உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து      

மட்பகையின் மாணத் தெறும்.                                                

       -திருக்குறள் -883(உட்பகை)

 

புதுக் கவிதையில்…

 

வாழ்வுதனில்

தற்காத்துக்கொள்ள வேண்டும்,

உட்பகைக்கு அஞ்சி..

 

இல்லையெனில்

அது

அறுத்தழித்துவிடும்

மண்பாண்டம் அறுக்கும்

கருவிபோல…!

 

குறும்பாவில்…

 

மண்பாண்டமறுக்கும் கருவிபோல்          

அறுத்தழிக்கும் வாழ்வை, உட்பகைக்கு 

அஞ்சித் தற்காத்துக்கொள்ளாவிடில்…!

 

மரபுக் கவிதையில்…

 

உடனிருந் தழிக்கும் உட்பகையை

     உணர்ந்தே யஞ்சி யதுவாழ்வில்

இடரது யேதும் தந்திடாமல்

     இயல்பாய்த் தற்காத் திடல்வேண்டும்,

தொடர்ந்திடும் பகையிது அறுத்தழிக்கும்

     தூய தாம்நல் வாழ்வினையே,

குடமதில் மண்ணை அறுத்தெடுக்கக்

     குயவன் கைக்கொளும் கருவிபோலே…!

 

லிமரைக்கூ..

 

தற்காத்திடு உட்பகைக்கு அஞ்சி,    

மண்பாண்டமறுக்கும் கருவியாய் அறுத்தழிக்கும்             

அதுவே வாழ்வினில் மிஞ்சி…!

 

கிராமிய பாணியில்…

 

கொடியது கொடியது உட்பகதான்

கூடயிருந்தே கெடுக்கும் உட்பகதான்..

 

தற்காத்துக்கோ தற்காத்துக்கோ

உட்பகக்கிப் பயந்து

ஒன்ன நல்லாத் தற்காத்துக்கோ..

 

இல்லயிண்ணா அது

பச்சமண்ணு பானய அறுக்கும்

அருவாபோல அழிச்சிப்புடும்

வாழ்க்கயயே அழிச்சிப்புடும்..

 

அதால

கொடியது கொடியது உட்பகதான்

கூடயிருந்தே கெடுக்கும் உட்பகதான்..!

 

-செண்பக ஜெகதீசன்…

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *