(எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா)

பாரினிலே  பெரும்   படைப்பாய்
பரிணமித்த படைப்பு  என்றால்
பாங்கான  பெண் படைப்பே
ஆகும் எனக்  கண்டிடலாம்
அப்படைப்பை பிரம்ம  தேவன்
ஆக்கிவிட  எடுத்த  நாள்
அப்பிரமன் படைப்பு  அதற்கே
அதிக சவால் ஆகிருக்கும் !

அழகாக  முகம் அமைக்க
அதிக  நாள்   ஆகிருக்கும்
அன்பு பாசம் நேசம்வைக்க
அதற்கும் நாள் எடுத்திருக்கும்
பொறுமை எனும் நகையணிய
வெகு நாளே வந்திருக்கும்
பெண்மை அங்கே உருவாக
பிரம்ம தேவன் களைத்திருப்பான்  !

கருவறையை உள்ளே வைத்தான்
கருணைதனை நிறைய வைத்தான்
அருமை நிறை அன்னையென
அவள் படைப்பை அளித்தானே
வருகின்ற துயரம் எலாம்
மனம் ஏற்க அவள்படைப்பை
மாண்பு நிறை படைப்பாக
படைத்து விட்டான் பிரமனவன்  !

தங்கையென பெயர் பெறுவாள்
தமக்கை என மாறிடுவாள்
தன்னிகரே இல்லை எனும்
தாயாக அவள் இருப்பாள்
மங்கலமே அவள் ஆவாள்
வருவோர்க்கு உணவு அளிப்பாள்
எங்குமே அவள் தேவை
எவர்க்கும் நிகர் இல்லையன்றோ !

பிள்ளைபெறும் பெரும் பொறுப்பை
பிரம்ம தேவன் கொடுத்துள்ளான்
பேணி அவள் வளர்த்துவிட
பெரும் பாடு பட்டிடுவாள்
வளரும் பிள்ளை வாழ்வளிக்கும்
என்று அவள் வளர்ப்பதில்லை
பிள்ளை வாழ்வு மனமெண்ணி
பெருங் கனவே கண்டுநிற்பாள்  !

கவலை  எல்லாம்  உள்வாங்கி
கண்  நீரால்  கரைத்திடுவாள்
கடும் பசியே வந்திடினும்
காட்டாமல் அவள் இருப்பாள்
சுடு சொற்கள் கேட்டாலும்
சுகம் என்றே எடுத்துநிற்பாள்
சொர்க்கம் என நினைத்தவளும்
நரகமதை சுமந்து நிற்பாள் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *