ஆகச்சிறந்த ஆன்மாவிற்கு புகழஞ்சலி!

1

முன்னாள் பிரதமர், உயர்திரு அதல் பிகாரி வாஜ்பாயி, தமது 93ஆம் அகவையில், இன்று (16/8/2018) மாலை 5 மணிக்கு இயற்கை எய்தினார். தேசிய சனநாயகக் கூட்டணி அரசின் பிரதமராக, 1999 முதல் 2004 வரை கடமையாற்றிய காலத்தில், இந்தியா சந்தித்த பல சோதனைகளை மிகத் திறம்பட நிர்வகித்த பெருமைக்குரிய ஒப்பற்ற அரசியல்வாதி. இவற்றுள் பொக்ரான்-2 அணு பரிசோதனை, பாக்கித்தானுடனான கார்கில் யுத்த வெற்றி, போன்றவை குறிப்பிடத் தக்கவை !

ஆகச்சிறந்த கவிஞரான திரு வாஜ்பாய் , ஆங்கிலத்திலும், இந்தியிலும் அற்புதமாகக் கட்டுரை வடிக்கவும், சொற்பொழிவாற்றும் திறனும் படைத்தவர். 2014 ஆம் ஆண்டில் பாரத ரத்னா பட்டம் பெற்றவர். 40 ஆண்டுகள் நடுவண் அரசின் அரசியலில் பங்கு பெற்று, 10 முறைகள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2 முறைகள் மேலவை உறுப்பினராகவும் 3 முறைகள் பிரதமராகவும் சேவை புரிந்தவர். நாடாளுமன்றத்தில் இவருடைய நேர்மறையான, ஆணித்தரமான விவாதங்கள் பலராலும் வரவேற்கப்பட்டன. வாஜ்பாய் கொண்டுவந்த தங்க நாற்கரம் சாலைத் திட்டம் போற்றத்தக்கது!

எதிர்கட்சித் தலைவர்களையும் பேதமின்றி அவர்தம் நற்செயல்களை உளமார பாராட்டக்கூடிய பண்பாடு மிகுந்தவர். அதேபோன்று வன்மையான பேச்சிலும், எழுத்திலும் எதிராளிகளை நிலை குலையச் செய்யும் வித்தகர். மிகச்சிறந்த நகைச்சுவையாளரும் கூட ! ஐ.நா.விலும், நமது நாடாளுமன்றத்திலும் திருக்குறளையும், பாரதியாரின் பாடல்களையும் தமிழில் அழகாக எடுத்துரைத்தவர். அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், அவர்தம் குடும்பத்தினரும், நண்பர்களும், கட்சியினரும் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல எம் இறையை பிரார்த்திக்க்கிறோம். இந்திய வரலாற்றில் நிலையான இடம் பிடித்த அவர்தம் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆகச்சிறந்த ஆன்மாவிற்கு புகழஞ்சலி!

  1. இன்றைய ஆட்சியாளர்கள் இவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *