சீனிவாசன் கிரிதரன் 

                                     

                                            தளர்ந்துபோன மரப்படிகளில் கால் வைத்தபோது அதன் வயது உணர்வுகளின் ஊடாக நெஞ்சை வருடியது. குழந்தையாக இருந்தது முதல் ஏறி ஓடிவிளையாடியதும், அதில் ஏறி  சாகசம் செய்த மற்றைய பருவங்களையும் உள்வாங்கிக்கொண்டு….இன்று தலை நரைத்த என் வயதையும்  தாண்டி அது வாழ்ந்துகொண்டிருக்கிறது. இன்றும் விலத்திக்கொள்ளாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் பல நினைவுகள் கூடவே என்னுடன் படி ஏறிக்கொண்டிருக்கின்றன. மேலே ஏறி பழுப்பேறிய  அந்த முதிரை மர கதவினை திறந்து கொண்டு உள்ளே சென்று கட்டிலில் அமர்ந்தபடி கதவின் பின்புறத்தில் ஒட்டியிருந்த பழுப்பேறிய காகிதத்தில் வரைந்திருந்த ஆவர்த்தன அட்டவணை கண்ணில்பட்டது. பல வருடங்கள் கடந்தும் இன்னும் கழற்றி ஏறிய மனமில்லாமல் அதனை விட்டுவைத்திருக்கும் அக்கா, காலம் எவ்வளவு வேகமாக போய்க்கொண்டிருக்கிறது, திறந்திருந்த யன்னலினுடாக பரபரப்புடன் இயங்கத்தொடங்கியிருக்கும் வீதியையும் கடை தெருவையும் பார்வையிட்டேன்.

                                        “தம்பி” என்று அம்மாவின் குரல் பாசத்தோடு ஒலித்தது. “என்னால ஏறிவரமுடியாது; இறங்கிவா. இறங்கிவந்து, ..முதலில குளித்து சாப்பிடு, அதற்கு முதலில இந்த டீ யை குடி” என்று நிறுத்தல் இல்லாமல் தொடர்ந்தார். எனக்கு நன்கு தெரியும், அவரால் இப்போது  மேலே ஏற முடியாது, வயதோடு கூடவரும் எலும்பு தேய்மானம் முழம் கால் சில்லில் வலியை கொடுத்திருந்தது.  இல்லையேல் மேலே வந்து மேசையில் தேநீரை வைத்துவிட்டு எனதருகில் அமர்ந்து தலையை தடவியபடி சுகம் விசாரித்திருப்பர்.

“தங்கம், இதை மேசைல வை; தம்பி வந்து குடிக்கட்டும், என்னால இப்பெல்லாம் முடியாது, நான் இருக்கப்போறன்” என்றபடி அம்மாவின் குரல் மேலும் கேட்டது.

                                           படியால் இறங்கிக்கொண்டிருக்கும்போது ” வாங்க தம்பி ” என்றபடி தங்கம் என்றழைக்கப்படும் தங்கநேசம் மேசையில் தேநீர் கோப்பையை வைப்பது கேட்டது. எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்தே எமது பூர்விக கிராமத்தில் இருந்து எங்களது தூரத்து உறவினர் என்றவகையில் வந்துபோகும் உறவுகள், தங்கமும் அவளின் அப்பாவும்தான். கிராமத்திலிருந்து எங்களது நிலபுலம்களை பராமரிப்பதில் இருந்து அவற்றை பொறுப்பாக கொண்டு சேர்ப்பது வரை அவர்கள் என்றைக்கும் பின்நின்றதில்லை, அவ்வளவு நேர்மையாக அவர்கள் நடந்துகொண்டிருந்தார்கள். இடைக்கிடையே நாங்களும் பாடசாலை விடுமுறை நாட்களில் அங்கு தங்கியிருந்து வந்தது இன்றும் நல்ல ஞாபகமாகவே உள்ளது. பெரிய காணில் அமைந்த  அம்மாவின் நாற்சார வீடும், அதனை சுற்றி வளர்ந்திருந்த தென்னை மரங்களும், மா மரங்களும், வீட்டின் பின்புறமாக ஓடிக்கொண்டிருக்கும் வாய்க்காலும், பசைப்பசேலென கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியும் நெல் வயல்களும் இன்றும் மனதை விட்டு அகலாது.

                                            அப்பாவின் மரணத்தின்பின் அம்மாவிற்கு  துணையாக வந்தவள், தனக்கென வாழ்க்கையொன்றை அமைத்து கொள்ளாமலே அம்மாவுடன் தங்கிவிட்டாள்,  அம்மா எவ்வளவோ வற்புறுத்தியும்  அவள் ஒத்துக்கொள்ளவில்லை, தனக்கு ஒதுங்கிக்கொள்ள ஓரிடமும் பாதுகாப்பும்தான் தேவை என்றபடி ஒதுங்கிக்கொள்வாள், அம்மா பலதடவை கேட்டும் அவளிடம் அதே பதில்தான் விடையாகக் கிடைத்தது , இது அவளுடைய விருப்பம் என்றபடி அம்மாவும் விட்டுவிட்டார்.

                                             மேசையில் இருந்த தேநீர் கோப்பையை எடுத்துக்கொண்டு அம்மா இருந்த இடத்தை நோக்கி நகர்ந்தேன். என்னை பார்த்தபடி ” மெலிஞ்சி போய்விட்டா போலிருக்கு , எத்தனை நாள் லீவு போட்டிருக்கு, எப்படி மருமகள், பிள்ளைகள் எல்லாம், ஒருத்தியையாவது கூட்டி வந்திருக்கலாம்தானே, சின்னவளை பார்க்க ஆசையாயிருக்கு, நீங்க இங்க எங்கயும் பக்கத்தில இருந்தா எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கும், அதுகளுக்கும் அப்பம்மாட பாசம் தெரியும், எல்லாம் கொடுப்பினைதான்….ம்ம்ம் ” என்றபடி எனது பதிலை எதிர்பார்த்தார். “எனக்கென்ன ஆசை இல்லையா உங்களுக்கு பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ள, பிள்ளைகள்ர படிப்பும் என்ட வேலையும், கொஞ்சம் தொலைவுலதான் இருக்க வேண்டி இருக்கு, அங்க எல்லாரும் சுகம், அடுத்த விடுமுறைக்கு கூட்டிவாறன், கொஞ்ச நாள் நிண்டு அப்பம்மாவோட சந்தோசமா இருந்தா போய்ச்சு, எனக்கு இரண்டு நாள் தான் டூட்டி லீவு,” என்றபடி தேநீர் அருந்தியபடி அம்மாவைப் பார்த்தேன். ஒரு மென்மையான சிரிப்புடன் என்னை பார்த்து ” என்னடா நான் சொல்லுறதில என்ன பிழை, எனக்கும் உங்கள்ல பாசம் இல்லையா, சொல்லு பார்ப்பம்” என்றார். ” ஓம் , சரிதான், அடுத்தமுறை பார்ப்பம்” என்றபடி எழுந்தேன் . ” பிரயாணம் ..சரியான களைப்பாக இருக்கும், ஒருதரம் நல்லா தலையில முழுக்கிற்று  வா, வந்து சாப்பிடு ” என்றபடி எனது தேநீர் கோப்பையை எடுத்துக்கொண்டு சமையலறையை நோக்கி நடந்தார். நடந்து சென்ற அம்மாவை உற்றுப்  பார்த்தேன், நன்கு நரைத்த தலைமுடி முதுகுவரை பின்னப்பட்டு இருந்தது.

               தோளில் மாற்றுடைகளுடன் வெளியே வந்தேன்,  சுற்று சூழலில் நவீன மாற்றங்கள் எவ்வளவோ வந்திருந்தாலும், ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அதே கம்பீரத்துடனும் பழமை மாறாத தோற்றத்துடனும் இன்னும் வீடு இருந்தது. அப்பா தன் முயற்சியால் கட்டிய வீடு,  அந்த நேரம் சிறிய கடைத்தெருவை கொண்ட ஒரு நகரமாக இருந்ததால் வீட்டுடன் இரண்டு கடைகளும் சேர்த்தே கட்டியிருந்தார். திருமணம் முடித்த கையுடன் அம்மா புகுந்த வீடாகவே இங்கு வந்திருந்தார். கடைகளின் குத்தகை அப்போது பெரிதாக இல்லாவிட்டாலும் இப்போது அது அம்மாவிற்கு யாரிலும் பெரிதாக தங்கியிருக்காமல் தனது செலவுகளை பார்க்கக்கூடியதாக உள்ளது. அப்பாவின் முழு நினைவாக, எந்த ஒரு மாற்றமும் செய்யாமல், பழைமை மாறாமல் முறையாக பராமரித்து வருகிறார். இதன் பின்னர் எழுந்த வீடுகள் எல்லாம் சந்தை மதிப்பின்படி பார்த்து, உடைத்து புதிய கடைகளாவும் வீடுகளாவும் மாறியிருந்தன.  இந்த விடயத்தை பெரிது படுத்தாமல் அக்காவும் , அத்தானும் அம்மாவின் கனவுகளை சிதைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பது மனதுக்கு நிறைவாகவே இருந்தது. பழைமை மாறாத வீடுகள் நினைவு சின்னங்களாக சில சமயங்களில் அமைந்து போய்விடுகின்றன, வீடு என்பது எப்போதும் எம் கூடவே வருவது, வீட்டின் ஒவ்வொரு இடமும் மறக்க முடியாத பல நினைவுகளால் நிறைந்து போயிருக்கும். ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு நிகழ்வுகளை ஞாபகப்படுத்தும், அப்பாவின் மரண நிகழ்வும், அக்காவின் திருமணமும், அக்காவின் மக்கள் பிருந்தாவின் பிறப்பும் ஏன் எனது திருமண வரவேற்பும் இன்னும் பசுமையாகவே உள்ளது.

                                      வீட்டுப் படிக்கட்டுகளால் இறங்கி பின்புறமாக நடந்து கிணற்றடியை அடைந்த போது அதனை சுற்றி வளர்ந்திருந்த கமுகு மரங்கள் பச்சையும், மஞ்சளுமாக பாக்கு குலைகளைத் தாங்கி இருந்தன, சிறு வயதில் கமுகு மரத்தில் நெஞ்சில் காயம் வரும்வரை ஏறுவதும் பின்னர் சறுக்கிக்கொண்டு வருவதும் நினைவுக்குவந்தது, பழுத்துவிழுந்த கமுகு ஓலையில் அக்காவை இருத்தி இழுத்தி சென்றதும் ஞாபகங்களாக வந்தது. ” கவனம்! கல்லிலே பாசி கொஞ்சம் பிடிச்சிருக்கு, சறுக்கும்” என்ற எச்சரிக்கை தங்கத்திடமிருந்து வந்தது. ” அதை கொஞ்சம் தேய்த்து கழுவி விடு என்று சொன்னனான் மறந்து போய்விட்டதா தங்கம் ..” என்று கண்டிப்பான குரலுடன் அம்மா வெளியே வந்தார். ” எனக்கு பழக்கம்தானே அம்மா, நீங்க உள்ள போய் இருங்க ” என்றபடி சவரம் செய்துவிடு குளிக்க ஆரம்பித்தேன். கமுகு மரம் கிணற்றை சுற்றியிருந்தால் கிணற்று நீர் நல்ல குளுமையாக இருக்கும் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும்.

                                             சாப்பாட்டு மேசையின் கதிரையை இழுத்து அமர்ந்தபோது அம்மாவும் அருகேவந்து அமர்ந்துகொண்டார், ” சாம்பாரும், உனக்குப்பிடித்த பச்சமிளகாய்ச் சாம்பலும் செய்திருக்கிறன், இட்லியோட சாப்பிடு, பிருந்தாவிற்கு செய்த கொஞ்சம் தோசையும் இருக்கு, நல்லாயிருக்கும்; இரண்டுபேரும் வேலைக்கு போறதுதானே, அநேகமா எல்லாம் கடைலதான் என்ன?, அவன் என்ன, யாருக்கு என்று செய்கிறானோ இல்ல யாருக்கோ என்று செய்கிறானோ, சொல்லு பார்ப்பம், எல்லாம் வீட்டு சாப்பாடுக்குப்பிறகுதான் என்ன?” என்றபடி  எனக்கும் தனக்குமாக மெதுவாக சொன்னார். மல்லிகை பூ போன்ற இட்டலி, மிக மிருதுவாக இருந்தது, என் முன்னே இருந்த தட்டில் இட்லியை எடுத்து வைத்தபடி ” அம்மாடா கையால சாப்பிடுறதெண்டா ஒரு சந்தோசம்தான் என்ன “, என்றபடி இரண்டு தோசைகளையும் தட்டி வைத்துவிட்டு ” வயிறார சாப்பிடு” என்றபடி எனது முகத்தினை பார்த்தார். காலம் எவ்வளவு கடந்து போனாலும் அவற்றின் சுவையும் மணமும் மாறவேயில்லை, அம்மாவின் முகத்தை நிமிர்ந்துபார்த்தேன், ” என்னடா உப்பேதும் கூடிவிட்டதா?”, என்றார். “இல்லம்மா , எப்படி அதே கைப் பக்குவம்,  கொஞ்சம்கூட மாற்றமில்லாமல், எப்படி?”,

என்றேன்.  “எல்லாத்துக்கும் மனம்தான் கரணம், யாருக்காக செய்றம் என்ற கேள்விக்கு பதில் இருந்தால் சரி”, என்றபடி ,தண்ணீர் கிளாஸினை அருகில் வைத்தபடி சமையல் அறை பக்கம் சென்றார்.

                                    ஒரு பதினைந்து பதினெட்டு வயது வரைக்கும்தான் ஒழுங்கான வீட்டு சாப்பாடு, பாசத்தோட இருத்தி பரிமாறுவதெல்லாம், கடந்து போனால் வெறும் நினைவுகளோடுதான் காலங்கள் கழிந்துபோகும். படிப்பு, கல்லூரி விடுதி,வேலை என்று வெளியே நகரும்போது தொலைக்கப்படும் வரம்கள் அதிகம். எனது சக நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது அடிக்கடி சொல்வேன், பத்து வயதில தொடங்கிய பார்சல் சாப்பாடு ( மதிய உணவு ) இன்றுவரைக்கும் இருக்கு, ஆறுதலாக, வீட்டில் ஒரு வேளை  தட்டில் சாப்பிடும் திருப்தி  எங்கும் கிடைப்பதில்லை, ஒரு கறியாக இருந்தாலும் அது அமிர்தம்தான்.

                    தங்கம் கூடையை எடுத்துக்கொண்டு சந்தைக்குப் போக ஆயத்தமானாள், “அம்மா , தம்பிக்கு என்ன சமைக்க ” என்றவள், எனதருகே வந்து, ” நாட்டு கோழி வாங்கிவரவா, அம்மா நல்லா அரைச்சி சமைப்பா, தம்பியும் முதல்ல நல்லா விரும்பி சாப்பிடுறதானே, என்ன சரியா” என்றபடி எனது பதிலை எதிர்பாத்துக்கொண்டு நின்றாள். “ம் ” என்றபடி தலையை ஆட்டினேன். ” அவனிடம் என்ன கேள்வி இருக்கு , நீ வாங்கிவா, என்ர கையால அவனுக்கு சமைக்கணும்” என்றபடி அம்மா உள்ளேயிருந்து எனதருகே வந்தார். தங்கம், வாசல் வழியாக வீதிக்கு இறங்கினாள்.

                                     “ஏனப்பா….. சரியா மெலிஞ்சி போய்ர போலிருக்கு…. சரியா உடம்ப கவனிக்கிறல்லபோல” என்று  நீண்டநேரம் அடக்கிவைத்திருந்த  தனது ஆதங்கத்தை வெளிவிட்டார். ” அப்படி ஒன்றுமில்லை , இப்ப வயது என்ன, ஐம்பதை நெருங்குதுதானே, மெலிவாஇருக்கிறது, ஆரோக்கியம்தானே அம்மா “, என்றேன். ” உங்களுக்கேதும் ” என்றபடி முகத்தினை பார்த்தேன். “எனக்கென்ன, இந்த  முழங் கால் வருத்தம் மட்டும்தான், சீனியோ, அந்த பிரசரோ…ஒன்றுமில்லை”, உடம்ப சரியா கவனிச்சிக்கொள்…குடும்பம் ஒன்று இருக்கல்லவா , அதுகளும் உன்ன நம்பித்தானே இருக்குதுகள்”, என்றபடி பெரு மூச்சொன்றை விடுத்தார். ” பிள்ளை வர எப்படியும் மாலையாகிரும், வங்கி வேலை என்றால் இப்படித்தான், பிருந்தாவும் பள்ளிக்கூடம் விட்டுவர எப்படியும் இரண்டு மணியாகிரும், அவரும் வெளிநாட்டில, வாறமாதம்தான் வாறதாம் என்று பிள்ளை சொல்லிற்று, நீ கொஞ்சம் போய் ஆறுதலாக படுத்துக்கொள்ள, எதனை மணிக்கு கூட்டம்” என்றபடி சமயலறைக்கு செல்ல எழுந்தார். ” எனக்கு பின்னேரம் 3  மணிக்குத்தான், சரி ” என்றபடி எனது அறையை நோக்கி படிக்கட்டுகளில் ஏறத்தொடங்கினேன்.

                                 மொத்தம் 27 படிக்கட்டுகள், சிறுவயதில்,பள்ளிக்கூடத்தில் கிடைக்கும் சிறிய சோக் துண்டுகளை கொண்டுவந்து படிகளில் ஒன்று முதல் இருபத்தேழு வரை எழுதியதை நினைக்கும்போது சிரிப்புதான் எழுகிறது. இறுதி படிக்கு கால்வைக்கும்போது கால்களில் வலுவற்றதன்மையும், நெஞ்சில் எதோ கனப்பதும், ஆழமாக மூச்சுவாங்குவதுமாக இருந்தது. எத்தனைதடவை ஏறி இறங்கியிருப்பன் புதிதாக என்ன?, விடை காணமுடியாமல் கதவை திறந்தபடி கட்டிலில் அமர்ந்தேன். பிரயாண களைப்பாக இருக்கும், வயதும் போய்க்கொண்டுதானே இருக்கிறது என்ற உணர்வுடன், திறந்திருந்த யன்னல்களூடாக மெதுவாக சூடேறிக்கொண்டிருக்கும் காலை வேளையை உள்ளேநுழைந்த காற்று உணர்த்தியது. வீட்டு வாசலுக்கும் வீதிக்கும் இடையே  இருந்த சிறிய நிலப்பரப்பில் நன்கு வளர்ந்திருந்த  கத்தா  மரத்தின் பரந்த நிழல் ஒரு குளுமையான சுற்று சூழலை ஏற்படுத்தி இருந்தது. இந்த கத்தா மரத்தை வைத்துக்கொண்டு அம்மாவும் தங்கமும் ஒருபாடமே நடத்தி முடித்து போடுவார்கள். முதலில் தங்கம்தான் தெடங்குவாள் ” ஏன் அம்மா, இந்த கத்தா மரத்த வெட்டிவிட்டால், இந்த காகம் கொக்கு எல்லாம் கூடு கட்டி, இந்த நிலத்தில எல்லாம் எச்சம் போடுறதெல்லாம் இல்லாமப்போய்விடும் என்னே “, என்று. அதற்கு அம்மா ” இந்த உலகம் நமக்கு மட்டும் இல்லையே, அதுகளுக்கும்தானே, எந்த சூழலில பாதுகாப்பும், சாப்பாடும் கிடைக்குதோ அங்கதான் அது கூடு கட்டும். அதுக்கு மரத்த வெட்டுறதுதான் வழியில்லை, அதையும் சேர்த்து வாழ பழகிக்கொள்ளுறதுதான் அதற்கு வழி” என்பார். ” என்னம்மா நீங்க, ஒவ்வொருநாளும் இந்த நிலத்தை கழுவி துப்பரவாக்கிற எனக்குத்தான் தெரியும் கை நோவு” என்பாள். “அது சரி, நீ கழுவி    துப்பரவாக்கிற தண்ணி எல்லாம் அங்க இருக்கிற பூ மரங்களுக்குப் பசளையாகப் போறது உன்ட கண்ணுக்கு தெரியாது, கைவலியும் கால்வலியும்”, என்றபடி பாடத்தை முடிப்பார். அம்மா, அப்பாவைப் போன்று படித்தவரில்லை என்றாலும், கிராமத்தில் இயற்கையுடன் கூடின வாழ்கை அவரை நன்கு வளர்த்தெடுத்திருந்தது.

                                   கடை தெருவின் அரவரங்களும், வீதியில் வாகனங்களின் இரைச்சல்களும் மெதுவாக கூடியிருந்தது. கட்டிலில் மெதுவாக சாய்ந்தாலும் மனம் நிற்றல் நிறுத்தல் அற்று ஓடிக்கொண்டே இருக்கிறது, எந்த கணத்தில் என்ன விடயம் வரும் என்ற கணக்கில்லாமல், ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டும் தொடர்பில்லாமலும், ஏன் இப்போது இந்த எண்ணம் என்ற கேள்விக்கு விடை இல்லாமலும் , அலைந்து கொண்டே இருக்கும்.  அப்பா இருக்கும்போது பின்னேரங்களில்  இங்குதான் ஓய்வாக இருந்து புத்தகங்கள் படித்துக்கொண்டிருப்பர், படித்த புதிய விடயங்களை சில சமயம் அம்மாவுக்கு விளகிக் கொண்டிருப்பார். அநேகமாக அவர் ஓய்வெடுப்பது இந்த அறையில்தான், “அப்பா” என்றபடி படியேறிக்கொண்டு தேநீர் கோப்பையுடன் உள்ளே  நுழையும்போது, கனிவாக ” வாப்பா” என்றபடி அருகில் இருத்தி முதுகை தடவியபடி எனது படிப்பு மற்றும் தேவைகளை கேட்ப்பார். “இந்தா உனக்கு பிடித்த மாதுளம் பழம், அணில் கடிக்காமல் நல்லா சேலையால சுத்தி கட்டி வைச்சிருந்தனான், நல்ல நிறமாயிருக்கு, நீயும் சாப்பிட்டு அக்காவுக்கும் கொடுத்து சாப்பிடு,” என்பர்.  தான் வாசித்த நல்ல கதைகளை எங்களுக்குப் பொருந்தக் கூடியமாதிரியும் அறிவுரையாகவும் சொல்வர். அவர் எங்களை கடிந்து பேசியது கிடையாது, ” ஏன் அப்பா,………இந்தப்  பிள்ளைகளோட கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கோ, சொல்லு கேட்காமல் இருந்திரப் போகுதுகள், பிறகு எனக்குத்தான் கஷ்டமெல்லாம்” என அம்மா சொல்லும் போது, சிரித்த படி அவர் , ” இயற்கைக்கு யாரும் இதை செய் அதை செய் என்று கட்டளை சொல்லுறதில்லை, அது தன்ர நியதிக்கு அது நடந்துகொண்டே இருக்கும், நாம அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்ல,  நாங்க கூடின அளவு அக்கறை காட்டிடத் தொடங்கினால்தான் அது தான் உண்மைல போகவேண்டிய பாதையை மாத்தி போடும், பிறகு எல்லாம் சிக்கலாகிடும்,  அவங்கட ஒவ்வொரு செயலையும் கவனமாக கரிசினையாக உற்றுப் பார்த்துக்கொள், அதுக்குள்ள அவங்க உனக்கொரு செய்தியை வைத்திருப்பாங்க, அதக் கவனமாக அறிந்துகொள் அது போதும், திருத்த வேண்டிய இடத்தில மட்டும் திருத்த வெளிக்கிட்டு, அதையும் எப்படி பாதிப்பில்லாமல் செய்யவேணும் என்பதையும் தெரிந்து கொள்ளணும்” என்பர். நாங்கள் அருகில் நிற்கிறோம் என்றெல்லாம் கவலைப் படமாட்டார், அதற்கு சிரித்தபடி ” இதை போய் உங்களிட கேட்டனே, நீங்களாச்சு பிள்ளைகளாச்சு, பிறகு வந்து இப்படி செய்து போட்டுதுகள் என்று கவலைப்பட போறிங்க” என்றபடி நகர்ந்து விடுவார். “அப்பா சொல்லுறது சரிதானே, எனக்கு இப்படிதான் சிந்திக்கேலும்….நீங்க சரியாய் நடப்பீங்க  என்று அப்பாவுக்கு தெரியும், பிறகேன் கவலை” என்பார். அப்பாவின் முகத்தை அண்ணாந்து பார்த்தபடி, இவர் எப்படியெல்லாம் சிந்திக்கிறார், என்று  ஆச்சரியமாக பார்ப்பேன். அப்பாவின் பாதுகாப்பு வலயம் ( Safe  zone  ) பெரியது, அதனால் அவரால் அப்படி சிந்திக்க முடிந்தது, அம்மாவுக்கு அப்படியில்லை மிக சிறியது; குடும்பம், மரியாதையை என்ற சிறிய வலயத்தை விட்டு வெளியில் பாதுகாப்பாக சிந்திக்க முடியாதிருந்ததை இப்போதுதான் உணர முடிகிறது.

                                            சிறிது தூக்கம்தான், உடன் கலைந்துவிட்டது. வீட்டைச்  சூழவும் மறக்க முடியாத நினைவுகள் நிறைந்தே இருக்கின்றன. சூழ இருக்கின்ற ஒவ்வொரு பொருட்களும், இந்த வீட்டினுள் வந்த வரலாறோடுதான் இருக்கின்றன. தேவையில்லை என்று வெளியேற்ற மனமும் இடம் கொடுப்பதில்லை. அது அங்கேயே இருந்துவிட்டுப் போகட்டும், எமக்கென்ன இடைஞ்சலா தருகிறது,  எப்பவோ ஒரு நாளைக்கு உதவும்,  என நாட்களை நகர்த்துவதுமுண்டு. பொருட்கள் என்றும் தனியாக இருப்பதில்லை அவற்றுடன் நினைவுகளும், கனவுகளும் சேர்ந்துதான் இருக்கின்றன, ஒரேபொருள் ஒவ்வொருவருக்கும் வேறான பார்வையைத்  தருவதுடன்,அந்த   நினைவுகளும், கனவுகளும் ஒவ்வொருவருக்கும்  வேறாகத்தான்  இருக்கின்றன.

                எழுந்து சென்று,  திறந்திருந்த யன்னலூடாக வீதியைப் பார்வையிட்டேன். பார்த்துப்  பழகிய இடமென்றாலும், ஒவ்வொருகணமும் ஏதோ ஒரு மற்றம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது. ஒரு நாளைப் போல் இன்னொருநாள் இருப்பதில்லை. இருந்தாலும், இன்றுபோலவே நாளையும் இருந்துவிடாதா என ஏங்கிய கணங்கள், நாட்கள் எத்தனையோ. கண்கள் எதிலும் குறிப்பான பார்வையை தவிர்த்து, அன்று ஏங்கிய கணங்களையும், நாட்களையும் மனம் நாடிக்கொண்டே இருந்தது.

                                             எவ்வளவோ மாறிப் போய்விட்ட சூழல்களும், அவற்றினுள் தம்மை மாற்றிக்கொள்ள முடியதுபோன சூழல்களும் சேர்ந்தே இருந்தன. மாற்றமடையாமல் இருந்த சூழல்கள்தான், எம்மோடு அதிக கதைகளைப் பேசும்,  வீதியின் எதிர் பக்கத்தில், என் பார்வையில் எப்போதும் படும் அந்த பஸ் தரிப்பிடம், பலதடவைகள் புதிய புதிய மாற்றங்களை கண்டாலும், அங்கு நின்று செல்லும் அநேகமானவர்கள் எமது சூழலுக்குரியவர்கள்தான்,  அவர்களின் வயதுக்கும் அதன் மாற்றத்துக்கும் நிறையவே தொடர்பிருந்திருக்கும். அவர்களின் வாழ்க்கைக்கும் நிறைவேறிய மற்றும் நிறைவேறாத பல எண்ணங்களுக்கும் தொடர்பிருந்திருக்கும்.

                  கண்கள் மீண்டும் வீதியின் மறுபக்கம் நோக்கியது, இன்னும் கடைத்தெருக்கள் முழுமையாக திறக்கப்படாமல், அன்கொன்றும்  இன்கொன்றுமாக திறந்திருக்கிறது, எனது கண்கள் அங்கு பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்த குமரன் சில்க்ஸ் கடையில் நிலைத்துநின்றது. இன்னும் திறக்கவில்லை, திறக்க பத்து மணியாகும், மூடுவதற்கு எப்படியும் இரவு ஒன்பதுமணிக்கு மேலாகும். பகல் நேரங்களை விட இரவு நேரங்களில்தான், கடையின் அழகு நன்றாக விளங்கும். சிறிய கட்டிடமொன்றில் ஆரம்பித்த கடை,  நன்றாகவே வளர்ச்சியடைந்துள்ளது. அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு காலகட்டமும் என்னை ஒருவகையில் இணைத்தே இருந்தது.

                                             அக்காலத்தில் உயர்தர வகுப்புகளுக்கு செல்வதாக இருந்தால், இங்கிருந்து   அடுத்த நகரத்துக்குப் பஸ் மூலம்தான் செல்லவேண்டும்.           போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் எண்ணிக்கையும் அப்போது  குறைவு, பஸ்களில் ஆட்களும் அதிகம். தனியார் பஸ் சேவைகள் அப்போது இல்லை. எல்லாம் அரச சேவையாகவே இருந்தது. போக்குவரத்தில் இடர்பாடுகள் இருந்தாலும், பாடசாலைக்கான பஸ் சேவை திருப்திகரமாக இருந்தது. அப்போது இரண்டு நேர பாடசாலை , மலை மூன்று மணிக்கு பின்னர்தான் பாடசாலை விடும். அங்கிருந்து பஸ் நிலையத்துக்கு வந்து, ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு ஏறி இருக்கைகளை பிடிப்பதென்றால் அது ஒரு தனிப்பட்ட திறமைதான் வேண்டும். அந்த காலத்தில் புத்தக  பைகள் அதிகமாக  பாவனையில்  இல்லை, ஒருசிலரிடம்தான் இருக்கும், ஏனையோர் எல்லாவற்றையும் கைகளில்தான் வைத்திருப்பர், நானும் கூட.

              ஒருநாள்  பாடசாலை முடிந்து, வந்து ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு  ஏறும் போதுதான் எனது கொம்பாஸ் பெட்டி கை தவறி நிலத்தில் விழுந்து மிதிபட்டபோது, கீழே இறங்கி எடுக்கமுடியாமல் தவித்தேன், கீழே இறங்கி வருவதென்பது முடியாதகாரியம். ஒருவாறு பஸ்சின் யன்னலினூடாக வெளியே எட்டி யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று முனைந்தபோதுதான்,   கொம்பாஸ் பெட்டியின் உள்ளே இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து, பெட்டியினுள் அடுக்கியபடி அவள்  என்னிடம் நீட்டினாள். அந்த கண்களில் இருந்த குழந்தை தானம் ,இந்த நினைவுபோல பசுமையாக உள்ளது, அவள் என்னுடைய நகர் பகுதியை சேர்ந்தவள்தான், வழமையாக ஒரே பஸ் நிலையத்தில் இருந்துதான் பாடசாலைப் பிரயாணம். அவளுடைய அந்த பொறுப்பான செயல் எதோ ஒருவகையில் என்னை ஈர்த்திருந்தது. ” தேங்க்ஸ் ” என்றபடி வாங்கிக்கொண்டேன். பின்னர்  அவளை எங்கு  காணும் போதும் ஒரு நன்றி உணர்வே மேலோங்கி நிற்கும். அப்போது அவள் சிறிய ஒரு பிள்ளை , ஒரு பத்தாவது தரத்தில்தான் படித்துக்கொண்டிருக்க வேண்டும். அழகிய கண்கள் எடுப்பான மூக்கு, நல்ல நிறம், மொத்தத்தில் திரும்பி ஒருதரம் பார்க்க வேண்டும் போல் தோன்றும் அழகு. நான் எதனையும் பெரிதாக பொருட்படுத்தாது எனது படிப்பிலே தீவிரமாக இருந்ததால், காலம் உரிய பாதையில் என்னை கொண்டு சென்றது, இருந்தாலும் எனது மேசையில் இருந்த அந்த கொம்பாஸ் பெட்டி அந்த காட்சியையும் அவளின் குழந்தைத்தனமான அந்த பார்வையும் எப்போதும் நினைவுக்கு கொண்டுவரும். ம்ம்ம்ம் …” நல்ல ஒரு பிள்ளை” என்ற வார்த்தை மனதில் உருவாகி மூச்சுக்காற்றில் வெளியேறும். சிறிது காலங்களின் பின் அவளை எங்கும் என்னால் காணமுடியாது போனது, அவளை பற்றி யாரிடமும் விசாரிக்கவும் அப்போது எனக்கு தோன்றவில்லை. ஆனால் அந்த கொம்பாஸ் பெட்டி மாத்திரம் எனது புத்தக அலுமாரியில் கிடக்கிறது  , பழையதாக்கிப் போய் பின்னர் புதியவை சில வாங்கியிருந்தாலும் , அது எதோ ஒரு நினைவு சின்னம் போல் கண்ணில் படும், எறிவதுக்கு மனமின்றி.

                                      கேட் திறக்கும் சத்தம் கேட்க ,  பஸ் நிலையத்தின் மீதிருந்த பார்வை மீண்டு  வீதியை ஒட்டியிருந்த வாசலை நோக்கியது. தங்கம் சந்தையிலிருந்து திரும்பியிருந்தாள். ” என்ன, நாட்டு கோழி வாங்கப்போறன் என்று போனாய், கிடைச்சுதா?, என்றபடி அம்மா வாசல் கதவுவரை செல்வது புரிந்தது. “தம்பிர அதிஷ்டம், நல்ல பாணி சேவல் ஒன்று கிடைச்சுது, அங்கேயே வெட்டி எடுத்து கொண்டுவந்தான்”, என்றபடி சமயலறைப் பக்கம் போவது புரிந்தது. ” தம்பி , தேத்தண்ணீ ஏதும் போட்டுத்தரையா?, சம்சாவும் வாங்கிவந்திருக்கன்”, என்ற படி கூடத்திட்க்குள் வந்தபடி கேட்டள்.  “இது என்ன கேள்வி, அவன் நித்திரையோ என்னவோ, சாப்பிட்டு எவ்வளவு நேரம், நீ தேத்தண்ணியை போடு, அவன் குடிப்பான், போட்டுவிடு சொல்லு”  என்றார் அம்மா. என்தொடர்பாக அவர்களின் சம்பாஷணை….. அவர்களே விடயத்தை முன்வைப்பார்கள் பின்னர் அவர்களே தீர்மானத்திற்கும் வந்துவிடுவார்கள்.  சிறிது நேரத்தின் பின் அம்மாவின் ” தம்பி” என்று கூப்பிடும் சத்தம் கேட்டது. “ஓம் வாறன்” என்றபடி கீழே இறங்கி வந்து, அம்மாவின் அருகில் அமர்த்தபடி , அவரின் மடியில் இருந்த சுழகில் நன்றாக தீட்டிடப்பட்டிருந்த கைக்குத்தரிசி இருந்தது, ” தம்பிக்கு கைக்குத்தரிசி இப்ப விருப்பமா, இப்பவும்  நாங்கதான் அவிச்சசு, காயவைத்து, குத்தி எடுக்கிறது. எனக்கென்னவோ இந்த தவிடதரிசித்தான் விருப்பம், வேணுமெண்டா போகக்குள்ள கொண்டுபோ, நேற்றுதான் பக்கத்தில குத்தியெடுத்த, இந்த காகத்துக்கு காவல் பாக்கிறதான் போதும் போதும் என்றகிரும்”, என்றபடி அரிசியினுள் கற்களை தேடிக்கொண்டிருந்தார். நான் சிறுவனாக இருந்த போது எமது வீட்டின் கிணற்றடிக்கு பக்கத்தில்தான் நெல்லினைக் கழுவி, பெரிய தாச்சியினுள்வைத்து , விறகடுப்பில் அவிப்பார்கள், நெல்லினை காயவைக்கும் போது, காகத்திற்கு காவல் பார்ப்பதற்கு,  கையில் ஒரு கம்பினை   தந்து,   என்னைத்தான் அம்மா வீட்டு விறாந்தையில் இருத்தி விடுவார். ஓடி விளையாட முடியாது. ஓரிடத்தில் இருந்தபடியே, அம்மாவை திட்டிக்கொண்டே இருப்பேன், இப்போது நினைக்கும்போது என்னவோ போலிருக்கிறது, எதிர்காலத்தை என்னவென்று அறிந்துகொள்ளாமல் எல்லாமே நடந்துகொண்டிருக்கிறது, தெரிந்துகொண்டால் வாழ்க்கையில் சுவாரசியம் எதுவும் இருக்காது, அன்று காகத்திற்கு காவல் வைத்ததை நினைத்து அம்மாவை எதிர்க்க முடியாவிடினும் மனதுக்குள்ளே திட்டிக்கொண்டதை நினைக்க, இப்போது கண்கள் நனைகின்றன.

                                     அப்பாவின் மறைவின்பின், அம்மாவின் தனிமை எங்கள் இருவராலும்தான் ஓரளவு தீர்க்கப்படக்கூடும் என்பதை உணர்ந்துகொள்ள அவ்வளவு காலம் தேவைப்படவில்லை. அம்மாவின் சிறிய சிறிய கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஊடகங்களாக எங்களை நாங்களே மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. கால ஓட்டத்தில் சந்தர்ப்பங்களும், அனுபவங்களும், சூழ்நிலைகளும் வாழ்க்கையின் புரிதலை நன்றாகவே கற்றுத்தந்திருந்தது. சூழ்நிலைகளும், அனுபவங்களும் மாற்றமடையும் போதுதான், தான் ஒரு தனியனல்ல என்பதும், முடிவெடுக்கும் சந்தர்ப்பங்களில்   சில சமயம் மற்றயவரின் முடிவுகளை எம் முடிவுகளாக ஏற்றுக்கொள்ளத்தான்  வேண்டும்  என்பதை அறியமுடிகிறது.

 சுழகில் இருந்த அரிசியை கிள்ளி வாயில் போட்டபடி , ” நல்லா காய்ந்திருக்கு , கொஞ்ம் இடிந்துபோய் இருக்குமே” என்றபடி அம்மாவின் முகத்தினை பார்த்தேன். “காகத்துக்கு காவல் பார்த்த அனுபவம் இருக்கத்தானே செய்யும்”, என்றபடி சிரித்தார். ” ம்… ம்….. ..கொஞ்சங் கூடத்தான் காய்ந்து போய்ற்று”, என்றபடி அவர் சமையலறை  பக்கம் நகர, தங்கம் தேநீருடன் சம்சாவையும் தட்டில் ஏந்தியபடி வந்து ” தம்பி ஆறிவிட போகுது , சூடா குடியுங்க ” என்று மேசையில் வைத்துவிட்டு அவளும் சமயலறைக்குள் சென்றாள்.

                                           தேநீர் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு, வாசலைத்  தாண்டி வெளியே வந்தபோது கத்தா மரத்தின் நிழல் வாசலை முற்றாக நிரப்பி, ஒரு குளுமையைப் பேணி இருந்தது, வெளவால்கள் கடித்துப் போட்டிருந்த கத்தா பழங்கள் சிதறி கிடந்தன. இப்போது அதை யாருமே தொட விரும்புவதில்லை, என்பது தெரிந்தது. அந்த நாட்களில் அவற்றை பொறுக்கி கல்லில் வைத்து உடைத்து அதன் விதையினை உண்டது இன்னும் ஞாபகமாகவுள்ளது. பாதாம் பருப்பின் சுவையினை ஒத்ததாக இருக்கும். வீதி வரை நீண்டிருக்கும் சீமெந்து தரை மீதிருந்த கத்தா பழங்களை கால்களால் தட்டிவிட்டபடி, கேட் வரைக்கும் நடந்து சென்று, வீதியின் எதிரே இருந்த பஸ் தரிப்பு நிலையத்தில் கண்கள் பார்வையை நிலை நிறுத்தின.

                              அன்றொருநாள், வீதியில் அதிக நடமாட்டமில்லை, காலை 8  மணியளவில் இருக்கும், வெயில் வீதியை நிறைத்திருந்தது. பிராயணப் பையினை காலருகில் வைத்தபடி, இதே பஸ் தரிப்பிடத்தில் எனது பல்கலைக்கழக விடுதிக்கு செல்வதற்காக காத்துக்கொண்டிருந்தேன். பொறியியல் பீடத்தின் இரண்டாம் வருடத்தில் படித்துக்கொண்டிருந்த காலம். சற்று தொலைவில் கறுப்பு நிற, மடிக்கும் குடையினை பிடித்தபடி விரைவாக யாரோ  நடந்து வருவது உணரக்கூடியதாக இருந்தது. எனது கவனம், அது யாராக இருக்கலாம் என அறிந்துகொள்ள திரும்பியபோது, அவள் மிக அருகில் வந்திருந்தாள். யார் என தீர்மானித்துக்கொள்ள எனக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை, நன்றாகவே வளர்த்திருந்தாள், வயதுக்கேற்ற முதிர்ச்சி அவளின் முகத்தில் தெரிந்தது, ஒரு ஐந்து அல்லது ஆறு வருட இடைவெளிகள்  இருக்க வேண்டும், அன்று பார்ததன்பின் இன்றுதான் மிக அருகில் பார்க்கிறேன், ” மதிச்சிற்றிங்களா?”, என்றபடி எனது முகத்தினை ஆவலோடு, எனது பதிலை எதிர்பார்பதைபோல்,  முகத்தைப் பார்த்து கொண்டிருந்தாள்.” ம்ம்ம்ம், என்றபடி எனது தலையினை அசைத்தபடி , கொம்பாஸ் பாக்ஸ் ….” என்றேன். தலையை குனிந்தபடி ” ம் ம் ம்  இன்னும் அது ஞாபகம் இருக்குது போல” என்றாள். ” சின்ன காலத்தில கண்டதிற்கு பிறகு இப்பதான் காணுறான், நல்ல வளந்திற்றீர், இவ்வளவுகாலமும் எங்கபோய் இருந்தீர், இப்ப என்ன செய்யிறீர்”, என்றபடி அவளின் பதிலை எதிர்பார்த்தேன். ” அப்பாவிற்கு  இடமாற்றம் வந்ததோடு நாங்களும் அவரோடு போய்டம், உயர்தரம் வரைக்கும் படித்தான், அதுக்குமேல போகல, படிக்கவேணும் …., இப்ப யூனிவசிட்டி போய்விட்டதா கேள்விப்பட்டன், இப்ப நாங்க எல்லாரும் இங்க, ஊருக்கே வந்துவிட்டம்”, என்று, எதோ என்னிடம் ஒப்புவிக்கவேணும் போல சொல்லிக்கொண்டே போனாள். ” நான் இப்போ இரண்டம் வருடம், பொறியியல் படிக்கிறான்,  கொஸ்ட்லுக்கு போறதுக்குத்தான் நிற்கிறன், பஸ் வரவேண்டிய நேரம், இன்னும் காணல்ல, எப்படியும்  போய்சேர மலையாகிரும்”, என்றபடி அவளை பார்த்தேன், அதே குழந்தைத்தனமான அழகிய கண்கள், எந்த மாற்றமும் காணமுடியவில்லை, ” வீட்டுக்கு, லீவு விட்டல்தான் வாறதா”, என்றபடி எதோ ஒரு எதிர் பார்ப்புடன், கேட்டாள். “ம் ம் ..”.என்றபடி, தலையை அசைத்தபடி, அவளை பார்த்தேன். எதோ கேட்கக்கூடாததை கேட்டுவிட்டதை போலும், அதிகமாக எனது தனிப்பட்ட விடயங்களுக்குள் வந்துவிட்டோமா  என அவள் உணர்வது தெரிந்தது. ” ஏதாவது மேலும் படிக்கப் பாருங்கள், பின்னுக்கு உதவும்” என்றுவிட்டு பஸ் வரும் திசையை பார்த்ததபின். ” இப்ப எங்க போக வந்தனீங்க” என்றபடி அவளைப் பார்த்தேன். எனக்கு பதில் கூறுவதற்கு அவசரப்படுவதும், ஏன் இவ்வாறு கேட்கமாட்டேனா என அவள் எதிர்பாத்திருந்ததை போல் இருந்தது அவள் முகம். “கடைக்கு வந்தனான், நீங்க வீட்டில இருந்து ரோட்டை குறுக்கறுத்து போறது தெரிந்தது, அதுதான் , கதைக்கவேணும் போல இருந்தது, ஓட்டமும் நடையுமாக வந்தான்”, என்றாள்.  “ஏன் “, என்று கேட்கவேணும் போல் இருந்தது, ஆனால் அது முறையல்ல என உணர்ந்துகொண்டேன். பஸ் வந்து நின்றது, ஏறி யன்னலோரம் வந்து அமர்ந்து, யன்னலுக்கூடாக அவளை பார்த்தேன், அதே பார்வை , கையில் கொம்பாஸ் பொக்ஸ் இல்லை, ஆனால் நிறைய கனவுகள் இருப்பதை உணர்ந்துகொண்டேன்.

                                                 பஸ் பிரயாணம் முழுவதிலுமே அவள் நிறைந்திருந்தாள். குட்டித்  தூக்கங்களிடையே  தெளிவற்ற கனவுகள் மீட்டுப் பார்க்கமுடியாதவையாக இருந்தன. பல்கலைக்கழகத்தின் வாசலில் பஸ் நின்றதும், பஸில் இறங்கி பனிமூட்டம் நிறைந்த மலைப் பாதை ஊடாக நடந்து சென்றபோது, பின்னே சென்ற இருளில் மூழ்கிய பாதையைப் போல், அவளின் நினைவுகளின் ஆக்கிரமிப்பும் கரைந்து சென்றது.

                  தற்போதைய தொலைத்தொடர்பு வசதிகளை போல் எந்த முன்னேறிய வசதிகளும் அப்போது இல்லை, தபால்க் கடிதத்  தொடர்பு ஒன்றுதான் எமக்கு சாதாரணமாக கிடைக்கக்கூடிய ஒன்று. தொலைபேசி வசதி பற்றி பேசவேண்டியதில்லை, அவை வெறும் நான்கிலக்கங்களை மட்டுமே கொண்டிருந்தன. சிறு நகரங்கள் வரை மட்டுமே இவ் வசதி மட்டுப்படுத்தி இருந்தது. எப்போதோ இருந்துபோட்டு வரும் அம்மாவின் கடிதங்கள், அவரின் கையால் எழுதி அனுப்புவதனால், அவரின் கையெழுத்தும், எழுத்துப்  பிழைகளும் அவரே முன்னுக்கு நிற்பதைப்போல் உணர்வை தரும். வசதிகள் இருந்தும் வாய்ப்புகள் அமையாமல் போய்  கல்வியில் பின்தங்கி இருந்தாலும், அவர்களிடம் இயல்பாகவே அமைந்த முகாமைத்துவப் பண்பு, எங்களை கல்விக்கூடாக உயர்த்த வேண்டும் என்ற உந்தல்கள் என்பன, அப்பா இல்லாத போதும், தனியாக  இருந்து   இவற்றைச்  செயற்படுத்தியிருக்கிறார். அம்மாவுடன் பேசிக்கொள்வதாக இருந்தால் வீட்டுக்குத்தான் வரவேண்டி இருக்கும், அப்படி வந்தாலும் மணிக்கணக்காக அருகில் இருத்தி எனது தலையை கோதியபடிதான் முழு கதைகளும் பேசப்படும், இருந்த இடத்தை விட்டு எழமனமில்லாமல், பிடிக்குதோ பிடிக்கல்லையோ அவரின் பேச்சினை கேட்டுக்கொண்டே இருக்கவேணும் போல் இருக்கும், இவ்வாறு கட்டிப்போடும்  பாசம் எவ்வாறு  ஊப்படுகிறது என்பதை உணர்ந்து, அறிய மிக நீண்டகாலம் எமக்குத் தேவைப் படுகிறது.

                   வீட்டுக்கு திரும்பி இருந்த ஒரு சமயம்,  அவளை ஒரு தடவை தற்செயலக புத்தக கடை ஒன்றினுள் சந்திக்க கூடியதாக இருந்தது. நான் கடைக்குள் வந்த நேரம் அவள் என்னை கண்டிருக்க வேண்டும், இருந்தாலும் என்னை காணாததுபோல் பாவனை செய்துகொண்டு, ஏதோ புத்தகங்களைத் தேடிக்கொண்டிருப்பதுபோல் இருந்தாள். அவளுடைய பார்வையில் இருந்து விலகி, அவளுக்கு பின்புறமாக வந்த போது, புத்தகத் தேடுதலை விட்டு என்னை தேடுவது புரிந்தது.  தவறவிட்டுவிட்ட உணர்வும் ஏதோ வேதனை கலந்த கண் சுருக்கிய பார்வையும்  முகத்தில் வெளிப்பட்டது. “ஹலோ, என்ன புத்தகம், தேடவேணும் என்றால் , நானும் சேர்ந்து தேடித்தாறன்” என்றேன். எனது குரலை கேட்டு திரும்பியவள், தலையை தாழ்த்தியபடியே நின்றாள். “என்ன , என்ன புத்தகம்….” என்றேன். ” குமுதம், போன வார புத்தகம் கிடைக்கல, அதுதான் தேடிக்கொண்டு நின்றனான்” என்றாள். ‘அவ்வளவு என்ன விசேடம் அதில “என்றேன்.” என்ன? …குமுதம் படிக்கிறது இல்லையா” என்றாள். ” இல்ல , நேரம் இல்ல என்பதை விட , ஆர்வம் இல்ல, எல்லாம் படிப்போடு மட்டும் தான் ” என்றேன். ” எனக்கு நேரம் போகவேணும், அதுதான், இதுல   ‘சுஜாதா’ எழுதுற  ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற கதை  தொடராக வருது, நல்ல படியா போகுது, எனக்கு மதுமிதா என்ற பாத்திரம் பிடிச்சிருக்கு, ஒரு குழந்தை தனமான பாத்திரம், அடுத்தவாரம் என்னவரும், எப்படி போகும் என்று ….ஒரே  …” என்றபடி நிமிர்ந்து பார்த்தாள். இப்போது பழைய நிலைக்கு திரும்பியிருந்தது முகம், ” கிடைசிற்றுதா..” என்றேன். ” ம்..ஓ …இப்பதான் இங்கதான் கிடந்தது, ஒரு பிரதிதான் இருந்தது.” என்றாள். ” எப்ப வந்த, இப்படி எங்காவது சந்திச்சால்தான் கதைப்பிங்களாகும்”, என்றபடி எனது முகத்தினை பார்த்தாள். ” நேற்றுதான், வந்தான், அம்மா பேப்பர் எடுத்து வர சொன்ன , அதுதான் வந்த நான்” என்றபடி அவளை பார்த்து சிரித்து கொண்டு, வெளியே வந்தேன். என் பின்னல் வந்தவள் ,” எப்ப திரும்பி போறிங்க, டெலிபோன் கதைக்க அங்க வசதி ஏதும் இருக்கா”, என்றாள். ” ம்..ம் ஹு ம் …சாதாரணமா கிடைக்காது….கொஞ்சம்  அதுக்காக மினக்கடவேணும்…..ஏன் “, என்றபடி அவளை பார்த்தேன். ” இல்ல ..சும்மாதான் கேட்டனான், முடியும் என்றா ..இந்த தொடர் கதையை படிச்சு பாருங்க” என்றாள். ” பார்ப்பம் என்றபடி வெளியே வந்தேன். ” போயிற்றுவரன் ” என்றபடி வீதியில் இறங்கி நடந்தாள். திரும்பி ஒருதடவை பார்த்து சிரித்துவிட்டு ” அடுத்த முறை வந்தால், கதையைக் கேட்பன்” என்றாள். ” ம்.. பார்ப்பம்” என்றபடி வீட்டை  நோக்கி  நடந்தேன்.

 தொடர்சியாக அந்த கதையை படிக்கமுடியவில்லை,அதற்கேற்ற சுழலும் எனக்கு கிடைக்கவில்லை. மிக அண்மையில்தான் அந்த கதை திரைப்படமாக “ஆனந்த தாண்டவம்” என்றபெயரில் வந்திருந்தது. அவளுக்கு பிடித்த அந்த கதாபாத்திரம் ” மதுமிதா”,வை தமன்னா ஏற்றிருந்தார், மிக பொருத்தமான தேர்வு, தமன்னா. படத்தை பார்த்தபின்தான் கதையை, ஈ-புத்தகத்தில் படித்தேன். இந்தக் கதையின் தொடரின் முடிவுக்காக எவ்வளவு நாள் அந்த புத்தக கடையை ஏறி இறங்கி இருப்பாள்.

                               “தம்பி” என்ற அம்மாவின் குரல் கேட்டு திரும்பினேன், “தோடம்பழம் கரைச்சனான், உள்ள வந்து, இருந்து குடி, கன நேரமா அங்கேயே நின்றுகொண்டிருக்கிறாய், கால் நோக்கப்போகுது, நல்ல நிழலா இருக்குது என்ன” என்றபடி அருகே வந்து, “கதிரை ஒன்றை எடுத்துவந்து போட்டுத்து, இருந்து குடியன் மகன், முந்தநாள் பெய்த மழைல நிலம் நல்ல குளிந்துபோய் இருக்கு” என்றபடி மீண்டும் உள்ளே சென்றார். அவர் பின்னல் நானும் நடந்தேன். அம்மா தந்த தோடம்பழச் சாறினை குடித்துவிட்டு , ஒரு பிளாஸ்டிக் கதிரையுடன் வெளியே வந்தேன். அன்றய தினசரி பத்திரிகையை என்னிடம் தந்துவிட்டு ” நேரம் போகல்லேண்ட இதை படிச்சுக்கொண்டு இரு, சமையல் இந்தா முடிந்திரும்” என்றபடி உள்ளே சென்றார். பத்திரிகையில்  நாட்டிலுள்ள அனைத்து வகையினருக்கும் தேவையான விடயங்கள் நிரப்பப்பட்டிருக்கும், எனக்காக மட்டும் என்ன இருக்கக்கூடும், ஓரிரு பக்கங்களில் தனிப்பட்ட எனக்கானவை முடிந்துவிடும், சிலர் பரீட்சைக்கு படிப்பதை போன்று ஓரெழுத்து விடாமல், கொடுத்த காசுக்கு நிறைவாக வசித்து  முடித்து விடுவார்கள்.            நிழலின் குளுமை இன்னும் இருந்தது, சீமெந்து தரையில் கதிரையினை போட்டு வீதியினை பார்த்தபடி அமர்ந்துகொண்டு பத்திரிகையினை புரட்டினாலும் அதில் நாட்டம்  இல்லாமல் இருந்தது. மடித்து மடியில் வைத்துவிட்டு,கதிரையில் சாய்ந்துகொண்டேன்.

                                 அன்று ஒருநாள் பல்கலைக்கழகத்தில் இருந்து திரும்பி இருந்தேன். பிரயாணத்தில் நல்ல தூக்கம் இருக்கவில்லை, சோர்வினால் ஒரே தூக்கமாக இருந்தது, எழும்பும்போது காலை ஒன்பதுக்கும் மேலாக இருந்திருக்கும், காலைச் சூரியனின் ஒளி கண்ணாடி யன்னலை சூடாகிக்கொண்டிருந்தது, எழுந்து சென்று யன்னலை திறந்தபோது சூரிய ஒளியுடன் மரநிழலில் தேங்கியிருந்த குளுமையான காற்றும் உள்ளே நுழைந்தது. கண்களை கசக்கி சோம்பல் முறித்தபடி மீண்டும் கட்டிலில் அமர்ந்தபோது மேசையில் வைக்கப்பட்டிருந்த தேநீர் கோப்பை கண்ணில் பட்டது, அம்மாதான் வைத்துவிட்டு போயிருக்கவேண்டும். எனது நித்திரையை குழப்பாமல் வைத்துவிட்டு சென்றிருக்கவேண்டும், அக்கா என்றால் நிட்சயமாக ” டேய் இன்னும் என்ன நித்திரை வேண்டிக்கிடக்கு ” என்றபடி எழுப்பிவிட்டுதான் சென்றிருப்பாள், தான் எனக்கு மூத்தவள் என்ற இடத்தினை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்கமாட்டாள், அவளுக்கு அப்படி ஒரு குணம்,

                                 இந்தநேரம்  அநேகமாக அவள் தனது வேலைக்கு புறப்பட்டிருப்பாள்; உயர்தர கல்வி முடிந்ததும் மேற்கொண்டு  படிப்பதை நிறுத்திவிட்டு, தான் வேலைக்கு போகவேண்டும் என்பதிலே குறியாக இருந்தவள்,  அவள் எதிர்பார்த்ததைப்போல் வங்கியிலும் வேலை கிடைத்திருந்தது. அது அம்மாவிற்கு பெரிய ஆறுதலாக இருந்தது. வீட்டு நிருவாகத்துக்கு போதியளவு வருமானம் இருந்தாலும், எனது படிப்பு செலவிற்கு அவளின் வருமானம் ஒரு பெரிய துணையாக இருந்தது. ” என்னதான் இருந்தாலும் உனது படிப்புக்கு நான்தான் செலவழிகிறான், விளங்கினால் சரி” என்பாள். “அக்கா தானே ” என்றதும், ” அது….” எனும்போது ஒருவித பெருமை அவளது முகத்தில் இழையோடும்.

                                  தேநீரை அருந்திவிட்டு அறையில் இருந்து வெளியே வந்து படிக்கட்டுகளால் இறங்கும்போது அம்மாவும் தங்கமும் எதோ உணர்வு பூர்வமாக கதைத்துக் கொண்டிருப்பது கேட்டது. எனது கால்கள் இறங்குவதை தவிர்த்து அவர்களின் கதையை கேட்பதிலே  கவனம் சென்றது. காலை உணவுக்கான ஆயத்தங்கள் முடிவடைந்து, சற்று ஆறுதலாக முன் மண்டபத்தில் அமர்ந்துகொண்டு அன்றய பத்திரிகையை பார்த்தபடி அவர்களிடையே புதினங்களும் , உள்ளக்கிடக்கைகளும் அலசல்களாக வெளிவரும். “இவரும் போய் பதினைந்து வருடம் ஆயிற்றுது, எதோ என்னால முடிந்த வரைக்கும் இருக்கிறதைக்கொண்டு படிப்பிக்கிறன், அவள் பெண்பிள்ளை, இப்ப வேலைக்கும் போறாள், காலாகாலத்துக்கு ஒரு கல்யாணம் காட்சிய அவளுக்கு செய்திட்டா, ஒரு பாரம் இறங்கிரும். இவன்ட படிப்பும் முடிய மூண்டுவருசம் எடுக்கும், பிறகு வேலதேட …..ம்” என்று தனது மனப் பாரத்தையும் , சலிப்பையும் வெளிவிட்டார். ” ஏன் அம்மா அதுகளுக்கென்ன, நல்லா ஒழுங்காதானே  வளத்திருக்கீங்க, உங்கட எண்ணத்தையும் சொல்லையும் மீறி அதுகள் என்னசெய்ய போகுதுகள்” என்று சமாதானப்ச் படுத்தினாள் தங்கம். ” இல்லடி , எல்லாம் சொல்லியா கிடக்குது, ஒன்றிருக்க ஒன்று நடந்திட்டா நான் தனியா இருந்து என்னசெய்வான், அவள் வீட்டோட  இருக்கிறதால எனக்கு ஒரு பயமும் இல்ல, இவன்தான் தூரத்தில போய் இருக்கிறவன், யார் எவர் எண்டு  தெரியாத பிள்ளையாரையும் பார்திற்றால்தான் எல்லாம் தவறா போயிரும், வளந்திற்றுகள் என்ர சொல்லுக்குள்ள நிக்குங்களோ தெரியாது” என்றபடி வசனத்தை முடிக்க முடியாமல் இருப்பதும், மூக்கு சிந்துவதுமாக இருந்தார்.  ” ஏனம்மா இந்தநேரம் இதுவெல்லாம் யோசித்து …..” என்றபடி

                                             “தம்பியக் கூப்பிடட்டா “என்றாள். ” இல்ல இராப் பிரயாணம், சோர்வாயிருக்கும், இன்னும் கொஞ்ம் தூங்கட்டும், எழுப்பவேணாம் விடு”, என்றபடி பெருமூச்சொன்றை விட்டார். ” தம்பி , அவன் பொறுப்பான பிள்ளை அம்மா, நீங்க வீணா மனச போட்டு குழப்பிக்கொள்ளுறீங்க, பாருங்க , அவனுக்கு நீங்கதான் பேசி கல்யாணம் செய்விப்பீங்க”,  என்று நம்பிக்கையாகச்  சொன்னாள். ” அவளுக்கொரு கல்யாணம் நடந்து முடியிறவரைக்கும் எல்லாம் சரியா இருந்திரவேணும், இதைத்தான் அவர்ர படத்தைப்பார்த்து ஒவ்வொருநாளும் நான் கேட்டுகொள்ளுறது, யார் தலைல என்னென்ன எழுதிஇருக்கோ”, என்றபடி பத்திரிகையை மடிக்கும் சத்தமும், கதிரையை விட்டுஎழும் சத்தமும் கேட்டது.

                             திரும்பவும் எனது அறைக்குச்  சென்று, கட்டிலில் சாய்ந்தபடி, அம்மாவின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும், எதிர்காலத்தை எதிர்கொள்ள அவர் முன்னே இருக்கின்ற சுமைகளும், என்னை எதோ செய்துகொண்டிருந்தது. அப்பா இல்லாமல் அவரின் தனியானதும் தனித்துவமுமான வழிநடத்தல் எந்த ஒரு தடையும் இல்லாமல் , அவரின் எண்ணப்படி நடந்துகொண்டிருந்தது. நிச்சயமாக எதிர்கால வாழ்கை தொடர்பாக எங்களின் சுய தீர்மானங்கள் அவரின் பாதையில் குறுக்கீடுகளை ஏற்படுத்தும். நட்பாகப் பழகும் பலரின் முகங்கள் ஞாபகத்தில் வந்து போய்க்கொண்டிருந்தன, பார்வைகள், கதை பேச்சுக்கள் , சந்தர்ப்பங்கள் எவ்வளவோ விடயங்களை மனம் சேமித்து வைத்திருந்து அசைபோட்டது, யாருமே அவ்வளவுதூரம் என்னுள் தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்கவில்லை, அந்த கொம்பாஸ் பெட்டி பெண்ணைத் தவிர. சில மதங்களுக்கு முன் அந்த புத்தக கடையில் சந்தித்ததன் பின் அவளைக் காணமுடியவில்லை. அம்மாவின் கனவுகளுக்கு எந்தொருவகையிலும் நான் தடையாக இருக்கக்கூடாது என்பதை ஏற்றுக்கொள்ள மனம் ஏனோ அச்சப்பட்டது. நான் ஏதும்  தவறக்கூடிய  சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேனா?, உறுதியாக எதையும் முடிவாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.  அம்மாவைச் சாதாரணமாக எதற்கும் எதிர்க்க முடியாது, அவரின் பாசத்தின் முன், எல்லாமே அடங்கிப்போய்விடும். எங்களைக் கட்டிப்போடும் ஆயுதம் , அது மட்டும்தான் அவரிடமிருந்தது.

               இருந்தாலும், எங்கோ ஒரு மூலையில் அவளின் முகம் ஒழிந்துகொண்டு அடிக்கடி வந்து போனது. அழகிய அந்த கண்களும், அதற்கூடாக சொல்ல துடிக்கும் எண்ணங்களும், எனக்கு புரிந்திருந்தாலும் , வேண்டுமென்றே தற்காத்துக்கொள்ளும் நானும், சமநிலை படுத்த முடியாமல் எண்ணங்களும் ஏதோ ஒருவித மனச் சோர்வைத்  தந்திருந்தது.  என்னை நானே ஏமாற்றிக்கொள்கிறேனா?,விடை காணமுடியாது, தவிப்பாக இருந்தது. எழுந்து சென்று யன்னலுக்கூடாக வானத்தை வெறித்து பார்த்துக்கொண்டு நின்றேன், கூட்டமாக பறந்த பறவைகள், கலைந்து, இரட்டையாகப் பறந்து, ஒற்றையாய் தனியே பறந்துசென்றது.   வீசிய காற்றில் மடியில் கிடந்த பத்திரிக்கையின் பக்கங்கள் பட படத்தன, எண்ணங்கள் மீளவும் நியத்திற்கு திரும்பின.

            மடியில் இருந்த பத்திரிகையை கதிரையில் வைத்துவிட்டு எழுந்து, கேட் வரை நடந்தேன், வீட்டுக் கேற்றினை ஒட்டியதாய் அமைந்த ஒரு பொது நடை பாதையும் அதனை அடுத்து அமைந்த பிரதான பாதையும், நடை பாதை நெடுகிலும் சிறிய நிழல் மரங்களும்  பரபரப்பான இடமாக இருந்தாலும் , ஒரு அமைதியான அழகினை அவ்விடத்துக்கு தந்திருந்தது. எனது சிறுவயதிலிருந்தே  ஒரு ஆழமான நெருக்கத்தை    இந்த சூழல் என்னுடன் பேணி வந்தது , ஒரு    வருடத்தின், சில மாத காலா இடைவெளியினுள், ஊதா நிற பூக்களை இலை தெரியாமல் பூக்கும், ஒரு நிழல் மரம், அந்த நடை பாதைக்கு அருகே இருந்தது. நாள் முழுவதும் அப்  பூக்கள் விழுந்தவண்ணமே இருக்கும். தரை முழுவதும் பூக்கள் நிறைந்து கிடப்பது மிகுந்த அழகு. பாடசாலை செல்லும் நாட்களில் , அம்மரத்தின் அருகே நின்று பஸ் ஏறுவதற்குள், மரத்திலிருந்து விழுந்துகொண்டிருக்கும் பூக்களை ஓடி ஓடி கைகளால் பிடிப்பது அப்போது  ஒருவித சந்தோஷத்தைக் கொடுக்கும். சில வருடங்களின் முன்னர்தான் பிரதான வீதியின் விஸ்தரிப்பின் போது அதனை வெட்டி அகற்றப்பட வேண்டியதாயிற்று, ஆனாலும் அந்த நினைவுகள் இன்னும் பசுமையாகவே இருக்கின்றன.

                                      அந்த மரமிருந்த இடத்தினை  ஒருதரம் பார்க்கவேண்டும்போல் இருந்தது. அவ்விடத்தில்தான் அவளை, இறுதியாக சந்தித்தது ஞாபகமாக உள்ளது. பல்கலைக்கழக விடுதியில் இருந்து விடுமுறை ஒன்றிக்காக வந்திருந்த நேரம், ஒரு காலை நேரம், பொழுது போக்காக வீதி புதினம் பார்ப்பதற்காக கேட் அருகில் நின்றிருந்த வேளையில், அம் மரத்தின் அருகில் அவள் நடந்து வருவது தெரிந்தது, “ம் ..கண்டால் எதாவது கதைக்காமல் விடமாட்டாள்” என்று மனதுக்குள் எண்ணியபடி, என்முன்னால் நடந்து செல்லும்வரை காத்திருந்தேன். எதிர்பார்த்த அந்த கணங்களுக்குள் அவள் வரவில்லை, கேட்டுக்கு வெளியே வந்து பார்த்தபோது, அந்த மரத்தடியில் நின்றவண்ணம் என்னை பார்த்து என்னை அவ்விடம் வருமாறு தலையை அசைத்து, சைகை செய்தாள். என்னவாக இருக்கும் என என்னால் எதையும் யூகித்துக்கொள்ள முடியவில்லை. கேட்டை திறந்துகொண்டு வெளியே வந்து, அவளருகில் சென்று “என்ன?” என்றேன். வழமையான அந்த குழந்தைத்தனமான முகபாவம் காணாமல் போயிருந்தது, நிறைய நாள்கள் துங்காதவள்போல் இருந்தாள். ” எப்பாவந்தனீங்க?” என்றாள், அதுவும் அதிக யோசனையின் பின் வருவதுபோல் இருந்தது. ” நேற்று…ஏன்?” என்றேன். ” இல்ல …ஒரு மூணுநாளா ….உங்களோட கதைக்கும் போல இருந்தது ….நேற்றும் வந்தான் ..காணல்ல”, என்றாள். “ம்…” என்றபடி , மதிலில் ஒரு காலினைஊன்றியபடி சாய்ந்து ” என்ன ஏதும் அவசரமோ?” என்றேன். கை விரல்களை இணைத்தபடி ,பெருவிரலால் உள்ளங்கையை அமர்த்தியபடி அவள் இருந்தது, ஏதோ ஒரு மனக்  குழப்பத்தில் அவள் இருப்பதை உணர்த்தியது .  “பிரயாண களைப்பில நான் வெளிய எங்கேயும் வரல, ம்……..என்னெண்டு சொன்னால் தானே எனக்கு தெரியும்.” என்றேன். ” எனக்கு என்னென்று சொல்ல தெரியல்ல…..சொல்லவும் வருகுதில்ல… உங்களுக்கு என்னப் பிடிக்குமா?.”, என்றுவிட்டு  தலையை தாழ்த்திக்கொண்டாள், என்னை நிமிர்ந்து பார்க்க முடியாதவளாய் மிகவும் தவித்தாள்,  ” பிடிக்கும் , ஒரு நட்பு என்ற நிலையில, ஏன்? …இப்ப இந்த கேள்வி” என்றேன். ” இல்ல …ஒன்றுமில்லை …” என்றபடி நடக்க முட்பட்டாள், கண்கள் சற்று சிவந்திருந்தன. ” பொறும்..இப்படி ஒன்றுமில்லை என்று போனா, நான் , எதை யோசிக்கிறது “, என்றேன்.  ” வீட்டில கல்யாணம் பேசுறாங்க,.. வெளில அனுப்பவாம்,..என்னக்கு போக பிடிக்கல்ல..” என்றபடி என்னை நிமிர்ந்து பார்த்தாள். அவளுடைய பார்வையை எதிர் கொள்ள முடியாமல், பார்வையை தவிர்த்துக்கொண்டேன். அவளுக்கு என்ன பதிலை சொல்வதென்று முடிவெடுக்க முடியவில்லை. எந்தொருவகையிலும் அவளுக்காதரவான ஒரு பதிலையும் கொடுக்கவும் முடியவில்லை. அந்தக் குழந்தைத் தனமான பார்வையும், சிரிப்பும் எங்கோ மறைந்து போயிருந்தன, இந்த சூழ்நிலைக்குள் இருந்து எவ்வாறு வெளியே வருவதென்ற தவிப்புத்தான் இவ்வாறு என்னிடம் கேட்க தோன்றியதோ என மனதுக்குள் எண்ணிக்கொண்டேன்.  மீண்டும் அவள், ”  உங்களுக்கு என்னப்   பிடிக்குமா ?”, என்றாள். ” இல்ல எண்டு சொல்லமாட்டான், பிடிக்கும் , ஆனா என்னால, உனக்கு என்ன சொல்லுறதென்று சொல்ல முடியல்ல” என்றேன். ” மன்னிக்கணும், நான் சொல்லுறத சரியாய் புரிந்து கொள்ளுங்க, நான் எந்த நிபந்தத்தையும் உங்களுக்கு தரல்ல, மிக நீண்ட காலமாக ஒருவருக்கொருவரை தெரியும், சந்திச்சிருக்கிறம், கதைச்சிருக்கிறம் ……உங்களை எனக்கு பிடிக்கும், உங்களுக்கு சிலசமயம் என்னில் விருப்பம் இருந்திருந்தா , அத என்னட்ட சொல்ல சந்தர்ப்பம் இல்லாம போய் இருந்தா அதுதான் ……கேட்டனான், நான் கேட்டது பிழை என்றா மன்னிச்சிகொள்ளணும்.” என்றாள். எதோ என்னிடம் முழுவதும் ஒப்பித்துவிட்டது போல மூச்சு வாங்கினாள். என் மீது கவனம் இருந்தாலும் என்னை பார்வையை எதிர் கொள்ள முடியாதவளாய் இருந்தாள். என்னிடம் தெரிந்த  சிறு அசைவுகளுக்கும், நான் ஏதும் சொல்ல முயற்சிக்கிறேனா என எதிர் பார்த்தாள். “யோசித்து சொல்லுறன் என்றா, அது எனக்கு தேவையான பதில் இல்லை, அதுல நான் எதிர்பார்த்த உண்மையான உங்களுடைய விருப்பம் இருக்காது. உங்களுடைய வாழ்க்கைல எனக்கொரு சந்தர்ப்பம் இருக்குமா? இருக்காதா?, என்ற ஒரு ஆசை, அவ்வளவுதான்” என்றாள், எனது கண்களில் நீர் முட்டிக்கொண்டிருந்தது. எதுவும் பேச முடியாதவனாய் நின்றேன். ” வரவா , வாறன் , நான் இப்படி வந்து கேட்டதுக்கு மன்னிக்கணும், எனக்கு வேறுவழி தெரியல்ல , வீட்டில உங்கட நிலைமை என்னென்று என்னக்கு விளங்கும், எங்கட வீட்டில என்னென்னவோ எல்லாம் சொல்லிப் பாத்திட்டான், அவங்க யாருக்கும் அக்கறை இல்லை…..” என்றபடி கண்களை துடைத்துவிட்டு, என்னை பார்த்தாள், அந்த அழகிய கண்களை நான் உற்றுப் பார்த்தபடி கண்களை மூடிகொண்டேன்.  தலையை மெதுவாக அசைத்து ” சாரி ” என்றேன், ” ம் ” என்றபடி , அவ்விடத்தை விட்டு மெதுவாக என்னை திரும்பி பார்க்காமலே நடந்து சென்றாள். தெரு வளைவில் அவள் மறைந்துகொள்ளும் வரை பார்த்தபடியே இருந்தேன். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது, துடைத்து விட்டாலும், மீண்டும் கண்கள் கண்ணீரால் நிறைந்துகொண்டது, மூச்சு சூடாக வெளியேறியது. நான் இவ்வளவு இறுக்கமானவனா?, என்னாலே என்னை நம்பமுடியவில்லை, கேட்டை  திறந்துகொண்டு உள்ளேவந்தேன். சமையல் அறையில் அவர்கள் உள்ளது தெரிந்தது, மாடிப் படிகளில் கால் வைக்கும் போது, என்னை அறியாமலே அழுகை வந்தது. அறைக்குள் வந்து கட்டிலில் சாய்ந்துகொண்டபோதும் , நடந்த நிகழ்வுகளின் தாக்கம் இன்னும் அதிகமாக இருந்தது. ” உன்னை எனக்கு நன்றா பிடிக்கும், ஆனா நான் கொடுத்துவைக்கல்ல” என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். எதோ யாருக்கும் தெரியாமல் கொலை ஒன்று செய்ததுபோல இருந்தது. பலநாட்கள் கனவுகளில் இந்த நிகழ்வு பலவடிவங்களில் என்னை பயமுறுத்திக்கொண்டிருந்தது.

இந்நிகழ்வின்பின் அவளை எங்கும் காணமுடியவில்லை, மீண்டும் ஒரு விடுமுறை காலத்திட்க்கு  வீடிற்கு வந்தபோது அக்காதான் சொன்னால்,” அந்த போஸ்மாஸ்டர்ட மகளுக்கு இந்தியாவில பதிவு நடந்து , போனகிழமைதான் டென்மார்க் போனவளாம், உனக்கும் தெரியும் டா அந்த பிள்ளையை, இதாலதான் அடிக்கடி போய்வருவாள், நல்ல அடக்கமான பிள்ளை. அம்மாவுக்கும் அந்த பிள்ளையில ஒருகண் இருந்தது, உனக்கு குடுத்துவைக்கலையோ இல்ல அவளுக்கு   குடுத்துவைக்கலையோ தெரியாது, இருந்தா நல்ல சோடிபொருத்தமாக இருக்கும் என்ன? ” என்றபடி என்னைப் பார்த்தாள். ஒருகணம் உலகமே இருண்டு வருவது போல இருந்தது.என்னை கட்டுப்படுத்திக்கொள்ள மிகவும் கடினமாக இருந்தது, அருகில் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டு , ” ம்” என்றேன் எந்த ஒரு உணர்வும் இல்லாமல். ” ஏன் டா, நான் இவ்வளவு கதைக்கிறேன், நீ என்னவோ ம் சொல்லுறாய், அப்ப உனக்குத்தான் கொடுத்துவைக்கல்ல” என்றபடி நகர்ந்தாள்.

                                         கசக்கி மூலையொன்றில் எறியப்பட்ட காகிதம்போல் , தேடுவராற்று கிடப்பதுபோல் இருந்தது. மீளத் திருத்தி எழுதமுடியாது, ஏறுக்கொள்வதில்தான் பிழைத்தல் தங்கியுள்ளது. எதிர்காலம் தனக்கொரு வழியை வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. முடிந்தால் சுத்தகரித்துக்கொண்டு சேர்ந்து செல்வது இல்லையேல் மடிந்துபோவது, எமக்காக அது ஒருதடவையேனும்  தனிப்பட்ட முறையில் திரும்பிகூடப்பார்க்காது.

                               “ஏன்டா ஒருமாதிரி இருக்கிறாய், என்ன?, நான் சொன்னது பிடிக்கலையா, சும்மா விடுடா ஸ்ரீதேவி இல்லாட்டி ஸ்ரீபிரியா, உனக்கென்ன, இனியா பிறந்து வர போகுதுகள், இங்க, உன்ட சேர்ட் எல்லாம் பழசாப் போய்கிடக்கு, பின்னேரம் வா , ஒருதரம் குமரனுக்கு போய்வருவம்” என்றாள். ” கொண்டுவந்த   சேர்ட் எல்லாம் கழுவி போட்டுத்தன், பழசு பட்டு போய்கிடக்கு, இரண்டு மூண்டு வாங்கி குடு பிள்ளை, அவன் வாயத் திறந்தொண்டும் கேக்கமாட்டான்”, என்றபடி அம்மா, எனது  காயப்போட்டிருந்த  சேர்ட்களை எடுத்துக்கொண்டு கிணற்றடி பக்கம் இருந்து,  மண்டபத்திற்குள் வந்தார். ” இப்ப நேரம் இருந்தா இரண்டுபேரும்  போயிற்றுவங்க” என்றார். எனக்கும் வெளியே எங்காவது போகவேணும் போல இருந்தது.” இப்ப போவமா”  என்றேன். ” வாடா, இப்பவும் நாங்கதான் தேடி தர வேணும், இண்டைக்கு நீயேதான் தெரிஞ்சி எடுக்கவேணும்.”, என்றபடி ஆயத்தமானாள்.

                          “குமரன் சில்க்ஸ்”, வீட்டின் முன்னுள்ள பிரதான வீதியின் மறுகரையில் இருந்தது, அந்த வீதியிலே ஒரு பெயர் சொல்லக்கூடிய அளவில் விலாசமான காட்சி அறையுடன் அமைந்திருந்தது. நீண்டகாலமாக எங்களது குடும்பத்தை அறிந்தவர்கள் என்பதால், போகும்போது தனிப்பட்ட வரவேற்பும் நல்ல தெரிவுகளை எடுத்து போடுவதிலும் பின்னிற்கமாட்டார்கள். தீபாவளியை முன்னிட்டு நிறைய ஆடைகள் வந்திருந்தன, எனக்கான   சேர்ட் தெரிவுகளில் அக்காதான்  முன்னின்றாள், ” நீ எப்பவும் இந்த மங்கின கலர்தான் எடுப்பாய், கொஞ்ம் வெளிப்பன கலராபோட்டுப்பார் எவ்வளவு எடுப்பாக இருக்கும். வந்து வாய்க்கணும் எனக்கொரு மச்சாள், உனக்கு பார்த்து பார்த்து எடுத்துத்தர” என்றபடி என்னை பார்த்து சிரித்தாள். எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.”பிடிச்சிருக்கடா,  நீ இப்படியெல்லாம் எடுக்கமாட்டாய்” என்றாள். ” ம் ” என்றபடி அவளுக்கு பின்னால் நடந்தேன். “ஒரு சாறி எடுக்கிறதென்ற நூறு சாறிய எடுத்து குலைச்சு போடுவம், எடுக்கிறத சரியாய் தெரிஞ்சி எடுத்திரவேணும்,” என்று தனக்குள் கூறிக்கொண்டே நடந்தாள். அவள் பின்னே விரைவாக நடந்து செல்லும்போது யாரோ கையால் தட்டுவது போன்று தெரிந்தது. திரும்பிப்பார்த்தேன். காட்சிக்கு வைக்கப் பட்டிருந்த மெலிந்த உயரமான ,அழகான சுடிதார் அணிந்த மனிதப் பொம்மை, அழகாக அபிநயித்தபடி, ஆடிட்க் கொண்டிருந்தது, விழுந்துவிடுமோ என்றபடி அதன் கையை பிடித்து நிறுத்தியபடி , அதன் முகத்தினை பார்த்தேன், என்னையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பது போலிருந்தது, அதே கண்கள், அதே பார்வை , எப்படி இது சாத்தியமானது, கண்களில் கண்ணீர்முட்டிக்கொண்டு வந்தது, தலையை குனிந்த படி மன்னிச்சிக்கொள் என்று வாய் முணுமுணுத்தது , பொம்மையின் பாதத்தில் கண்ணீர் துளியாய் துளித்துளியாய் விழுந்து கொண்டிருந்தது. ” என்னடா , அங்கேயே நிற்கிறாய் , வா போகலாம்”, என்ற அக்காவின் குரல், தூரத்தே ஒலித்தது, மீண்டும் பொம்மையை பார்த்துவிட்டு , தலையை குனிந்து கண்களை துடைத்தபடி வெளியேவந்தேன்.  திரும்பி பார்த்தேன், கண்ணாடி அறைக்குள் இருந்து என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை போல் இருந்தது. ” நான் எங்கும் போகல்ல உனக்காக இங்கே இருக்கிறேன்”, என சொல்வதுபோல் இருந்தது.

                                  அம்மா        வெளிவாசலுக்கு வந்தபடி ” அங்கென்ன செய்கிறாய் , சமையல் முடிஞ்சிது, வாவன்… சாப்பிட்டுத்து..கொஞ்சம் கண் அயர்ந்தா, நல்லா இருக்கும்” என்றார். அம்மாவின் குரலை கேட்டு திரும்பி, என்னை சுத்தகரித்தபடி ” வாறன் “, என்றேன். இவ்வளவு நேரமும் கேட் அருகே இருந்து வீதியை பார்த்துக்கொண்டிருந்ததால், தார் வீதியில் எழுந்த வெப்பக்காற்றில் முகம் சூடாகியிருந்தது. கத்தா மர   நிழலில் குளிர்ந்துபோய் இருந்த சீமெந்து தரையில் நடந்து வீட்டுக்குள் வரும் போது,  மெதுவாக வீசிய காற்றில் குளிர்ச்ச்சி  இருந்தது. “நேரம் இப்பதான் பன்னெண்டாகுது, உனக்கு பிடிச்சமாதிரித்தான் தங்கம் சமைச்சிருக்காள், நல்ல குஞ்சுத் திராயும் கீரிமீனும் சேர்த்து சுண்டலும் செய்திருக்கிறாள், சின்னன்ல உன்னக்கு இது சரியான விருப்பம், தெரிஞ்சி வைத்துக்கொண்டுதான் வாங்கிவந்திருக்கிறாள், அங்க ரவுணிலை இதெல்லாம் எங்க கிடைக்கப்போவுது, இப்படிவந்ததான் உண்டு “, என்றபடி  சாப்பாட்டு மேசையின் கதிரை ஒன்றை இழுத்தபடி , ” போய் முகத்தை கொஞ்சம் அலம்பி கழுவித்து வா , அலுப்பு தெரியாம நல்லா சாப்பிடலாம்” என்றார். உண்மைதான்  சாப்பிடமுன் கொஞ்சம் முகம் கை கால்  கழுவிற்று இருந்தால் நன்றாகவே இருக்கும். இது அவரின் அனுபவம். எமக்கும்தான். எவ்வளவோ மணமும் சுவையும் சாப்பாட்டில் இருந்தாலும், யாருக்காக சமைக்கிறார்கள் என்பதிலேயும் கை பக்குவத்திலும்தான் அதன் உள்ளடக்கம் தங்கிருக்கும், இங்கு அதற்கு எந்த குறையும் இருக்காது. இன்று என்னவோ என்னை அறியாமல் ஏற்படட மனக்குழப்பங்கள் வீட்டு சூழலுடன் ஒட்டிக்கொள்ளாமல் இருந்தது. ” எப்படிடா …நாட்டுக்கோழி கறி, நல்லா அரச்சாக்கியிருக்கு …நல்லமா  , திராய் எப்படி , போகக்குள்ள கொஞ்சம் கட்டித்தாறன் .. மருமகளுக்கும் பிள்ளைளுக்கும் கொடு, அங்க எல்லாம் இதுக்கு எங்க நேரம் இருக்கப்போவுது, கிடைக்கிறத அவிச்சு போட்டுத்து போறதான் என்ன, ஆ …அப்படித்தானே.”, என்றார் அருகில் வந்து அமர்ந்தபடி. ” எல்லாம் நல்லா இருக்கு அம்மா,   கட்டித்தாங்க கொண்டுபோறன்,” என்றேன் ஒரு ஒப்புதலுக்கு. உண்மையிலே சமையலில் எந்த குறையும் இல்லை குறை என்னில்தான் என்பதை உணர்ந்துகொண்டேன். ” என்ன மூன்று மணிக்கா கூட்டம் இங்கைருந்து போக ஒரு பதினைஞ்சு நிமிடம் போதும் என்ன .. நீ மேல போய் படு …ஒரு ரெண்டேகால் போல எழுப்பி விடுறன், ” என்றபடி எனது தட்டினை எடுத்துக்கொண்டு சமையலறை பக்கம் சென்றார்.

                      படிகளில் ஏறி அறையை அடைந்ததும் , திறந்துகிடந்த யன்னலூடாக காற்று நன்றாக வீசிக்கொண்டிருந்தது, அம்மா சொன்னதுபோல கொஞ்சம் தூங்கினால் நன்றாக இருக்கும் என்றபடி கட்டிலில் சாய்ந்துகொண்டேன், வீசிய காற்றில் என்னை அறியாமலே அயர்ந்துவிட்டேன். ” மாமா ” ..என்ற சத்தம் , தூக்கத்தினை நகர்த்தியது. எதிரே அக்காவின் மகள் பிருந்தா நின்றுகொண்டிருந்தாள், ” அம்மம்மாதான் எழுப்பிவிட சொன்ன மாமா ….காலைலயா வந்த …வருவீங்க என்று தெரிஞ்சிருந்தா ஸ்கூலுக்கு போகாம நின்றிருப்பான் “, என்றபடி அங்கிருந்த கதிரையில் அமர்ந்துகொண்டாள். ” இப்பதான் வந்ததா …எப்படிப்போகுது …படிப்பெல்லாம்.” என்றேன், ” நல்லம்…மாமா.. எக்ஸாமில் நல்லா மாக்ஸ் எடுத்திருக்கிறேன்  ” என்றாள். ” அம்மா உயர்தரத்தோட படிப்பை நிறுத்திட்டா …அது அந்த காலம் …இப்ப இங்க எல்லாவசதியும் இருக்குதானே ..நல்லா படிக்கவேணும்…என்ன” என்றேன், தலையை ஆட்டி” ஆம்” என்பதுபோல சைகை செய்தாள். ” வரக்குள்ள மாமியையும் பிள்ளைகளையும் கூட்டி வந்திருக்கலாம்தானே…எவ்வளவு காலம் நேர்லபார்த்து….அடுத்த முறை  வரக்குள்ள …கட்டாயம் கூடிவரனும் என்ன” என்றபடி தலையை சரித்தபடி இரங்கிக் கேட்டாள். “சரி ..கட்டாயம் கூட்டிவா றன்”, என்றதும் , “ம்..” என்றுவிட்டு ,படிகளில் துள்ளித் துள்ளி இறங்கி ஓடுவது கேட்டது. குழந்தை பருவம் …கவலைகள் இல்லாமல் அமைந்துவிடவேண்டும் ,  சமூகம் தொடர்பான அக்கறையான  பார்வை  அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படும், கிடைத்ததைதானே வழங்கமுடியும்.

புறப்படுவதற்கு ஆயத்தமானேன், யன்னலை மூடிக் கொள்வதற்கு யன்னல் அருகே நெருங்கி எதிரே இருந்த” குமரன் சில்க்ஸ்” இன் அந்த பிரமாண்டமான காட்சி அறை தெரிந்தது, எனது கண்கள் அந்த காட்சி பொம்மையை தேடியது. என்னால் மிக இலகுவாக அதனை அடையாளம் கண்டுகொள்ள முடியும், அந்த அபிநயம் , அந்த உடல் வாகு, எனது கண்கள் உன்னிப்பாக தேடிக்கொண்டு வந்தது. சற்று நேரத்தில்  கண்கள் அந்த காட்சியில் நிலைத்து நின்றது.  உயரமாக அழகிய உடை அணிந்த ஆண் பொம்மை  அதனருகே நன்றாக சேலை அணிந்து நின்றது அந்த  பொம்மை , இரண்டினதும் காலருகே ஆணும் பெண்ணுமாக இரண்டு சிறு குழந்தை பொம்மைகள், ஒருகுடும்பமாக ……….ஆச்சரியமாக இருந்தது, எனக்குள்ளே சிரித்துக்கொண்டேன் …அந்த பெண் பொம்மையின் பார்வை அந்த ஆண் பொம்மையை நோக்கி இருந்தது.  யன்னலை மூடிக்கொண்டு படிக்கட்டுகளால் இறக்கிவந்தேன், மனம் நன்கு தெளிவாக இருந்தது…….

  ( முற்றும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *