தர்கள் என்றே அழைத்தது. ஆனால் நாம் வேந்தர்களையும் அரசர்களையும் வேறுபடுத்திப் பார்ப்பது அவசியமாகிறது. இவைகளைப் புரிந்து கொள்ள அன்றைய சேர, சோழ, பாண்டிய அரசுகள் எப்படித் தனது அரசர்களையும், வேந்தர்களையும் உருவாக்கிக் கொண்டன என்பதை அறிவது முக்கியமாகும்.

தந்தைக்குப் பின் அவனுடைய மூத்த மகன், அவனுக்குப் பின் அவனுடைய மூத்த மகன் என வரும் அரசியல் தாயமுறை(Primogenituro) தமிழ் நாட்டில் இருக்கவில்லை. அதற்குப் பதில் வேறு விதமான ஒரு சிறப்பு முறையைத் தமிழக அரசகுலங்கள் பின்பற்றின. ஒரு அரசனுக்கு இரண்டு மூன்று புதல்வர்கள் இருந்தாலும், அவனுக்குத் தம்பிகள் இருந்தாலும் அவர்கள் அனைவருமே உரிய வயது வந்தபொழுது அரசர்களாக ஆக்கப்பட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நகர்மைய அரசை ஆள அனுமதிக்கப் பட்டனர். இவர்கள் அனைவரும் அவனுகுக்குக் கீழ்ப்பட்ட அரசர்களாக இருந்தனர். அவன் இறந்தபின் இருக்கும் அரசர்களில் மூத்தவன் எவனோ அவன் வேந்தனாவான். பெரும்பாலும் அவனது தம்பி வேந்தன் ஆவான். பின் அவன் இறந்தபின் மீண்டும் அரசர்களில் மூத்தவன் எவனோ அவன் வேந்தனாவான். தமிழரச குலங்களில் இம்முறையே இருந்து வந்தது. ஆனால் அனைவரும் வேந்தர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.

வேந்தர்களின் மகன்களும், அரசர்களின் மகன்களும் உரிய வயதில் அரசர்களாக்கப்பட்டு ஏதாவது ஒரு நகர்மைய அரசை ஆட்சிசெய்து வந்தனர். இதன் விளைவாக அரசின் ஒவ்வொரு நகர்மைய அரசும் வேந்தனின் ஏதாவது ஒரு  கிளைஅரசனால் ஆளப்பட்டது. எல்லாருக்கும் மூத்தவன் வேந்தனாக இருந்தான். சான்றாக உதியஞ்சேரலாதன் வேந்தனாக இருந்த பொழுது அவனது இரு மகன்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், பல்யானைச் செல்குழு குட்டுவனும் அரசர்களாக இருந்தனர். பின் உதியன் இறந்த பிறகு மூத்தவனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வேந்தன் ஆனான். இவனது தம்பி பல்யானைச் செல்குழு குட்டுவன் அரசனாக ஆனான். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இறந்த பிறகு அரசர்களில் மூத்தவனும் இவனது தம்பியுமான பல்யானைச் செல்குழு குட்டுவன் வேந்தன் ஆனான். இமயவரம்பனின் மகன்களான களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும், செங்குட்டுவனும் அரசர்களானார்கள். அதன் பின் நார்முடிச் சேரலும், பின் செங்குட்டுவனும், அதன்பின் ஆடுகோட்பாட்டு சேரலாதனும் முறையே ஒருவர் பின் ஒருவராக வேந்தர்களாகினர். இம்முறை  இனக்குழு நிலவிய காலத்தில் இருந்து உருவான ஒரு இரத்த உறவுமுறை வடிவமாகும்.

இதே முறைதான் பிற சோழ, பாண்டிய அரச குடிகளிலும் பின்பற்றப்பட்டது. பிற்காலச் சோழர்களும் இதே முறையைத்தான் பின்பற்றினர். சான்றாக முதற்பராந்தகனுக்கு  இராசாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன், உத்தமசீலி என மக்கள் நால்வர் இருந்தனர். அவர்களுள்  இராசாதித்தன், பராந்தகன் இருக்கும்போதே இறந்தான். அதனால் பராந்தகனுக்குப்பின் கண்டராதித்தன் சோழ வேந்தனாய் முடிசூட்டிக் கொண்டான். அவனுக்குப்பின் அரிஞ்சயன் முடிவேந்தனானான். அவனுக்கு முன்பே உத்தமசீலி இறந்து போனான். கண்டராதித்தனுக்கு உத்தம சோழன் என்றொரு மகனும் அரிஞ்சயனுக்குச் சுந்தர சோழன் என்றொரு மகனும் இருந்தனர். அவ்விருவருள், சுந்தரசோழன் மூத்தவனாதலால் முதலில் அவனும், அவனுக்குப் பின் உத்தம சோழனும் முடி வேந்தராயினர். உத்தம சோழனுக்குப்பின் சுந்தர சோழனின் மக்களுள் மூத்தவனான ஆதித்த கரிகாலன் தந்தையிருக்கும்போதே இறந்ததால், இளையோனான முதல் இராசராச சோழன் முடிவேந்தனாய் ஆனான்.

இந்த முறைதான் பண்டைய தமிழக மூவேந்தர்கள் மரபு வழியாக பின்பற்றிய அரசுரிமை முறையாகும். இம்முறை அரச குடிகளில் இருந்த பல சிக்கல்களைத் தீர்த்தது. ஒரு அரசனின் இழப்பு அல்லது ஏன் ஒரு வேந்தனின் இழப்பு கூட மிக எளிதாகச் சமாளிக்கப்பட்டது. நகர்மைய அரசுகள் இந்த வேந்தர் வழி வந்த அரசர்களால் ஆளப்பட்டதால் அவை சுதந்திரமான தன்னரசுகளாக இருந்ததோடு நன்கு வளர்ச்சி அடைவதற்கான சூழ்நிலை உருவானது. இம்முறையினால் அதிகாரவர்க்கப் படிமுறை என்பது தமிழகத்தில் தடுக்கப்பட்டு அதன் தீமைகள் தவிர்க்கப்பட்டன. இம்முறையின் காரணமாக, பிறநாட்டு அரச குடும்பங்களில் இருந்த கொலைகளும் சூழ்ச்சிகளும் தமிழக அரச குடும்பங்களில் இல்லாது போயின.

முசிறி, தொண்டி, வஞ்சி, கரூர், நறவு, மாந்தை என்பன சேர வேந்தர்கள் பொறுப்பில் இருந்த சில முக்கிய நகர்மைய அரசுகள் ஆகும்.  இவை ஒவ்வொன்றையும் தனித்தனி சேர அரசர்கள் ஆண்டனர். இந்த அரசமுறையைப் பின்பற்றி தமிழக நகர்மைய அரசுகளும், வேந்தர்களும் இருந்ததால், போர்கள் பல நடந்தாலும், இழப்புகள் பல ஏற்பட்டாலும் சேர, சோழ, பாண்டிய அரச குலம் நீடித்து நிலைத்து இருந்து வந்தது. இந்த அரசமரபு பல தடவை மீறப்பட்டதும் உண்டு. இம்முறையை முழுமையாக கடை பிடிக்காததும்கூட சங்ககால மூவேந்தராட்சி வீழ்ச்சி அடைய ஒரு காரணமாகும். இந்த அரசுரிமை முறையைப் பின்பற்றாததால் வீழ்ந்து போனதற்கு பிற்காலப் பாண்டியராட்சி ஒரு சிறந்த சான்றாகும்.

ஆதார நூல்:    பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 270-273..

தொடரும்

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *