இ. அண்ணாமலை

அண்மையில் Royal Society Open Science என்னும் ஆய்விதழில் (மார்ச், 2018) வெளிவந்த  A Bayesian phylogenetic study of the Dravidian language family என்னும் கட்டுரை தமிழுலகில் ஒரு பரவசத்தை உண்டாக்கியிருக்கிறது. திராவிட மொழிகள் ஆய்வில் இந்தக் கட்டுரையின் உண்மையான பங்களிப்பு என்ன என்பதைச் சொல்வது இந்தக் குறிப்பின் நோக்கம். ஆய்விதழாகவும் இப்போது  உருவெடுத்திருக்கும் வல்லமை தன் வாசகர்களுக்குத்  தவறான கருத்துகளத் தரக்கூடாது என்பது இதை எழுதுவதற்கு ஒரு உந்துதல்.

திராவிட மொழிக் குடும்பம் 4500 ஆண்டுகளாக இருக்கிறது என்பது இந்தக் கட்டுரையின் கண்டுபிடிப்பு. இதைப் புதிய கண்டுபிடிப்பு என்று சொல்ல முடியாது. சுவலபில், கிருஷ்ணமூர்த்தி போன்ற மொழியியல் ஆய்வாளர்கள் மொழியியல் வழிமுறை (methodology) மூலம் தோராயமாகக் கணித்த காலம்தான் இது. இந்தப் புதிய கட்டுரை மரபணு ஆய்வு வழிமுறை மூலம் இதே வந்திருக்கிறது. இது திராவிட மொழி ஆராய்ச்சிக்கு நல்ல வரவுதான். ஒரு மக்கள் கூட்டத்தில் மக்களின் மரபணுக்களில் வித்தியாசம் இருக்கும். இவர்கள் ஒரே மூலத்திலிருந்து வந்தவர்கள் என்றால், இந்த வித்தியாசம் காலப்போக்கில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் பெருகுகிறது என்பது மரபணு ஆய்வின் ஒரு கொள்கை. உள்ள வித்தியாசத்தைக் கணிதமுறையைப் பயன்படுத்திச் சுருக்கிகொண்டே போய், அதாவது பொதுவாக மக்களிடம் உள்ள மரபணுக்களைமட்டும் தனிப்படுத்திக்கொண்டே போனால், முந்திய ஒரு காலகட்டத்தில் பொதுவான மரபணுக்கள்மட்டும் இருந்த நிலை வரும். அந்த நிலை அந்த மக்கள் கூட்டம் தோன்றிய காலகட்டம் அல்ல. அதற்கு முன்னால் பொது மரபணுக்களே தொடர்ந்து இருந்துவந்த காலகட்டத்தின் எல்லைக்கோடு அந்த நிலை என்று சொல்ல வேண்டும்.

மரபணுக்கள் என்னும் அலகுக்குப் பதில் மொழியின் சொற்களை அலகாக எடுத்துக்கொண்டு, மாறிய சொற்களை நீக்கிக்கொண்டே பின்னோக்கிப் போனால், மொழிக் குடும்பம் ஒரு மொழியாக, சொல் வித்தியாசம் இல்லாமல் இருந்த, காலத்தைக் காட்டும் என்பது ஆய்வாளர்களின் அனுமானம். இது சொல் வேறுபாடு இல்லாமல் கடைசியாக இருந்த காலத்தின் எல்லைக்கோடு. மரபணுக்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் மாறிக்கொண்டே இருப்பது மரபியல் ஆய்வின் ஒரு கொள்கை. இது சரியானால், இந்த எல்லைக்கோட்டுக்கு முன்னால் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மக்கள் கூட்டம் தனிக்கூட்டமாக உருவாகியிருக்க முடியாது. இந்த மரபணு ஆய்வின் கொள்கையையும் வழிமுறையையும் மொழிக்குடும்பத்துக்கும் பொருத்தி ஆய்வு செய்யும்போது ஆய்வு பின்னோக்கி எடுத்துச் செல்லும் எல்லைக்கோட்டுக்கு முன்னால் மூலமொழி இருந்திருக்க வாய்ப்பில்லை. இதனால திராவிட மொழிக் குடும்பத்தின் தோற்றம் 4500 ஆண்டுகளுக்கு முந்திய காலகட்டத்தில் இருந்திருக்கும் என்று முடிவு கட்டுகிறார்கள். மொழியைப் பொறுத்தவரை சொல் மாற்றம் ஏற்பட்ட காலத்துக்கு முன்னால் –அதாவது ஆய்வில் நிறுவப்பட்ட மூலமொழியின் காலத்துக்குமுன்னால் – மொழி இல்லை என்று சொல்ல முடியாது. அதே சமயம், அதை நிருபீக்க மொழியியலில் வழிமுறை எதுவும் இல்லை.

மரபணு ஆராய்ச்சி வழிமுறையை மொழி ஆராய்ச்சியில் பயன்படுத்துவதில் பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றை இங்கே பேசவில்லை. இங்கே ஒரு முக்கியமான உண்மையை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். எல்லைக்கோட்டில் இருந்ததாகச் சொல்லும் மொழி ஆய்வின் கட்டுமானமே. ஒரு இயற்கையான மொழியின் எல்லாக் கூறுகளும் அதில் இருக்காது. அதாவது, மூல மொழி ஒரு கொள்கை (theoretical construct); மக்கள் வாழ்க்கையில் பேசிய மொழி (natural language) அல்ல. திராவிட மொழிகளைத் தரவாகக் கொண்டு கட்டுமானம் செய்யும் போது நமக்குக் கிடைக்கும் மொழி மூலத் திராவிடம்.

இந்த ஆய்வின் முடிவைத் தமிழர்கள் புரிந்துகொள்வதில்தான் பெரிய தவறு இருக்கிறது. மூலத் திராவிடம் தமிழ் என்று கொள்வதே இந்தத் தவறு. இது  இதை வல்லமை ஆசிரியரின் குறிப்பில் காணலாம். மேலும், இந்த ஆய்வுக் கட்டுரையில் சமஸ்கிருதம்பற்றி ஒன்றும் இல்லை. இந்தக் கட்டுரை திராவிட மொழிக் குடும்பத்தையும் இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தையும் ஒப்பிடவில்லை.

4500 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மொழி,  ஆய்வால் கட்டப்பட்ட மொழி,  மொழியின் ஒரு சிறு கூறே. அதற்கு ஆய்வாளர்கள் தரும் பெயர் மூலத் திராவிடம். இந்த மொழி தமிழ் அல்ல; இன்று வழக்கில் உள்ள எந்தத் திராவிட மொழியும் அல்ல. இதில் சங்கத் தமிழின் சில மொழிக்கூறுகளுக்கு மாறான கூறுகளும் உள்ளன  மூலத் திராவிடத்திலிருந்து காலப்போக்கில் பல கட்டங்களில் மூல மொழியிருந்து புதிய மொழிகள் தோன்றுகின்றன. அவற்றில் தமிழும் ஒன்று; இது 2000 ஆண்டுகளுக்குமுன் தமிழ் என்று பெயரிடப்பட்ட ஒரு மொழி. இந்த மொழி இந்தக் காலத்துக்கு முன்னும் பேசப்பட்டிருக்கலாம். தொடர்ந்து வரும் பேச்சுக்குத் தமிழ் என்று எப்போது பெயரிடப்பட வேண்டும் என்பது மொழியியலாளருக்கு முன்னுள்ள கேள்வி. இந்தக் கேள்விக்கு மேலே சொன்ன ஆய்வுக்கட்டுரையில் தரும் காலம் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள். (ஆய்வுக் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட, கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்).  இந்தத் தமிழில் இன்றைய மலையாளமும் அடங்கும். இந்த ஆராய்ச்சியின்படி, 2000 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பேசப்பட்ட மொழியில் துளு, தோடா, கோத்தா ஆகிய மொழிகளும் அடங்கும். தமிழ் என்று தனித்துப் பேசிய மொழியின் காலத்தை எடுத்துக்கொண்டால், இந்த ஆராய்ச்சி காட்டும் 2000 ஆண்டுகள் குறைவான கணிப்பு என்பது புரியும். தமிழின் காலத்தை இந்தக் காலகட்டத்திற்கு முன்னால் நிறுவுவதற்குத் தமிழில் எழுத்துச் சான்றுகளே உள்ளன.

மேலே சொன்ன துளு முதலான மொழிகளுக்கு முன்னோடியாக இருந்த மொழியும் ஆய்வின் கட்டுமானம்தான். மூலத் திராவிடமும் கட்டுமானம்தான். இதற்குத் தமிழ் என்று பெயர் கொடுப்பது உங்கள் தாத்தா பெயரும் உங்கள் மூதாதையர் ஒருவர் பெயரும் ஒன்று என்று சொல்வது போன்றது; அது மட்டுமல்ல,  தாத்தாவும் அந்த நபரும் ஒருவரே என்று அடையாளம் காண்பதைப் போன்றது.

இந்தக் கட்டுரையைத் தமிழின் தொன்மையைக் காட்டும் ஒன்றாகக் கொண்டாடுபவர்கள் இது ஒரு பெயர் விளையாட்டு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். சுந்தரம் பிள்ளயின் தமிழ்த் தாய்ப் பாட்டில் தமிழிலிருந்து மற்ற திராவிட மொழிகள் பிறந்தன என்று சொன்னது ஒரு கவிதை வெளிப்பாடு. அது ஒரு அரசியல் வெளிப்பாடும்கூட. அது, மேலே சொன்ன கட்டுரை உட்பட, மொழியியல் ஆய்வின் வெளிப்பாடு அல்ல.

இந்திய-ஆரிய மொழிகளின் மூலமொழியை -மூல இந்திய ஆரியத்தை- இன்றைய இந்திய-ஆரிய மொழிகளை ஒப்பிட்டு வரலாற்று மொழியியல் வழிமுறையைப் பயன்படுத்திக் கட்டுமானம் செய்தால், அது சமஸ்கிருதத்திலிருந்து சில வித்தியாங்களைக் கொண்டிருக்கும் என்று கூறலாம். அப்படிச் செய்யாமல், இந்திய ஆரிய மொழிகள் சமஸ்கிருத்திலிருந்து பிரிந்தன என்று சொல்வதற்கும் அரசியல் காரணம் உண்டு. ஆனால், இதற்குச் சில வரலாற்றுக் காரணங்களும் உண்டு. சமஸ்கிருதம் இந்திய-ஈரானிய மொழிக்குடும்பத்திலிருந்து பிரிந்து தனி மொழியான காலகட்டம் 3500 ஆண்டுகளுக்கு முன்.  அதாவது, மூலத்திராவிடத்தின் காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின். போஜ்புரி, மைதிலி, ஒரியா, குஜராத்தி முதலான இந்திய-ஆரிய மொழிகள் (இதில் காஷ்மீரி அடங்காது), திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்த பிராஹுயி, குடுஹ், கோண்டி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகள் பிரிந்த காலத்துக்குப் பிற்பட்டவை. சமஸ்கிருதத்திலிருந்து பிராகிருத மொழிகள் பிரிந்தது 3500 ஆண்டுகளுக்குப் பின்னால்தான். அவற்றிலிருந்துதான் இன்றைய இந்திய- ஆரிய மொழிகள் பிரிந்தன. இந்த மொழிகளில் சமஸ்கிருதத்தில் இல்லாத, மூல இந்திய-ஆரியத்தைச் சேர்ந்த சில மொழிக்கூறுகள் உண்டு. சமஸ்கிருதத்தின் சமகாலத்திலும், அதற்கு முந்திய காலத்திலும் இந்திய-ஆரிய மொழிக்குடும்பம் இருந்ததற்கு ஆதாரமோ, இருந்திருந்தால் அவற்றின் தொடர்ச்சியில் வந்த மொழிகள் இன்று இருப்பதற்குச் சான்றோ, இல்லையாதலால் சமஸ்கிருதமே மூல இந்திய ஆரிய மொழி என்ற கருத்து மொழியியலிலும் நிலைப்பட்டிருக்கிறது. இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் ரொமான்ஸ் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பிரெஞ்சு, ஸ்பானிஷ் முதலிய மொழிகள் லத்தீனிலிருந்து பிரிந்தவை என்று சொல்வதைப் போல.

இந்த மொழி நிலைமையைத் திராவிட மொழிக்குடும்பத்துக்குத் தவறாகப் பொருத்துவதால், மூலத்திராவிடம் தமிழே என்ற பிழையான கருத்துப் பிறக்கிறது.

(ஒரு மொழியின் தோற்றத்தைப் பற்றி அறிய என்னுடைய தமிழ் இன்று: கேள்வியும் பதிலும் (அடையாளம் பதிப்பகம்) என்ற நூலைப் படைக்கலாம். இதில் உள்ள கேள்வி பதில்கள் வல்லமையில் முன்னால் வெளிவந்தவை).

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மூலத் திராவிடம் தமிழ் அல்ல

  1. புரொபசர் அண்ணாமலை விஞ்ஞான , தர்க்க ரீதியில் எவ்வாறு சமீபத்திய ஆய்வு வெளியீட்டை எடுத்துக் கொள்ள வேண்டும் என சொல்லிவிட்டார். இது செவிடன் காதில் சங்கு என்பதுதான் என் மதிப்பீடு. தமிழ்நாட்டில் எல்லாம் பெரும் உணர்ச்சி பூர்வமான கோஷங்களாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுகிறன. எவ்வளவு தர்க்கபூர்வமாகவும், நிபுணர்கள் ஆய்வு அடிப்படையில், விஞ்ஞான ரீதியாக சொன்னாலும் லெமூரியத்தமிழ், மற்ற மொழிகளின் `தாய்` தமிழ், என்றும் மாறாத தூய தமிழ், `கன்னித்தமிழ்` அதாவது மற்ற மொழிகளுடன் கலக்காத , கடன் வாங்காத தமிழ் என்ற அபத்தங்கள்தான் சமூகத்தில், அரசியல்தளத்தில், பெருமளவு பல்கலைக்கழக உயர்கல்வி/ உயர் ஆராய்ச்சி புலத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறன அல்லது மௌனமாக உடன்படுக்கப்படுகிறன. இதற்கு `தனித்தமிழ்` இயக்கம் ஒரு முக்கிய காரணம், அதனோடு சுந்தரம்பிள்ளை , மறைமலை அடிகள், ஞானமுத்து தேவநேயன் , பாரதிதாஸன் , இராசமாணிக்கம் (பாவலரேறு பெருஞ்சித்திரனார்) ஆகியோரை கலாசாரச் சிங்களாக துதி பாடுவது இன்னொரு முக்கிய காரணம். அதற்கு மேல் தமிழை சரித்திரத்திற்க்கு அப்பால்பட்ட `தெய்வத்தமிழாக` பார்ப்பது – அல்லது தொழுவது இன்னொரு முக்கிய காரணம். எப்போது இந்த வேண்டாத துதிப்போக்கை நிறுத்தி, தமிழை தற்கால தாய்மொழிகளில் ஒன்றாக தமிழர்கள் பார்ப்பார்களோ அன்றைக்குதான் மொழி பற்றிய – தமிழ் பற்றிய – விஞ்ஞானபூர்வ அறிவு வளரும். `தமிழ்த்தாய் வாழ்த்தை` முதலில் நிறுத்துவ்து , இதன் முதல்படி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *