நாலடியார் யாப்பியல்: யாப்பருங்கல விருத்தியுரை

3

முனைவர் ப.திருஞானசம்பந்தம், முதுமுனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியற் புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21

எண்ணாயிரம் சமண முனிவர்கள் பாடிய பாடல்களிலிருந்து நானூறு பாடல்களைத் தொகுத்து உருவாக்கப்பட்ட பழம்பனுவல் நாலடியார். எண்ணாயிரம் என்னும் ஊரைச் சேர்ந்த சமண முனிவர்கள் பாடிய நூல் என்றொரு கருத்தும் உண்டு. முழுக்கச் சமணப் பொருண்மையை மையமிட்டதாக இருப்பினும், சமணர்களால் இன்பத்தைப் பேசும் நூலைப் படைக்க முடியும் என்பதற்கு முன்னோடி நூல் நாலடியார். தமிழ்ச் சூழலில் திருக்குறளோடு இணைத்துப் பேசப்படும் கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல் நாலடியார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருக்குறளைப்போல மூன்று பால்களாகப் பகுத்துப் பதுமனாரால் தொகுக்கப்பட்ட நூல் என்ற சிறப்பும் இதற்கு உண்டு. 1812இல் திருக்குறள், திருவள்ளுவமாலை ஆகிய இரண்டு நூல்களும் சேர்த்துத் ‘திருக்குறள் மூலபாடம்’ என்ற பெயரில் முதன்முதல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதே ஆண்டில் நாலடியாரும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பிற்காலங்களில் நாலடியார் தனித்துப் பதிப்பிக்கும் பொழுது முனிவர்கள் அருளிச் செய்த / ஜைன முனிவர்களால் இயற்றப்பட்ட நூல் என்ற அடையாளத்தோடு வெளிவந்துள்ளது. கீழ்க்கணக்கு நூற்றொகுதியில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் என்பதும் தனித்துச் சுட்டத்தக்கது.

தொல்காப்பியம் முதல் பல்வேறு இலக்கணிகளால் மேற்கோள் காட்டப்பட்ட நூல் திருக்குறள்; நாலடியார் மற்றும் வேறு சில கீழ்க்கணக்கு நூல்களும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இலக்கணிகளால் திருக்குறள் முதன்மைப்படுத்தப்பட்டதற்கான காரணத்தைச் சோ.ந.கந்தசாமி, ‘தலைமையும் பன்மையும் கருதித் திருக்குறள் உதாரணங்களையே மேற்கோள் காட்டுதல் யாப்பிலக்கண உரையாசிரியர் தம் இயல்பு’ (1989:607) என்கிறார். இதனடிப்படையில் திருக்குறள் உரையாசிரியர்களால் தலைமை நிலையில் வைத்துப் போற்றப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த நிலையில் நாலடியார் உள்ளது.

யாப்புக்கென்றே தனித்துத் தோன்றிய காக்கைபாடினிய மரபைப் பின்பற்றித் தோன்றிய நூல் யாப்பருங்கலம். இந்நூலுக்கு எழுந்த விருத்தியுரை தொல்காப்பிய மூவர் உரைகளுக்கும் முன்தோன்றியது. யாப்பருங்கலம் மூலம் மட்டும், மூலமும் பழைய விருத்தியுரையோடும் என இரு நிலைகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. தாண்டவராய முதலியார் (1858), ஜி.யு.போப் (1858), தென்னிந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்பு கழகம் (1924), த.ச.மீனாட்சி சுந்தரம் பிள்ளை (1940) ஆகியோரால் யாப்பருங்கல மூலம் மட்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மூலமும் பழைய விருத்தியுரையும் சேர்ந்த பதிப்புகளாகச் ச.பவானந்தம் பிள்ளை (இரு தொகுதிகள் – 1916, 1917), மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை (1960, 1998), இரா.இளங்குமரன் (1973, 2009) ஆகியோராலும் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இக்கட்டுரைக்குச் ச.பவானந்தம் பிள்ளையின் பதிப்பு (1998), மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையின் பதிப்பு (1998), இரா.இளங்குமரனின் பதிப்பு (2009) ஆகியன தரவுகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. விருத்தியுரைகாரர் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், நாலடி நானூறு, நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, முத்தொள்ளாயிரம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, சூளாமணி, நீலகேசி, வளையாபதி, இராமாயணம், பாரதம், பிங்கலகேசி, காலகேசி முதலான இலக்கியங்களை எடுத்துக்காட்டி இலக்கண விதிகளை விளக்கியுள்ளார். இவ்வாறு மேற்கோள்காட்டும் மரபில் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்களுள் திருக்குறளும் நாலடியாரும் முதன்மைப் பெறுகின்றன. இவற்றுள் நாலடியாரின் இடம் குறித்து விவரிப்பதாக இக்கட்டுரை உள்ளது.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அடிகளால் பெயர்பெற்ற நூல் நாலடியார். இதில் நான்கடிகளாலான நானூறு வெண்பாக்கள் உள்ளன. இவை வெண்பாவின் இன்னிசை, நேரிசை வகைகளைப் பெற்று அமைந்திருக்கின்றன. நாலடியாரின் நானூறு வெண்பாக்களில் பதின்மூன்று வெண்பாக்கள் விருத்தியுரைகாரரால் பல்வேறு இலக்கணக் கூறிற்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. நாலடியாரின் இரண்டு வெண்பாக்களைத் தனித்தனியே இரண்டு இலக்கணக் கூறிற்கு விருத்தியுரைகாரர் மேற்கோள் காட்டியிருக்கின்றார். நாலடியார் விருத்தியுரைகாரரால் மேற்கோள் காட்டப்பட்ட நிலையைக் கீழ்க்கண்டவாறு தொகுக்கலாம்.

  • செய்யுளுக்கு அடிப்படையாக அமைவன உறுப்புகள். இச்செய்யுள் உறுப்புகளுள் அசை, அடி, தொடை முதலியவற்றிக்கு நாலடியாரின் வெண்பாக்களைச் சான்றுகாட்டியுள்ளமை.
  • பாக்களுக்கு இனிமையைக் கூட்டுவது ஓசை. ஒவ்வொரு பாவிற்கும் தனித்த ஓசைகள் இலக்கணிகளால் வகுக்கப்பட்டுள்ளன. இதில் வெண்பாவிற்கான செப்பல் ஓசைக்கு நாலடியாரின் பாடல்களைச் சான்றுகாட்டி விளக்கியுள்ளமை.
  • ஐவகைப் பாக்களுள் முதன்மைப் பாவாக இருப்பது வெண்பா. இவ்வெண்பா யாப்பின் வகைகளுக்கு நாலடியாரின் வெண்பாக்களைச் சான்று காட்டியுள்ளமை.

தொல்காப்பியர் முப்பத்து நான்கு செய்யுள் உறுப்புகளைக் குறிப்பிட்டு, அவற்றை இரு தொகுதிகளாகப் பகுத்துள்ளார். மாத்திரை முதல் வண்ணம் ஈறாக உள்ள இருபத்தாறு உறுப்புகளை ஒரு தொகுதியாகவும், அம்மை முதல் இழைபு வரையிலான எட்டு வனப்புகளை மற்றொரு தொகுதியாகவும் பகுத்து அதன் இலக்கணத்தைச் செய்யுளியலில் விரிவாக விளக்கியுள்ளார். இவற்றுள் வடிவம் சார்ந்த உறுப்புகளே பிற்கால இலக்கணிகளால் செய்யுள் உறுப்புகளாகக் கொள்ளப்பட்டன. இதை, “(1) மாத்திரை (2) மாத்திரையாலாகிய ஒலி எழுத்து (3) எழுத்துக்கள் சேர்ந்தமைந்த அசை (4) அசை சேர்ந்த சீர் (5) சீரால் தளைக்கப்பட்ட அடி (6) மோனை, எதுகை எனத் தொடுக்கும் தொடை (7) அடியால் உருவாகும் பா (8) பாவினது அடி அளவு (9) பாவிலமையும் ஓசை நலம் இவை வடிவம் (Form)  சார்ந்த உறுப்புகள். இவை பற்றிப் பிற்காலத்தில் பல யாப்பிலக்கண நூல்கள் (Prosody) எழுந்தன” (1985:10) என்னும் தமிழண்ணலின் கருத்து, வடிவம் சார்ந்த உறுப்புகளின் அடிப்படையில் பிற்காலத்தில் யாப்பிலக்கண நூல்கள் தோன்றின என்பதைப் புலப்படுத்துகின்றது.

யாப்பருங்கலம் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தூக்கு என்னும் ஏழு உறுப்புகளை யாப்பு உறுப்புகளாக முதன்மைப்படுத்தியது. இவற்றுள் அசை, அடி, தொடை, பா ஆகியவற்றிற்கு, யாப்பியல் நோக்கில் நாலடியாரின் பாடல்கள் விருத்தியுரைகாரரால் எவ்வாறு மேற்கோள்காட்டப்பட்டுள்ளன என்பது இங்கு விளக்கப்படுகின்றது.

தமிழ் யாப்பிலக்கண நூல்கள் அசையை இரண்டாக வகைப்படுத்தியுள்ளன. 1.நேரசை, 2.நிரையசை. இவற்றுள் நெட்டெழுத்து தனியே நின்றும், குற்றெழுத்து தனியே நின்றும், நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒற்றடுத்து நிற்கும்போதும் நேரசையாகும். குறிலிணைந்தும், குறில் நெடிலும், குறில் நெடில் ஒற்று இணைந்து வரும்போதும் நிரையசையாகும். இவற்றுள் தனிக்குறில் செய்யுளில் பயின்றுவரும் பொழுது நேரசை ஆகும் இடத்தையும், ஆகா இடத்தையும் குறித்து இலக்கண நூல்களும் அவற்றின் உரைகளும் தெளிவாகப் பதிவுசெய்துள்ளன. அமிதசாகரர் செய்யுளுள் ஏவல், குறிப்பு, தற்சுட்டு அல்லாத இடங்களில் தனிக்குறில் மொழி முதலில் நிற்கும்போது நேரசை ஆகாது என்கிறார். இதன்மூலம் குறிப்பு, ஏவல், தற்சுட்டு ஆகிய இடங்களில் குறில் தனியே நின்று நேரசையாகும் என்பது பெறப்படுகின்றது. இக்கருத்தை விளக்கும் விருத்தியுரைகாரர் பல்காயனாரின் நூற்பாவைத் தந்து, ‘குறிப்பின்கண் தனிக்குறில் மொழியின் முதலில் நிற்கும்போது நேரசையாகும்’ என்கிறார். இதற்குரிய சான்றினை நாலடியாரிலிருந்து தருகின்றார்.

தற்சுட் டேவல் குறிப்பிவை யல்வழி

முற்றத் தனிக்குறின் முதலசை யாகா.

என்றார் பல்காயனார்.

உதாரணம்:

உண்ணா னொளிநிறா னோங்குபுகழ் செய்யான்

துன்னருங் கேளிர் துயர்களையான் – கொன்னே

வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ!

இழந்தானென் றெண்ணப் படும்.                                         (நாலடி.9)

இதனுள் ‘அஆ’ என்புழிக் குறிப்பின்கண் தனிக்குறில் அகரம், மொழிமுதற்கண் நின்று       நேரசையாயிற்று. அஆ என்பது அறிவின்கட் குறிப்பு.  (யாப்.வி. ப.50 பவானந்தம்.)

இவ்வெண்பாவின் மூன்றாமடி இறுதியில் வரும் ‘அஆ’ என்ற சீரிலுள்ள ‘அ’ தனிக்குறிலாக நின்று விட்டிசைத்தலால் நேரசையாக உள்ளது. மேலும் வெண்பாவின் தளைதட்டாமல் தேமாச்சீராக அமைந்து வரும்சீரின் முதலசையோடு ஒன்றி இயற்சீர் வெண்டளையாய் உள்ளது.

மேற்சுட்டிய வெண்பாவின் இறுதியில் உள்ள உரைக் குறிப்பு விருத்தியுரையின் பிற பதிப்புகளில் சில மாறுபாடுகளுடன் உள்ளது. இரா.இளங்குமரனார் பதிப்பில் ‘இதனுள், ‘அஆ’ என்பழிக் குறிப்பின்கண் தனிக்குறில் மொழிமுதற்கண் நின்று நேரசையாயிற்று’ (யாப்.வி.ப.74) என்றுள்ளது. மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையின் விருத்தியுரை பதிப்பிலும் (யாப்.வி.ப.50) இவ்வாறே உள்ளது. ‘அகரம்’ என்ற சொல்லும் ‘அஆ’ என்பது அறிவின் கட் குறிப்பு’ என்ற தொடரும் பவானந்தம் பிள்ளையின் விருத்தியுரை பதிப்பைத் தவிர பிற பதிப்புகளில் இல்லை. ‘அஆ’ என்பது எப்பொருளில் குறிப்பாய் அமைகிறது என்பதையும் பவானந்தம் பிள்ளை ஒருவரே குறித்துள்ளார் எனலாம்.

நான்குசீர்கள் உடைய அளவடியே அடி எனப்படும். இவ்வளவடியே சிறப்பான அடி என்று இலக்கணிகளால் சுட்டப்படுகின்றது. தொல்காப்பியர் அடிக்கான இலக்கணத்தை,

‘நாற்சீர் கொண்டது அடியெனப் படுமே’                  (தொல்.செய்.நூ.31)

‘அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே’                  (தொல்.செய்.நூ.34)

எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா ஆகிய மூன்று பாக்களும் அளவடிகளையே பெற்று பெரும்பான்மை வரும் என்பது உறுதியாகின்றது. சிலவிடங்களில் அதன் அமைப்பு முறையில் மாற்றங்கள் உண்டு. இவ்வாறு மாறியமையும் இடங்கள் குறித்து விருத்தியுரைகாரர்,

‘‘அகவ லென்ப தாசிரியப் பாவே’’

என்றார் சங்கயாப் புடையா ராகலின். ‘வெண்பா வகவல் கலி’ யென்னாது, ‘கலியொடு வெண்பா வகவல்’ என்றமை தலைதடுமாற்றந் *தந்துபுணர்த்துரைத்தல் தந்திரவுத்தியாகலின். அல்லதூஉம், ‘கலியுள் அம்போதரங்க வுறுப்பு சில இருசீரடியாலும் முச்சீரடியாலும் வரும்; அராகவுறுப்பு நாற்சீரடியின் மிக்கு வரும்; அவை போக்கிக் கலிப்பாச் சொல்லுழிச் சொல்லுதும். ‘கூறிய’ வென்று மிகுத்துச் சொல்லியவதனால், வெண்பாவினீற்றடியும், நேரிசை யாசிரியப்பாவி னீற்றயலடியும், கலிவெண்பாவி னீற்றடியும் முச்சீரான் வரும்; இணைக்குறளாசிரியப்பாவி னிடையடி யிரண்டும் பலவும் இருசீரடி யானும் முச்சீரடியானும் வரும்; ‘தன்’ என்று மிகுத்துச் சொல்லிய வதனான் ஆசிரிய விருத்தமும் கலித்துறையும் ஒழித்து மூன்று பாவினமும் பெரும்பான்மையும் நாற்சீரடியான் வரும்; ‘அவையே’ என்று மிகுத்துச் சொல்லிய வதனால், ஒருசார் ஆசிரிய வடியும் கலியடியும் ஐஞ்சீரானருகி வருவனவு முளவெனக் கொள்க. அவை போக்கி, ‘மிக்குங் குறைந்து’ மென்னும் சூத்திரத்துட் காட்டுதும். ‘விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்’ என்பதாகலினிவ்வாறு கூறப்பட்டது. பிறரு மிவ்வாறிவற்றுக் கடி வகுத்துரைத்தார்.(யாப்.வி. பக். 109, 110 பவானந்தம்.)

என்கிறார். கலிப்பாவின் அம்போதரங்க உறுப்பில் சில மட்டும் இருசீரடியால் வரும்; வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா ஆகிய மூன்று பாக்களும் இருசீரடி, முச்சீரடி, ஐஞ்சீரடி முதலிய அடிகளைப் பெற்று வரும். இக்கருத்துகளை மேற்சுட்டிய விருத்தியுரையின் உரைக் குறிப்புகள் வழி அறிய முடிகின்றது. இதனைக் காக்கைபாடினியார், மயேச்சுரர், அவிநயனார், பல்காயனார், நற்றத்தனார், சிறுகாக்கைபாடினியார் ஆகியோரின் நூற்பாக்களைக் கொண்டு தமது கருத்தினை விருத்தியுரைகாரர் வலியுறுத்துகின்றார். வெண்பா அளவடியான் வருதலுக்கு நாலடியாரின் பாடலையே சான்றுகாட்டுகின்றார்.

அரக்காம்ப னாறும்வாய் யம்*மருங்குற் கன்னே

பரற்கான மாற்றின கொல்லோ – அரக்கார்ந்த

பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்

றஞ்சிப்பின் வாங்கும் அடி.                                               (நாலடி. 396)

என வெண்பா வளவடியான் வந்தது.

(யாப்.வி.ப.111 பவானந்தம்.)

இவ்வெண்பாவின் முதல் மூன்றடிகளும் அளவடிகளாய் அமைய, ஈற்றடி சிந்தடியாக உள்ளது. இதன்மூலம் வெண்பாவின் அடிகள் அளவடிகளோடு சிந்தடியையும் பெற்று வரும் என்ற இலக்கணிகளின் கருத்துத் தெளிவுபெறுகின்றது.

மேற்சுட்டிய வெண்பாவின் முதலடியில் உள்ள ‘மருங்குற் கன்னே’ என்ற பாடத்திற்கு *’மருங்குற் கன்னோ’ என்ற பாடத்தை மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையும், இரா.இளங்குமரனாரும் காட்டுகின்றனர். இப்பாடமே நாலடியாரின் நூற்பதிப்புகளில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இப்பாடத்தைப் பவானந்தம் பிள்ளை தமது பதிப்பின் அடிக்குறிப்பில் பாடபேதமாகக் காட்டுகின்றார். இத்தகைய பாடபேதங்கள் பாடவேறுபாட்டு ஆய்விற்குத் துணையாக அமையும் என்றால் அது மிகையல்ல.

தொடை என்னும் உறுப்பு செய்யுளுக்கு அழகைக் கூட்டுகின்றது. இது அடி நிலையிலும் சீர்நிலையிலும் பாக்களில் பயின்றுவருகின்றது. மோனை, எதுகைத் தொடைகள் தன்னெழுத்துக்களாலும், இனவெழுத்துக்களாலும், வருக்கம் நெடில் முதலிய எழுத்துக்களாலும் அமைகின்றன. இவற்றுள் வருக்கம், நெடில், இனம் ஆகிய மோனை, எதுகைத் தொடைகள் குறித்த விரிவான விளக்கத்தையும் அதற்கான சான்றினையும் விருத்தியுரைகாரர் தருகின்றார். முந்தைய இடைக்கால யாப்பிலக்கணிகள் சுட்டுகின்ற ஆசிடை எதுகை என்பதைச் சுட்டி, அதற்கான இலக்கணத்தைக் காக்கைபாடினியத்தில் இருந்து தருகின்றார். இவற்றோடு யகர, ரகர, லகர ஒற்றுகள் ஆசிடையிட்டு வந்த எதுகைகளுக்கு நாலடியாரின் வெண்பாக்களைச் சான்றுகாட்டுகின்றார் விருத்தியுரைகாரர்.

‘யரலழ வென்னு மீரிரண் டொற்றும்

வரன்முறை பிறழாது வந்திடை யுயிர்ப்பி

னாசிடை யெதுகையென் றறிந்தனர் கொளலே’        [காக்கைபாடினியர்]

என்றாராகலின்.

அவை வருமாறு:

தக்கோலந் தின்று தலைநிறையப் பூச்சூடிப்

பொய்க்கோலஞ் செய்ய வொழியுமோ – வெக்காலு

முண்டி வினையு ளுறைக்கு மெனப்பெரியோர்

கண்டுகை விட்ட மயல்?                                                                     [நாலடி. 43]

,..எனவும் போந்தவிவற்றுள் பொய்க்கோலம், காய்மாண்ட என யகர வொற்றிடை வந்த    வாசிடை யெதுகை கொள்க…

‘நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்

பாத்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்

தோற்பையு ணின்று தொழிலறச் செய்தூட்டுங்

கூத்தன் புறப்பட்டக் கால்?’                                                       [நாலடி.26]

… இவை ரகரவொற்றிடை வந்த ஆசிடையெதுகை.

‘ஆவே றுருவின வாயினு மாபயந்த

பால்வே றுருவின வல்லவாம் – பால்போ

லொருதன்மைத் தாகு மறநெறி யாபோ

லுருவு பலகொள லீங்கு’.                                                               [நாலடி.118]

இது லகரவொற்றிடை வந்த ஆசிடையெதுகை…

இவையெல்லாம் வரலாற்று முறைமையோடுங் கூடி யியைந்தினியவாய்க் கிடப்பனவே             கொள்ளப்படுமென்க. (யாப்.வி. பக்.140, 141 பவானந்தம்.)

மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையின் பதிப்பிலும் (பக்.157, 158), இரா.இளங்குமரன் பதிப்பிலும் (பக்.174, 175) யகரவொற்று ஆசிடை வந்த எதுகைக்கான உரை விளக்கப் பகுதியில் ‘எனவும் இவை ரகர ஒற்று இடை வந்த ஆசிடை எதுகை’ என்று மட்டும் குறிப்புள்ளது. பவானந்தம் பிள்ளை தமது பதிப்பில் காட்டும் ‘‘போந்தவிவற்றுள் ‘பொய்க்கோலம்’, ‘காய்மாண்ட’ என’’ என்னும் குறிப்பு பிற பதிப்புகளில் இல்லை. உரை வேறுபாட்டு ஆய்விற்கு இத்தகைய தரவுகளை மூலமாகக் கொள்ள வாய்ப்புள்ளது.

செய்யுள் என்பதைப் பொருள் பெற விரிக்கும் பொழுது பாவும், பாவினமும் என்று இரண்டு வகைப்படும். ‘செய்யுட் டாமே’ என்ற தொடரில் உள்ள ‘தாமே’ என்பதை விளக்க விருத்தியுரைகாரர் நாலடியாரின் பாடலடியைச் சிறு மாறுபாட்டுடன் சான்றுகாட்டியுள்ளார்.

தாமென்பது செய்யுட்களைச் சிறப்பித்தற்குச் சொல்லப்பட்டது.*’தேவர் தாமே தின்னினும்            வேம்பு கைக்கும்’ என்றாற் போலக் கொள்க.  (யாப்.வி.ப.199 பாவனந்தம்.)

பவானந்தம் பிள்ளை தமது விருத்தியுரை பதிப்பின் அடிக்குறிப்பில் ‘கைக்குமாந் தேவரே தின்னினும் வேம்பு’ என்பது நாலடி.112 என்று குறித்துள்ளார். விருத்தியுரையின் பிற பதிப்புகளில் இவ்வாறு குறிக்கப் பெறவில்லை. உரைக்குறிப்பில் ‘தேவர் தாமே தின்னினும் வேம்பு கைக்கும்’ என்று இடம்பெற்றதன் அடிப்படையிலே மே.வீ.வேணுகோபாலப்பிள்ளையும் இரா.இளங்குமரனும் இவ்வெண்பாவின் நாலடியாரைச் சார்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இந்நாலடியாரின் வெண்பா அச்சுநூற் பதிப்புகளில் யாவரே தின்னினுங் கையாதாம்; கைக்குமாந் /  தேவரே தின்னினும் வேம்பு (நாலடி.112:3-4) என்றுள்ளது. இதில் தாம் என்ற சொல் விருத்தியுரைகாரர் குறிப்பிடுவதுபோல் ‘செய்யுளைச் சிறப்பித்தற்குச் சொல்லப்பட்டது’ என்று கருதினால், தாம் என்ற சொல்லைப் பொருள்கோடற்கு ஏற்றாற்போல் முன்பின்னாகக் கொண்டு செல்ல முடியும். இவ்வாறு பொருள்கோடற்கு ஏற்ற நிலையிலான சான்றுகளை நாலடியாரில் இருந்து விருத்தியுரைகாரர் எடுத்தாண்டுள்ளார் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

இலக்கண நூல்களிலும் அவற்றின் உரைகளிலும் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என்னும் ஐவகைப் பாக்களுக்கும் தனித்தனியே ஓசை குறிக்கப்படுகின்றன. வெண்பாவுக்குச் செப்பல் ஓசையும், ஆசிரியப்பாவுக்கு அகவல் ஓசையும், கலிப்பாவுக்குத் துள்ளல் ஓசையும், வஞ்சிப்பாவுக்குத் தூங்கல் ஓசையும், மருட்பாவிற்குத் குதிரையின் குளம்படி ஓசையும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

வெண்பாவிற்குரிய செப்பல் ஓசை, குறள்வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா என்னும் வெண்பாவின் ஐந்து வகைகளுக்குரியது. இச்செப்பலோசையை வெண்டளைகளின் அடிப்படையில் ஏந்திசைச் செப்பல், தூங்கிசைச் செப்பல், ஒழுகிசைச் செப்பல் என மூன்று வகையாக்குவார் சங்க யாப்புடையார்.

‘வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை

யேந்திசைச் செப்ப லென்மனார் புலவர்’

‘இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத்

தூங்கிசைச் செப்ப லென்மனார் புலவர்’

வெண்சீ ரொன்றலு மியற்சீர் விகற்பமும்

ஒன்றிய பாட்டே யொழுகிசைச் செப்பல்

என்றார் சங்க யாப்புடையார்.

(யாப்.வி. ப.216 பவானந்தம்.)

பவானந்தம் பிள்ளையின் விருத்தியுரை பதிப்பில் இடம்பெற்றுள்ள இவ்வுரைப்பகுதி இரா.இளங்குமரன் பதிப்பிலும் (ப.252) உள்ளது. ஆனால் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையின் விருத்தியுரை மறுபதிப்பில் விடுபட்டுள்ளது. மூவகைச் செப்பலோசையில் தூங்கிசைச் செப்பலுக்கு நாலடி நானூற்றின் பாடல் சான்று காட்டப்பட்டுள்ளது.

அரக்காம்ப னாறும்வா யம்மருங்கிற் கன்னோ

பரற்கான மாற்றின கொல்லோ – வரக்கார்ந்த

பஞ்சிக்கொண் டூட்டினும் பையனப் பையனவென்

றஞ்சிப்பின் வாங்கு மடி.                                                                (நாலடி.396)

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயி றூறிய நீர்.                                                         (குறள்.113-1)

இன்னவவை பிறவும், நக்கீரர் நாலடி நானூற்று வண்ணத்தால் வருவனவும் எல்லாம் தூங்கிசைச் செப்பலோசை. பிறவும் அன்ன.

(யாப்.வி. ப.217 பவானந்தம்.)

பவானந்தம் பிள்ளை தூங்கிசைச் செப்பலோசை தவிர்ந்த பிற செப்பலோசைகளுக்குச் சான்றுகாட்டும்போதும் ஒவ்வொரு வெண்பாவுக்கும் அடுத்து ஒவ்வொரு குறள்வெண்பாவைத் தருகின்றார். இவை இரா.இளங்குமரன் பதிப்பிலும் இடம் பெற்றுள்ளன. ஆனால் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையின் மறுபதிப்பில் இல்லை. மேற்காட்டிய நாலடியார் வெண்பாவில் இயற்சீர் வெண்டளையும் வெண்சீர்வெண்டளையும் கலந்த ஒழுகிசைச் செப்பலோசையே இடம்பெறுகின்றது. தூங்கிசைச் செப்பலோசை இடம்பெறவில்லை. எனவே இவ்வெண்பாவைத் தூங்கிசைச் செப்பலோசைக்குரியதாகக் கொள்ள இயலாது. பவானந்தம் பிள்ளை காட்டும் வெண்பாவின் மூன்றாமடியிலுள்ள இறுதிச்சீர்கள் ‘பையனப் பையனவென்’ என்று பேச்சு வழக்குகளாகச் சொற்களாக உள்ளன. ஆனால் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையும், இரா.இளங்குமரனும், நாலடியாரின் அச்சுநூற் பதிப்புகளிலும் ‘பையெனப் பையெனவென்’ என்று செய்யுள் வழக்கேற்றாற்போல் அமைந்துள்ளது. இத்தகைய மாறுபாடுகளால் வெண்பாவில் எந்த மாற்றமுமில்லை. உரை பதிப்பிகளின் வழி அறியலாகும் இவ்வகையான பாடமாற்றங்கள் பாடவேறுபாட்டு ஆய்விற்குத் துணை புரிகின்றன என்றால் அது மிகையல்ல.

ஏந்திசை, தூங்கிசை, ஒழுகிசை ஆகிய ‘மூவகைச் செப்பலோசைக்கும் அவிநயனார் காட்டிய பாட்டு’ என்று விருத்தியுரைகாரரால் குறிப்பிடப்பட்டுள்ளதால் இக்கருத்து அவிநயனாருடையதாகக் கருத இடமுண்டு. பல்வேறு இலக்கண உரைகளிலிருந்து தொகுத்து க.ப.அறவாணன் அவர்களால் 1975இல் பதிப்பிக்கப்பட்ட ‘அவிநயம் மூலமும் உரையும்’ என்ற நூலிலும் இது குறித்த குறிப்பு இல்லை. அவிநயனாரின் நூற்பாக்கள் முழுமையாகக் கிடைக்காததால் இக்கருத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.

வெண்டளைகளின் அடிப்படையில் ஏந்திசைச் செப்பல், தூங்கிசைச் செப்பல், ஒழுகிசைச் செப்பல் என்று மூன்று வகைப்படுத்தியதைப்போல், ஒருசார் ஆசிரியர் மேலும் மூன்று வகையாகக் கொள்வதையும் விருத்தியுரைகாரர் குறிப்பிடுகின்றார்.

இனி, மற்றொருசா ராசிரியர், ‘செப்பல், வெண்கூ, அகவ’லென மூவகை யோசையுடைத்து வெண்பா வென்ப. என்னை?

‘பண்பாய்ந் தடக்கிய பாநடை தெரியின்

வெண்பா மூவிசை விரிக்குங் காலே’

செப்பல் வெண்பா, வெண்கூ வெண்பா

அகவல் வெண்பா வென்றன ரவையே

என்றாராகலின்….

(யாப்.வி. பக்.217, 218 பவானந்தம்)

இவற்றுள் ஏழுசீரால் நடப்பது (குறள்வெண்பா) செப்பல் வெண்பா என்றும், இனவெழுத்து மிக்கு இசைப்பதும், ஆசு கவிகள் கூறுமாற்றால் கூறப் பிறப்பதும் (நேரிசை வெண்பா) வெண்கூ வெண்பா என்றும், அகவல் இசை என்பது இன்னிசை வெண்பா என்றும் ஒருசார் ஆசிரியர் கருத்து எனத் தெளிவுபடுத்துகின்றார் விருத்தியுரைகாரர். இவற்றுள் அகவல் இசை என்பதற்கு நாலடியாரின் பாடலைச் சான்றுகாட்டி ‘இது அணியியலுடையார் காட்டி பாட்டு’ என்று குறிப்பிடுகின்றார். மேலும் இவ்வகையான ‘ஓசை விகற்பங்களைச் சொல்வல்லார் வாய்க் கேட்பின் அல்லது காட்டலாகா’ என்றும் தெளிவுபடுத்துகின்றார்.

இனி அகவ லிசையாவது, இன்னிசை வெண்பா. என்னை?

அகவல் வெண்பா வடிநிலை பெற்றுச்

சீர்நிலை தோறுந் தொடைநிலை திரியாது

நடைவயி னோரடி நேய முடைத்தாய்ப்

பொருளோடு புணர்ந்த வெழுத்தறி யாதே.

என்றாராகலின்.

வரலாறு:

வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்

வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்

வைகலும் வைகற்றம் வாழ்நாண்மேல் வைகுதல்

வைகலை வைத்துணரா தார்.                                                  (நாலடி.39)

இஃது அகவல் வெண்பா வென்று அணியியலுடையார் காட்டிய பாட்டு.

(யாப்.வி. ப.219 பாவனந்தம்.)

மேலும் விருத்தியுரைகாரர் நான்மணிக்கடிகையின் (22) வெண்பாவைச் சுட்டி, ‘இது செய்யுளியல் உடையார் காட்டிய பாட்டு’ என்கிறார். ஒருசார் ஆசிரியர் கூறிய செப்பல் வெண்பா, வெண்கூ வெண்பா, அகவல் வெண்பா முதலிய வெண்பா வகைகளுக்குச் செய்யுளியல் உடையாரும் அணியியல் உடையாரும் கீழ்க்கணக்கின் நாலடியாரையும் நான்மணிக்கடிகையையுமே சான்றுகாட்டியுள்ளனர் என்பது விருத்தியுரையின் வழி அறிய முடிகின்றது.

தொல்காப்பியர் நெடுவெண்பாட்டு, குறுவெண்பாட்டு, கைக்கிளை, அங்கதச் செய்யுள், ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பு (நூ.114) என்று குறிப்பிடுகின்றார். இவற்றுள் குறுவெண்பாட்டும் (2-3 அடி வரை), நெடுவெண்பாட்டும் (4-12 அடி வரை) பிற்காலத்தில் வெண்பாவின் வகைகளாக விரிவு பெற்றது; இவற்றுள் கைக்கிளை, அங்கதச் செய்யுள் வெண்பா வகைகளாகப் பிற்காலங்களில் பரிணமிக்கவில்லை. யாப்பருங்கலம் பாக்களுள் முதன்மைப் பாவாய் வெண்பாவை முன்வைக்கின்றது. பிற தளைகள் விரவாத் தன்மையால் வெள்ளைத் தன்மையுடைய பா என்றும் குறிப்பிடுகின்றது. குறள், சிந்து, இன்னிசை, நேரிசை, பஃறொடை என ஐந்தாக வெண்பா வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுள் குறள்வெண்பா ஈரடியால் வருவது; சிந்தியல் வெண்பா மூவடியால் வருவது; இன்னிசை, நேரிசை வெண்பாக்கள் நான்கடியால் வருவது; பஃறொடை வெண்பா ஐந்துக்கும் மேற்பட்ட அடியால் வருவது என்று அடிவரையறையை வகுத்துள்ளது.

இவற்றுள் நேரிசை வெண்பா நான்கடியாய் இரண்டாமடியின் இறுதி ஒரூஉத் தொடையைப் பெற்று ஒருவிகற்பத்தானும் இருவிகற்பத்தானும் வரும். இப்பொது வறையறையோடு, கதுவாய் (மேற்கதுவாய், கீழ்க்கதுவாய்), முற்று முதலிய தொடைகளையும் பெறும் என நேரிசை வெண்பாவிற்கு அமிர்தசாகரர் இலக்கணம் வகுத்துள்ளார். கதுவாய், முற்று ஆகிய தொடைகளைப் பெற்று நேரிசை வெண்பா வரும் என்று பிற இலக்கணிகள் யாரும் சுட்டவில்லை; அமிர்தசாகரர் ஒருவர் மட்டுமே குறித்துள்ளார் எனலாம்.

நாலோ ரடியாய்த் தனியிரண் டாவத

னீறொரு வாய்முற் றிருவிகற் பொன்றினும்

நேரிசை வெண்பா வெனப்பெய ராகும்.         (யாப்.வி.60)

நேரிசை வெண்பாவின் இரண்டாமடி இறுதியில் வரும் ஒரூஉ, கதுவாய், முற்று ஆகிய தொடைகளை முறைப்படி வைத்தற்கான காரணம் குறித்த விருத்தியுரைகாரர்,

இரண்டாமடி ஒரூஉத்தொடையாய் வருவது சிறப்புடைத்தாகலின், முன் வைக்கப்பட்டது; ‘சிறப்புடைப் பொருளை முந்துறக் கிளத்தல்’ என்பது தந்திரவுத்தியாகலின். முற்றுத் தொடையருகி வருதலின் பின் வைக்கப்பட்டது. கதுவாய்த்தொடை யிடையாய யியல் பிற்றாகலின் இடைக்கண் வைக்கப்பட்டது.

(யாப்.வி. ப.228 பவானந்தம்.)

என்று குறிப்பிட்டுள்ளார். ஒரூஉ, கதுவாய் (கீழ், மேல்), முற்று ஆகிய நான்கு தொடைகளில் ஒரூஉத் தொடையைப் பெற்றுவருகின்ற நேரிசை வெண்பாவிற்கு நாலடியாரில் இருந்து சான்றளிக்கின்றார் விருத்தியுரைகாரர்.

‘ஆர்த்த வறிவினி ராண்டிளைஞ ராயினுங்

காத்தோம்பித் தம்மை யடக்குப – மூத்தொறூஉந்

தீத்தொழிலே கன்றித் திரிதந் தெரிவைபோற்

போத்தறார் புல்லறிவி னார்’.                                      (நாலடி. 351)

இவை யிரண்டாமடி யொரூஉத்தொடையாய் யொருவிகற்பத்தான் வந்த    நேரிசை           வெண்பா.

(யாப்.வி. ப.229 பவானந்தர்.)

வெண்பாவின் இரண்டாமடியில், சீர்நிலையில் ஒரூஉ, கதுவாய், முற்று ஆகிய தொடைகளைப் பெற்று நேரிசை வெண்பா வருவதைப்போல், அடிநிலையில் மோனை, முரண், அளபெடை முதலிய தொடைகளைப் பெற்று நேரிசை வெண்பா வரும் என்கிறார் விருத்தியுரைகாரர். இவ்வாறு வருகின்ற நேரிசை வெண்பாவிற்கு இவர்காட்டும் சான்றுகள் இருவிகற்ப நேரிசை வெண்பாவாய் அமைகின்றன. இவற்றுள் முரண் தொடையைப் பெற்று வரும் இருவிகற்ப நேரிசை வெண்பாவிற்கு நாலடியாரின் பாடலை விருத்தியுரைகாரர் சான்று காட்டியுள்ளார்.

‘கடையாயார் நட்பிற் கமுகனைய ரேனை

யிடையாயார் தெங்கி னனையார் – தலையாயார்

எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே

தொன்மை யுடையார் தொடர்பு’.                                (நாலடி. 216)

இது முரணா யிருவிகற்பத்தால் வந்தது.

(யாப்.வி. ப.230 பவானந்தம்.)

மேலும் நேரிசை வெண்பா மோனை, எதுகை, முரண், அளபெடை என்னும் இந்நான்கு தொடைகள் இல்லாமல் இயைபு, செந்தொடை முதலிய தொடைகளைப் பெற்று வாராது என்றும் விருத்தியுரைகாரர் குறிப்பிடுகின்றார். தமது கருத்தினைத் தெளிவுபடுத்துவதற்குக் காக்கைபாடினியார், அவிநயனார் ஆகியோரின் நூற்பாக்களை எடுத்துக்காட்டுகின்றார். இவற்றோடு ஆசிடை எதுகைபெற்ற ஒரு விகற்ப நேரிசை வெண்பாவிற்கும் நாலடியாரில் இருந்து இவர் சான்றளித்துள்ளார்.

‘ஆர்த்த அறிவினர் ஆண்டிளைஞ ராயினும்’ (நாலடி.351) என்பது ஓரசையால்        ஆசிட்டு ஒரு விகற்பத்தால் வந்த நேரிசை வெண்பா.

(யாப்.வி ப.233 பவானந்தம்.)

இவ்வெண்பாவை முன்னரே ஒரூஉத் தொடையைப் பெற்ற ஒரு விகற்ப நேரிசை வெண்பாவிற்கு விருத்தியுரைகாரர் சான்றுகாட்டியுள்ளார் என்பது இங்கு இணைத்து நோக்குதற்குரியது. ஒரு பாடலையே இருவித இலக்கணக் கூறிற்குச் சான்றுகாட்டும் விருத்தியுரைகாரரின் உரை நுட்பத்தை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

இன்னிசை வெண்பா என்பதற்கு நான்கடியாய் இரண்டாமடி ஒரூஉ எதுகையைப் பெறாமல் ஒரு விகற்பத்தாலும் பல விகற்பத்தாலும் வருவது என்று இலக்கணம் வகுத்துள்ளார் அமிதசாகரர். மேலும் இன்னிசை வெண்பாவின் இலக்கணம் குறித்த காக்கைபாடினியார், சிறுகாக்கைபாடினியார், அவிநயனார் ஆகியோரின் நூற்பாக்களையும் விருத்தியுரைகாரர் தமது உரையுள் எடுத்துத் தருகின்றார். ஒரு விகற்ப இன்னிசை வெண்பா, இரு விகற்ப இன்னிசை வெண்பா இரண்டிற்கும் நாலடியாரின் வெண்பாக்களை விருத்தியுரைகாரர் சான்று காட்டியுள்ளார்.

துகடீர் பெருஞ்செல்வந் தோன்றியக்காற் றொட்டுப்

பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க

வகடுற யார்மாட்டு நில்லாது செல்வஞ்

சகடக்கால் போல வரும்.                                                                    (நாலடி.2)

‘வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்’                                      (நாலடி. 39)

எனவிவை ஒரு விகற்பத்தால் வந்த வின்னிசை வெண்பா.

‘வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை

யளந்தன போக மவரவ ராற்றான்

விளங்காய் திரட்டினா ரில்லை களங்கனியைக்

காரெனச் செய்தாரு மில்’.                                                 (நாலடி. 103)

எனவும், …

கொடுத்தலுந் துய்த்தலுந் தேற்றா *விழுக்குடை

யுள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வ மில்லத்

துருவுடைக் ·கன்னியைப் போலப் பருவத்து

ளேதிலார் துய்க்கப் படும்.                                (நாலடி. 274)

எனவும் இவையெல்லாம் பல விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா.

(யாப்.வி. பக். 234, 235)

மேற்சுட்டிய இரு வகையாய் அன்றி இன்னிசை வெண்பாவில் மேலும் சில வகைகள் உண்டு என்பதைப் ‘பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க’ என்று விருத்தியுரைகாரர் குறிப்பிட்டுள்ளார். இடைக்கால யாப்பிலக்கணிகளின் கருத்தையொட்டி இவர் இவற்றைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். மேற்சுட்டிய பலவிகற்ப இன்னிசை வெண்பாவின் முதலடியில் வரும் ‘இழுக்குடை’ என்பதற்கு ‘இடுக்குடை’ என்ற பாடம் நாலடியாரின் அச்சுநூற் பிரதியில் உள்ளது என்று பவானந்தம் பிள்ளையால் காட்டப்பட்டுள்ளது. இப்பாடலின் மூன்றாம், நான்காமடிகளில் இவர்காட்டிய ‘கன்னியைப் போலப் பருவத்து ளேதிலார்’ என்பது பிற விருத்தியுரை பதிப்புகளிலும் நாலடியாரின் அச்சு நூற் பதிப்புகளிலும் ‘கன்னியரைப் போலப் பருவத்தால் ஏதிலான்’ என்றுள்ளது. இவ்வாறு நாலடியாரின் வெண்பாக்களில் உள்ள பாடவேறுபாடுகளைக் கண்டறியவும் விருத்தியுரை மேற்கோள்கள் உதவுகின்றன எனில் அது மிகையல்ல.

தனிச்சொல் பெற்று வருகின்ற இன்னிசை வெண்பாக்கள் குறித்தும் விருத்தியுரை குறிப்பிடுகின்றது.

இரண்டாமடி தனிச்சொற் பெற்றுப் பல விகற்பத்தான் வருவனவு முள வென்பது அறிவித்தற்தொரு தோற்ற முணர்த்தியது…

‘அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குந்

திங்களுஞ் சான்றோரு மொப்பர்மற் – றிங்கள்

மறுவாற்றுந் சான்றோ ரஃதாற்றார் தெருமந்து

தேய்வ ரொருமா சுறின்’.                                                                     (நாலடி. 151)

இவை தனிச்சொற் பெற்றுப் பலவிகற்பத்தான் வந்தன. என்னை?

‘ஒருவிகற் பாகித் தனிச்சொ லின்றியு

மிருவிகற் பாகித் தனிச்சொ லின்றியுந்

தனிச்சொற் பெற்றுப் பலவிகற் பாகியுந்

தனிச்சொ லின்றிப் பலவிகற் பாகியு

மடியடி தோறு மொரூஉத்தொடை யடைநவு

மெனவைந் தாகு மின்னசை தானே’

என்றாராகலின். தனிச்சொற் பெற்றுப் பலவிகற்பத்தால் வருவன விதப்பினா லுடன்பட்டார் காக்கைபாடினியார்.

(யாப்.வி.ப. 235, 236 பவானந்தர்.)

இவ்வாறு தனிச்சொல் பெற்றுவருகின்ற இன்னிசை வெண்பாவுக்கான இலக்கணத்தைப் பிற ஆசிரியரின் கருத்தாக விருத்தியுரைகாரர் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்திற்குக் காக்கைபாடினியார் விதப்பினால் உடன்பட்டுள்ளதாகக் காட்டுகிறார். ஆனால் யாப்பருங்கலக்காரிகையின் குணசாகரருரை இந்நூற்பாவைக் காக்கைபாடினி யாருடையதாகவே காட்டியுள்ளதும் இத்தொடர்பில் சிந்தித்தற்குரியது. இக்கருத்தின் அடிப்படையில் தனிச்சொல் இடம்பெறும் இன்னிசை வெண்பாக்கள் குறித்த தெளிவான புரிதல்களையும் பெற முடியும்.

தொகுப்பாக

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறளோடு நாலடியார் இணைத்துப் பேசப்படுகின்றது. இருப்பினும் உரைகளிடத்துத் திருக்குறள் பெற்ற செல்வாக்கினை நாலடியார் பெறவில்லை. இதை விருத்தியுரையில் இடம்பெற்றுள்ள குறைந்த அளவிலான நாலடியாரின் மேற்கோள்கள் மூலம் தெளிவுபடுத்தலாம்.
  • விருத்தியுரை இருநிலைகளில் நாலடியாரின் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளது. அசை, அடி, தொடை ஆகிய செய்யுள் உறுப்புகளுக்கும் பாக்களில் வெண்பாவின் ஓசை, வகைகளுக்கும் சான்றுகாட்டியுள்ளது. இம்மேற்கோள் விருத்தியுரைகாரர் தனியே காட்டியவை, அமிர்தசாகரருக்கு முந்தைய இலக்கணிகளால் காட்டப்பட்டவை என்று தனியே வகைப்படுத்த முடியும்.
  • நாலடியாரின் மேற்கோள் யாப்பருங்கலத்தின் இலக்கணவாக்கத்திற்கு இலக்கியமாக அமைவதோடு, இடைக்கால யாப்பிலக்கணிகளின் இலக்கணவாக்கத்திற்குரிய இலக்கியமாகவும் அமைந்துள்ளது.
  • இலக்கிய மேற்கோள்கள் பாடவேறுபாட்டு ஆய்விற்குப் பெரிதும் துணை புரிகின்றன. இந்தப் பின்புலத்தில் விருத்தியுரைகாரர் காட்டியுள்ள நாலடியாரின் மேற்கோள்கள் பாடவேறுபாட்டு ஆய்விற்குரியதாக அமைந்துள்ளமை தனித்துக் குறிப்பிடப்பிடத்தக்கது.

துணைமை ஆதாரங்கள்

1916    அமிர்தசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் மூலம் (பழைய விருத்தியுரையுடன்) பகுதி – 1,            ராவ் பஹதூர் ச.பவானந்தம் பிள்ளை பதிப்பித்தது, மினெர்வா அச்சுக் கூடம், சென்னை.

1934    சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் மூலமும் வேதகிரி முதலியாரவர்கள் இயற்றிய    உரையும், ஙி.இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை.

1975    அவிநயம் மூலமும் உரையும், உரையாசிரியரும் பதிப்பாசிரியரும்: க.ப.அறவாணன்,         ஜைன இளைஞர் மன்றம், சென்னை.

1985    தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு – இலக்கியக் கொள்கைகள், மீனாட்சி           புத்தக நிலையம், மதுரை, மூன்றாம் பதிப்பு.

1989    சோ.ந.கந்தசாமி, தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும், முதற் பாகம்           முதல் பகுதி,    தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

1990    நாலடியார் உரை வளம் (மூலமும் மூன்று பழைய உரைகளும் அடங்கியது), இரண்டு         பாகங்கள், சரசுவதி மகால் வெளியீடு, தஞ்சாவூர்.

1998    அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் (பழைய விருத்தியுரையுடன்),   பதிப்பாசிரியர்: மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,           சென்னை.

2009    இளங்குமரனார் தமிழ் வளம் – 13, யாப்பருங்கலம் பழைய விருத்தியுரையுடன்,       பதிப்பாசிரியர்: இரா.இளங்குமரன், வளவன் பதிப்பகம், சென்னை.

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “நாலடியார் யாப்பியல்: யாப்பருங்கல விருத்தியுரை

  1. நீதி நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்த இடத்தில் உள்ள நாலடியார் யாப்பியலைக் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரை அருமை. கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்

  2. தரமான கட்டுரைகளைத் தெரிவுசெய்து வெளியிட்டுவரும் வல்லமை இதழுக்கும், ஆசிரியர், ஆசிரியர்குழுவினர்களும், கட்டுரையாளருக்கும் பாராட்டும் வாழ்த்தும்

  3. யாப்பியல் குறித்த அருமையான கட்டுரை வாழ்த்துகள்

Leave a Reply to மணிமேகலா

Your email address will not be published. Required fields are marked *