நா. கணேசன்

 

இந்த வார வல்லமையாளராக ‘சிவசிவா’ வி. சுப்பிரமணியன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

’தமிழும், சைவமும் நமதிரு கண்கள்’ என்றார்  யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ ஆறுமுக நாவலர். விவிலியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் வாழ்வின் முதல் பாகத்தில் ஐரோப்பியரிடம் பணியாற்றிய பின்னர், உரைநடை எழுதுவதற்கான பயிற்சியைப் பெற்று, சைவ சமயத்தினையும், தமிழ் இலக்கண நூல்களையும் நல்ல உரைநடையில் நாவலர் பெருமான் தமிழுக்குத் தந்தார். நல்ல அச்சகங்களும், பள்ளிகளும் அமைத்தார். இலங்கைத் தீவில் நாவலரின் தொண்டினால், சைவம் பிழைத்தது, இந்தியாவுக்கு வெளியே நாவலர் வழியில் சிவத்தொண்டு செய்வோர் பலராவர்.

இந்நாளில், மரபுக் கவிதை இயற்றும் பயிற்சி குறைந்துகொண்டு வருகிறது. மரபுச் செய்யுள் இலக்கணத்தைக் கற்று, ஐயங்களைக் களைந்துகொள்ள நல்ல குழுமமாக ‘சந்தவசந்தம்’ குழு பல ஆண்டுகளாக இயங்கிவருகிறது. கவிமாமணி இலந்தை சு. இராமசாமி, அதன் தலைவர். அக்குழுவில் ஏராளமான சைவபரமான, திருமுறைகளை ஒத்த பாடல்களை இயற்றி அளிப்பவர், ‘சிவசிவா’ சுப்பிரமணியன் ஆவர். இவர் பொறியியலும், பின்னர் மேலாண்மைப் பட்டமும் (MBA, IIM) பெற்று நியூ ஜெர்சியில் பல ஆண்டுகளாகக் கணித்தொழில் நுட்பத் துறையில் பணி செய்து வருகிறார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிவ சிந்தனையில் மரபுச் செய்யுள்களைச் செய்து தருகிறார். அவரது வலைத்தளம்: http://madhisudi.blogspot.com .

ஏராளமான விருத்தங்களும், நிறையத் திருப்புகழை ஒத்த சந்தப் பாட்டுகளும், சில அந்தாதிகளும் இயற்றியுள்ளார். யாப்பிலக்கணத்திலும், சைவம் பற்றியும் கேள்விகள் கேட்டால் ஆழ்ந்த அறிவுபூர்வமான விடைகளை அளிக்கும் விடையவன், இந்த வார வல்லமையாளர்.

இந்த வாரத்தில் மூவலூர் மீது விருத்தங்கள் எழுதிவருகிறார். எடுத்துக்காட்டாக,

காவலிங் காரெனக் கவல்வது நீங்கிடக் கருது நெஞ்சே
சேவலங் கொடியுடைச் சேந்தனைப் பெற்றவன் செருந்தி கொக்கின்
தூவலும் சூடிய தூயவன் இமையவர் துயர மாற
மூவரண் எய்தவன் முக்கணன் மேவிய மூவ லூரே

நகைச்சுவையாக,

சிவனுக்கும் இட்டலிக்கும் சிலேடை:

பொடியோடும் சேருமே பொங்குமா மேலும்
வடிவாகும் ஒத்திருக்கும் பூவை அடிமேலே
ஆகுமே ஆவியுள் நிற்குமே இட்டலி
ஆகுலம்தீர் ஈசன் அறி.

ஏழை என்ற சொல்லை வைத்த மடக்கணிச் செய்யுள்:

ஏழை மனமே! இறைஞ்சி அடிதொழாய்!
ஏழை பணக்காரன் என்னாமல் ஏழை
இடமிருக்கும் எம்பெருமான் வந்தருள்வான் விண்ணில்
இடமிருக்கும் இங்குமுண்டு இன்பு!

தமிழர்களிடையே என்றும் பெருஞ்சமயமாய் சைவம் இலங்குகிறது. 1500 ஆண்டுகளுக்கும் மேலாக, பக்தி இலக்கியம் பிரவாகமாய் தமிழ் இலக்கியங்களில் உருவாகியுள்ளது. அம்மரபின் தொடர்ச்சிக்கு, இந்தக் கணினி இணையக் காலத்தில் ‘சிவசிவா’ சுப்பிரமணியன் போன்றோர் உதவுகிறனர். சிவசிவாவைப் பாராட்டி மகிழ்கிறோம். அவருடனும் ஏனை சந்தவசந்தக் கவிகளிடமும் மரபுக்கவிதை கற்க வாருங்கள் என அன்புடன் அழைக்கிறோம்.

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர் (271)

  1. இந்த வார வல்லமையாளராக ‘சிவசிவா’ வி. சுப்பிரமணியன் அவர்களை
    தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. மரபுக்கவிதைகள் பல அவருடையது வாசித்து பிரமித்திருக்கிறேன்! வல்லமை மிகுந்த தமிழ் இலக்கணம் அறிந்தவர், நல்ல பண்பாளர், நகைச்சுவை உணர்வும் கொண்டவர்! ஆகவே இந்த விருதுக்கு உரியவராகும் அவருக்கு என் இதயபூர்வமான பாராட்டுக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *