ஆகாயம், வெண்ணிலவு, கடலலைகள், ஆதவன் இவையனைத்தும் தத்தம் கடமைகளைச் சரியான நேரத்தில் சரியான வகையில் புரிகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தி ஒழுங்கமைத்த சக்தி எது? எனும் கேள்வி பல சமயங்களில் எமது உள்ளங்களில் எழுவது சகஜம்.

இவற்றை நடைமுறைப்படுத்த ஒரு சக்தி தேவையில்லையே! இவைகள் இயற்கையின் நிகழ்வுகளே என ஒரு சாரார் வாதிடக் கூடும்.

அவ்வியற்கையையே நமக்கு அப்பாற்பட்ட சக்தி என்று எண்ணிக் கொள்வோமானால் அச்சக்தியை வழிபடுவதும் ஒரு இயற்கை நிகழ்வே ! .

இத்தகைய விளக்கங்களைக் கவியரசர் மிக எளிமையான தனது பாடல்களில் புகுத்தி விடுவது அவரது அபாரமான திறமைக்கு எடுத்துக் காட்டு.

இதோ இவ்வாரம் மற்றுமொரு இனிய கவியரசரின் பாடலுடன் உங்கள்

முன்னே !

சாந்தி நிலையம் என்னும் திரைப்படத்தில் பி.சுசீலாவின் இனிமையான குரலில் ஒலித்த பாடல்.

இறைவன் வருவான் அவன்

என்றும் நல்வழி தருவான்

இறைவன் வருவான் அவன்

என்றும் நல்வழி தருவான்

அறிவோம் அவனை – அவன்
அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான் – அவன்
என்றும் நல்வழி தருவான்

நம்பிக்கையின் ஆதாரத்திலேதான் மனிதன் வாழ்கிறான். நம்பிக்கையற்றவர் வாழ்க்கை பாலைவனத்தைப் போன்றது. வாழ்க்கையில் பசுந்தளிர்கள் துளிர்க்க வேண்டுமானால் நிச்சயம் அங்கே நம்பிக்கை எனும் நீர் வார்க்கப்பட வேண்டும்.

அந்நம்பிக்கையை வாரி வழங்குவது ஆன்மீக உணர்வுகளே இவ்வான்மீக உணர்வுகளின் உற்பத்தி இறைநம்பிக்கையாகும்.

அவ்விறை நம்பிக்கையை எத்தகைய இனிமையான வரிகளுள் எளிமையாகப் புகுத்தி விட்டார் எம் கவியரசர்.

எம் துயர் களைய இன்றைய அவலம் நீங்கி நல்லதோர் நாளை மலர நிச்சயம் இறைவன் வருவான் என்றோர் நம்பிக்கையுடன் கைகோர்த்து அவ்விறைவன் எமக்கு நல்வழியைக் காட்டுவான் என்னும் நம்பிக்கையும் சேர்ந்தே நடைபோடுகிறது.

அவ்விறைவன் எமக்கு அருள் புரிகிறான் என்று எப்படி அறிவது எனும் கேள்விக்கு அற்புத விளக்கத்தை வாரி வழங்குகிறார் கவியரசர். எமது மனதில் துலங்கும் கருணையே இறைவன் எமக்கு அருள் புரிந்ததிற்கு அடையாளம் என்கிறார் பாருங்கள். மனிதர் மீது மனிதர் வைக்கும் அன்பின் அடிப்படையே தெய்வம் என்று கவியரசர் கூறும் எளிமையான ஆன்மீக விளக்கத்திற்கு எது ஈடாக முடியும் ?

வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
வண்ண வண்ணப் பூவினில்
காயை வைத்தவன்
சிப்பி ஒன்றின் நடுவே
முத்தை வைத்தவன்
சின்னச் சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
சின்ன சின்ன நெஞ்சினில்
பாசம் வைத்தான்
நெஞ்சில் வரும் பாசத்தை
பேச வைத்தான்
அன்பே என்பது கோயில்
ஆசை என்பது நாடு
பாசம் என்பது வீடு

இறைவன் என்பவன் தன்னை எவ்வாறு வெளிக்காட்டிக் கொள்கிறான் என்கிறார் கவியரசர், அழகான வண்ண மயமான மலர்களின் வழியே காயைக் காட்டுகின்றான், கடலின் அடித்தளத்தில் மூடியிருக்கும் சிப்பியின் உள்ளே அழகான முத்தையல்லவா காட்டித் தன் ஆதிக்கத்தை நிரூபிக்கிறான்.

சின்னக் குழந்தைகளின் சிறிய நெஞ்சினில் பாசத்தை வைத்து தனது கோயிலை அடையாளம் காட்டுகின்றான். கள்ளமில்லா மழைகளின் வார்த்தைகளின் வழியே தனது அன்பை வெளிக்காட்டுகிறான்.

அது மட்டுமல்ல அனைத்து மனிதர்களுக்கும் ஆன்மீக உணர்வு பொதுவானதே என்பதை எடுத்துக் காட்டுவதற்காக அன்பே கோவில் என்றும், ஆசையை நாட்டின் மீதும், பாசத்தை வீட்டின் மீதும் வைப்பதன் மூலம் ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்து விடலாம் எனத் தெளிவாகப் புரிய வைக்கிறார்.

பாசம் என்பது வீடு
இறைவன் வருவான் – அவன்
என்றும் நல்வழி தருவான்

உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்
உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்
கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்
கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்
கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்
நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்
கண்கள் அவனைக் காண்க
உள்ளம் அவனை நினைக்க
கைகள் அவனை வணங்க

உண்மையாக மனிதன் வாழ்ந்து விட்டால், அடுத்தவருக்குத் தீங்கு நினைக்காமல் வாழ்ந்திருந்தால், பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் கருணை கொண்டிருந்தால், கோவிலுக்கு ஏன் போக வேண்டும்? அவன் உள்ளமே கோவிலாகி விடாதா?

அந்த உள்ளம் எனும் கோவிலில் வீற்றிருக்கும் இறைவனைக் காண்பது எப்படி? ஓ அதுக்குத்தானே வாசலாகக் கண்களைக் கொடுத்துள்ளான். அக்கண்களிலே வழியும் அன்பு மிகுந்த கருணை உள்ளம் எனும் கோவிலில் உள்ள தெய்வத்தைன் தரிசனத்தை கொடுத்து விடுமே !

அப்பப்பா ! கவியரசரின் ஆழ்ந்த ஆன்மார்க வழியிலமைந்த சிந்தனையின் ஆழம் தான் என்ன?

கண்களை கொடுத்து விட்ட ஆண்டவன் எம்மிடம் கேட்பதெல்லாம் என்ன? அக்கண்களினால் நல்ல பாதையைத் தேர்ந்தெடுத்து எம் வாழ்க்கைப் பயணத்தை எநல்ல வழியில் ஓட்டி விட வேண்டும் என்பது தானே !

என் மந்தில் வாழும் இறைவனை கண்களை மூடித் தியானித்து , கைகளை கூப்பி வணக்கினால் உள்ளம் நல்லதையே எண்ணும், அது நல்ல வழியிலேயே செல்லும்.

கைகள் அவனை வணங்க
இறைவன் வருவான் – அவன்
என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை – அவன்
அன்பே நாம் பெறும் கருணை
இறைவன் வருவான் – அவன்
என்றும் நல்வழி தருவான்

அன்பினிய நெஞ்சங்களே ! அனைவர்க்கும் பொதுவான இறைவன் அன்பு மனங்களில் தான் வாழுகிறான். கருணையுள்ள உள்ளங்களில் தான் கோயில் கொள்கிறான். இறைவனை வெளியே எங்கும் தேடாதீர்கள் உங்கள் உள்ளங்களிலேயே தேடுங்கள் என்பதை எளிமையாகப் பாமரனும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கவியரசர் தனது வரிகளில் ஆன்மீக உணர்வுகளைப் புதைத்து வைத்தது அற்புதமே !

(மீண்டும் அடுத்த பாகத்தில்)

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *