-மேகலா இராமமூர்த்தி

வாழ்விலே நாம் வறுமை என்று கருதுவது பொருளின்மையை. ஆனால் அறிவில் குறைவுபட்டுப் போதலே உண்மையான வறுமை என்கிறது நாலடியார். ஏனெனில் ஒருவன் தன் அறிவின் திறங்கொண்டு எதனையும் சாதிக்கலாம்; எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் பேதையோ கைப்பொருளையும் தொலைத்துவிட்டுக் கலங்கிநிற்பான்.

இளமைக் காலத்தில் தன் தந்தை ‘படி’ என்று இடித்துக் கூற, அதனை ஒரு நற்சொல் என்று ஏற்காமல் இகழ்ந்து கல்லாது விட்டவன், பின்பொருகால், எழுத்தெழுதிய கடிதமொன்றைப் பலர் முன்னிலையில் ஒருவர் இதனைப் படியுமென்று மெல்லத் தன் கையிற் கொடுக்கத் தனக்கு அது இயலாமையால் நாணத்தாற் சினந்து கூவி அவமானத்தால் ஓவென்று அழுதுவிடுவான் என்று கல்லாப் பேதையின் நிலையினை விளக்குகின்றது நாலடி.

கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன் – மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா
வழுக்கோலைக் கொண்டு விடும். 
(நாலடி – 253)

அறிவின்மை பலர் முன்னிலையில் மானக் குறைவைத் தருமாகையால் மாந்தர் கல்வியறிவு பெறுதல் வேண்டற்பாலது.

பொதுவாகக் கற்றுத்தெளிந்த நாவன்மையினையுடைய அறிஞர்கள் ஏதேனும் பிழைகள் ஏற்பட்டுவிடக்கூடுமோ என்று அஞ்சி மிகுதியாகப் பேசமாட்டார்கள். ஆனால், கற்றறிவில்லா ஏனையோர் சொற்குற்றம் பொருட்குற்றம் நேர்வதற்கு அஞ்சாமல் ஏதேனும் பேசிக்கொண்டே இருப்பர். இஃது, பனைமரத்தில் நீர்வற்றிய உலர்ந்த ஓலை எப்போதும் கலகலவென்று ஓசையிட்டபடியிருக்க நீர்ப்பசையோடு கூடிய பச்சை ஓலையோ எவ்வித ஆரவார ஒலியும் எழுப்பாமலிருக்கும் நிலையை ஒத்தது.

கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி
மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல்
வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும்
பச்சோலைக் கில்லை யொலி. 
(நாலடி – 256)

”நிறைகுடம் தளும்பாது; குறைகுடம் கூத்தாடும்” என்று மக்கள் சொல்வதும் இதனையே.

சொல்லின் தொகையறிந்த தூய அறிஞர்கள், கற்றோர் அவையில் பேசப்புகுமுன், அவையின் தன்மையறிந்து, ஆராய்ந்து சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்று வள்ளுவர் கூறியிருப்பது ஈண்டு சிந்திக்கற்பாலது. 

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
(குறள் – 711)
 

தரமறிந்து பயன்கொள்ளும் வகையறியாத இழிகுணங்கொண்ட பேதையர், தேன்சொரிந்து இனிது மணந்தாலும் மலரை உண்ணுதற்குச் செல்லாமல் இழிந்த பொருள்களையே விரும்பும் ஈயைப்போல், தகுதியுடையார் வாயினின்று வரும் இனிமை பொருந்திய தெளிந்த அறிவுரைகளின் பயனை நுகரமாட்டார்கள் என்கிறது நாலடியார்.

பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது
இழிந்தவை காமுறூஉம் ஈப்போல் இழிந்தவை
தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த்
தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு.  
(நாலடி – 259)

என்ன செய்வது…? அவரவர் தரத்திற்கும் அறிவுக்கும் ஏற்பவே இரசனையும் சுவையும் அமைகின்றது. அத்தகையோரை மாற்றுதல் மிகக் கடினம்!

மனிதவாழ்வில் நாம் கண்கூடாகப் பார்க்கின்ற இன்னோர் அதிசயம் கீழோரிடம் செல்வம் நிறைந்திருப்பதும், மேலோர் வறுமையில் வாடுதலும்.

இத்தகைய கீழோரிடம் இருக்கும் செல்வம் சா(ய்)க்கடையில் கொட்டிக்கிடக்கும் மூவா மருந்தாகிய அமிழ்தத்தைப் போலப் பிறருக்குப் பயன்தரா ஒன்றாகவே இருக்கும். அந்தப் பயனில் செல்வத்தை யாரும் நயக்கவும் மாட்டார்கள்.

பலவாக நிறைந்த அலைகளையுடைய கடற்கரையில் தாம் தங்கியிருந்தாலும், வலிதின் நீருறுதலுடைய உவர்ப்பில்லாத கிணற்றைத் தேடிச்சென்றுதான் மக்கள் நீர் பருகுவர்; அதுபோல் கீழ்மக்கள் அருகிலேயே மிகுந்த செல்வத்தோடு இருப்பினும் தக்கோரின் பொருள் விருப்பம் மிகத் தொலைவு சென்றும் உதவுவார் கண்ணதேயாகும் என்பது பின்வரும் நாலடியார் நவிலும் நற்கருத்து.

மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும்
வல்லூற் றுவரில் கிணற்றின்கட் சென்றுண்பர்
செல்வம் பெரிதுடைய ராயினும் சேட்சென்றும்
நல்குவார் கட்டே நசை.    
(நாலடி – 263)
 

இதே கருத்தைக் கழைதின் யானையார் எனும் புலவர் பெருந்தகையும் புறப்பாட்டொன்றில் சிறப்பாய் விளக்கியிருப்பதை இங்கே எண்ணி மகிழலாம்.

”…தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணா ராகுப நீர்வேட் டோரே
ஆவு மாவுஞ் சென்றுணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கி னதர்பல வாகும்…”
  (புறம் – 204)

”கடல் நாற்புறமுஞ் சூழ்ந்து பொருந்தியிருக்கும் இவ்வுலகத்தில் நல்வினை என்பது தனி நிலைமையுடையதாயிருக்கின்றது. ஏனெனில், நல்லனவற்றை உணர்ந்தொழுகும் உயர்ந்தோர் வளமின்றியிருக்க, அவ்வுணர்வொழுக்கமில்லாரான கறிமுள்ளியுங் கத்தரியும் போன்ற கீழோர், பட்டும் உயர்ந்த ஆடைகளும் உடுத்துக்கொண்டு வளமாக வாழ்கின்றனர்” என்று நுண்ணறிவும் நூலறிவும் உடைய நாலடியின் ஆசிரியர்களே வியக்கின்றனர்.

புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே
உணர்வ துடையா ரிருப்ப – உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே
பட்டும் துகிலும் உடுத்து.  
(நாலடி -264)

இதே ஐயம் நம் ஐயன் திருவள்ளுவருக்கும் எழுந்ததால்தான்,

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்” என்று குறளெழுதினார்.

இதுபோல் விடைதெரியா வேறுபல் வினாக்களுக்கு ’வினைப்பயன்’ எனும் நம்பிக்கையே நம் மக்களுக்கு ஆறுதலளிக்க வருகின்றது.

உண்மையான கல்வியாளர் யார்? உண்மையான செல்வந்தர் யார்? என்பதற்கு மனங்கொளத்தக்க விளக்கங்களைத் தருகின்றது ஓர் நாலடியார்ப் பாடல். அதனைக் காண்போம்!

இயற்கையறிவில்லாதவர் நூல்களை ஓதினாராயினும் அவர் ஓதாதவரேயாவர் (கல்லாதவர்), இயற்கையறிவுடையார் நூல்களை ஓதாதிருந்தும் ஓதினாரோடொப்ப விளங்குவர் (கற்றவர்). வறுமையுற்றும், மனத்தூய்மையோடிருந்து பிறரை ஒன்று இரவாதவர் செல்வரேயாவர்; செல்வரும் பிறர்க்கு ஒன்று உதவாரென்றால் வறுமையாளரேயாவர்.

ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும்
ஓதி யனையார் உணர்வுடையார் – தூய்தாக
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார் செல்வரும்
நல்கூர்ந்தார் ஈயா ரெனின். 
(நாலடி – 270)

செல்வம் என்பது என்ன? ”அது சிந்தையின் நிறைவு” என்றார் குமரகுருபரர். அந்த நிறைவும், பிறருக்கு உதவும் உதார குணமும் இல்லாதவர்கள் மனவறுமை கொண்ட ஏழையரே என்று கொள்வதில் பிழையொன்றுமில்லை!

[தொடரும்]

*****

துணைநூல்கள்:

1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்
3. புறநானூறு மூலமும் உரையும் – ஔவை. சு. துரைசாமிப்பிள்ளை

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *