நிர்மலா ராகவன்

 

பணம்தானா எல்லாம்?

“ஏண்டா வேலைக்கு வருகிறோம் என்றிருக்கிறது,” என்று தினமும் சலித்துக்கொள்வாள் ஆசிரியையான சுசீல் கௌர். “வீட்டில் குழந்தைகளை அழ விட்டு, அப்படியாவது என்ன வேலை!”

“பின் ஏன் வருகிறாய்?” என்று நான் கேட்டபோது, “பணத்திற்காகத்தான். வேறென்ன!” என்ற பதில் வந்தது அவளிடமிருந்து.

வெவ்வேறு துறையில் இருப்பவர்களை இதே கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

`நீங்கள் ஏன் நடிக்க வந்தீர்கள்?’

`புகழ், பணம்!’ என்ற அந்தப் பிரபல நடிகை புகழும், பண வரவும் நிலைத்திருக்க கடுமையாக உழைக்கவேண்டும் என்றும் புரிந்து வைத்திருந்தார். அதனால் நினைத்தது கிடைத்தன. மகிழ்ச்சியும் உடன் வந்ததோ? தெரியவில்லை.

`ஏன் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தீர்கள் மேற்கல்விக்கு?’

`இந்த உத்தியோகத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம்?’

எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில்தான்: பணம்!

மன நிறைவுக்குப் பணம் மட்டும் போதுமா?

போதுமான ஊதியம் கிடைத்தாலும், தலைமை அதிகாரியின் அசிரத்தையான, அல்லது கொடுமையான போக்கால் சலிப்பு எழக்கூடும். எவ்வளவு திறம்பட உழைத்தாலும் பதவி உயர்வு கிட்டாது என்ற நிலை ஏற்படும்போது இயந்திரகதியில் வேலை பார்க்கத் தோன்றுமே! பணத்தால் அந்த வெறுமையை ஈடுசெய்ய முடியுமா?

பணத்தை மட்டுமே இலக்காக வைத்துக்கொண்டு செயல்படுபவர்களுக்கு எதிலும் பூரண திருப்தி கிடைப்பதில்லை.

`தந்தை பார்த்த பரம்பரை உத்தியோகம். அதனால் நானும் அதையே செய்ய வந்துவிட்டேன்!’ என்பவர்களுக்கு அத்துறையில் திறமை இருக்கலாம். ஆனால், ஆர்வமும் சேர்ந்திருக்க வேண்டாமா?

வேறு வழியில்லாது கிடைத்த வேலையில் நிலைத்திருக்க வேண்டியபோது, விரக்தி ஏற்பட்டுவிடுகிறது. என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்துதான் நாம் ஒவ்வொன்றையும் செய்கிறோம். இலக்கை மனதில் உறுதியாக வைத்துக்கொண்டால், எந்த இடர்பாடும் பெரிதாகத் தோன்றாது. பொழுதுபோக்குகளும் அவசியம்.

கோடீஸ்வரர்கள் கூறுகிறார்கள், “பணத்தைச் சம்பாதிக்கும்போது விளையாடுவதுபோல் சுவாரசியமாக இருக்கிறது! பணம் பெரிதாகத் தோன்றவில்லை”.

பல எழுத்தாளர்கள் நம் பெயர் நான்கு பேருக்குத் தெரியவரும், புகழ் கிடைக்கும், பணமும் கிடைக்கும் என்றுதான் எழுத வருகிறார்கள். இப்படி யோசனை போனால், எழுத்தில் முழுமனதாக ஈடுபட முடியுமா? `எழுதும்போதே ரம்மியமாக இருக்கிறது!” என்று புரிந்தவர்கள்தாம் நிலைத்து நிற்கிறார்கள். இவர்களது குறிக்கோள் பணமில்லை. ஆத்ம திருப்தி.

எதை நோக்கிப் போகிறோம்?

எவருக்கும் குறிப்பிட்ட ஒன்றை அடையவேண்டும் என்ற ஆசை முதலில் எழும். அது மட்டும் போதுமா? வெற்றி அடைந்தே தீரவேண்டும் என்ற உந்துதல் அவசியம். திறமைகூட இரண்டாம்பட்சம்தான்.

`பள்ளிக்கூடத்திற்குப் போகமாட்டேன்! ஏன் போகணும்?’ என்று அடம்பிடிக்கும் குழந்தைகளே கிடையாது எனலாம்.

`படிச்சாதான் பணக்காரனா ஆகலாம்! வேணும்கிற சாமானை எல்லாம் வாங்கிக்கலாம்!’ இப்படி எவ்வளவுதான் விளக்கினாலும், என்றோ நடக்கலாம் என்பது அந்த வயதில் புரியாது.

`சனி, ஞாயிறில் பீச்சுக்குப் போகலாம், சினிமா பார்க்கலாம்,’ என்று குழந்தைக்குப் புரியும்படி ஏதாவது ஆசை காட்டினால் அதையே இலக்காகக்கொண்டு படிக்க இசைவான்.

இலக்கற்றவர்கள்

வசதி குறைந்த சிறுவர்களுக்கு உணவு, உடை, ஆகாரம் எல்லாமே போதிய அளவு கிடைக்காது. சில சமயம், இவர்களுக்கென நேரம் ஒதுக்காத, அல்லது புரிந்துகொள்ளாத பெற்றோரும் வாய்ப்பார்கள். அதனால் உடல், மனம் இரண்டிலும் சோர்வு எழும். எந்தக் காரியத்தையும் முழுமனதுடன் செய்யும் ஆர்வத்தை இவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

படிப்புதான் ஏறாவிட்டாலும், இசை, நாட்டியத்தில் நாட்டம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் பலர். ஆனந்தி இவர்களுள் ஒருத்தி. ஆனால், அடிப்படைத் தேவைகளுக்கே பணமில்லாதபோது, கலைகளுக்காக எப்படிச் செலவழிக்க முடியும்?

இதெல்லாம் புரியாத ஆசிரியர்கள் இருப்பதால், பள்ளிக்கூடத்திலும் அனேகமாக வசவுதான். சிறுவர்கள் மேலும் தளர்ந்துபோய்விடுவார்கள்.

ஒரு சிலரே இவர்கள் எதிர்நோக்கும் சிரமங்களைப் புரிந்துவைத்து, தம் சக்திக்கு மீறி உதவவும் முன்வருகிறார்கள்.

சிறுவர்களுக்கு உதவும் கரங்கள்

மலேசியா, சிங்கப்பூர், இந்தோனீசியா, ஜப்பான், ஹாங்காங், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் ஆசிரியர்கள் சிலர், `படிப்பில் மனம் போகாவிட்டால் என்ன! இந்த ஏழைச்சிறுவர்களிடம் கலைத்திறன் இருக்கிறது,’ என்று உணர்ந்து, அத்திறமையை வெளிக்கொணர்கிறார்கள்.

முதலில் சிறிது உணவைப் படைத்து வரவழைப்பார்கள். அதுதானே அடிப்படைத் தேவை! கலையைக் கற்க ஆரம்பித்த சில மாதங்களிலேயே, `நம்மாலும் உருப்படியாக எதையோ செய்ய முடிகிறது!’ என்று ஆச்சரியத்துடன் உணர்வார்கள் சிறுவர்கள். அப்போது ஏற்படும் மகிழ்ச்சியில் அவர்களது தன்னம்பிக்கை வளர்கிறது.

இத்தகைய மாணவர்களிடம் கூடுதலான கவனம் அவசியம். கண்டிப்பாக இருந்தாலே போதும். கட்டொழுங்கு வரும் – மெல்ல மெல்ல.

இப்படிப்பட்டவர்கள் தோல்வியால் துவளமாட்டார்கள். அவர்கள் படாத துயரமா?

கலை விருந்து

மேற்குறிப்பிட்ட நாடுகளிலுள்ள இளம் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு ஆசிய நாட்டில் கலை விருந்தினைப் படைக்கிறார்கள்.

அண்மையில் கோலாலம்பூரில் நடந்த நிகழ்ச்சியில், உள்நாட்டு பரதநாட்டியக் கலைஞர்களுடன் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் இணைந்து ஆடினார்கள், மேற்கத்திய பாணியில்! ஒரே இசை. இரு பாணிகள்! சமையலில் வெவ்வேறு சுவை கலந்திருப்பதுபோல்தான். பார்வையாளர்களின் ஒருமித்த பாராட்டைப் பெற்றது அந்த ஆட்டம்.

போதனையாளர்கள் ஒரே வாரத்தில் நாள் முழுவதும் உழைத்துக் கற்பித்துவிட்டு, ஒதுங்கிவிட்டார்கள்.

சிறுவர்களுக்காக சிறுவர்களே இணைந்து படைக்கும் இம்மாதிரியான நிகழ்ச்சியில் கிடைக்கும் சன்மானத்தை ஏதாவது ஒரு நாட்டில் தம்மைவிட ஏழ்மையில் உழலும் சிறுவர்களுக்குக் கொடுத்து நிறைவு காண்கிறார்கள் இள வயதினர்.

`இவர்களையெல்லாம் முன்னுக்குக் கொண்டுவரவே முடியாது!’ என்று பல ஆசிரியைகள் தன்னை ஒத்தவர்களைப் பாதியிலேயே கைவிட்டதாகக் கசப்புடன் கூறுகிறாள் ஆனந்தி. ஒரே ஒரு ஆசிரியை மனந்தளராமல் போதிக்க, பதினேழு ஆண்டுகள் பரதநாட்டியம் பயின்று சிறந்திருக்கிறாள்.

தன்னிடம் இயற்கையாக அமைந்த கலைத்திறனை இன்னும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட, பன்னிரண்டு வயதிலிருந்து நான்கு மணி நேரம் இடைவிடாது பயிற்சி செய்திருக்கிறாள். விடாமுயற்சியால் கலை மட்டுமின்றி, பிற துறைகளிலும் பிரகாசிக்கிறாள். அவளுடைய நாட்டியத் திறமையால் கல்லூரியில் உபகாரச் சம்பளம் கிடைத்திருக்கிறது.

ஆரோக்கியத்தின் அவசியத்தையும் புரிந்து வைத்திருக்கிறார்கள் இவர்களைப் போன்றவர்கள். வசதி இருந்தும், `காணாததைக் கண்டதுபோல்’ அளவுக்குமீறி சாப்பிடுவதில்லை. உடல் ஒத்துழைத்தால்தானே ஆட முடியும், பார்ப்பவர்களும் ரசிப்பார்கள்?

பிறர் தமக்களித்ததைப் பகிர்வது

ஆனந்தியை ஒத்தவர்கள் தாம் எப்படி முன்னுக்கு வந்தோம் என்பதை மறக்கவில்லை. கல்வியும், உத்தியோகமும் ஒருபுறமிருக்க, தம்மைப்போன்ற ஏழைக் குழந்தைகளை தேடிப்போய், தாம் கற்றதைக் கற்றவிதத்திலேயே, இலவசமாக, பொறுமையுடன், அவர்களுக்குப் போதிக்கிறார்கள்.

`எல்லாரும் திட்டினா, பாவம், அதுங்க எங்கே போகும்?’ என்கிறாள் ஆனந்தி.

வேறு சிலர், முதியோர் இல்லத்திற்குச் சென்று தம் வாத்திய இசையை வழங்கி, அவர்களை மகிழ்விக்கிறார்கள்.

இவர்கள் யாருக்கும் தாம் நீண்ட காலம் சிரத்தையாகக் கற்ற வித்தையால் பொருளீட்ட வேண்டும் என்ற எண்ணம் எழுவதில்லை.

நம்மாலும் பிறருக்கு உதவ முடிகிறது, நாம் செய்யும் காரியத்தால் பிறர் வாழ்க்கையில் சிறிது மகிழ்ச்சி கூடியிருக்கிறது என்ற நிதரிசனமே செய்யும் நற்காரியத்தில் அவர்களைத் தொடர்ந்து ஈடுபட வைக்கிறது.

ஒரு ஆனந்தி தன்னைப்போன்ற பத்து ஆனந்திகளை உருவாக்குவாள்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *