-மேகலா இராமமூர்த்தி

நெடிதுயர்ந்து நிற்கும் மரங்களையும் கீழே வீழ்ந்திருக்கும் அவற்றின் வரிநிழலையும் அழகாய்ப் படமெடுத்து வந்திருக்கிறார் திரு. ஆய்மன் பின் முபாரக்.  இப்படத்தை இவ்வாரக் கவிதைப் போட்டிக்காகத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் என் நன்றியறிதலுக்கு உரியோர்.

வரிசையாய் வானளாவி நிற்கும் இம்மரங்களின் தண்டுப்பகுதியும் கிளைகளுமே பார்வைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் இலைகள் துல்லியமாய்த் தெரியவில்லை. எனினும் பக்கவாட்டில் காணப்படும் இலைகளின் தோற்றம் வேங்கையை ஒத்திருப்பதால் மேலிருந்து புலிகள் சில கீழே பாயக் காத்திருப்பது போன்றதோர் தோற்றமும் கிடைக்கிறது.

வேங்கை மரம் (Pterocarpus marsupium) என்றொரு மரம் நம் பண்டைத் தமிழ்நிலத்தில் பிரசித்தம். பொன்வண்ண மலர்களைச் சுமந்திருக்கும் அம்மரங்கள் பார்ப்பதற்கு உண்மையான வேங்கையைப் போலவே தோற்றம் காட்டும் என்பதைச் சங்க இலக்கியங்கள் நமக்கு அறியத்தருகின்றன. வேங்கை மலர்களால் தொடுத்த அசைகின்ற மாலைபோலக் கிடக்கும் புலிக்குட்டிகளை ஈன்று பசித்திருந்த தாய்ப்புலியை நற்றிணைப் பாடலொன்று நமக்கு அடையாளம் காட்டுகின்றது.

கல்அயல் கலித்த கருங்கால் வேங்கை
அலங்கல்அம் தொடலை அன்ன குருளை
வயப்புனிற்று இரும்பிணப் பசித்தென வயப்புலி… (நற்: 383)

தம் கற்பனை ஊற்றைக் கவிதையாய்ப் பாய்ச்சக் கவிஞர்கள் வரலாம் இனி…!

*****

கவின்மிகு காடுகளை அழித்ததால் மழை பொய்த்தது; நிலம் வறண்டது; விலங்குகள் அழிந்தன; புவிவெப்பம் உயர்ந்தது. இனியேனும் இயற்கையைக் காத்து, காற்றையும் வருங்காலத்தில் விலைகொடுத்து வாங்கும் அவலத்தைத் தடுப்போம் என்கிறார் திரு. ஆ. செந்தில் குமார். 

இயற்கைவளங்களைக் காப்போம்… !

கிளைகள் படர்ந்த மரங்களடர்ந்த சோலை…
சோலை நடுவேயொரு செம்மண் சாலை…
காலங் காலமாய் இருந்த இந்நிலை…
காலத்தின் கோலத்தால் அழிவதேநம் கவலை…

கிளைகள் படர்ந்தது…மரங்க ளடர்ந்தது…
சோலை விரிந்தது… நிழலைத் தந்தது…
தென்றல் வந்தது… இதமாய் இருந்தது…
தண்ணென் றிருந்தது.. உள்ளம் மகிழ்ந்தது…

காடுகள் அழித்தோம்… மழையினளவு குறைந்தது…
காடுகள் அழித்தோம்… நிலமனைத்தும் வறண்டது…
காடுகள் அழித்தோம்… வளமிகுஇயற்கை சிதைந்தது…
காடுகள் அழித்தோம்… உலகின்வெப்பம் உயர்ந்தது…

காடுகள் அழித்தோம்… விலங்குகள்பலவும் அழிந்தன…
காடுகள் அழித்தோம்… நீர்நிலைகள்பலவும் வற்றின…
காடுகள் அழித்தோம்… காற்றில்நச்சுக்கள் மிகுந்தன…
காடுகள் அழித்தோம்… பருவநிலைகளும் மாறின…

இன்றைய தலைமுறை மனிதர் நாம்…
தண்ணீரை விலைகொடுத்து வாங்குகின்றோம்…
இனிவரும் தலைமுறை மக்கள் தமக்கு…
இனிய காற்றுக்கும் விலைதரும் நிலைவருமே…

இனியேனும் விழித் தெழுவோம்…
இயற்கை வளங்களைக் காத்திடுவோம்…
இனிவரும் தலைமுறை மக்களுக்கு…
இயற்கையைச் சிதைக்காது விட்டுச்செல்வோம்…

*****

விரிந்திருக்கும் மரக்கிளைகள் தேர்ந்த ஆடலரசியின் அபிநய முத்திரைகளாய்க் காட்சியளிக்கின்றனவே என வியக்கிறார் திருமிகு. திலகவதி.

பரதத்தின் பாவனைகளா
வாழ்நாள் முழுவதும் 
இதன் விரல்களில்….
ஆடலரசியா…
இவள்…
அபிநயம் பிடிக்கிறாள்…

*****

மரங்களை வெட்டி ஈட்டும் பணம் நிம்மதி தாராத தனம்; அதுதவிர்த்துச் சாலையெங்கும் நிழல்தரு மரங்களை வளர்ப்போம்; நீண்ட ஆயுளைப் பெறுவோம் என்கிறார் திருமிகு. நாகினி.

போற்றப்படும் மண்வாழ்வு

நின்றுநி ழல்தொட ரும்பாதை யென்றொரு
.. நிம்மதி இல்லாமல் சேருந்த னம்
அன்றாட வேலையென் றாகிம ரம்வெட்டி
.. ஆயிர மாயிரம் ஈட்டும்ப ணம்

சங்கடம் நீக்கலா மென்றெண்ணி டும்மாந்தர்
.. சாலையில் சூடுதாங் காமல்வீழ் தல்
இங்கிவர் பாடுக ளென்றாகி டுந்துயர்
..  இற்றிட காவலா கும்மரம் நல்

வீரிய மாகிவ ளர்கின்ற நல்வித்து
.. விண்ணையும் முட்டிட ஆரோக்கி யம்
ஊரிலுள் ளோரெவர்க் குந்தரும்
.. உற்றவோர் தூணாகி மாசிலா தம்

காற்றுட னாடிடுஞ் சோலையின் மென்மையில்
.. காலமெல் லாம்வாழ சாலையெங் கும்
ஊற்றாய்ம ரம்வளர்க் கும்மனி தர்பணி
.. உன்னத ஆயுளை ஏற்றமாக் கும்

ஆற்றலும் நல்மனதின் பேரறி வும்பெறுவோர்
.. அன்றாடம் நிற்கநி ழல்தரும் பேர்
நாற்றென ஓங்கும ரம்வளர்ந் தால்நிதம்
.. போற்றுத லானவாழ் வாகுமண் வேர்! 
 
*****

”சாலையை விரிவுபடுத்துகிறோமென்று சோலையை அழித்து நாட்டைப் பாலையாக்காதீர்!” என்று இயற்கையைக் காக்கமறந்த மனிதரை எச்சரிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

வெட்டாதே…

சோலை வனத்திலே
சொகுசாய்ச் செல்லத்தான்,
பாதை வகுத்தனர்
நம் முன்னோர்..

முன்னேறிவிட்டதாகச் சொல்லும்
மனிதா நீ,
சாலை விரிவுபடுத்துகிறோமென்று
சாகடித்துவிடுகிறாயே
சாலையோர மரங்களை..

முன்னோரெல்லாம்
மரம் நட்டனர்,
வெட்டுகிறாயே நீ..

நிழலை அழித்துவிட்டு
வெயிலில் செல்கிறாயே,
வேகமாய்ச் செல்கிறாயே-
அழிவுப் பாதையில்..

வேண்டாம் இந்த
விபரீத விளையாட்டு,
வெட்டாதே மரத்தை..

வெட்டுவது தேவையெனில்,
நட்டுவிடு புதிதாய்-
வெட்டுமுன்னே..

மரம் வளர்ப்போம்,
மண்ணைக் காப்போம்…!

*****

”காவிரி தந்த நீர்வளமும் நிலவளமும் கானலானது!  மீதமிருக்கும் காடுகளையும் கழனிகளையும் அழித்து எண்ணெயும் எரிவாயுவும் எடுக்கின்றார். எல்லா வளங்களும் சேதமாகித் தமிழ்த்தேசமே பாலையானதே” என்று வருந்துகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

காவிரி தந்த பூவெழில் சோலை..!
அன்று….
தலைக்காவிரியில் தோன்றிய சிறுதுளியே பின்
……….தமிழகத்தைப் பெரு வளமாக்கியதாக வரலாறு *
கலையுலகில் காவிரிக்கு என்றுமே சிறப்புண்டு
……….காரணப்பெயராம் பொன்னி யெனும் புகழுமுண்டு*
குலைதள்ளும் வாழையும் வயலுமே செழிக்க
……….கருங்கயல் விளையாடிய காவிரியே காரணம் *
“மலைத்தலைய கடற்காவிரியென” பட்டினப்
……….பாலையுமதன் மகத்துவத்தை எடுத்துரைக்கும் *

மூன்று போகம் விளைந்தெங்கள் பூமிமுழுதும்
……….முத்தாகத் தவழ்ந்து வருமெங்கள் காவிரியாம் *
அன்றெவரோர் வயல் வெளியை ஆராய்ந்தார்
……….அகழ்ந்துதோண்டி மண்ணை ஆய்வு செய்தார் *
கொன்றழிக்கும் மீத்தேன் கிடைக்கும் என்றார்
……….கழனியும் காடுமழிக்கக் களத்தினில் இறங்கினார் *
இன்று வற்றிய நீர்வளமும் வறண்டநிலமுமே
……….ஈன்றதின்று வெறும் வாயுவையும் எண்ணெயும்*

இரைக்கும் பெருங்கடல் சூழ்ந்த நம்நாடுதான்
……….இறையன்புக்கு எடுத்துக் காட்டாய் விளங்கும் *
நிறை நெஞ்சம்கொண்ட பாவலரும் புலவருமே
……….நிம்மதியாகப் பாவிசைக்கத் தகுந்த இடம்தான் *
உரைக்கும்படி சொல்வேன் யாவர்க்கு முகந்த
……….உயர்ந்தநம் நாட்டிற்கிணை இல்லை! ஆனால்
தரையிலின்று தன்குகின்ற தண்ணீர் இல்லை *
……….கரைபுரண்டு நீரோடிய ஆற்றில் மணலில்லை

*****

”தலைவன் ஒருவன் தடம்பதித்து நடப்பதற்காகப் பாதைவகுத்து, மரக்குடை விரித்துக் காத்திருக்கின்றது இயற்கை. அவன் தடம்பதித்தால் பூக்கள் மாரியாய்ச் சொரிந்து அவனை வாழ்த்தும்” என்று தன் கற்பனைச் சிறகைக் கவிதையில் விரித்திருக்கின்றார் திருமிகு. சக்திப்ரபா.

தலைவனின் தடம்

இன்றைக்கேனும்
ஒரு மாமனிதன்
நடந்துவிட மாட்டானாவென
மணல் மெத்தையிட்டு
மரக்குடை விரித்து
காத்திருக்கும் பாதை.

கால்கள் பாவாத அரிய வழியிதென
கண்டுணரும் தலைவன்,
கோடியில் ஒருவன்,
தடம் புரளாத எளியன்,
தடம் பதிக்கும் தருணம்,
பூக்களும் மலர்ந்து
வாழ்த்துக்கள் சொரியும்.

*****

கனியும் நிழலும் தந்து எம்மைக் காக்கும் மரங்களே! நீங்கள் வாழவேண்டும்! நீங்கள் வீழ்ந்தாலும் மீண்டும் விதைபோட்டு உம்மை வளர்ப்போம்! மண்ணைக் காப்போம்!” என்று சூளுரைக்கிறார் திரு. சி. ஜெயபாரதன்.

மரங்களை வளர்ப்போம்

பச்சை மரங்களே !
பழங்கள் தரும் மரங்களே !
நிழல்தரும் மரங்களே !
இளநீர் தரும் மரங்களே !
நீரின்றிக்
காய்ந்த மரங்களே !
வேரறுந்து
விழுந்த மரங்களே !
முதிர்ந்து
மூப்படைந்த மரங்களே !
எரிந்துபோன
பரிதாப மரங்களே !
எங்கள் வீட்டு ஓடுகளைத்
தாங்கும் மரங்களே !
நீங்கள் வாழ வேண்டும் !
உங்களை வெட்டினாலும்
வீட்டுத் தூணுக்கு
வேண்டும்!
மீண்டும் மரம் விதைப்போம்,
ஒன்றல்ல !
ஆயிரம், ஆயிரம் மரங்கள்
தாய் மண்ணிலே
தழைக்கும் ! தழைக்கும் !
தழைக்கும் !

*****

மரம் இயற்கை நமக்களித்த வரம்! மரங்களைக் கொன்றழித்ததால் நாம் சந்திக்கும் சீரழிவுகளைச் சிறப்பாகத் தம் கவிதைகளில் பதிவுசெய்திருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது அடுத்து…

புலியின் வரிகள் கிளை நிழலே! நெருங்கித் தருக்கள் தீட்டும் வரைபடமே!
புலியும் தருவும் பிணையென்றே இறைமை இயற்கை காட்டுதுவே!
புலிஉண்டாமால் தருஉண்டாமால் என வலிமரமும் வேங்கையானதுவே!
புலி இல்லாமால் தரு இல்லாமால் இன்று புவித்தரமும் வீழல் கொண்டதுவே!

புலியே நாட்டின் சின்னமென்பர்; புலியோ அழிந்துபடுதென்பர்
புலியே அழிந்துபடுமென்றால் நாட்டின் பீடும் சரியுது எனலாமா?
புலிகள் வாழக் காடில்லை; புலிகள் வழக்காடவில்லை; மறை
புலிகள் மறைந்தது அவையாலில்லை; இவரேயவற்றின் நமனானார்!

புலிவழிப் பாடும் புலிவழக்கோடு எம்மூதையர் வாழ்ந்த எம் தாரணியில்
புலியின் வீரம் இலக்கியமாம்! புலியே இறைவர் வாகனமாம்!
புலியின் தோல் நகம் புனிதமென்றே போற்றிப் பொருத்தியவர் மகிழ்ந்தனராம்!
புலிக்காடும் நரநாடும் வேறென்றே வரையறைபோட்டும் அவர் வாழ்ந்தனராம்!

புலிகள் ஒதுங்கா தக்கை மரம்! தேவதாருவும் தேக்கும், சந்தனமும்
சேர்ந்தாலங்கே புலியொதுங்கும்!
புலிகள் பிறப்பு நூதனமே! இறைவன் படைப்பிலவை உன்னதமே! காட்டில்
மட்டும்

புலி பிறக்கும்! கூட்டில் பிறக்கா மூடர்களே! மாக்காடில்லா புவியதனில்
புலி வாழேனென்றே முடிவெடுத்து கருமூடி மரணித்துப் போனதுவே!

புலியைப்படத்தில் கண்டபடி புலியைக்கதையில் கேட்டபடி போகும் போக்கு
முற்போக்கு?
புலியை ஒழித்து காட்டை அழித்து சுயம் வாழ்ந்திடும் வாழ்வு பகுத்தறிவு?
புலியின் படம் உயர் சுவர் நிறையாய் உள்ளமெல்லாம் சுயவுரிமைகளாய்
புலிப்பிழையாய் பெருத்த பிழைசெய்து ஓட்டும் உம் வாழ்க்கை வீழ்வதெப்போ?

நான் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் புலியை ஒத்த தோற்றம் காட்டும் வேங்கை மரங்களை நம் தமிழ்ப் புலவர்கள் தம் சங்கப் பாடல்கள் பலவற்றில் சுவைபட விளக்கியுள்ளனர். வேங்கை பூத்தால், பெண்கள், ”புலி…புலி!” என்று ஆரவாரித்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளனர். வேங்கை மரத்தைக் கொண்டாடிக் குதூகலித்த தமிழ்ச் சமூகம், வேங்கை இனத்தையும் போற்றிப் புரந்தது.  அன்று காடுகள் மிக்கிருந்தன; அதனால் புலிகளின் எண்ணிக்கையும் குறையாமலிருந்தது. இன்றோ…காடுகொன்று நாடாக்கினோம்…இல்லை…சுடுகாடாக்கினோம்! அதனால் கம்பீரத்துக்கு இலக்கணம் வகுத்த புலியினமும் அழிவின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

மரங்களை அழியாமல் காத்தால் மட்டுமே காட்டு விலங்குகளையும் நாம் அழியாமல் காக்கமுடியும் எனும் உண்மையைத் தன் கவிதையில் கவனத்தோடு பதிவுசெய்திருக்கும் திருமிகு. அவ்வைமகள் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகிறார். அவருக்கு என் பாராட்டு!

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி 154-இன் முடிவுகள்

  1. படத்துக்கு ஏற்ற பாடலா புலிவரிப் பாடல் ?

    படம் தனியாக நிற்குது !
    பாடல் தனியாக எங்கோ போகுது !
    இரண்டையும் சேர்க்கும் பிணைப்பு
    ஏதாவது ஒன்று உள்ளதா ?
    எனக்குத் தெரிய வில்லை !

    நக்கீரன்

  2. அன்பு ஜெயபாரதன் ஐயா,
    தொலைவில் அமைந்திருக்கும் மரத்தின் பக்கவாட்டுக் கிளைகளை நோக்குங்கள்! அவற்றின் புலியை ஒத்த நிறமும், அக்கிளைகளின் வளைவும், அங்கே புலிகள் சில பாயக் காத்திருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதைக் காணலாம். கிளைகள் காட்டும் (மாய) புலித்தோற்றத்தையும், காடுகள் அழிவதால் நம் நாட்டின் தேசிய விலங்கெனும் பெருமைக்குரிய புலியினம் அழிவதையும் முடிச்சிட்டு இக்கவிதை பேசுகின்றது. அந்த அடிப்படையிலேயே இதனைப் பரிசுக்குரியதாய்த் தேர்ந்தெடுத்தேன்.

    நன்றி!
    அன்புடன்,
    மேகலா

  3. படத்தில் ஒளிந்துள்ள புலித் தோற்றம் என் விழிகளில் படவில்லை.

    “புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது”

    புலால் தேடும் புலிக்கு இப்படத்தில் இடமுண்டா ?

    புலிக்கும் பச்சைப் புல்லுக்கும் உள்ள இணைப்பு எனக்குப் புரியவில்லை.

    படத்தை எடுத்தவரோ அல்லது கொடுத்தவரோ என்ன சொல்கிறார் என்று அறிய விரும்புகிறேன்.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *