மேலாண்மை பொன்னுச்சாமியின் மனப்பூ சிறுகதைத் தொகுப்பில் வாழ்வியல்

0

-முனைவர் ச.கோபிநாத் 

முன்னுரை

சமுதாயம் என்பது மக்கள் தொகுதிகளின் இணைப்பு ஆகும். அதாவது, மக்கள் கூடி வாழ்வதாகும். அவ்வாறு கூடிவாழும் மக்கள் தங்களுக்குள் உறவினை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி வளர்த்துக்கொள்ளும் சமுதாயம் உயிருள்ள சமுதாயமாகும். மக்கள் கூட்டம் ஒன்றுசேர்ந்து வாழ்வதற்கு ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்பே சமூகமாகும். இச்சொல்லிற்குச் சொல்லகராதி ‘மக்கள் திரள்’ என்று பொருள் தருகின்றது.

“சமுதாயம் பொதுநல ஸ்தாபனம், சங்கம், கழகம்”1 என்று ஆங்கில அகராதி கூறுகின்றது. இத்தகைய சமுதாயத்தில் மனிதன் எவ்வாறான சிக்கல்களையும் விளைவுகளையும் எதிர்கொண்டு வாழ்கிறான் என்பதையும் அதிலிருந்து எவ்வாறு வெளியேறுகிறான் என்பதையும் ‘மனப்பூ’ என்ற சிறுகதைத் தொகுப்பின் வாயிலாக வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வறுமை

மனிதனின் வாழ்க்கையில் மிகவும் கொடுமையானது வறுமையாகும். மனிதனுக்கு வறுமை வந்துவிட்டால் அவனின் எண்ணம், செயல்கள் மாற்றம் பெறுகிறது.

“வறுமையே பாவங்களில் பொல்லாதது என்றும், வறிய நிலையில் வாழ்வதே கொடிய பாவ வாழ்க்கை என்றும் அந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்வதே முதல் கடமையாகக் கொள்ளவேண்டும்”2 என்பர். இதனால் வறுமையினை ஒழித்தல் அவசியம். ஆனால், இன்றைய அளவிலும் வறுமை என்பது ஒழிக்கப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

”தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்”3

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லம் தலை”4

அதாவது, தனியொருவனுக்கு உணவு இல்லையெனில் இந்த உலகத்தை அழிக்க வேண்டும் என பாரதியும், அவ்வுணவைப் பகுத்து உண்ணுதல் வேண்டும் என்பதை வள்ளுவனும் நமக்கு எடுத்துக்கூறுகின்றனர். ‘மானத்தீ’ என்ற சிறுகதையில் ஆவுடைச்சி என்பவள் தன் மகனுக்கு ஒரு முறுக்குக்கூட வாங்கிக்கொடுக்க முடியாத அளவிற்கு வறுமை அவளைச் சூழ்ந்துள்ளது. வறுமையினைப் பயன்படுத்தி அவளைத் தன் வழிக்குக் கொண்டுவந்து விடலாம் என்று ஒருவன் நினைக்கிறான். ஆனால் ஆவுடைச்சி அவனை, “ச்சீ நாயே…. ஓடிப் போயிரு. இல்லேனா ஒரே போடுதான். அருவா ஒன்னை வகுந்துடும்”5 என்று அடித்துவிரட்டித் தன் மானத்தினைக் காத்துக்கொள்கிறாள்.

சாதி

சாதி, சமூகத்தின் கேடு எனலாம். அந்த அளவிற்கு நம் நாட்டில் சாதியின் உச்சம் உள்ளது. சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் “தன்னை உயர்ந்த சாதியாகவும் இன்னொரு மனிதனைத் தாழ்ந்த சாதியாகவும் கருதுபவன் மனநோயாளி”6 என்கிறார். இப்படித்தான் மனிதர்கள் மனிதர்களுக்குள் சாதியம் பார்க்கின்றனர். இந்த சாதிய முரணைத் ‘தீண்டாதே’ என்ற சிறுகதையில் ரெங்கலட்சுமி என்பவள், ஒரு வெள்ளத்தில் சிக்கிக்கொள்கிறாள். கீழ்ச்சாதியினைச் சேர்ந்த மாடத்தியின் மகன் ராக்கப்பன் காப்பாற்றப் போகிறான், அப்போது அவள்,

“கையை மட்டும்தான் நீ தொடணும் அதுவும் முனிக்கையைத் (நுனிக்கையை) தீண்டணும்.

’அதெப்படிமா….. முடியும்?’
‘அது அப்படித்தான். என்னோட ஒடம்பைத் தீண்டாதே’

வெள்ளத்திற்குள் நீந்துகிற அவனுக்குள் பற்றி எரிகிற நெருப்பு அவமான நெருப்பு, சாவின் விளிம்பிலுமா…. சாதி?7 என்ற நினைப்புடன் அவளை நெருங்கிச்செல்கிறான். ஆனால் ரெங்கலட்சுமி பிடித்திருந்த விளாரை நழுவவிட்டு உயிரினை விட்டுவிடுகிறாள்.

உயிரைவிடச் சாதிதான் முக்கியம். அதிலும் கீழ்ச்சாதிக்காரன் நம்மைத் தொடக்கூடது என்பதை மனதில் நினைத்துக்கொண்டு உயிரை விட்டுவிடுகிறாள். இந்தச் சமூகத்தில் பெண்களைக்கூட சாதி வெறியராக மாற்றிவைத்து இருப்பதுதான் மிகப் பெரிய கொடுமையான நிகழ்வாகும். ஆனால் பெண் என்பவளை இந்தச் ‘சாதி, மதம்’ இரண்டும் காப்பாற்றாது என்பதுகூடத் தெரியாமல் பெண்கள் இவ்வாறு இருப்பது அறியாமையின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

குழந்தைத் தொழிலாளர்கள்

குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராகப் பல வகையான சட்டங்களைக்கொண்டு வந்தாலும் அதனை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. நம்நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 75% பேர் வறுமைக்கோட்டிற்கும் கீழ் இருப்பதாகப் புள்ளி விவரம் கூறுகிறது. இந்த வறுமைதான் குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்குகின்றது. குழந்தைத் தொழிலாளர்கள் எப்படி உருவாகின்றனர் என்பதை ’ஏழாப்பு’ என்ற சிறுகதையில் ஆசிரியர் நேர்த்தியாகக் கூறியுள்ளார். ராசாத்தி என்பவர் ஏழாவது படிக்கும் போது தந்தையை இழந்துவிடுகிறாள். இதனால் தன் படிப்பினை இடையிலேயே நிறுத்திவிட்டு தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைக்குச் செல்கிறாள்.

“வாய் நிறைய சோறு. கன்னம் புடைத்திருக்கிறது. பதற்றமாய்க் கைகழுவினாள் ராசாத்தி. பாவாடையில் ஈரக்கையைத் துடைக்கிறாள். சுண்டெலியாய் ‘குடு குடு’ வென்று ஓடுகிறாள். மஞ்சள் பிளாஸ்டிக் டப்பாவையும், சிட்டையும் எடுக்கின்றாள்”8 அவள் தன்னை அறிந்துகொள்ளும் முன்னரே தொழிலாளியாக மாறிவிட்டாள் என்று தோன்றுகிறது.

போதைப்பொருள்

நம் சமூதாயத்தில் பல மனிதர்கள் உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால் போதை இல்லாமல் வாழ முடியாத அளவிற்கு மனிதர்கள் உருவாகியுள்ளனர். ‘போதை இல்லையெனில் வாழ்க்கை இல்லை’ என்ற நிலைதான் இங்கு உள்ளது. ஒருவன் போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டால் அவனின் எண்ணங்கள் மாற்றம் பெறுகின்றன.

போதைக்கு அடிமையானவர்கள் குற்றங்களைச் செய்பவர்களாகவும் தன்னால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உடையவர்களாகவும் மாறிவரும் போக்கினை நம்மால் பார்க்க முடிகின்றது. போதைக்கு அடிமையான ஒருவன் என்னமாதிரியான செயல்களைச் செய்கிறான் என்பதை ‘குறுக்கு’ என்ற சிறுகதையில் கணேஷ் புகையிலைக்கு அடிமையாக, பூபாண்டி என்பவன் இருக்கிறான். சாதிக் கலவரம் அவ்வூரில் ஏற்படுகிறது. அதனால் கடைகள் அடைக்கப்படுகின்றன. புகையிலை வாங்க முடியாமல் கிறுக்கு பிடித்தவன் போல் திரிகிறான். எப்படியோ தேடிப்பிடித்து புகையிலை தின்று போதையினை ஏற்றிக்கொள்கிறான். பூபாண்டியன் சாதியினர் மாற்றுச் சாதியினர் வீட்டில் ஒரு கொலையாவது விலுக வேண்டும் என்று பேசிக்கொள்கின்றனர். இதனைக் கேட்ட பூபாண்டி,

“ஓடிப்போய்….. பின்பக்கமாய்த் தழுவி, இடதுகையில் கழுத்தைச் சுற்றி, ஒரு கவ்வு கவ்வு கவ்வி…. இறுக்கிய வேகத்தில் வலதுகைச் சூரிக்கத்தியால் ஓங்கி… ஒரு சொருகு…. உருவிக்கொண்டு, ‘ச்சதக்,சதக்’ கென்று ரெண்டு குத்தி”9 கொலை செய்துவிடுகிறான்.

போதைக்கு அடிமையான ஒருவன் எவ்வாறு நடந்துகொள்வான் என்பது இக்கதை மூலம் தெரியவருகிறது. சுய சிந்தனை, தன்னை இழத்தல், கையேந்தல் போன்றவை இவர்களைத் தொற்றிக்கொள்ளும் என்பது அறியமுடிகிறது.

முடிவு

நம் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால், வறுமை, சாதி, குழந்தைத் தொழிலாளர், போதை பொருட்கள் இவற்றினை ஒழிக்க எந்த மாதிரியான நடவடிக்கையினை எடுத்துவருகின்றன எனக் கேள்விக்கு உட்படுத்தினால் மிஞ்சுவது கேள்வி மட்டுமே. அந்த அளவிற்கு இதனைப் பற்றிய விழிப்புணர்வை நாம் சரியாகச் செய்யவில்லை எனலாம். ஒரு நாடு வளர்ச்சி நாடாக வரவேண்டுமென்றால் இந்த நான்கில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இது மட்டுமின்றி பெண் முன்னேற்றமும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் இந்த நான்கிலும் பெண் என்பவள் அவளுக்குத் தெரியாமலும், தெரிந்தும் இதில் அகப்பட்டுக்கொள்கிறாள். பெண் சிக்கலையும் சேர்த்துப் பார்த்தால் மட்டுமே சமுதாயத்தில் மனிதனின் வாழ்க்கை சிறப்பாக அமையும். அதன் மூலம் அந்நாடும் நல்ல வளர்ச்சிப் பாதையை நோக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடுமில்லை.

குறிப்புகள்:

  1. இரா.மோகன், (ப.ஆ) இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் ஆய்வு மன்றம், ஆய்வுக்கோவை. ப.1956
  2. மு. வரதராசன், அறிஞர் பெர்னாட்ஷா. ப.80
  3. பாரதியார் கவிதைகள். ப.150
  4. திருக்குறள்.332
  5. மேலாண்மை பொன்னுச்சாமி, மனப்பூ. ப.138
  6. quotes.mowval.in
  7. மேலாண்மை பொன்னுச்சாமி, மனப்பூ. ப.62
  8. மேலது, ப.82
  9. மேலாண்மை பொன்னுச்சாமி, மனப்பூ. ப.43

*****

கட்டுரையாசிரியர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,இராமநாதபுரம்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *