ஆற்றுப்படை இலக்கியத்தில் வானியல் குறிப்புகள்

3

-முனைவர் க. இராஜா

சங்க காலத்தில் இலக்கியம், இலக்கணம், வரலாறு, கணிதம், வானநூல், உளவியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் புலமை எய்திய அறிஞர்கள் இருந்தார்கள் என்பது சங்க இலக்கியங்களிலிருந்து புலனாகின்றது. அதிலும் ஆற்றுப்படை இலக்கியம் படைத்த புலவர்கள் வானியல் அறிவினை அதிகம் பெற்றிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகின்றது. அதன்படி ஆற்றுப்படை நூல்கள் குறிப்பிடும் வானியல் குறிப்புகளை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

“தமிழரின் வான நூலறிவு மிகவும் சிறப்பு மிக்கது என சிலேட்டர் போன்ற அறிஞர்கள் பாராட்டியுள்ளனர்” (அ. தட்சிணாமூர்த்தி, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ப.44) என்று அ. தட்சிணாமூர்த்தி கூறுகிறார்.

ஞாயிறு செல்லும் வான வழியையும், அதன் இயக்கத்தையும் காற்று இயங்கும் திசையையும், ஓர் அடிப்படையுமின்றி நிலைபெற்றிருக்கும் ஆகாயத்தையும் அவ்வவற்றின் எல்லையளவும் சென்று நேரில் அளந்து அறிந்தவரைப் போல ஒவ்வொரு நாளும் இத்துணை அளவுடையன என்று ஆராய்ந்து திட்டமாகச் சொல்லும் அளவு ஆழ்ந்த அகன்ற அறிவு பெற்றவர்கள் இருந்தனர் என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் குறிப்பிடுகின்றார். இதனை,

“செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமு மென்றிவை
சென்றளந் தறிந்தோர் போல வென்றும்
இனைத்தென் போரு முளரே” (புறம்.30) என்னும் புறநானூற்றுப்  பாடலடிகள் குறிப்பிடுகின்றன.

இயற்கையின் சீற்றத்தைக் கண்டு அஞ்சிய ஆதி மனிதன் கோள்களை வழிபடத் தொடங்கினான். விண்ணில் நிறைந்துள்ள ஏதோ ஒன்றின் மாறுதல்கள் தங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதை மனிதன் உணர்ந்தான். இங்ஙனம் தான் கண்டறிந்த சில விண்மீன்களுக்குப் பெயர் சூட்டிய மனிதன் அதன் இயல்புகளையும் அதனால் விளையும் நன்மை தீமைகளையும் காண முற்பட்டான். தான் கண்டறிந்தச் செய்திகளை எல்லாம் இலக்கியங்களிலும் ஆங்காங்கே பொதிந்து வைத்துள்ளான்.

நுண்பெருங் கலையாகிய வானநூல் சங்க காலத்தில் ஒப்புயர்வற்ற நிலைமையில் இருந்தது. வானின்கண் மின்னுவன யாவும் மீன்கள் என்பதை,

“வானத்தின் கண்ணுள்ள மீன்”      (புறம்.9)

“வானம் பல மீனையும் பூக்கும்”    (புறம்.7)

“வானத்தில் விளங்கித் தோன்றும் விண்மீன்”      (புறம்.15)

எனப் புறநானூறு கூறும்.

எல்லாக் கோள்களும் சூரியனை நடுவாகக் கொண்டு சுற்றி வருவனவாம்.  பொன்னால் செய்யப்பட்ட ஒரு கலத்தின் தோற்றம், ஆகாயத்தில் ஒளி பொருந்திய நிறத்தினையுடைய கோள்மீன்கள் சூழ்ந்த இளைய கிரணங்களையுடைய ஞாயிற்றின் தோற்றத்தை ஒக்கும் என்கிறது சிறுபாணாற்றுப்படை. இதனை,

வாணிற விசும்பிற் கோண்மீன் சூழ்ந்த
விளங்கதிர் ஞாயிற்றெள்ளுந் தோற்றத்து
விளங்குபொற் கலம்”  (சிறுபாண்.242-244) என்னும் அடிகள் குறிப்பிடுகின்றன.

வெள்ளை நிறமுடைய கோள் வெள்ளி எனப்படும். இது மாலையில் அல்லது காலையிலேதான் காணப்படும். இராக்காலம் விடிதற்குக் காரணமாகிய மீன் என இதனைப் பெரும்பாணாற்றுப்படை குறிக்கும்.

“வைகுறும் மீன்”                  (பெரும்பாண்.318)

சூரியன் மேருவலம் வருதலை,
“உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு”      (முருகு.1-2) என்கிறது திருமுருகாற்றுப்படை.

சூரிய மண்டலத்தை ‘செய் மண்டிலம்’ (பெரும்பாண்.442) என்று பெரும்பாணாற்றுப்படையும்,  வெவ்வெஞ் செல்வன் (பொருநர்.136) என்று பொருநராற்றுப்படையும் கூறுகின்றன.கிழக்குத் திக்கிலே உலகைக் கவ்வியுள்ள இருளைத் தன் பொற்கிரணங்களாகிய கைகளினால் ஆர உண்டு, உலகம் உவப்பக் கடலினின்றும் செந்நிற வண்ணம் எங்கும் பரவ, என்றும் விடியலில் காட்சி தருகிறான் சூரியன். இதனை,

அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி
பகல் கான்று, எழுதரு பல்கதிர்ப் பருதி”       (பெரும்பாண்.1-2)

என்று பெரும்பாணாற்றுப்படையும், திருமுருகாற்றுப்படையும் (முருகு.1-2) கூறுகின்றன. மேலும் பெரும்பாணாற்றுப்படையில்,

“குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு”           (பெரும்பாண்.441-442)

என்று கூறுவதைக் காணமுடிகின்றது.

இந்தச் செஞ்ஞாயிற்றையே ‘இளஞாயிறு’ (சிறுபாண்.242 மலைபடு.464) என்று அழைக்கின்றனர். ஞாயிறு மறைந்ததும் அந்தியில் செக்கர் வானம் நெஞ்சை அள்ளும் இயற்கைப் பொலிவுடன் தோற்றம் அளிக்கிறது. அவ்வானத்தில் பிறை தோன்றும் காட்சியையும் காணுதல் கூடும். இதனைப் பெரும்பாணாற்றுப்டையில் காணலாம்.

“அவ்வாய் வளர்பிறை சூடிச் செவ்வாய்
அந்தி வானத்து ஆடுமழை கடுப்ப”       (பெரும்பாண்.412-413)

திங்களின் தண்கதிரையும், அதன் பால்போன்ற வெள்ளிய தன்மையையும் பாராட்டியுரைப்பார் போன்று இதற்குப் பல சிறப்புப் பெயர்களையும் அடைமொழிகளையும் சார்த்தி உரைப்பர் ஆற்றுப்படைப் புலவர்கள். அவை

           “திங்கள்”                          (பெரும்பாண்.11)

    “நெடுவெண் திங்கள்”         (பெரும்பாண்.251, சிறுபாண்.219)

        “பாற்கதிர்”                         (பெரும்பாண்.250)

திங்களினுடைய வளர்ச்சியின் உச்ச நிலையை,

“பருவ வானத்துப் பாற்கதிர் பரப்பி
உருவ வான்மதி ஊர் கொண்டாங்கு”          (சிறுபாண்.250-251) என்கிறது சிறுபாணாற்றுப்படை.

சுக்கிரன் எனப்படும் கோள் வெண்ணிறம் வாய்ந்தது என்பதாலேயே இது வெண்மீன், வெள்ளி என்னும் பெயரிட்டு அழைக்கப்பெறுகின்றது. சூரியன் உதயமாவதற்கு முன்னதாக ஞாயிற்றுப் புத்தேளுக்குக் கட்டியங்கூறி வருவது போல வைகறையில் காட்சி தருவது. எனவே, ‘வைகுறு மீன்’ என்றும் இதனைக் குறிப்பர். ‘குற்றங் கூறுதல் இல்லாத புகழையுடைய விளக்கமான வெள்ளிமீன்’ என்று பட்டினப்பாலை இதன் சிறப்பைப் பேசுகின்றது. இருள்செறிந்த விடியற் கருக்கலிலே விரிகின்ற வெள்ளிய கிரணங்களைக் கொண்டு எழுவது, ‘விரிகதிர் வெள்ளி முளைத்த நள் இருள் விடியல்’ (பொருநர்.72-73) என்கிறது பொருநராற்றுப்படை (மு. சண்முகம் பிள்ளை, சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும், ப.164).

நன்னன் சேய் நன்னன் தனது பகையாகிய இருளைப் போக்கிய செயலுக்கு, இருள்நீக்கி எழும் ஞாயிற்றை ஒப்பிட்டு,

“பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும்
ஞாயிறு அன்ன, அவன் வசைஇல் சிறப்பும்”         (மலைபடு.84-85) எனப் பேசப்பட்டுள்ளது.

இரும்பகை போக்கித் தோன்றிய இளஞாயிற்றுச் செல்வன் விசும்பில் படர்ந்து மேலெழுகின்றான். கரிகாலன் இளமை தொடங்கிச் சிறுகச் சிறுக வலிமை மேன்மேல் வளரத் தன் நாட்டைத் தோள் வலியால் கொண்டமைக்கு இளஞ்சூரியன் விசும்பில் மேன்மேலும் உக்கிரமுடன் எழுந்து செல்லுதலை உவமிக்கிறார் முடத்தாமக் கண்ணியார். இதனை,

பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி,
வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு,
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு, சிறந்தநன்
நாடு செகிற்கொண்டு நாள்தொறும் வளர்ப்ப”       (பொருநர்.135-138) என்னும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.

அமாவாசை அன்று திங்களின் உருவம் முற்றும் மாய்ந்துவிடுகிறது. அந்நாளின் பின்நாள் தொடங்கி பிறை பிறந்து வளர்ந்து வருகின்றது. ‘பிறை பிறந்தன்ன பின் ஏந்து கவைக்கடை’ (பெரும்பாண்.11) என்று யாழின் பின்புறத்தில் ஏந்தியிருக்கின்ற கவைத்தலையையுடைய கடைப் பகுதியை முதற் பிறைக்கு ஒப்பிடுகின்றார் பெரும்பாணாற்றுப்படைக்காரர்.

எட்டாம் பக்கத்துத் தோன்றும் அரைத் திங்களைப் பெரும்பாணாற்றுப்படை,

“எண்நாள் திங்கள் வடிவிற்று ஆகி,
அண்-நா இல்லா அமை வரு வறுவாய்”       (பெரும்பாண்.11-12) என்று வர்ணித்துள்ளது.

அரும்பு விரிந்த வெண்டாமரையானது நாட்காலையில் மலர்ந்த பூவில் சென்று தேனை நுகரும். நீல நிறமும் சிவந்த கண்ணும் கொண்ட வண்டுகளின் நிரையொழுங்கு திங்களைச் சேர்ந்து பற்றுகின்ற கரும் பாம்பிற்கு ஒப்ப உளது என்று,

           “முள்அரைத் தாமரை முகிழ்வரி நாட்போது
           கொங்கு கவர் நீலச் செங்கட் சேவல்
           மதிசேர் அரவின் மானத் தோன்றும்” (சிறுபாண்.183-185)

என்று வரும் சிறுபாணாற்றுப்படை அடிகள் அறிவிக்கின்றன.

திங்களின் அருகில் வியாழனும், வெள்ளியும் எப்பொழுதும் நீங்காமல் விளங்குகின்றன என்பதை,

“சேண்விளங்கு இயற்கை வான்மதி சுவைஇ
அகலா மீளின் அவர்வன விமைப்ப”                 (முருகு.87-88)

என்ற திருமுருகாற்றுப்படை அடிகளின் வழி நக்கீரர் உணர்த்துகின்றார் (தி. மகாலட்சுமி, இலக்கியத்தில் சோதிடம், ப.70).

இரவுப் பொழுது புலரும் விடியற் காலத்தே வெள்ளியானது வானத்தில் தோன்றும் என்ற உண்மையினைப் பல இடங்களில் கவிஞர்கள் எடுத்தியம்பியுள்ளனர். செறிந்த இரவில் விரிகின்ற கிரணங்களை உடையதாக வெள்ளி மீன் எழுந்தது. உடன் பொழுது விடிந்தது என்பதை,

“கைக் கசடிருந்த என்கண்ணகல் தடாரி
இருசீர்ப் பாணிக்கேற்ப விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல்”       (பொருநர்.70-72)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. அதிகாலையில் எழுந்து விடிவெள்ளியின் உதயம் கண்டு நீராடுதல், பயணம் தொடங்குதல் முதலிய நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர் என்பதை இவ்வடிகள் சுட்டுகின்றன.

மலைபடுடாத்தில் கார்த்திகை நட்சத்திரம் பற்றிய செய்தி இடம்பெறுகின்றது. இதனை,

“அகல் இருவிசும்பின் ஆஅல் போல
வாலிதின் மலர்ந்தன புன்கொடி முசுண்டை”      (மலைபடு.100-101) என்னும் அடிகள் உணர்த்துகின்றன.

வானத்து வடவயின் விளங்கும் ஏழு முனிவருள் வசிட்ட முனிவரின் பத்தினி அருந்ததி. அருந்ததி, சாலினி என்று குறிப்பிடுகின்ற இவ்வடமீனானது பெண்களின் கற்போடு தொடர்புபடுத்தப்பட்டு மக்களால் வழிபடும் தன்மையதாகக் காணப்படுகின்றது. திருமணமானதும் புதுமணமக்களை அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கச் செய்கின்ற ‘அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்’ என்ற வழக்கு இன்றும் நம்மிடம் நிலவி வருகின்றது. இதனை,

பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்”           (பெரும்பாண்.302-303) என்று பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது. 

முடிவுரை
சங்ககால மக்களிடத்தில் இருந்த வானியல் பற்றிய அறிவினைச் சங்கப் பாடல்களான ஆற்றுப்படை பாடல்கள் மூலம் அறியமுடிகின்றது. சூரியன், சந்திரன் ஆகிய இருசுடர்கள் பூமியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தின. சூரியன், கிரகங்கள் இயங்குவதற்கு நடுவணாக அமைந்தது. நிலவு தேய்ந்து அமாவாசையானது; பின் வளர்ந்து முழுநிலவு நாளானது. கார்த்திகை நட்சத்திரம் மக்களிடம் சிறப்பிடம் பெற்றது. வெள்ளி, அருந்ததி போன்ற மீன்கள் மக்களிடம் நன்மதிப்பை பெற்றன. அதனை அவர்கள் வாழ்க்கையின் முன்மாதிரியாகப் பாவித்துப் பின்பற்றி வந்தனர்.

உதவி:
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்

*****

கட்டுரையாசிரியர் – இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்
ஸ்ரீ வித்யாமந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
காட்டேரி, ஊத்தங்கரை, கிருட்டினகிரி (மா.).

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “ஆற்றுப்படை இலக்கியத்தில் வானியல் குறிப்புகள்

Leave a Reply to Manimaran

Your email address will not be published. Required fields are marked *