-முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி. அ

’பாணப்பாட்டு’ என்பது பாணர் இன மக்கள் பாடும் பாட்டாகும். இதனைத் துயிலுணர்த்துப்பாட்டு, பாணர்பாட்டு என்றெல்லாம் அழைப்பர்.  பாணரினமக்கள் பல தலைமுறைகளாக இப்பாடலைப் பாடிவருகின்றனர்.  கால மாற்றத்திற்கேற்ப இப்பாடலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இக்கட்டுரை மலையாளத்திலுள்ள பாணப்பாட்டை அறிமுகம் செய்து அதன்வாயிலாக அறியலாகும் தமிழர் பண்பாட்டு மரபுகளை எடுத்துரைக்க முயல்கிறது.

பாணர்களின் தோற்றம்

பாணர்களின் தோற்றம் பற்றிய பலகதைகள் மலையாள நாட்டுப்புறப் பாடல்கள்களில் நிலவுகின்றன. கணிதசாஸ்திரத்தில் பண்டிதனாக விளங்கியவர் வரருசி. இவர் பறையர் இனத்தைச் சார்ந்த பெண்மணியைக் காதலித்துத்  திருமணம் செய்தார்.  இவர்கள் ஜோதிடத்தையும் கணிதத்தையும்  நாடெங்கும் சுற்றித்திரிந்து பரப்பினர்.  பிராயாணம் செய்யும்போது பல இடங்களில் வைத்தும் பதினோரு பிள்ளைகளைப் பெற்றார்.  ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும்போதும் ‘வாய் இருக்கிறதா’ என்று கேட்பார். இருக்கிறது என்று சொன்னால் அக்குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். பன்னிரெண்டாவது குழந்தை பிறந்ததும் அதன் தாய் அக்குழந்தைக்கு வாய் இல்லை என்று கூறினார். எனினும் பலன் இல்லை. அதனையும் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றனர்.  வரருசி விட்டுச் சென்ற பன்னிரெண்டு பிள்ளைகள் யாரெல்லாம் என்று கேரள இலக்கிய வரலாற்றில் உள்ளூர் குறிப்பிடுகிறார்.

மேழத்தோளக்னி கோத்திரி ரஜகனுளியனூர்த்தச்சனும் பின்னே வள்ளோன்
வாயில்லாகுந் நிலப்பன் வடுதலமருவும் நாயர் காரய்க்கல் மாதா
செம்மே கேளூப்புகுற்றன், செறிய திருவரங்கத்தெழும் பாணனாரும்
நேரே நாராயண பத்திரனு முடநகவூர் சாத்தனும் பாக்குனாரும்
இதில் வரும் திருவரங்கத்தெழும் பாணனார் என்பது சுருங்கி காலப்போக்கில் திருவரங்கன் என்றானது.  இக்கதைப் பாணர்களின் தோற்றத்தைக் குறிப்பிடுகிறது.  இக்கதையினையே பாணர்கள் துயிலெழுத்துப்பாடலில் பாடி வருகின்றனர்.

தொல்காப்பியத்தில் பாணர்

தொல்காப்பியத்தில் பாணர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.  தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், நிலம்பெயர்ந்து உரைத்தலும் அவள் நிலை உரைத்தல் கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய தொல். பொரு:167. தலைவியைவிட்டுத் தலைவர் பிரிந்துசென்ற இடத்தில் சென்று தலைவியின் நிலையைக் கூறும் மரபு கூத்தருக்கும் பாணர்க்கும் உரிய மரபாகும்.  தலைவன் தலைவியரின் அந்தரங்க இரகசியங்களையும் பாணர்கள் அறிந்திருந்தனர் என்பதை இச்சூத்திரம் தெளிவுபடுத்துகிறது.  மேலும்

”தோழி தாயே பார்ப்பான் பாகன்
பாணன் பாட்டி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப” – (தொல் பொரு.194)

என்று தொல்காப்பியம், பொருளதிகாரம் கூறுகிறது.  இச்சூத்திரத்தில் மிக முக்கியமான செய்திப் பரிமாற்றத்திற்குரிய வாயில்களுள் பாணரும் பாட்டியும் குறிப்பிடத்தக்கவர்களாவர்.  இங்கு பாணன் என்ற சொல் ஆடவரையும் பாட்டி என்ற சொல் பாணர்குலப் பெண்களையும் குறிக்கிறது.  தொல்காப்பியர் கூறும் பாட்டி என்ற சொல் சங்ககாலத்தில் பாடினி என்று வழங்கப்பட்டது.  ’பாட்டி’ என்ற சொல்லுக்குத் திவாகர நிகண்டு பாணர் இனப் பெண்டிரைக் குறிப்பதாகக் கூறுகிறது.  சங்ககாலத்தில் இப்பாணர்கள் யாழ் இசைத்துப் பாடினர். அவ்யாழ் சீறியாழ், பேரியாழ் என இரண்டுவகைப்பட்டதென்று ஆற்றுப்படை நூல்கள் வாயிலாக அறியலாம்.  மேலும் பெரும்பாணாற்றுப்படையும் சிறுபாணாற்றுப்படையும் பாணர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.  யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர் என்ற மூன்று வகைப்பட்ட பாணர்களைப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.  இவர்களுள் இசைப்பாணர்களை உயர்ந்தவர்களாகக் கருதுகின்றனர். இவர்கள் போர்க்களத்திற்குச் சென்று பெரும் வீரர்கள் போர்செய்யும் முறையைக் கண்டு அவர்களைப் பற்றிப்பாடும் உரிமையைப் பெற்றிருந்தனர்.  மண்டைப்பாணர்கள் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். காரணம் இவர்களுக்குக் குறிப்பிடத்தக்க தொழில்கள் இல்லாமல் ஊர் ஊராக அலைந்து திரிந்து மன்னர்களையும் நிலக்கிழார்களையும் புகழ்ந்து பாடல்கள்பாடிப் பரிசில்பெற்று வாழ்க்கை நடத்தினர். இவர்கள் பழுமரம் தேரும் பறவை போலத் தங்கள் உணவிற்காகப் பல்வேறு இடங்களிலுள்ள மன்னர்களை நாடிச்சென்றனர் என்பதை,

பழுமரம் தேரும் பறவை போல
கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
புல்லென யாக்கைப் புலவுவாய் பாண
(பெரும்பாணாற்றுப்படை)

என்ற பெரும்பாணாற்றுப்படைப் பாடல்களால் அறிகிறோம். இவர்கள் மன்னர்களை நாடிச்சென்றதற்குக் கேரள நாட்டுப்புறக் கதைப்பாடல்களில்  பல  கதைகள் வழங்குவதைக் காணலாம்.

கைலாயமலையில் சிவனும் பார்வதியும் சூதாடினர். அப்பொழுது சிவபெருமான் தோற்கவே அதைக் கண்டுகொண்டிருந்த பாணன் மாதரிடம் தோற்றுவிட்டாய் என்று சிவபெருமானைக் கேலி செய்கிறான். கோபம் கொண்ட சிவபெருமான் சூதை எடுத்து தரையில் வீசினார்.  பூமியில் வந்த பாணன் சிவபெருமானைச் சபித்தான். உடனே சிவபெருமானும்   நோய்வாய்ப்பட்டார். அவருடைய நோயைப் போக்குவதற்கு ஆயிரம் கன்னிகைகள் குரவையிட்டனர், ஆயிரம் பேர் பள்ளிச் சங்கு ஊதினர். அப்படி இருந்தும் சிவபெருமான் எழவில்லை. இறுதியில் வேலனிடம் சிவபெருமானின் நோய்க்கான காரணத்தை வினவ பாணன் இட்ட சாபமே அதனைப் பாணன்தான் போக்கவேண்டும் என்றான். பாணன் சிவபெருமானின் திருச்சன்னிதியில் நின்று அவரைப் புகழ்ந்து பாடவே சிவபெருமான் சாபம் நீங்கித் துயிலுணர்ந்தார். உடனே சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கவே ஏதாவது ஒருவரம் தந்தால் போதும் என்று பாணனும் கூறுகிறான் அதற்குச் சிவபெருமான்,

ஏதும் ஒந்நுமே இல்லாத்தானு
ஏழு வீடே துயிலுணரு ஞான் தோற்றிட்டுண்டிதேடா
மலநாட்டிலே மகாஜனங்ஙளே என்னயெந்நே நினப்பவரு
விளக்குடனே கொளுத்துமடா
அறியாத்த பாபிகளு படியடச்சு விலக்குமெடா
விலக்கும் வீட்டில் மறந்நிட்டுமே என்றே நாமமே ஸ்துதிக்கருது
ஈ வரமே தன்னிதேடா நினக்கும் நின்றே சந்ததிக்கும். –  (பாணன்மார் பாட்டு – 53-59) என்று வரம் கொடுக்கிறார்.

சிவபெருமான் கொடுத்த வரங்கள் பற்றி மேலும் பல கதைகள் வழங்குவதைக் காணலாம்.  என்ன வரம் என்று கேட்டதற்கு ஒரு யானையைக் கொடுத்தார்.  யானையை வளர்க்கத்தெரியாத பாணன் சிவபெருமானிடம் அதனைத் திரும்பக் கொடுக்கவே அவர் அவன் உழுது பிழைப்பதற்காக இரண்டு எருமைகளைக் கொடுக்கிறான். அவ்வெருமைகளைக் கலப்பையின் இரு துருவங்களிலும் கட்டிஉழத் துவங்குகிறான். இரண்டும் எதிர்திசையைப் பார்த்து செல்லவே அவ்வெருமைகளையும் சிவபெருமானிடம் திரும்பக் கொடுக்கிறான். உடனே சிவபெருமான்’ ’ஒந்நுமில்லாத்தான் ஏழு வீட்டில் போய் பாடி வாழ்க’ என்று வரம் கொடுப்பதாகக் கூறுகின்றனர்.

இன்றும் கேரளத்தில் வாழும் பாணர்களின் தொழில் வீடுவீடாகச் சென்று பாடிப் பொருள்கள் பெறுவதாகும்.  இவர்கள் பாடும் பாட்டினைத் துயிலுணர்த்துப்பாட்டு என்று அழைப்பர்.  பாணனும் பாட்டியும் அதிகாலைப் பொழுதில் துடி, கிண்ணம், கைமணி முதலிய இசைக்கருவிகளை இசைத்த வண்ணம் ஒவ்வொரு வீடாகச் சென்று வீட்டின் வெளியில் நின்று முதலில் துடி முழக்கி கனைத்துக் காட்டுவர்.  வீட்டார் பாணன் வரவை அறிந்து முற்றத்தில் விளக்கேற்றி அலங்கரித்துப் பாணரை அழைப்பர்.  பாணன் முற்றத்தில் அமர்ந்து சிவபெருமான் தங்களை இத்தொழில் செய்வதற்கு வரம் கொடுத்த கதையான திருவரங்கன் கதையைப் பாடுவர்.  பின்னர் வீட்டாரின் விருப்பத்திற்கேற்ப ஹரிச்சந்திர சரிதம், கிருஷ்ண லீலை முதலிய சில கதைப் பாடல்களையும் பாடும் மரபு உண்டு.  பொதுவாக இவர்கள் கர்க்கடக மாதம் அதாவது ஆடி மாதத்தில்தான் பாடச் செல்வர்.  பாணர்கள் பாடியதற்காக அரிசி, தேங்காய், எண்ணெய் முதலிய பொருட்களை வழங்குவர். வடக்கன் பாட்டிலும் பாணர்கள் பல பகுதிகளில் அலைந்து திரிந்து பாடிப் பரிசில் பெறுகின்ற தன்மையைக் காணமுடிகிறது.

பாணப்பாட்டில் பண்பாட்டு மரபுகள்

சமூக அமைப்பு ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கு மாறிவரும் தன்மையுடையது.  பண்பாட்டு வரலாற்றில் ஓர் இனத்தாருடைய பழக்கவழக்கங்களும் எண்ணங்களும் மாறிவருவதைக் காணலாம்.  ஒரு சமூகத்தின் பழமையான பழக்கவழக்கங்களை நாம் நாட்டுப்புறவியல் வழியாக அறிந்துகொள்ள முடியும்.  ஒவ்வொரு பிரிவினரிடையேயும் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் நிலவி வந்துள்ளன. இப்பாணப்பாட்டு வழியாகப் பாணர் சமூகத்தின் பண்பாடுகளை அறிந்துகொள்ள முடிகிறது.

பாணர்கள் தங்களுக்கென்று ஒரு தொழில் அறியாதவர்கள் என்றும் இவர்கள் வீடுவீடாகச் சென்று சிவபெருமானின்  பெருமைகளைப் பாடிக் கிடைக்கும் பரிசில்களை வைத்தே வாழ்ந்தனர் என்பதையும் பாணப்பாட்டு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் பாடிப் பொருள் பெறுதல் மட்டுமன்றி இவர்களுள் சிலர் யானைக்கு நெற்றிப்பட்டம் கட்டுதல், முத்துக்குடை தைத்தல், கோவிலுக்குத் தேவையான ஓலையாலாகிய பொருட்களைப் பின்னுதல் முதலிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஊர் ஊராகச் சுற்றித்திரிந்து வருகின்ற காட்சியை,

’நந்நு நந்நே திருவரங்கா
இத்தற நாளுமே போகருதே’ (பா.பா 106-107)

என்று கூறுவதில் இருந்து ஒரு இடத்தில் தரித்து நிற்காமல் சுற்றித்திரியும் தன்மையுடையவன் என்றும் அவனைப் போகாமல் இருப்பதற்காக வேண்டுவதாகவும் இவ்வரிகள் அமைகின்றன.

ஒருவர் நோய்வாய்பட்டால் முதலில் இறைவனுக்கு வழிபாடு செய்தனர். என்பதைப் இப்பாணப்பாட்டு வாயிலாக அறிகிறோம். சிவபெருமான் நோய்வாய்பட்டபோது ஆயிரம் கன்னிகைகள் தாலப்பொலி எடுத்தனர், ஆயிரம் பேர் சங்கு ஊதினர், வேலனை அழைத்து இதற்கான காரணத்தை அறிந்தனர். இதனை,

ஆயிரமே பிராமணரு ஆனவர்ஷமே நமஸ்காரம்
ஆயிரமே கன்னிகளு கைவிளக்கே தாலப்பொலி
ஆயிரமே மங்கமாரு மாடித்தற்றோ வாய்க்கரவ
ஆயிரமே சங்குகாரு பள்ளிசங்குணர்த்து ந்நவரு – (பா.பா 28-31)

என்ற வரிகள் உணர்த்துகின்றன. இது சங்ககாலம் முதல் தமிழகத்தில் நிலவிய பாணர் பண்பாட்டினை விவரிக்கிறது.  பாணர்கள் துயிலுணர்த்தி  இறைவன் புகழ் பாடியதற்கு,

ஒரு நெல்லுமே அன்னம் வேண்டா
ஒருழக்குப் பாலும் வேண்டா’   ( பா.பா 75.76) என்ற வரிகளில் இருந்து அன்னமும் பாலும் பரிசிலாக வழங்கினர் என்பதையும் பாலை உழக்கால் அளந்தனர் என்பதையும் அறிகிறோம். மட்டுமல்லாமல் ஆணும் பெண்ணும் சூதாடும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததை’ பொன்னினெந்த சூதெடுத்து பகவானும் திரிச்சு வச்சு’ என்ற வரிகள் வாயிலாக உணர்கிறோம்.

மாலைப் பொழுதில் கிருட்டினனின் பெருமைகளைப் பஜனையாகப் பாடும் வழக்கம் இருந்தது. இன்றும் கேரளப் பாணரிடையே இம்மரபு நின்று நிலைக்கின்றன.

வச்சுண்ணான் கொச்சுருளி
இட்டுண்ணான் இலத்தளிக
கண்கான்மானணி விளக்கு
நீர்குடிப்பான் வெள்ளிக்கிண்டி
வெயில் தாங்கும் குடையெடுத்து ( பா.பா 220 -223) என்ற வரியில் இருந்து பாணர்கள் உருளியில் உணவெடுத்து, தளிர் இலையில் உணவுண்டு, வெள்ளிக்கிண்டியில் நீர்பருகி, வெயிலிற்கும் குடைபிடித்து வந்தனர் என்பதை இவ்வரிகள் உணர்த்துகின்றன. இறைவனுக்குக் கிழக்குப் பார்த்தே விளக்கு ஏற்றினர். இது இன்றும் தமிழரிடையே காணப்படும் ஒரு பண்பாடாகும்.

ஹரிச்சந்திரபுராணத்தில் இறப்புச்சடங்கு நிகழ்த்தும் முறை காணப்படுகிறது.  பாலுள்ள விறகை அருகில் அடுக்கி நெய்யுள்ள விறகை நெஞ்சில் அடுக்கியே ஈமக்கடனைச் செய்தனர்.

பாணப்பாட்டைப் பார்க்கும்போது பண்டைய சங்ககாலத்திய தமிழர் மரபுகள் இவர்களது பாடலில்  இலைமறை காயாகப் பதிவாகியுள்ளதைக் காணலாம். பாணர் மரபையும் அவர்களது வாழ்வியலையும் இப்பாணப்பாட்டு எடுத்துரைக்கிறது.  காலமாற்றத்திற்கேற்ப நிகழ்ந்த பண்பாட்டு மாற்றத்தையும் இது எடுத்துரைக்கத் தவறவில்லை. கேரளீயருக்கே ஆன சில பண்பாடுகளும் பாணப்பாட்டில் பதிவாகியுள்ளன.

*****

துணை நூல் பட்டியல்

  1. ஆனந்தகுமார் .பா இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும்,  நியூ        செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2005.
  2. இராமநாதன். ஆறு நாட்டுப்புறப் பாடல் களஞ்சியம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2002.
  3. குளோரி. தா நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெறும் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், காவ்யா, சென்னை, 2008
  4. பார்கவன் பிள்ளை. ஜி கேரளத்திலே பாணன்மார் பாட்டுகள்,   நேஷணல் புக் ஹவுஸ், கோட்டயம்,2009.
  5. பார்கவன் பிள்ளை. ஜி கேரளத்திலே நாடோடிப் பாட்டுகள், சாகித்திய வேதி, திருவல்லா.

*****

கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்,
கேரளப் பல்கலைக்கழகம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *