அணைக்கட்டும் ஆத்தங்கரை ஓர மக்கள் வாழ்வும்

0
முனைவர் வீ. மீனாட்சி  

வளரும் நாடுகளில் நாட்டின் வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தால் பல ஐந்தாண்டு திட்டங்கள் பிற வளர்ச்சி திட்டங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. அதனடிப்படையில் பல அணைகள், தொழிற்சாலைகள் கட்டும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டும் வருகின்றன. இத்தகைய வகையில் அணைகள்,          தொழிற்சாலைகள் அமைக்கும் பகுதியானது கிராமப்பகுதியாக இருப்பதால் அப்பகுதியில் வாழும் பாமரமக்களை அரசாங்கம் இழப்பீட்டுத் தொகையும், மாற்று இடமும் கொடுத்து வேறு பகுதிகளுக்கு குடிபெயர்த்துகிறது. இத்தகைய குடியமர்வுகள் இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத நிகழ்வாக உள்ளது. இதனடிப்படையில் வெ.இறையன்புவின் ஆத்தங்கரை ஓரம் புதினத்தில் அரசின் வளர்ச்சி திட்டமான அணைக்கட்டுவதால் ஏற்படும் மக்கள் குடிபெயர்ப்பு நிகழ்வால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

சிந்தூர் என்ற கிராமப்பகுதியில் அரசாங்கம் அணைகட்டத் திட்டம் இடுவதால் அப்பகுதி மக்களை குடிபெயர்த்த ஆணை பிறப்பிக்கிறது. இயற்கை எழில் சூழ்ந்த அந்தப் பகுதியினை அழித்து அணை கட்டுவதை எதிர்த்து மக்கள் போராடுவதையும், இயற்கை அழிவால் ஏற்படும் பாதிப்புகளையும் கதைக்கருவாகக் கொண்டு இப்புதினம் அமைக்கப்பட்டுள்ளது.

கிராமப்பகுதிகளில் கூட்டுச் சமுதாயமாக வாழும் பழங்குடி மக்கள் பல்வேறு இடங்களில் இடம்பெயர்த்தப்படும்பொழுது உளவியல் பாதிப்பு, உறவுகள் சிதைவு, வாழ்க்கைச் சிதைவு, கிராமிய பண்பாடு அழிவு, கிராமியத் தொழில் அழிவு, கிராமியக் கலைகள் அழிவு போன்ற பலவிதமான வாழ்வியல் சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ளுகின்றனர். இதனை பின்வரும் பகுதி எடுத்துரைக்கிறது.

உளவியல் பாதிப்பு

அணைகட்டுவது தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் வரும்போது அவர்களை அன்பாக உபசரிக்கும் சிந்தூர் பகுதி மக்கள் அரசாங்கம் தங்களை வேறு இடத்திற்குக் குடியமர்த்தப்போகிறது என்று கேட்டவுடன் அதிர்ச்சியடைகின்றனர் என்பதை ‘வாசித்தறிந்தவர்களுடைய எதிர்ப்பு எப்பொழுதும் கணக்கிடப்பட்டதாய் இருக்கும், ஆனால் பாசாங்குகளை அறிந்திராத அவர்கள் இந்த தகவல் தெரிந்ததும் கூடிக் கூடிப் பேசிக் கொண்டார்கள். புலம்பித் தீர்த்தார்கள் சில பெண்கள் மாரில் அடித்துக் கொண்டார்கள். எங்கே போகப் போகிறோம் எப்படிப் போகப் போகிறோம்’ எல்லோரும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. அவரவர்களுக்கு ஒதுக்கின இடத்தில்தான் தங்க முடியும், முழு கிராமத்துக்கும் ஒரே இடத்தில் ஒதுக்கமாட்டார்கள் இப்படியாய் அவர்கள் தயக்கங்கள் தாரை தாரையாய் வழிந்து நின்றன’ என்று பழங்குடிமக்கள் அடையும் பாதிப்பு பற்றி ஆசிரியர் பதிவு செய்துள்ளார். மேலும் அரசாங்கத்தால் குடிபெயர்த்தப்பட்டவர்களின் மனநிலையை ‘சில குடிசைகள் காலி செய்யப்பட்டிருந்தன. அவர்கள் எங்க சென்றார்கள் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. பலர் அந்தப் புதிய வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முடியாமல் எப்பொழுது வேண்டுமானாலும் நெருங்கவிருக்கின்ற மரணத்திற்காகக் காத்திருந்தனர்’ என்றும் பாதிப்படையும் மக்களிடம் சுதிர் என்ற கதைமாந்தர் பேசும்பொழுது

‘நிறைய பேரோடு சுதீர் பேசினார். அவர்கள் யாரும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கவில்லை. எங்கள் சந்தோஷத்தையெல்லாம் நீங்கள் திருடி விட்டீர்கள் என்று சொல்லுவதைப் போல் அவர்கள் மனநிலை இருந்தது’ என்று இறையன்பு காட்சிப்படுத்துவதன் வழி பழங்குடி மக்கள் உளவியல் அடிப்படையில் பாதிப்படைவதை உணர முடிகிறது. இப்புதினத்தின் முன்னுரையில் ‘நாகரிகம் நடந்து வந்த பாதை எங்கணும் இவ்விதம் நொறுங்கிப் போன மனித இதயங்கள், வராலறு நெடுகிலும் எவ்வளவு எவ்வளவோ?’ எனும் ஜெயகாந்தன் கூறியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

மனித உறவுகள் சிதைவு

பழங்குடியினர் கூட்டம் கூட்டமாக வாழ்பவர்கள். அவர்கள் குடியமர்த்தப்படும் போது ஒரே இடத்தில் முழு கிராமத்துக்கும் இடம் ஒதுக்கப்படுவதில்லை. இதனை, ‘அந்த நாநூறு குடும்பங்களும் இருபது கிராமங்களில் தங்கியிருக்கிற மாதிரி நிலத்தை ஒதுக்கீடு செஞ்சிருக்கோம் சார்’ என்று கதைமாந்தர் படேலின் கூற்றாக நில ஒதுக்கீட்டு முறைபற்றிக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். இதன் மூலம்  ஒரு கூட்டுச் சமுதாயமாக வாழும் மக்கள் வௌ;வேறு இடங்களுக்குக் குடிபெயர்த்தப்படும் போது அவர்களது உறவுமுறை சிதைவடைவதை அறிய இயலுகிறது.

வாழ்க்கை முறை சிதைதல்

விவசாய தொழில் மட்டுமே தெரிந்த பழங்குடிமக்கள் வேறு இடங்களுக்குப் போகும் போது அவர்களது வாழ்க்கை முறை சிதைவு அடைகிறது. அதைப்பற்றி ஆசிரியர் குறிப்பிடும்போது

‘இந்தப் பகுதியை விட்டுக் காலடி வெளியே எடுத்து வச்ச நொடியிலேயே நம்ப சந்தோஷம் மறைஞ்சி போயிடும். நம்ப ஒண்ணுமேயில்லாம ஆயிடுவோம். நகரத்துல இருக்கிறவங்க கிட்ட நம் மக்கள் ஏமாந்து எல்லாத்தையும் இழந்திருவாங்க கடைசியில கையில் ஒண்ணுமில்லாம கூலிக்காரங்களாக் குறைஞ்சிடுவோம்’ என கதைமாந்தர் சிமனின் கூற்றாக எடுத்துரைத்துள்ளார். இதன்வழி சொந்த கிராமங்களில் சிறிதளவு நிலங்களில் சுயமாக தொழில் செய்து வாழ்ந்த மக்கள் அணைகட்டுவதின் காரணமாக நகரங்களை நோக்கி செல்லும்போது கூலியாட்களாக நிலைதாழ்வடையும் சூழலை ஆசிரியர் இனம் காட்டுகிறார்.

கிராமியத் தொழில்கள் அழிதல்

பழங்குடி மக்களை அரசு இழப்பீட்டுத் தொகை கொடுத்து குடிபெயர்த்தாலும் அவர்களுக்காக ஒதுக்கப்படும் பகுதி விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக அமைவது இல்லை. எதற்கும் பயன்படாத தரிசு நிலங்களையே அரசாங்கம் ஒதுக்குகிறது. இதனால் கிராமிய தொழிலான விவசாயத் தொழில் அழிகிறது. இதனை,

‘அந்தப் பகுதியில் கண்டங்கத்திரி என்ற களை மட்டும்தான் அபரிமிதமாக வளர்ந்திருந்தது. வெட்டி எடுத்தாலும் எஞ்சியிருக்கிற வேர் துளிர்த்துப் படரும் பயங்கரமான விஷக்களையாய் விரிந்திருந்த அதனுடன் போராடி அரசு தங்களுக்கு அளித்திருந்த பணத்தை இழந்திருந்தனர். பாசன வசதி எதுவுமில்லை. அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தபடி பள்ளிக் கட்டிடமோ, குடிநீர் குழாய்களோ தரப்படவில்லை. குடிபெயர்ந்த ஆறு மாதங்களுக்குள்ளேயே நிர்கதியாய் அவர்களை நிறுத்தியிருந்த நிலைமை கொடூரமானதாய் இருந்தது’ என்று சுதிர் எனும் கதைமாந்தரின் மனவோட்டமாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

கிராமிய பண்பாடு அழிவு

நகர்மயமாதலால் கிராம மக்கள் குடிபெயர்த்தப்படும்போது அவர்களுக்கு வாழ்வில் மாற்றங்கள் ஏற்படுத்துவதாக சொல்லி அரசாங்கம் அதனை ஏற்படுத்தி தராத நிலையில் அவர்களது பண்பாட்டுக் கூறுகள் அழியும் நிலையினை

‘இங்கு மட்டுமல்ல, அணை கட்டுகிறபொழுது, தொழிற்சாலைகள் உருவாகிற பொழுது, எண்ணை கிணறுகள் தோண்டப்படுகிற பொழுது என எந்த முன்னேற்றம் (உங்கள் பாஷையில்) நிகழ்ந்தாலும் பாதிக்கப்படுகிறவர்கள் எல்லோரும் பழங்குடியினராகவும், தாழ்த்தப்பட்டவர்களாகவுமே இருக்கிறார்கள். பழங்குடியினர்களுக்கு அளிக்கப்படுகிற நிவாரணங்கள் எதுவுமே சரியாக நிர்வகிக்கப்படுவதுமில்லை. பழங்குடியினரது பண்பாட்டை ஒட்டுமொத்தமாகச் சிதைப்பது தவிர வேறெந்தப் பெரிய மாற்றமும் அவர்களது வாழ்வில் நிகழ்வது இல்லை’ என்று சுதிரின் கூற்றாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். மேலும் அவர்களது பாரம்பரிய விளையாட்டு, சடங்கு முறைகள், பழக்க வழக்கங்கள் அனைத்தும் அழிவுறுகின்றன என்பதை கதைப்போக்கில் பல்வேறு இடங்களில் இனம் காட்டப்பட்டுள்ளது.

இயற்கை பாதிப்பு

சிந்தூர் பகுதியினை அழித்து அணைகட்டுவதால் ஏற்படும் இயற்கை சீரழிவு குறித்து ஆழ்ந்த நோக்குடன் ராதாபடங்கர் எனும் கதைமாந்தரின் கூற்றாக      ‘இந்த நாட்டின் சுற்றுப்புறச் சூழல் மொத்தமாகப் பாதிக்கப்படக்கூடாது என்பதும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய பாரம்பரிய சொத்துக்களையும் பண்பாட்டையும் தாரை வார்த்து விடக்கூடாது’ என்று இயற்கை நிலப்பரப்பை அழிப்பதால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்படைவது பற்றிக் குறிப்பிடுகிறார்.

முன்னேற்றம் என்ற பெயரில் நாம் இயற்கையை அழிப்பது பற்றி கூறுகையில், வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளின் சுற்றுப்புற சூழலை சீரழித்து அவற்றை வளர்ந்த நாடாகவே மாற முடியாத நிலைக்கு தள்ளி விடுகின்றன என்கிறார். மேற்கத்திய நாடுகளுக்கு கட்டில்களும் மரச்சாமான்களும் செய்வதற்கு நம் நாட்டின் தேக்கு மரங்கள் தேவைப்படுவதால் உலக வங்கிகள் நாம் இயற்கையை அழித்து அணை கட்ட எவ்வளவு கடன் வேண்டமானாலும் தர தயாராக இருக்கின்றன எனக் குறிப்பிடுகிறார். இது ஆசிரியரின் சமூக நல அக்கறை நோக்கினையும் நுண் அறிவையும் புலப்படுத்துவதாக அமைகிறது.

இதனை ‘இதெல்லாம் வளர்ச்சி என்கிற பெயரில் நாம் காவு கொடுக்கிற சீதனங்கள்’ என்று குறிப்பிடுகிறார். அணைகட்டுகிற பொழுது இழப்பு ஏற்படுகிற வனத்துக்கு பதிலா புதிய வனத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் அறிவிப்பது செயற்கை தனம் அது இயற்கை தருகிற வனத்திற்கு ஒப்பாகாது என்கிறார்.

‘இந்தியாவில் இருக்கிற வனம் கொறச்சல். கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு மண்டலத்துல அதிகரிச்சா Green house effect நடக்கும் பல கடலோரக் கிராமங்கள் தண்ணில ழூழ்க வேண்டியதாயிருக்கும்’             என்று குறிப்பிடும் இடத்தில் ஆசிரியர் விஞ்ஞான பூர்வமான பாதிப்பினை எடுத்துக்காட்டுகிறார்.

‘மூழ்கப்போற பரப்பளவுக்கு ஏத்த மாதிரி 1 லட்சம் ஹெக்டேர் வனம் அமைப்பதற்கு நிலமே கிடையாதுன்னு சொல்லறாங்க. மஹாராஷ்டிராவில் அழிஞ்சி போற காட்டுக்கு மாற்றா ராஜஸ்தானில் காடுகளை உண்டாக்கறது முட்டாள் தனம். உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஆந்தைகளோட எண்ணிக்கை குறைஞ்சதனால தான் எலிகளோட எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியல. இயற்கையை அழிச்சா யாராலேயும் சமத்தன்மையைச் சமன் செய்ய முடியாது புரிஞ்சிக்க’ என்ற இயற்கையை மனித முயற்சியால் சமன் செய்ய முடியாது என்பதை சுதரின் கூற்றின் மூலம் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

சிந்தூர் பகுதியில் அணை கட்டப்படுவதால் மூழ்கவிருக்கிற கிராமங்கள், அழிக்கப்பட விருக்கிற வனங்கள், உயிரினங்கள், தாவர இனங்கள், தண்ணீர் தேங்கி உலர் நிலமாகப் போக இருக்கிற விவசாய நிலப் பரப்பு பற்றிய குறிப்புகளை ஆசிரியர் திறம்பட குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கிராமங்களை அழித்து அணைக்கட்டுதல் என்பது அப்பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தினாலும் ‘அணை என்பது தேசீய கொள்கைகளின் அடிப்படையில் கட்டப்படுவது. இதைக் குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது’ என்று நீதிமன்றம் தீர்ப்பினைக் கூறுவதாக பதிவு செய்யும் ஆசிரியர் ‘அணை கட்டுவது என்பது உற்பத்தியைப் பெருக்கக் கூடியது என்பதில் நாங்கள் முரண்படவில்லை. ஒரு அணை எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும் என்பதும், பெரிய அணைகள் நம் நாட்டு நலனுக்கு எந்த அளவிற்கு உகந்தன என்பதும் தான் என்னுடைய கேள்விகளாக இருக்கின்றன. நம் நாட்டில் கட்டப்பட்ட பல பெரிய அணைகள் முக்கால்வாசிக்கு தூர்ந்துபோய் இருக்கின்றன. சீனத்தில் சின்ன சின்ன அணைகளாக கட்டப்பட்டு நீர்த்தேக்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அப்படி சின்ன அணைகளாகக் கட்டப்படும்பொழுது நீர்த்தேங்குதல்   உலர்நிலமாதல்   போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. ஒவ்வொரு அணை கட்டப்படும்போது எத்தனை ஆயிரக்கணக்கான ஹெக்டேர்களில் உள்ள இயற்கை வனங்கள் அழிக்கப்படுகின்றன? நம் அறிவிற்கே அகப்படாத எத்தனையோ தாவரங்களும், உயிரினங்களும் தண்ணீரில் மூழ்கி மறைந்துபோகின்றன தெரியுமா? ஒரு அணை பெரிய அளவிலே கட்டப்படும்பொழுது எந்த அளவிற்கு சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது தெரியுமா? நம் நாட்டில் ஏற்கனவே போதிய அளவில் வனங்கள் இல்லை. நம்மால் செயற்கையாக இந்த இயற்கைச் செல்வங்களையெல்லாம் எப்படி ஈடு செய்ய முடியும்?’ என்று ராதா படங்கரின் கூற்றாக இறையன்பு நம்முன் வைக்கும் கேள்விகள் சிந்தனைக்குரியதாக உள்ளது.

நாட்டின் வளர்ச்சி இலக்கினை நோக்கி உருவாக்கப்படும் இதுபோன்ற அணைக்கட்டும் திட்டத்தினால் வேறு இடங்களுக்கு குடியமர்த்தப்படும் மக்களுக்கும் தகுந்த இழப்பீட்டுத் தொகையினையும், அவர்கள் சுயமாக தொழில்செய்து பிழைக்கும் வகையில் நல்ல நிலங்களையும் அமைத்துக்கொடுப்பது அரசாங்கத்தின் கடமை என்பதையும் இப்புதினம் அறிவுறுத்துகிறது.

மேலும் ஒருபுறம் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப அரசாங்கத்தால் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டாலும் மறுபுறம் இயற்கை வளங்களை பாதுகாப்பதும் இன்றியமையாதது என்பதையும் இப்புதினத்தின் வழி ஆசிரியர் வலுவாக எடுத்துரைப்பதை உணர முடிகிறது.

துணைநூற்பட்டியல்

1.ஆத்தங்கரை ஓரம் – வெ.இறையன்பு – தாகம் சென்னை – 1997

2.தமிழில் வட்டார நாவல்கள் – சு.சண்முகசுந்தரம் – காவ்யா பெங்களுர் 1991

3.நாவலும் வாழ்க்கையும் – க.சிவதம்பி – தமிழ் புத்தகாலயம் – சென்னை 1978

கட்டுரையாளர்
முனைவர் வீ. மீனாட்சி,  உதவிப் பேராசிரியர், முதுகலைத் தமிழாய்வுத்துறை, பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 620 017.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *