-மேகலா இராமமூர்த்தி

நாம் ஓர் அவையில் பேச்சாளராகவோ பார்வையாளராகவோ இருக்கக்கூடிய சூழல் வரும்போது அங்குள்ளோரின் தகுதியறிந்து அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டிய முறைகள் என்னென்ன என்பது குறித்து நாலடியார் நவிலும் நல்லுரைகள் சிலவற்றைக் காண்போம்.

உண்மையான அறிவுடைய கூட்டத்தில் கலந்து அவர்களோடு நின்றொழுகுதலை விடுத்து, அவர்கள்முன் தம்முடைய அறியாமையைப் புலப்படுத்தும் கருத்தையே திரும்பத் திரும்பப் பன்னிப் பன்னிப் பேசும் மயக்கு அறிவை உடையார் எதிரில் உண்மை அறிஞர்கள் தம் ஞானப் பெருமையினைக் காட்டிக்கொள்ளாமல் தளர்த்திக்கொள்ளுதல் வேண்டும்.

மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழிவிட் டாங்கோர்
அஞ்ஞானந் தந்திட் டதுவாங் கறத்துழாய்க்
கைஞ்ஞானங் கொண்டொழுகுங் காரறி வாளர்முன்
சொன்ஞானஞ் சோர விடல். 
(நாலடி – 311)

அறிவினாலே ஒளியுடையோர் முன்பு தாமும் அறிவொளியினர் ஆதல் வேண்டும். அறிவற்றவோர் முன்பு ஏதுமறியதவராய், சுண்ண வண்ணம் கொள்ள வேண்டும் என்பார் வள்ளுவப் பேராசான்.

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல். (714)

செய்யுட்களை அதன் பொருள்நுட்பம் உணர்ந்து இன்புறுதல் அறியாது, வெறுமனே மனப்பாடம் செய்து அருவருக்கத்தக்க உரைகளை மூடர்கள் சொல்லும்போது, என்றும் அழிவிலாச் சிறப்பினையுடைய மெய்ப் புலமைசால் பெரியோர்கள் அம் மூடர்களைப் பெற்றெடுத்த தாய்க்காக, அவள் வருந்துவளே, என்று மிக இரங்கி யாதுங் கூறாது பொறுமையுடையராக இருப்பர் என்கிறது நாலடி.

பாடாமே ஓதிப் பயன்றெரிதல் தேற்றாத
மூடர் முனிதக்க சொல்லுங்கால் – கேடருஞ்சீர்ச்
சான்றோர் சமழ்த்தனர் நிற்பவே மற்றவரை
ஈன்றாட் கிறப்பப் பரிந்து.  
(நாலடி – 316)
 

தன் மகனை ஈன்ற பொழுதைவிட அவனைக் கற்றோரும் மற்றோரும் சான்றோன் என்று புகழும்போதிலேயே பெரிதும் உவப்பாள் அவன் தாய். 

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
(69)
 

ஆகவே அவைவல்லார் போற்றும் சொல்லாற்றலில்லா மூடர்கள் அவையில் யாதும் பேசித் தம்மை ஈன்றார்க்கு இழுக்குத் தேடலாகாது என்கிறது நாலடியார். 

ஒருவன் ஒரு நூலைக் குறித்து அவையிலே விளக்கிப் பேசப்புகுமுன் பொழிப்புரை அகலவுரை நுட்பவுரை எச்சவுரை யென்னும் நால்வகையுரைகளாலும் நூலை ஆராய்ந்து தெரி(ளி)ந்து, அதன் விரிந்த பொருட்பெருக்கை விளக்கிக் காட்டவேண்டும். அவ்வாறு காட்டாதவனுடைய சொற்கள், பழித்தலில்லாத காட்டாக்களின் இனத்தைத் தமது செழுமையால் தம்மாட்டு வருவிக்கும் உயர்ந்த மலைகளையுடைய நாடனே! நூலிற்கு உரையாகுமா? என்று கேள்வி எழுப்புகின்றது நாலடியார்.

பொழிப்பகல நுட்பநூ லெச்சமிந் நான்கின்
கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் – பழிப்பில்
நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட!
உரையாமோ நூலிற்கு நன்கு?
(நாலடி – 319)

எனவே ஏதொன்றையும் நால்வகை உரைகளாலும் விளக்கிப் பேசுதலே சிறந்த உரையாகும் என்பது இப்பாடல்வழி நாம் பெறும் செய்தி.

ஒரு நூற்பொருளைப் பொதுவாக உரைத்தல் பொழிப்பெனவும், வினாவியுரைத்தல் அகலமெனவும், காரணம் நிறுத்தல் நுட்பமெனவும், இவற்றால் ஒரு கருத்தைத் துணிதல் எச்சமெனவும் கருதப்படும்.

கல்வி கேள்விகளில் சிறந்த சான்றோர் எத்தகு செறிந்த செய்திகளைத் தம் உரையில்காட்டி விளக்கிப் பேசினும் அவற்றின் அருமை உணராப் புல்லறிவினார் அதனைப் பயன்கொள்வதில்லை. அத்தகு புல்லறிவினாரின் இயல்பையும் நாலடியார் விரிவாய் விளக்குகின்றது நமக்கு.

தோலைக் கவ்வித்தின்னும் புலைஞருடைய நாய்கள் பாலுணவின் சிறப்பை அறியாததுபோல, அழுக்காறு முதலிய மன மாசுகளில்லாதவர் அறநெறி அறிவுறுத்தும்போது நல்லறிவில்லாப் புல்லறிவாளர் அதனைக் காது கொடுத்துங் கேட்கமாட்டார்.

அவ்வியம் இல்லார் அறத்தா றுரைக்குங்கால்
செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்
கவ்வித்தோல் தின்னும் குணுங்கர்நாய் பாற்சோற்றின்
செவ்விய கொளல்தேற்றா தாங்கு.
(நாலடி – 322)

புல்லறிவுடைய கீழோர் நல்லறிவுடைய சான்றோர் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அதற்கு, அந்நல்லறிவினார்மாட்டு அஃது இல்லாதவர்க்கிருக்கும் அழுக்காறு(ம்) காரணம் என்பது இதன் குறிப்புப் பொருள்.

இவ்வுலகில் உயிர்கள் வாழும் நாட்கள் சில; அச்சின்னாட்களிலும் உயிர்க்குப் பாதுகாப்பில்லை; இடையில் பலர்தூற்றும் பழிவேறு! இத்தகு நிலையற்ற, நிம்மதியற்ற வாழ்வில் பலரோடும் சேர்ந்து மகிழ்ந்தொழுகாது விலகி, எதிர்ப்பட்டவரோடெல்லாம் ஒருவன் கடும்பகை கொள்ளுதல் ஏன்? என்கிறது நாலடி.

உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்,
பலர்மன்னுந் தூற்றும் பழியால் – பலருள்ளும்
கண்டரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்
தண்டித் தனிப்பகை கோள்.
(நாலடி – 324)
 

ஏதோ பன்னூறாண்டுகள் தான் நிலைத்து வாழ்ந்துவிடப்போவதுபோல் எல்லோரையும் வெறுப்பதும், எதிர்ப்படுவோரிடமெல்லாம் முரணுவதும் மனமுதிர்ச்சியற்ற புல்லறிவின்பாற்பட்ட செயல்களேயன்றி வேறில்லை.

”அல்லல்மிகு மானுட வாழ்க்கையை நடாத்துதற்கு வீணே பிறந்து, எல்லோரிடமும் கணக்கிலாப் பிணக்கினில் ஈடுபடாது, வாழ்வின் பயனடைய காழிப்பதிவாழ் ஆனேற்றுச் செல்வனைக் காண வாரீர்” என்று அப்பர் பெருமான் அடியவரை அழைப்பதை இங்கே நாம் பொருத்திப் பார்க்கலாம். 

அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்துநீர்
எல்லையில் பிணக்கினில் கிடந்திடாது எழு(ம்)மினோ!
பல்லில்வெண் தலையினில் பலிக்கியங்கு பான்மையான்
கொல்லையேறு அதேறுவான் கோலக்காழி சேர்மினே!

புல்லறிவினாரின் இயல்புகளை மேலும் பட்டியலிடுகின்றது நாலடியார். அவர்கள் தாமும் இன்புறமாட்டார்; தக்கார்க்கும் நன்மை செய்யமாட்டார்; தம்முயிர்க்கு அரணாய் அமையும் அறவொழுக்கங்களையும் கைக்கொள்ளமாட்டார்; மதிமயங்கி முன்னர்ச் செய்த நல்வினைப் பயனால் கிடைத்த செல்வச் செழுமையில் அழுந்தி வீணே வாழ்நாளைப் போக்குவார் என்கிறது அது.

தாமேயும் இன்புறார் தக்கார்க்கும் நன்றாற்றார்
ஏமஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார் – தாமயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார்.  (நாலடி – 327)

மாந்தர்க்குக் கிடைக்கும் செல்வத்தை அவர்கள் முற்பிறவியில் செய்த நல்வினைகளில் பயனென்றே நீதிநூல்கள் பேசுகின்றன. ஏன் சங்க நூலான நற்றிணையுங்கூட,

”…நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வ மன்றுதன் செய்வினைப் பயனே…” என்றே செப்புகின்றது.

அவ்வாறு முற்பிறவியில் செய்த நல்வினைகளின் காரணமாய்ச் செல்வத்தைப் பெற்றவன், அதனைத் தானும் துய்க்காது, தக்கார்க்கும் ஈயாது வாழும் அற்ப மனநிலையை இப்பிறவியில் எப்படிப் பெறுகின்றான் என்பது சிந்தனைக்குரிய விந்தையான ஒன்றே!

[தொடரும்]

*****

துணைநூல்கள்

1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *