நீங்களே பறித்துக் கொள்ளுங்கள்!

0

பவள சங்கரி

அமெரிக்கா, அயோவா நகரத்தின் வடக்கே அமைந்துள்ள ஒரு யூ-பிக் – நீங்களே பறித்துக் கொள்ளுங்கள் – ஆப்பிள் பழத்தோட்டம் வில்சன் தான். பழைய ஓக் காடுகளால் சூழப்பட்ட இந்த பண்ணை, பள்ளத்தாக்கின் இரு பக்கங்களிலும், ராபீட் கிரீக் நிலத்தை சூழ்ந்துள்ளது.


வில்சன் ஆர்ச்சர்ட் ஐயோவா நகரில் ஒரு பெரிய பழத்தோட்டம். மிகப்பெரிய பரப்பளவில் பெரியவை, சிறியவை, பச்சை நிறங்கள், மஞ்சள் நிறங்கள் என பல வகையான ஆப்பிள்கள் விளைகின்றன. அதனோடு ஊடு பயிராக மஞ்சள் பூசணியும் விளைவிக்கிறார்கள். இந்த விவசாயத்தை இவர்கள் குடும்பத் தொழிலாக செய்கின்றனர். இங்கு அமெரிக்காவில் ஆப்பிள் தோட்டம் வைத்திருப்பவர்கள் ஆப்பிள் பிக்கிங், அதேபோல் ஸ்டிராபேர்ரி, செர்ரி பிக்கிங் என்றும் விவசாயிகளும் பொது மக்களும் சந்திக்கக்கூடிய நிலையை ஏற்படுத்துகின்றனர். தேன் சேமிப்பும், விற்பனையும் கூட உண்டு. இங்கு ஆப்பிள் பறிக்க வருபவர்களைக் கவரும் விதமாக ஆப்பிள் மூலம் தயாரிக்கக்கூடிய இரசாயணக் கலவை கலப்படமற்ற சுத்தமான ஆப்பிள் பழக்கூழ் மட்டுமல்லாமல் மற்றும் பல வகையான இனிப்புப் பண்டங்களையும் செய்து விற்கின்றனர். குறிப்பாக ஆப்பிள் ஜாம், டோ நட், பழ ரசம், ஆப்பிள் டர்ன் ஓவர், ஆப்பிள் – பை போன்றவைகள். அந்த பழத்தோட்டத்தை சுற்றிப்பார்க்க டிராக்டர் கூட உண்டு .. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, அனைத்துப் பணிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பிரித்துக்கொண்டு திறம்பட நிர்வாகம் செய்வது சிறப்பு. அமெரிக்க விவசாயிகள் இப்படி பொது மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு வர்த்தகம் செய்து சிறப்பாக வளர்ச்சியடைவது மகிழ்ச்சிக்குரியது ..

நமது விவசாயிகள் நம் அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் பொது மக்களோடு நேரடித் தொடர்பு ஏற்படும் வகையில் நம்ம ஊர் விளை பொருட்களாகிய கத்தரி, முருங்கை, தக்காளி, மற்ற பழங்கள் போன்றவைகளை இது போன்று பொது மக்கள் நேரடி கொள்முதல் செய்யும் வகையிலும் அதோடு இது போன்று சார்புடைய பொருட்களை தயார் செய்யும் தொழிலகமும் கூட்டுறவு முறையில் உற்பத்தியும், பொருளாக்கமும் செய்தால் நம் விவசாயிகளின் வாழ்க்கையும் எங்கோ உயர்ந்து நிற்க வழி வகையாக அமையுமே! தர்மபுரி, கிருட்டிணகிரி பகுதிகளில் வாழக்கூடிய நமது விவசாயிகள் மாம்பழத் தருணத்தில் இது போன்று பல வகைப் பொருட்களை தயார் செய்தும் விற்பனை செய்தால் எத்தனை இலாபம் சம்பாதிக்கலாம் .. விவசாயிகளின் பார்வையே மாறுபட்டு தொழிலதிபர்களாகவும் திகழலாம்! பொன் விளையும் பூமி என்று இதற்குத்தான் நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றார்களோ !

ஆப்பிள் தோட்டத்தில் வேண்டும் அளவு சாப்பிட்டுவிட்டு வரலாம். அதற்கு விலை இல்லை. கையில் எடுத்து வரும் பழங்களுக்கு மட்டும் விலையுண்டு. சீசனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரே விலைதான்.. அதனால்தானோ என்னவோ இங்கு விவசாயிகளின் வாழ்க்கை ஒரே சீராக நல்ல நிலையிலேயே இருக்கிறது. நம் ஊரில் தக்காளி ஒரு தருணத்தில் கிலோ 50 காசுகளுக்கும், விளைச்சல் குறையும் காலங்களில் 60 உரூபாய் கூட விற்கிறார்கள். இந்த முறை மாற்றம் அடைய வேண்டும். சந்தைப்படுத்தும் முறையில் பல தொழில்நுட்பங்களைப் புகுத்தி சிறப்படைய முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசு அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *