-முனைவர் த. மகாலெட்சுமி

பக்தி நூலான திருமந்திரம் சைவ ஆகமம் என்று போற்றப்படும் பெருமையினை உடையதாகும். இந்நூல் இறைவனைத் துதி செய்வதோடு நில்லாமல் பதி பசு பாசம் என்பனவற்றின் இணைப்பையும் உயர்ந்த முறையில் வாழ்வாங்கு வாழ உதவும் நல்முறைகளை விளக்கியும் நல் வாழ்க்கையின் வழிகாட்டியாகவும் சாத்திர நூலாகவும் விளங்குகிறது. பண்டைய பாரத சித்தர்கள் கூறிய மனித வளர்ச்சிக்கு உகந்த யோகம் தியானம் குண்டலினி யோகம் மருத்துவம் நல்ஒழுக்கம் போன்றவற்றை விளக்கும் அரிய நூலாகும் இது. அரிய பொருளை எளிய சொற்களால் அனைவரது உள்ளத்திலும் பதியும்படிக் கூறுதல் திருமூலரின் சிறப்பு இயல்பாக அமைந்துள்ளது. திருமந்திரம் பக்திப் பிரபாவத்தில் ஆரம்பித்தாலும், அடுத்து உபதேசம், தத்துவம், யோகம், தியானம், சக்கரம், ஞானம் என்று பல செய்திகளைப் பற்றிப் பேசுகிறது. அன்பில்லாதவன் கடவுளை அறிய முடியாது. ஏனென்றால் அன்புதான் கடவுள். “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார், அன்பே சிவமாவது ஆரும் அறிகிலர்” என்பது நம் திருமூலர் திருமந்திரமாகும். இவற்றுள் திருமூலரின் வாழ்வியல் நெறிகளைச் சுருக்கமாகக் காண்போம்.

திருமூலரின் பொதுநெறி

திருமூலர் பெருமான் “ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்…” என்று பாடி பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சமுதாயத்திற்கு வேண்டிய நல்லிணக்கச் செய்திகளைத் திருமந்திரத்தில் அழகாக விளக்கியிருக்கிறார். ஆன்மிகம், மருத்துவம், விஞ்ஞானம், தத்துவம், உளவியல் எனத் திருமூலர் தொடாத துறைகளே இல்லை. திருமூலர் இயற்றிய மூவாயிரம் பாடல்களைக் கொண்ட திருமந்திர பாடல்களே இதற்குச் சான்று பகர்கிறது.

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.           (ஔவையார், நல்வழி 40)

திருவள்ளுவத் தேவர் இயற்றிய திருக்குறளும், திருநான்மறை எனப் போற்றப்படும், ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களின் முடிபும், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரத் தமிழும், மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார், திருவாசகம் ஆகியனவும், திருமூலர் வாக்காகிய திருமந்திரமும் சொல்லும் கருத்துக்கள் எல்லாம் ஒன்றே என்று உணர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஔவையார் கூற்றே திருமந்திரத்தின் சிறப்புக்கு  மிகச் சிறந்த சான்றாகும். திருமந்திரம் சைவ சமயத்திற்கு மட்டும் உரிய ஒரு சமய நூலாக அமையாது, உலக மக்களுக்கெல்லாம் அறத்தையும், ஆன்மிகத்தையும், மருத்துவத்தையும் வாழ்வியல் நெறிகளையும் எடுத்துரைக்கும் அரும்பெரும் களஞ்சியமாக விளங்குகிறது.

மனதே கோயில்

கடவுளை அறிவதற்கும் அடைவதற்கும் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அக வழிபாடு, மற்றொன்று புற வழிபாடு. இதில் அக வழிபாடு தியானம் அதாவது தவம், அதேபோலப் புற வழிபாடு பூஜை, தொண்டு ஆகியவைதான். உள்ளம் பெருங்கோயில் எனக்கூறிய ஆன்மநேய அருட்கவி திருமூலர். கடவுள் வெளியே இல்லை உன் உள்ளேயும் இருக்கிறார் என்பது தான் கடவுள் பற்றிய இவரது ஒற்றை வரிக் கண்டுபிடிப்பாகும்.  இதைத்தான் அகம்பிரம்மா என்று வேதம் கூறுகிறது. எனவே உள்ளத்தில் அன்பு இல்லாமல் கூடைகூடையாய்க் கோயிலுக்கு இலட்சார்ச்சனை செய்வதை விட, உள்ளன்போடு கடவுளை வணங்கினாலே போதுமானதாகும். இதனைத் திருமூலர்,

அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
என்போன் மணியினை எய்த ஒண்ணாதே  (திருமந்திரம் 272)

உள்மனம் குழைந்து அவனை வணங்கிச் சரணடைய வேண்டும். அப்போதுதான் ஒப்பற்ற மணியாகிய அவனது திருவருள் உங்களுக்குக் கிடைக்கும். அதேபோன்று விண்வெளியையும், கோள்களையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் நவீன வாழ்க்கை முறையில் முதலில் தன்னை யார் என்பதை அறிந்தகொள்ள யாரும் முற்படுவதில்லை. எனவே முதலில் உன்னை நீயே அறிந்துகொள், அப்படி அறிந்துகொண்டால், அனைத்தும் அறியலாம் என்கிறார் திருமூலர். இச்செய்தியை,

என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்
என்னை அறிந்தபின் ஏதும்  அறிந்திலேன்   (திருமந்திரம் 2366)

என்ற பாட்டில் சுட்டுகிறார்.

ஆன்மிக விஞ்ஞானம்

திருமூலரின் தன் பார்வையில் ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றாகக் காண்கிறார். ஆன்மிகத்தால் தான்பெற்ற அறிவியல் கருத்துக்களை விதைத்தார். குறிப்பாக மருத்துவ அறிவியலுக்கு முன்னோட்டமாகப் பல வியத்தகு அறிவியல் அற்புதங்களை விளக்குவதாக உள்ளன. திருமந்திரம் இரண்டாம் தந்திரத்தில் ‘கரு உற்பத்தி’ எனும் தலைப்பில் உள்ள 41 பாடல்களை  இன்றைய மகப்பேறு குறித்தும் பாடியுள்ளார். சேர்க்கையின்போது, பெண் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் குழந்தை மந்தனாகப் பிறக்கும். சிறுநீர் தேங்கியிருந்தால், ஊமைக் குழந்தையும் இரண்டுமே இருந்தால் குழந்தை குருடாகவும் பிறக்கும் என்று 481-ஆம் பாடலில் சொல்கிறார் திருமூலர். எனவே சேர்க்கையின்போது தூய்மையுடனும் உயர் எண்ணங்களுடனும் தம்பதிகள் இருந்தால் நல்ல குழந்தை உருவாகும் என்பது திருமூலரின் திருவாக்கு.

எல்லா உயிர்களையும் நேசி!

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதுஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்உரை தானே 
 (திருமந்திரம் 252)

உலகில் எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும். பசுவுக்குப் புல் தருவது, ஏழைக்கு ஒரு கவளம் உணவு தருவது, துன்பத்தில் உள்ளவருக்கு ஆறுதல் சொல்வது, பெற்றோரைக் காப்பது, மற்றவருக்கு உதவுவது ஆகியன தர்மங்கள் என்கிறார் திருமூலர். ஆதலால், நாம் திருமந்திரம் காட்டும் வழிப்படி தர்மங்கள் செய்வோம்;  பொல்லாப் பிணியும், சொல்லொணா துயரங்களும் இல்லாத வாழ்வை பெற்று மகிழ்வோம்.

ஆற்றரு நோய்மிக்கு அவனிமழை இன்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்று உதைத்தான் திருக்கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே        (திருமந்திரம் 517)

சிவாலயங்களில் பூசைகள் குறைந்தால் நோய் மிகும், மழை குறையும், மன்னர் கெடுவர் என்கிறார் திருமூலர். திருக்கோயிலை முன்னோர்கள் பக்தியுடன் கட்டினர். அதற்குப் பலகோடி சொத்துக்களையும் தந்தனர். ஆனால் அந்தச் சொத்துகளை இன்றைய மக்கள் அபகரித்து வாழ்கிறார்கள். கோயில்களை வியாபார நோக்கில் செயல்படும் மையங்களாக மாற்றி வருகிறார்கள். அதனால்தான் வளம்குன்றி மழையை இழந்தோம்; துயரங்களை அனுபவிக்கிறோம். அதேபோன்று மனிதன் இயற்கையைக் கடவுளாக வணங்கியவரை அதுவும் இயல்பாக உதவியது. இன்று இயற்கையை அழித்து, மாசுபடுத்துவதால் இயற்கைப் பேரிடர்கள் உருவாகின்றன. எனவே ஆலய பூசைகளை முறைப்படிசெய்து மழை பெறுவோம்.

அன்பே சிவமயம்

திருமந்திரம் நூலானது ஆகமத்தின் சாரமாக அமைந்திருந்தாலும் அனைவரும் அறியக்கூடிய எளிமையும் இனிமையும் உடைய பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.  ‘அன்பே சிவம்’ என்ற தொடரைப் பலரும் அறிவோம். மனிதர்கள் ஏனைய மனிதர்கள்பால் செலுத்தும் அன்பில்தான் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உலகத்தில் தோன்றிய கடவுள் சார்புடைய மதங்களும், கடவுள் மறுப்புச் சமயங்களும் கூட அன்பினைப் பெரிதும் போற்றியே உரைக்கின்றன. இதைதான் நீங்கள் பிறர் மீது அன்பு செலுத்தினால் இறைவன் உங்கள் மேல் அன்பு செலுத்துவார் என்று திருமூலரும் வலியுறுத்தியிருப்பதைக் காணமுடிகிறது.

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவம்ஆவது ஆரும் அறிகிலார் (திருமந்திரம் 270)

உடல்நலத்தின் அவசியம்

மானிடனுக்கு உடம்பு இல்லாமல் எந்தச் செயலையும் செய்ய முடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும், எனவே இன்றய காலகட்டத்தில் உடலினைப் பேணிப் பாதுகாப்பது என்பது மிக அவசியமானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. உடலினைப் பேணி பாதுகாப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை திருமந்திரம் அழகாகக் குறிப்பிடுகிறது.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.    (திருமந்திரம்724)

தேகமான உடல் அழிந்தால் உயிர் அழிவதுடன் அறிவும் வளராது எனவே உடலை வளர்க்கும் முறையை அறிந்து, உடலை வளர்த்து உயிரையும் வளர்த்தேன் என்கிறது திருமந்திரம்.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. (திருமந்திரம் 725)

இப்பாடலில் உடலினை இழுக்கென்றிருந்தேன், பிறகு அதனில் கடவுள் கோயில் கொண்டுள்ளார் என்பதைப் புரிந்துகொண்டு உடலைப் பாதுகாத்தேன் என்கிறார். நாம் ஒவ்வொருவரும் உடலினை பேணிப் பாதுகாத்து பயனுற வேண்டும். அவ்வாறு உடலையும் மனதையும் பேணிப்பாதுகாக்கத் திருமூலர் காட்டிய வழி அஷ்டாங்க யோகம் எனப்படுகிறது.

அஷ்டாங்க யோகம்

அஷ்டாங்கம் என்றால் அஷ்டாங்க (அஷ்ட + அங்க) என்பது எட்டு வகையான படிகள் (பகுதிகள்) என எளிமையாகக் கூறலாம். திருமூலர் காட்டிய எளிய வழி அஷ்டாங்க யோகம். ஒரு பாடலில் திருமூலர் “யோக விசேடமே அட்டாங்க யோகமாம்”  என்கிறார். பதஞ்சலி முனிவர் இயற்றிய யோக சாத்திரத்தில் அத்யாயம் இரண்டு, ஸ்லோகம் இருபத்தி ஒன்பதில் அஷ்டாங்க யோகத்தை பற்றி எடுத்துரைக்கக் காணலாம். திருமூலரும் பதஞ்சலி முனிவரும் கூறிய அஷ்டாங்க யோகத்தைக் கீழே சுட்டக் காணலாம்.

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம் பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே. (திருமந்திரம் 552)

அவை முறையே வருமாறு

  1. இயமம் : தவிர்க்கப்பட வேண்டியவை
  2. நியமம் : பின்பற்றப்பட வேண்டியவை
  3. ஆசனம் : இருக்கை
  4. பிராணாயாமம் : மூச்சுப் பயிற்சி
  5. பிரத்தியாகாரம் : மனதை புலன் வழி நாட்டத்திலிருந்து திருப்புதல்
  6. தாரணை : மனதை ஒருமுகப்படுத்துதல்
  7. தியானம் : மனதை ஒரே சிந்தனையில் நிலைநிறுத்துதல்
    8. சமாதி : ஆழ் நிலை தியானம்

இவற்றில் முதல் ஐந்தும் உடலும், மனமும் சம்பந்தப்பட்டவை எனவே இதை பகிரங்க யோகம் என்றும், அடுத்த மூன்றும் மனமும், ஞானமும் சம்பந்தப்பட்டவை எனவே அதை அந்தரங்க யோகம் என்றும் குறிப்பிடக் காணலாம்.

மேற்கூறிய எட்டு நிலைகளையும் படிப்படியாகக் கற்று முக்திஅடைய வேண்டும் என்பது நம் முன்னோர்களின் விருப்பம். இன்றைய காலகட்டத்தில் நம்மால் எந்த அளவுக்கு கடைப்பிடிக்க முடியுமோ அந்த அளவுக்குக் கடைப்பிடிக்க வேண்டும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை “முயற்சி என்பது முடிந்தவரை செய்வதல்ல; முடியும்வரை செய்வதே” எனவே முயற்சி செய்து முன்னேற்றம் அடைய வேண்டும்.

இக்கட்டுரையில் குறிப்பிட்ட செய்திகள் யாவும் திருமூலரின் இனிய வாழ்வியல் நெறிகளை விளக்குவனவாக அமைந்தன. தற்கால விஞ்ஞான முன்னேற்றத்தால் நமக்கு பல அரிய நூல்களும், விளக்க உரைகளும் எளிதில் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தி யோகத்தின் வழி வாழ்க்கை நடத்த இறைவன் நமக்கு உதவி புரிவான். யோகத்தின் வழி வாழ்க்கை வாழ்ந்தால் நம் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருப்பதுடன் சமுதாயத்தில் அமைதியும், சாந்தமும் நிலவும்.

*****

கருவிநூற்கள்

  1. திருமந்திரம் மூலமும் உரையும் (2010), ராமையா பதிப்பகம், சென்னை
  2. பண்பாட்டுப் பார்வையில் திருமந்திரம் (2009), முனைவர் சுடலி தியாகராசன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி, சென்னை
  3. திருமந்திரம் விரிவுரை (2012), ஜி.வரதராஜன், பழனியப்பா பிரதர்ஸ் சென்னை

*****

கட்டுரையாளர் – முனைவர்பட்ட மேலாய்வாளர்(யு.ஜி.சி.)
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை – 113
drmaha08@gmail.com, பேசி.9629208408

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *