மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு                                                                      

தானஞ் செய்வாரின் தலை.

       -திருக்குறள் -295(வாய்மை)

 

புதுக் கவிதையில்…

 

மனத்தோடு பொருந்த

மெய் பேசும் ஒருவன்,

தானம்

தவம் செய்வோரைவிட

உயர்ந்தவனாகிறான்…!

 

குறும்பாவில்…

 

தானமும் தவமும் செய்வோரைவிட 

தன் மனமிசைய உண்மையே பேசுபவன்,  

உயர்நிலை பெறுகிறான்…!

 

மரபுக் கவிதையில்

 

மண்ணில் மனித வாழ்வினிலே

     மனமது பொருந்த உண்மையதைக்

கண்ணிய மாகப் பேசுவதைக்

     கடமை யாகக் கொண்டவன்தான்,

புண்ணியச் செயல்களில் உயர்ந்தவராம்

     பிறர்க்குத் தானம் கொடுப்போனையும்

உண்மைத் தவமது செய்வோனையும்

    விடவும் சிறப்பில் உயர்ந்தவனே…!

 

லிமரைக்கூ..

 

மனம்பொருந்த மெய்பேசுதல் அரிது, 

தானம் தவம்செய்வோன் சிறப்பைவிட இதுபோல்     

மெய்பேசுவோன் சிறப்பே பெரிது…!

 

கிராமிய பாணியில்…

 

பேசு பேசு உண்மபேசு,

எப்பவும் உண்மயே பேசு..

 

தானதர்மம் செய்யிறவனயும்

தவஞ்செய்யிறவனயும் விட,

தன்மனம் பொருந்த

எப்பவுமே

உண்ம பேசறவந்தான்

ஒசந்தவன்

உண்மயிலே ஒசந்தவன்..

 

அதால

பேசு பேசு உண்மபேசு,

எப்பவும் உண்மயே பேசு…!

 

-செண்பக ஜெகதீசன்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *