பவள சங்கரி


ஜென் கதைகள் நமக்குப் பல வாழ்வியல் தத்துவங்களை விளங்கச்செய்பவை. நம் புத்தரின் தத்துவங்களே பெரும்பாலும் ஜென் கதைகளாக உருமாறியுள்ளன. போதி மரத்தடிக்குச் சென்றுதான் அந்த ஞானம் பெறவேண்டும் என்பதில்லை .. நல்ல எண்ணங்களை விதைக்க முடிவெடுத்தால் மட்டுமே போதும் .. நன்றி மறப்பது நன்றன்று என்பதை நம் வள்ளுவப் பெருந்தகையும், அப்படி மறப்பவரின் எதிர்காலம் என்னவாகும் என்ற அனுபவப் பாடங்களும் நமக்கு அன்றாடம் கிடைப்பவை! இதற்கு நம் ஜென் துறவியார் சொல்லும் பாடம் இதுதான்!

இரண்டு இணை பிரியாத உண்மையான நண்பர்கள் இருந்தார்கள். அவ்வளவு நாட்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாகவும், நல்ல நட்பாகவும் அதாவது ஒருவருக்கு ஒரு துன்பம் வந்தால் மற்றவர் அந்தத் துன்பம் தனக்கே வந்ததாக எண்ணி வருந்தும்படி இருந்தார்கள். அவர்கள் இருவரும் இன்ப துன்பங்களில் சமமாகப் பங்கெடுத்துக்கொள்வார்கள். ஒருமுறை ஒரு பாலைவனப் பகுதியில் இருவரும் சேர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தார்கள். கடுமையாகச் சுடும் மணலின் வேதனையை மறப்பதற்காக இருவரும் பேசியபடியே நடந்து சென்றார்கள்.
மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் ஒரு விசயம் அவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாட்டை தோன்றச் செய்துவிட்டது.

இதுவே வாய்ச் சண்டையாக மாறி, ஒரு கட்டத்தில் ஒருவன் மற்றவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டான். கடுமையான வெயிலின் தாக்கத்தினால் அடைந்த சோர்வைக்காட்டிலும், அருமை நண்பன் தன் கன்னத்தில் அறைந்த வேதனை அதிகமானது. அறை வாங்கியவன் பெரும் வேதனையில் இருந்தாலும் ஒன்றும் பேசாமல் ஓர் ஓரமாக ஒதுங்கிப்போய் உட்கார்ந்துகொண்டவன், அருகில் இருந்த மணலில் , ‘இன்று என் உயிர் நண்பன் என்னுடைய கன்னத்தில் அறைந்துவிட்டான்’ என்று தன் விரலால் எழுதினான். ஆனால் அவன் என்ன எழுதினான் என்று அடித்தவனுக்குப் புரியவில்லை என்றாலும் இருவரும் எதுவும் பேசாமலேயே பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

இருவருக்கும் தாகம் வாட்டியபோது, வழியில் கண்ட ஒரு பாலைவன ஊற்றில் இருந்த நீரை தாகம் தீரும்வரை அள்ளி அள்ளிப் பருகினார்கள்.

அப்போது கன்னத்தில் அறை வாங்கியவனின் காலை யாரோ திடீரென இழுப்பதுபோல் இருந்தது. அவன் தான் புதைகுழியில் சிக்கிக் கொண்டதை அப்போதுதான் உணருகிறான். அப்போது புதைகுழியில் சிக்கிக்கொண்ட நண்பனை மிகவும் சிரமப்பட்டுக் காப்பாற்றி கரை ஏற்றினான் கன்னத்தில் அறைந்த அந்த நண்பன். ஆபத்தில் இருந்து மீண்டவனோ சற்று தொலைவு சென்று அங்கிருந்த பாறையின் மேல் அமர்ந்தவன், ஒரு கல்லை எடுத்து,
‘இன்று என் உயிர் நண்பன் என்னுடைய உயிரைக் காப்பாற்றினான்’ என்று எழுதினான்.
”நான் உன்னை அறைந்தபோது மணலில் ஏதோ எழுதிய நீ இப்போது உன்னைக் காப்பாற்றியதை கல்லில் எழுதுகிறாயே. ஏன் இப்படி இவ்வளவு சிரமப்பட்டு கல்லில் எழுதுகிறாய்? என்று கேட்டான்.

அறை வாங்கிய நண்பனோ, ”ஒருவர் நம்மை ஏற்படுத்தும் காயத்தை மணலில் எழுதி வைத்தால், காலப்போக்கில் மன்னிப்பு எனும் காற்று அந்த எழுத்துகளை அழித்துவிடக்கூடும்; ஆனால், ஒருவர் நமக்குச் செய்யும் நன்மையை சிரமப்பட்டேனும் கல்லில் எழுதி வைத்தால் அது காலம் கடந்து நிற்பதோடு மற்றவருக்கும் பாடமாக அமையும்” என்றான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *