தொன்னூல் விளக்கம் – இலக்கண விளக்கம் யாப்புக் கோட்பாடுகள்

0

-ம.சிவபாலன்

முன்னுரை

தொல்காப்பியர் காலம் முதல் தற்காலம் வரையிலான இலக்கணக் கோட்பாடுகள் மரபுச் செய்யுள் வழியோ அல்லது உரைநடை வழியோ இவைதாம் இலக்கணங்கள் என்று இலக்கிய மரபை அறிவுறுத்திக் கொண்டே வருகிறது.   தமிழில் தோய்ந்தவர் அதனை முற்றுமறிந்து இலக்கணம் யாப்பதிற்கும், அவ்வழியினின்று தமிழைத் தாய் மொழியாக அல்லாதோர் அம்மொழியினைக் கற்று அதில் இலக்கணம் யாப்பதற்கும் மரபும் மாற்றமும் உள்ளனவா என்பதை நாயக்கர் காலத்தில் தோன்றிய ஐந்திலக்கண நூல்களானத் தொன்னூல் விளக்கம், இலக்கண விளக்கம் என்ற நூல்களின் வழியே புலப்படும் வெண்பா யாப்புக் கோட்பாடுகள் இக்கட்டுரையின் வழியே ஆராயப்படுகிறது.

நாயக்கர் காலம்

நாயக்கர் கால ஆட்சியில் தமிழ்ப் புலவர்கள் பலர் இருந்துள்ளனர்.  கி.பி. 1529இல் மதுரை நாயக்கனாக சுயஅதிகாரத்துடன் விசுவநாதன் பதவியேற்றான் எனவும் கி.பி. 1736இல் மீனாட்சி இறந்தபோது அது முடிவுக்கு வந்தது என்பது வரலாறாகும். அவற்றுள் அதிவீரராம பாண்டியர் (1558), வரதுங்கராம பாண்டியர் இருவரும் அரசர்கள் ஆவர்.  குமரகுருபரர், சுப்ரதீபக்கவிராயர் (வீரமாமுனிவரின் தமிழாசிரியர்) வீரமாமுனிவர், உமறுப்புலவர், திருக்குருகைப்பெருமாள் கவிராயர், குறவஞ்சியின் ஆசிரியர் திரிகூடராசப்பக் கவிராயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

விளக்கம் பொய்க்காரணம்

 ‘மேவிய ஐம்பொருள் விளக்கல் உணர்ந்து
விரிவிலாத் தொன்னூல் விளக்கம்என பெயர்த்து”.  (பொதுப்பாயிரம்)

பழைய இலக்கியங்களை விளக்குவதற்குரிய விளக்கு போன்றும், தொன்மை இலக்கண நூல்களைப் புரிந்து கொள்வதற்குத் துணையாக நிற்கும் விளக்குப் போன்றும் அமைய வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் படைத்து ‘தொன்னூல் விளக்கம்” எனக் காரணப் பெயரையும் விளக்கியுள்ளார். 

‘முன்னோர் நூலின் முடிவு நோக்கிச்
சொல்லும் பொருளும் நல்வன தழீஇப்
பல் சுவைக் கரும்பின் ஒருவட்டு ஏய்ப்ப
இலக்கண விளக்கம் என்று ஒரு பெயர் நிறீஇப்
புலப்படுத்து இயலஉறப் பொருள் விரித்து உரைத்தனன்”

                                                 (இ.வி. சிறப்புப்பாயிரம்)

முன்னோர் கூறிய முடிவுகளை எண்ணியே அதன் மரபு மாறாது இலக்கண விளக்கம் என்ற பெயர்நெறிப் பொருள் விரித்து இயல்புறப் புலப்படுத்தும் என்ற வகையின் மரபுகளை விளக்குவதாக அமைகின்றது. ஆகையால்தான் இலக்கண விளக்க நூலில் தொல்காப்பியம், நன்னூல் வீரசோழிய நூற்பாக்கள் வடிவம் மாறாது பயின்றுவந்துள்ளது எணலாம்.

இலக்கண விளக்கம்

குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்பெறும். இந்நூல் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருமலை நாயக்கர் மன்னரின் செயலாளராக விளங்கிய கயத்தாற்றுத் திருவேங்கடநாதையர் என்பவரின் குழந்தைக்குக் கல்விகற்பிக்கச் சென்றிருந்த காலத்தில் தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களைத் தெளிவாகக் கற்று அவற்றின் முரண்பாடுகளையெல்லாம் தெரிந்து, தாம் ஓர் இலக்கண நூல் உருவாக்க வேண்டும் என்று எண்ணியே இதனை இயற்றினார்  (பதிப்புரை).

படிக்காசுப் புலவர் இவரின் மாணக்கர் என்று கூறுவர்.  மயிலமலை முருகன் மேல் மயிலம் பிள்ளைத் தமிழ், சிவஞான பாலய சுவாமிகள் மேல் பாசவதைப் பரணி என்ற நூல்களும், சிற்றிலக்கியங்கள், புராணம் போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.

எழுத்து, சொல், பொருள் என முறையே மூன்று அதிகாரங்களையும் 15 இயல்களையும் உள்ளடக்கியதாக இந்நூல் அமைகின்றது.

தொன்னூல் விளக்கம்

      கி.பி 1730இல் வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட இந்நூலானது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து அதிகாரங்களையும் 18 பகுப்புகளையும் கொண்டுள்ளது.  தேம்பாவணிக் காப்பியமும் பிற சிற்றிலக்கியங்களும், இலக்கணம், அகராதிகள் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். 

பா வகை

‘பாவிரி மருங்கிணைப் பண்புறத் தொகுப்பின்
ஆசிரி யப்பா வெண்பா என்றாங்கு
ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப”
(தொல். பொ – 419)

‘ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை
வெண்பா நடைத்தே கலிஎன மொழிப”
(தொல். பொரு – 420)

‘ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
நாலியற்று என்ப பாவகை விரியே”  
(தொல். பொரு – 417)

‘வெண்பா ஆசிரியம் கலியே வஞ்சிஎனப்
பண்புஆய்ந்து உரைத்த பா நான்கு ஆகும்”      
(இ.வி – 726)

வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலிப்பாவும் வஞ்சிப்பாவும் எனத் தத்தம் தன்மையான தெரிந்து சொல்லப்பட்ட பா நான்கு வகைப்படும் என்று இலக்கண விளக்கம் தொல்காப்பியத்தின் கண் மொழியப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

‘வெண்பா அகவல் விரிகலி வஞ்சி
மருட்பா என ஐவகைப்பா அன்றியும்”.      
(தொ.வி.219)

எனத் தொன்னூல் விளக்கம் இலக்கண விளக்கத்தினின்று மாறுபட்டு ஐந்து என உரைக்கின்றது.

பா இனம்

‘தாழிசை துறையே விருத்தம் என்று இவை
பாவினம் பாவொடு பாற்பட்டு இயலும்”
(இ.வி – 727)

தாழிசை, துறை, விருத்தம்  எனப் பா இனம் மூன்று வகைப்படினும், பா இனம் பாவொடு இணைந்து வெண்தாழிசை, வெண்துறை, வெளிவிருத்தம் எனவும் முறையே பாவின் பெயரினை முன்னொட்டாக ஏற்று வருவதாகும்.  இந்நூற்பா யாப்பருங்கலம் நூற்பாவினை அப்படியே ஏற்றுக் கூறுவதாக அமைந்துள்ளது.

       ‘தாழிசை துறையே விருத்தம் என்றிவை
       பாவினம் பாவொடு பாற்பட்டியலும்”.  (யாப் -56)

       ‘துறை தாழிசை விருத்தம் தூக்கினம் மூன்றே” (தொ.வி – 219)

இவற்றிலும் பா இனம் மூன்றாகவே சுட்டப்பெறுகிறது.  மேலும் தூக்கு என்ற சொல்லை ‘பா” என்றுமுதன் முதலில் இந்நூலில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெண்பா – இலக்கணம்

வீரமாமுனிவர் வெண்பாவின் இலக்கணத்தை,

‘வெள்ளைக்கு இயற்சீர் வெண்சீர் விரவி
ஏற்கும் அளவடி ஈற்றடி சிந்தடி
ஈற்றுச்சீர் அசைச்சீர் உக்குறள் மிகலுமாம்”.      
(தொ.வி – 220)

என்று கூறுகிறார்.  வெண்பா, இயற்சீரும் வெண்சீரும் பயின்றுவரும், ஈற்றடிக்கு முந்தைய அடிகள் நான்கு சீர் கொண்ட அளவடியாகவும் ஈற்றடி சிந்தடியாகவும், ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஓர்அசைச்சீராகவும் அவ்வசைச்சீர் உகரம் மிகுந்தும் வரும் என வரையறுக்கின்றது.

‘அந்தடி சிந்தடி ஆகலும், அவ்வடி
அந்தம் அசைச்சீர் ஆகவும் பெறுமே” 
(இ.வி – 728)

இக்கருத்தானது தொன்னூல் விளக்கம் வரையறுக்கும் வெண்பா இலக்கணத்தை அடியொற்றியதாகவே அமைகின்றது.  ஆனால் இது யாப்பருங்கலம் நூற்பாவின் (57) அப்படியே ஏற்று மாறாமல் உரைக்கின்றது.

ஓசை

‘வெள்ளையுள் பிறதளை விரா வெண்டளை
ஒன்றாய்ச் செப்பல் ஓசையாம் அஃதே
ஏந்திசை வெண்சீர் இயற்சீர் தூங்கிசை
ஒழுகிசை இரண்டும் உளஎனில் ஆகும்”.
(தொ.வி – 221)

வெண்பாவினுள் பிற தளைகள் வராது என்னும், வெண்தளை வருவதினால் அது செப்பலோசை பெற்றது எனவும் உணரமுடிகிறது.

  ‘செப்பல் இசையன வெண்பா”.  (இ.வி – 728)

செப்பல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடையன வெண்பா என்றவாறு உணர்த்திற்று.  மேலும் ஓசை மூவகைப்படும் என்பதினை இந்நூல் விளக்கவில்லை. ஆயினும் உரைகளின் வழியே மூவகை ஓசை வெண்பாவில் பயின்று வரும் என்பது புலனாகின்றது.

ஈற்றடி இறுதி அசைச்சீரின் முடிவை ஏனைய இலக்கண நூல்கள் பின்வருமாறு கூறுகின்றன.

‘சிந்தடி யானே இறுதலும், அவ்வடி
அந்தம் அசைச்சீர் வருதலும், யாப்புற
வந்தது வெள்ளை வழங்கியல் தானே”.
(காக்கை)

       ‘முச்சீர் அடியான் இறுதலும், நேர்நிறை
அச்சீர் இயல்பின் அசையின் இறுதியாம்”.      
(அவிநயம்)

‘காசும் பிறப்புமே காட்டாது தேமாவும்
மாசில் புளிமாவு மாயுரைத்தல் – ஓசைமேல்
தேறித்தாம் செப்பல் தெளிவிப்பான் அன்றாசிக்
கூற்ற்றே கூறாக் கொணர்ந்து”.       
(யா.வி -57) 

‘ஒன்றும் இடைச்சீர் வருஞ்சீரொடு முதற்சீர்கள் தெற்றும்
என்றும் அளவடி ஈற்றடி அல்லன; ஈற்றடியும்
நன்று மலர் காசு நாள் பிறப் பென்றிற்ற சிந்தடியே;
துன்றும் கடைச்சீர் புகா என்பர் வெள்ளையில் தூமொழியே”.
(வீ.சோ – 111)

நேர் அசைச்சீர்

‘செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். 
(குறள் – 26).

நிரை அசைச்சீர்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
(குறள் – 151).

நிரைபு அசைச்சீர்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
.  (குறள் – 1)

நேர்பு அசைச்சீர்

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு 
(குறள் – 127)

ஏந்திசைச் செப்பல்

யாதானும் நாடாமல் ஊராமால் என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத ஆறு. 
(குறள் – 397)

தூங்கிசைச் செப்பல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி லூறிய நீர்.    
(குறள் – 1121)

ஒழுகிசைச் செப்பல்

எதுவும் சிலகாலம் என்ப தறிந்தேன்
இதுவும் கடக்கும் இழப்பில்லை – எத்துணை
மாற்றம் அடைந்தாலும் மாற்றம் எனும்மொன்றே
மாறிடாத் தன்மையாம் மெய்”. 
(அதி அந்தாதி – அதிமெய்ப்பொருள்)

வெண்பா – வகை

யாப்பருங்கலம் வெண்பா வகையினை ஐந்து என்றே குறிப்பிடுகிறது இதனை அமிர்தசாகரர்,

குறள்சிந் தின்னிசை நேரிசை பஃறொடை
எணவைற் தாகும் வெண்பாத் தானே”.
(யாப் – 58)

என்று குறிப்பிடுகிறார். வீரசோழியம் ஐவகையுடன் ஆறாக,

வேண்டிய ஈறடி யாற்குறள்ஆம்; மிக்க மூவடியால்
தூண்டிய சிந்தியல்; நான்கடி நேரிசை; தொக்கதனின்
நீண்டிய பாதத்துப் பஃறொடையாம்; இதனேறிசையே
நீண்டிசை யாங்கலி; நேரிசை பேதிக்கிலின்னிசையே”.
(வி.யா -112)

எனவும், ஆனால் தொன்னூல் விளக்கம் கலி வெண்பாவினைவிடுத்துச் சவலை என்ற வெண்பா வகையினை இணைத்து ஆறு என்றே குறிப்பிடுகிறது.

குறள் சிந்து இன்னிசை நேரிசை சவலை
பஃறொடை என வெண்பா ஆறு அவற்றுள்
ஈரடி குறளே இருகுறள் சவலை”.
(தொ.வி – 222)

இருகுறள் இணைந்து இடையே தனிச்சொல்லின்றி வருமேயாயின் அது சவலை எனப்படுகிறது.  வீரசோழியத்தில் ஆறுவகை என்று வரையறுக்கப்பட்டிருப்பினும் சவலை வெண்பா என்று தனி வகையாக குறிப்பிடப்படவில்லை. ஆனால்,

இடையு முதலுங் கடையுங் குறைந்து மிடையிடையே
அடையு மடிகுறைந் தும்வரி னான்கடி யப்பெயரால்
நடைமுந் தியன்ற சவலையென் றோதுவர்”.
      (வீர – 128)

என்பதின் வழியே சவலை என்பது அடியளவு அல்லது சீர் அளபு மிக்கும் குறைந்தும் வரும் என்பது புலனாகின்றது.  ஆயினும் இவை தனியாக வெண்பா வகையினுள் சுட்டப்பெறவில்லை.

குறளே நேரிசை இன்னிசை பஃறொடை
சிந்தியல் என அஃது ஐந்துஎன மொழிப”.      
(இ.வி. 729)

என இலக்கண விளக்கத்தில் வெண்பாவின் வகைகள் ஐந்து என்றே கூறப்பட்டுள்ளது. ஆயினும் வீரசோழியம் உரைத்த சவலை என்ற பாவிகற்ப வகையினைத் தொன்னூல் விளக்கம் கூறுகின்றது.  எனினும் சிந்தியல் வெண்பாவில் நேரிசை, இன்னிசை ஆகிய இரு வகைகளை யாப்பருங்கலக் காரிகைபோலக் கொண்டாலும் அவற்றைத் தனித்தனி வகையாகக் கருதாது ‘சிந்தியல்” என ஒரே வகையில் அடக்குவதாக அமைந்துள்ளது.

குறள் வெண்பா

குறள் வெண்பாவிற்கான வரையறையை இரு நூல்களும் ஒன்றுபட்டே உரைக்கின்றன.

       ‘ஈரடியான் வரின் குறள்…….”     (இ.வி 730 வ.1)
       ‘………
ஈரடி குறளே……”   
(தொ.வி. 222 வ.2)

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி அன்னார் உடைத்து”  
(குறள் – 667)

உடையோர்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்”    
(குறள் – 395)

என்பவை ஒரு விகற்பத்தானும் இரு விகற்பத்தானும் வந்த குறள் வெண்பாக்களாகும்.

நேரிசை வெண்பா

நேரிசை வெண்பாவிற்கான இலக்கணத்தை இருநூல்களும் மரபு மாறாமலே கூறியிருக்கின்றன.

”…. குறள்; அஃது இரண்டாய்ச்
சீரிய வான்தனிச் சொல்இடை சிவணி
இருவிகற்பானும், ஒரு விகற்பானும்
செப்பல் ஓசையின் சிதையா தாகி
அத்திறம் வரின்நே ரிசை”      
(இ.வி. 730 வரி 15)

என இலக்கண விளக்கமும்,

       ‘இருகுறள் இடைக்கூன் இயை நேரிசையே”       (தொ.வி. 222. வரி 4)

எனத் தொன்னூல் விளக்கமும் விளக்கமளிக்கிறது. இதன்வழி நேரிசை வெண்பாவினை வரையறுப்பின் அது ஒரு, இரு, பல விகற்பமாயினும் செப்பல் ஓசையினைச் சிதையாது பயின்று வருவதாக அமைகின்றது.

ஒரு விகற்ப நேரிசை

”நான்கொண்ட காதல் நெடுங்காலம் அல்ல
உனைப்பாட என்னை உணர்ந்தேன்  நினையுங்கால்
வான்மண்ணில் வாரா விழுந்தேனே உன்னுள்
எனதோடு நீபாட வா”.     
(அதி அந்தாதி – 42)

முதல் இரண்டு அடிகளிலும் எதுகையானது ஒன்றாகவே வருகிறது.  அது தனிச்சொல் பின்னரும் அடுத்த இரு அடிகளிலும் மேற் பயின்று வந்த எதுகையே பயின்று வந்துள்ளதால் இது ஒரு விகற்பத்தான் வந்த நேரிசையாகும்.

இரு விகற்ப நேரிசை

”கணினிவிடு தூதாம் கவிதையின் நூற்பேர்
அணியிது சேர்த்திடும் அன்னைக்கே – மண்ணில்
விளங்கும் சிவனின் வித்தகக் காதல்
விளக்கும் கவிதையின் மாண்பு”.

முதல்இரண்டு அடிகள், தனிச்சொல்லில் ஒரே எதுகையும் அடுத்த இரண்டு அடிகளில் வேறு எதுகையும் பயின்று வந்துள்ளதால் இது இரு விகற்பத்தான் அமைந்த நேரிடை வெண்பாவாகும்.

பல விகற்ப நேரிசை

இந்நேரிசை வெண்பாவினுள் எதுகைகள் இரண்டிற்கும் மேற்பட்டதாய் விளங்குவதாக அமைகின்றது.

இன்னிசை வெண்பா

மேற்கூறப்பட்ட நேரிசை வெண்பாவிற்கான இலக்கணங்களைப் பெற்று தனிசொல் இன்றி வறுவது இன்னிசை வெண்பாவும் இதனை,

‘நாலடி விகற்ப நடை இன்னிசையே”  (தொ.வி -222 – வ. 5)

என்றும்,

‘………. அடி நான்காய்
ஒன்றும் பலவும் விகற்பாய்த்தனிசொல்
இன்றி நடப்பின் இன்னிசை”    
(இ.வி. 730 .வரி. 5-7)

என இலக்கண விளக்கம் உரைக்கின்றது.

ஒரு விகற்பத்தான் இன்னிசை வெண்பா

”வைகலும் வைகல் வரக்கண்டும் அஃது ணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்”. 
(யா.கா.25-மே. நாலடி…39)

அடிதோரும் ஒரே வகையான எதுகையைப் பெற்று தனிச்சொல்லின்றி அமைந்த இன்னிசை வெண்பாவாகும்.

இருவிகற்பத்தான் இன்னிசை வெண்பா

”இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்றாது
பின்றையே நின்றது கூற்றம் என்றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையான்
மருவுபின் மாண்டார் அறம்”.   
(யா.கா – 25 மே.நாலடி 36)

முதல் இரண்டடிகள் ஓர் எதுகையும் அடுத்து வரும் இரண்டடிகள் வேறு எதுகையும் பயின்று வந்துள்ளதால் இது இரு விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பாவாகும்.

பல விகற்பத்தான் இன்னிசை வெண்பா

”கடற்குட்டம் போழ்வர் கலவர், படைக்குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்கும் தோமில்
தவக்குட்டம் தன்னுடையான் நீந்தும், அவைக்குட்டம்
கற்றான் கடந்து விடும்
“.     (யா.கா – 25 – மே.நாண்மணி 18)

இதில் அடிகள் தோறும் முதற்சீரில் பயின்று வரும் எதுகையானது இரண்டிற்கும் மேற்பட்டதால் இது பல விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பாகும், மேலும் இவ்வகையில் இரண்டாமடி தனிச்சொல் பெற்ற மூன்று விகற்பமாகவும், மூன்றாமடி தனிச்சொல்பெற்று இரு விகற்பமாகவும், மூன்றாமடி தனிச்சொல் பெற்று இரு விகற்பமாகவும், அடிதோறும் தனிச்சொல் பெற்று மூன்று விகற்பமாகவும் வரும், சான்றாக,

”இன்னாமை வேண்டின் இரவெழுக – இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக – தன்னொடு
செல்வது வேண்டின் அறஞ்செய்க – வெல்வது
வேண்டின் வெகுளி விடல்”.    
(யா.கா – 25 மே.நான்மணி 17)

என்ற பாடல் அமைகின்றது.

பஃறொடை வெண்பா

       பஃறொடை வெண்பாவின் இலக்கணத்தை கூறுகையில்,

       ‘…………. அடிபல
துன்னின் பஃறொடை……..”      
(இ.வி.730 வரி -78)

       ‘நாலடி மிக்கஅ டிநண்ணில் பஃறொடை” (தொ.வி. 222 வ.7)

என்றவாறு உரைக்கின்றது. இவ்வொண்பா வகையிலும் ஒன்று, இரண்டு, பல என விகற்ப வகைகளும் காட்டப்பெறுகின்றன.

சிந்தியல் வெண்பா

சிந்தியல் வகை இரு வகையாக விளக்கப்பட்டுள்ளது.

  1. நேரிசைச் சிந்தியல்
    2. இன்னிசைச் சிந்தியல்

       ‘….நேரிசை இன்னிசை
அன்னவாய் மூன்றடி பயான்வரின் சிந்தியல்”.
(இ.வி. 730.வரி. 8-9) ‘நேரிசை இன்னிசை நேர் மூவடி சிந்தே”       (தொ.வி. 222. வ. 6)

நேரிசை வெண்பா மற்றும் இன்னிசை வெண்பாவின் இலக்கணங்களைப் பெற்று மூவடியாய் வரின் அது சிந்தியல் வெண்பாவாகும்.

ஒரு விகற்ப நேரிசை சிந்தியல் வெண்பா

”அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து
செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்பச் – சிறந்தார்
சிறந்தமை ஆராய்ந்து கொண்டு”.     
(யா.கா. 26மே)

அடிதோறும் ஒரே வகையான எதுகையைக் கொண்டுள்ளமையாலும் இரண்டாமடியில் தனிச்சொல் பெற்று வந்துள்ளமையாலும் இது ஒரு விகற்பத்தான் வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பாவாகும்.  இதனைப் போலவே இரு விகற்பத்தானும் மூன்று விகற்பத்தானும் அமைந்த நேரிசைச் சிந்தியல் வெண்பாக்களும் உள.

மூன்று விகற்பத்தான் இன்னிசைச் சிந்தியல் வெண்பா

”முல்லை முறுவலித்துக் காட்டின – மெல்லவே
சேயிதழ்க் காந்தள் துடுப்பீன்ற – போயினார்
திண்தேர் வரவுரைக்கும் கார்”.        
(யா.கா. 26.மே)

அடிதோறும் வெவ்வேறு எதுகைகள் பயின்றுவர இது மூன்று விகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பாவாகப் பயின்று வந்துள்ளது.  நேரிசைச் சிந்தியல் வெண்பாவில் காணப்பட்டதுபோல இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிலும் ஒன்று, இரண்டு விகற்பத்தான் அமைந்த பாக்களும் உண்டென்பதை அறியமுடிகிறது.

சவலை வெண்பா

பாக்களை முற்கூறிய பெயர்களால் அல்லாமல் வேறு பெயர்களால் வகுத்து, இலக்கணமும் கூறும் வீரசோழிய ஆசிரியர்,

”மேவுங் குறள்சிந் தொடு பாதிவெண் பாத்திலதம்
மேவும் விருந்தஞ் சவலையென் றேழு”.      
(தொ.வி.222)

என இவ்வேழு வகைகளையும் பாக்களில் பயின்று வரும் எனவும் குறிப்பிடுகின்றார்  வீரமாமுனிவர். இவ்வகையைத் தனி வெண்பா வகையெனவே வரையறுக்கின்றார்.  இலக்கண விளக்கம் ஐந்து என்ற போதும் சவலை வகையைக் கூட்டி வெண்பாவின் வகை ஆறு என்று இலக்கணம் வகுக்கின்றார்.  அதற்கான விளக்கம் கூறுகையில்,

       ‘ஈரடி குறளே இருகுறள் சவலை”       (தொ.வி.222 வ.3)

அதாவது இரு குறள் இணைந்து தனிச்சொல்லின்றி பாக்களில் பயின்றுவந்தால் அது சவலை வெண்பா எனப்படும்.

”அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவல்ல
நட்டாலும் நண்பல்லர் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்”. 
(மூதுரை -4)

அளவியல் வெண்பாவைப் பொறுத்தவரை 15 சீர்கள் அமைந்திருக்க வேண்டும்.  பதினைந்து சீர்கள் கொண்ட அளவியல் வெண்பாவில் பதினான்கு சீர்கள் பயின்றுவரின் அவ்வெண்பா சவலை வெண்பாவாகக் கருதப்பெறும்.

பா – இனம்

பொதுவாக யாப்பிலக்கணங்கள் ஒவ்வொரு பாவையும விளக்கி வகைகளை விவரித்த பின்னர் அப்பாக்களின் மூவினங்களையும விவரிப்பது இயல்பு அவ்வாறு இணைத்துக் கூறாது பாக்களைக் சேர்த்தும் பாவினங்களைச் சேர்த்தும் ஒரு தனி வகையாகவும் தொன்னூல் விளக்கம் கூறுகின்றது.  மேலும், தாழிசை, துறை, விருத்தம், என்ற வரிசை முறையை மாற்றித் துறை, தாழிசை, விருத்தம் என்று கட்டமைக்கின்றது.

தாழிசை

”அடிஒரு மூன்று வந்து அந்தடி சிந்தாய்
விடின் அது வெள்ளொத் தாழிசை ஆதலும்”.      
(இ.வி. 731. வ 1-2)

மூன்றடி வரைப் பயின்று ஈற்றடி முச்சீராய் முடியின் அது வெள்ளொத்தாழிசை ஆகும்.  இது ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கி வருவதும்.  இவை வெண்பா போலத் தோன்றினாலும வெண்டளைகள் செப்பலோசை இல்லாது ஈற்றடி சிந்தடி யாகவே வருதலாகும்.

துறை

”மூன்றடி முதலா ஏழடி காறும் வந்து
ஈற்றடி சில சில சீர்குன்றினும் அவை
வேற்றஒலி விரவினும்வெண்துறை ஆதலும்”.      
(இ.வி 731 வரி 3-5)

       ‘……. மூன்றுஅடி
ஆதி ஏழு அடி அந்தம் ஆய் ஈற்றில்
சில அடிதம் சீர்சில குறைந்து இறுமே”      
(தொ.வி.239 வரி -5-7)

என்பதினை மூன்றடிமுதல் ஏழடி வரையில் சில அடியில் சீர் குறைந்து காணப்படினும், வேற்று ஒலி விரவி வருவினும் வெண்துறை எனக் கொள்ளப்படுகிறது.

 ”தாளாளர் அல்லாதார் தாம்பலர் ஆயக்காய் என்னாம் என்னாம்
யாளியைக் கண்டஞ்சி யானை தன் கோடிரண்டும்
பீலிபோல் சாய்த்துவிடும் பிளிற்று ஆங்கே”.       
(யா.கா. 28 மே)

இது மூன்றடியான் வந்த வெண்செந்துறை ஆகும்.

விருத்தம்

”ஒரு மூன்று ஒரு நான்கு அடிஅடி தோறும்
தனிச்சொல் தழுவி நடப்பது வெள்ளை
விருத்தம் எனப்பெயர் வேண்டலும்”.         
(இ.வி731 வரி 6-8)

”விருத்தம் என்பது விரவிய எல்லாக்
சீரும் அடியும் சிதையாக் கொளினும்
அவை ஒத்தனவாய் அடி நான்கு அணையுமே”.      
(தொ.வி. 247 வரி 1-3)

இவை மூன்று அல்லது நான்கு அடிகளாய் வரும்.  ஒவ்வொரு அடியின் இறுதியிலும் (நான்கு சீர்களைத் தாண்டி) ஒரு தனிச்சொல் வரும்.

”அவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார்; – ஒரு சாரார்
கூகூ என்றே கூவிளி கொண்டார்; – ஒரு சாரர்
மாமா என்றே மாய்ந்தனர் நீந்தார்; – ஒரு சாரர்
ஏகீர் நாய்கீர் என்செய்தும் என்றார்; – ஒரு சாரர்”.
(யா.கா 28 மே)

இது நான்கடியான் வந்த வெளி விருத்தம் ஆகும்.

குறள் வெண்பா

குறள் வெண்பாவின் வகையினை இரண்டு என்றும் மூன்று என்றும் இலக்கண நூல்கள் வேறுபட்டுக் கூறுகின்றன. இலக்கண விளக்கம்,

”ஒழுகிய ஓசையின் ஒத்துஅடி இரண்டாய்
விழுமிய பொருள்தரும் வெண்செந் துறையும்
அந்தடி குறைநவும் செந்துறைச் சிதைவும்
சந்தழி குறளுமாம் தாழிசைக் குறளும்
குறட்பா இனமாம் கூறுங் காலே”    
(இ.வி.750) என்று வறையறுக்கின்றது.

குறள்வெண் செந்துறை

”வெண்செந்துறை குறள் வெண்பா இனமாய்”       (தொ.வி.239.வ2)

எனத் தொன்னூல் விளக்கம் சுட்டுகிறது. இஃது ஒழுகிய ஓசையின் இரண்டடி ஒத்தும் வரும். மேலும், விழுமிய பொருள்தருவதாகவும் அமைகின்றது.

 ”ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை”.      
(முதுமொழிக்காஞ்சி -1)

மேற்காட்டிய பாடல் இரண்டடியாய் தம்முள் அளவொத்து வருவதாயும் உயர்ந்த கருத்தினைக் கொண்டதாகவும் அமைகின்றது.

குறட்டாழிசை

அளவடிகள் நான்கு சீர்களுக்கு அதிகமான சீர்களைப் பெற்று முதலடியை விட ஈற்றடி சிற்சில சீர்கள் குறைவாகக் கொண்டிருக்கம் என்பதை தொன்னூல் விளக்கம்,

”குறள் தாழிசை ஒலி குன்றும் குறளும்
அந்தடி குறைநவும் செந்துறை சிதைவுமாம்”       
(தொ.வி – 243)

என்று கூறுகின்றது.

முடிவுகள்

ஒரே காலகட்டத்தில் எழுதப்பெற்ற இருவேறு ஐந்திலக்கண நூல்களில் முறையே மரபும் மாற்றமும் பயின்று வந்துள்ளது என்பதும், இலக்கண விளக்கம் சில நூற்பாக்களை பொருள், வடிவம் மாறாமல் பயன்படுத்தியுள்ள பாங்கையும் காண முடிகிறது. பா வகையை கூறுகின்றபோது முறையே ஐந்து ஆறு என்று வேறுபடுகின்றது. தொன்னூல் விளக்கத்தில் பா என்பதற்கு தூக்கு என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பா இனம் கூறுகின்ற பொழுது முறைமாற்றிக் காணப்படுகிறது. வெண்பாவிற்கான ஓசையைத் தொன்னூல் விளக்கம் விளக்கமாகக் கூறுகின்றது. வெண்பாவின் வகையில் இரு நூல்களும் வேறுபடுகின்றன வீரசோழியம் எடுத்துரைத்த சவலை என்ற பா விகற்பம்,  இதில் வெண்பாவின் ஒரு வகையாக வீரமாமுனிவர் கூறுகின்றார்.

துணை நின்றவை

  1. இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம், (2011), சாரதா பதிப்பகம், ஜி-4. சாந்தி அடுக்ககம், ராயப்பேட்டை, சென்னை – 600014
  2. சுப்பிரமணியன் ச.வே, தமிழ் இலக்கண நூல்கள், (2009), மெய்யப்பன் பதிப்பகம், 15, புதுத்தெரு, சிதம்பரம் – 608001
  3. சுப்பிரமணியன் ச.வே, (ப.ஆ), தொன்னூல் விளக்கம், (1978), தமிழ் பதிப்பகம், கஸ்தூரிபாய் நகர், அடையார், சென்னை – 600020
  4. சுவாமிநாதன். பேராசிரியர், தமிழக வரலாறு (2000 வரை), தீபா பதிப்பகம், 99, வீர வாஞ்சிநாதன் தெரு, பெருங்குடி, சென்னை – 600096
  5. நெடுஞ்செழியன். தே (ப.ஆ), திருக்குறள், (1985), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
  6. புத்தமித்திரனார், வீரசோழியம், (2011), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600098
  7. இலக்கண விளக்கம், தமிழ் இணையப் பல்கலைக்கழகம்,
  8. மசிவன், கணினிவிடு தூதூ, அதி அந்தாதி, (2016), மசிவன் பதிப்பகம், விழுப்புரம் – 605755

*****

கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 641046

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *