நா. கணேசன்

இந்த வார வல்லமையாளராகத்  திரு. கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப.  அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது.

டெக்ஸாஸ் மாநிலம் டல்லாஸ் நகரில் பெட்னா திருவிழா கோலாகலமாக நிகழ்ந்தது. பல முக்கிய பிரமுகர்கள் தமிழ்நாட்டில் இருந்துவந்து கலந்துகொண்டனர். என்றுமில்லா வகையில் 5000 பேர்கள் பங்கேற்பு.

இந்திய வரலாற்றில் தமிழின் ஆழமான பங்கு வியத்தற்குரியது. இந்தியப் பல்கலைகளில் மட்டுமன்றி மேலை உலகத்திலும், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் உயராய்வுகள் இத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை ஊக்குவிக்குமுகமாக, பேராசிரியர் பதவிகள் நல்ல பல்கலைகளில் ஏற்பட்டுவருகின்றன. பெர்க்கிலியிலும், ஹார்வர்டிலும் நிறுவப்பட்ட தமிழ்ப் பீடம் போல, தென் மாநிலம் ஆகிய டெக்சாஸின் பெருநகர் ஹூஸ்டன் பல்கலையிலும் தமிழ்ப்பீடம் அமைக்க இருப்பதற்கான முயற்சித் தொடக்கத்தை ‘சாம்’ சொ. கண்ணப்பன் அறிவித்தார். முனைவர் நா. கணேசன் “தமிழ்த்தாய் கொலுவிருக்கும் கல்விச்சாலைகள் எங்குமிருக்கலாம். ஆனால் அவ்வன்னையின் திசை தென்திசை. அங்கே ஹூஸ்டனில் தமிழ்த்தாய் அமர்ந்து ஆய்வுகளை அலங்கரிக்க உதவுங்கள்” என்றார்.

மேலைநாடுகளில் 20+ தமிழ்ப் பீடங்கள் உயர்பல்கலைக் கழகங்களில் அமையும்போழ்து தமிழகப் பேராசிரியன்மார் வந்து ஆய்வுகளைக் கற்பிக்கவும், கற்கவும் வாய்ப்பு ஏற்படும்; அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவில் பிறக்கும் தமிழ் வமிசாவளியினர் தமிழ், திராவிட மொழியியல், கலாச்சாரம், தொல்லியல், கலைவரலாறு, மாந்தவியல், சமூகவியல், நிகழ்த்துகலைகள்… எனப் பல்வேறு துறைகளில் பேராசிரியர்களாய் புதிய பார்வை தரும் நூல்களை வாழையடி வாழையென வருங்காலத் தலைமுறையினர் எழுதத் துணை செய்யும். அமெரிக்க இளந்தமிழர்:

இவற்றை எல்லாம் உணர்ந்தே மனோன்மணீயம் பெ. சுந்தரனார் மேற்குலக – கிழக்குலக ஆய்வுகள் காரணமாகத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடித் தந்தார். இன்று தமிழ்நாட்டிலும், அரசாங்க விழாக்களிலும் உலகெங்கும் தமிழ்ப் பள்ளிகளிலும், தமிழ் மன்றங்களிலும் எந்த நிகழ்ச்சி ஆனாலும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தான் தொடங்குகிறது.

பெட்னா திருவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து:

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

இந்த வார வல்லமையாளர்: திரு. கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப (I.A.S)

ஃபெட்னா விழாவில் அனைவர் மனத்தையும் கவர்ந்தது இந்திய ஆட்சியாளர் பதவியில் மேற்கு வங்கத்தில் பணியாற்றிய கோ. பாலச்சந்திரன். இனிமையாகப் பழகும் அவர் தமிழ்மரபில் ஆழங்கால் பட்டவர்.  சிவகாசியைச் சார்ந்த இவர் ஹார்வர்ட் தமிழ்ப்பீடத்திற்கு அமெரிக்க டாலர் 50000-க்கு மேல் நன்கொடை அளித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பாலச்சந்திரன் சொற்பொழிவுகளை யுட்யூப் போன்ற தளங்களில் கேட்டு மகிழலாம். https://www.youtube.com/watch?v=ciS3Rg3XI5A&

ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்துக்குச் சிறப்பு விருந்தினராக இந்த வாரம் திரு. பாலச்சந்திரனை அழைத்தோம். “அற்றைத் தமிழர் நோக்கும், இற்றைத் தமிழர் போக்கும்” என்ற தலைப்பில் அருமையான உரையாற்றினார். பின்னர், ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் $-ல் தமிழ்ப் பல்கலை அமைக்கும் பூர்வாங்கக் கூட்டத்தில் பல்கலை உயர் அதிகாரிகள், Academic Dean Dr. Tillis போன்றவர்களோடு பேசக் கலந்துகொண்டார். பியர்லாந்து நகர மேயர், டாம் ரீட் கலந்துகொண்டு பட்டயம் வழங்கிச் சிறப்பித்தார்.

தமிழ் தொடர்பான, அதன் ஆய்வுகள் கல்வி உலகிலும், இணைய உலகிலும் வேரூன்ற திரு கோ. பாலச்சந்திரன், இ.ஆ.ப. என்றும் உதவ வேண்டும் என வாழ்த்தி அன்னாரை இந்த வார வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமை மின்னிதழ் பெருமை அடைகிறது.

(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *