====================

திருச்சி புலவர் இராமமூர்த்தி.

————————————————-

 

கைலையில் தொடங்கிய வரலாறே  பெரிய புராணம். கைலை மலையில் சிவபிரான் ஒருநாள், தம்  அழகிய திருமேனியைக் கண்ணாடியில்  கண்டு மகிழ்ந்தார். எல்லாரும் காண இயலாத வகையில் அருவமாக இருந்த பெருமான்,மலையுருவிலும், சிவலிங்கத் திருமேனியிலும் தம்முருவைக் காட்டிய  பின், நாம் காணத்தக்க மனித வடிவில் தம்மையே கண்ணாடியில் கண்டார். இந்த வடிவமே உலகோர் கண்டு மகிழும் நடராசத் திருமேனியாகத்  திருவாலங்காட்டிலும்,சிதம்பரத்திலும்,மதுரையிலும்,நெல்லையிலும், குற்றாலத் திலும், விளங்கின! கைலையில் கண்ணாடியில் கண்ட வடிவம் மிகவும் அழகாகத்  தோன்றியமையால், அதனைச் சிவபிரான், ‘’சுந்தரா வருக!’’ என்று அழைத்தார். கண்ணாடியில் தோன்றிய சிவபிரானின் திருவுருவம் அங்கிருந்து வெளியே வந்தது! அவரே பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை எடுத்துக் கொண்டுவந்து சிவபிரானிடம் அளித்தார்! அதனால் அவர் ஆலாலசுந்தரர் என்று அழைக்கப் பெற்றார். அவரே கயிலைமலையில் இறைவனுக்கு அணுக்கத்    தொண்டாற்றி வந்தார்.

அங்கே இறைவியாகிய பார்வதிக்கு அணுக்கத் தொண்டாற்றிய மகளிர் இருவர் இருந்தனர். உமையம்மைக்கு உரிய மலர்களை கைலைமலை மலர்வனத்தில் அவர்கள் பறித்துச் சென்று இறைவிக்கு அளித்தனர். அதே மலர்வனத்தில் இறைவனுக்குரிய மலர்களை ஆலால சுந்தரரும் பறித்துப் பெருமானுக்கு அளித்தார். அவ்வாறு ஒருமுறை இறைவனுக்கு மலர் பறிக்கச் சென்ற ஆலாலசுந்தரர், இறைவிக்கு மலர் பறிக்கச் சென்ற பெண்களைக் கண்டார்.அப்பெண்களின் தோற்றம் அவரைக் கவர்ந்தது! ஆலால சுந்தரரின் கம்பீரத்தோற்றம் அப்பெண்களை கவர்ந்தது. இறைவடிவில் மட்டுமே எப்போதும்  ஈடுபாடு காட்டிய அம்மூவருள்ளமும் மலர் பறிக்க வந்தவர்களைக் கண்டு மயங்கின!  இங்கே உலகியல் நிகழ்வுகளை நாம் சிந்திக்க வேண்டும். முதலில் ஆடவனே பெண்ணைக் கண்டு மகிழ்வான்; அதன் பின்னரே பெண்கள் இணங்குவர்! கயிலைமலையில், நிலவுலக இயல்பைப் பெற்ற  அவர்களை அங்கே  சிவபிரான் கண்டார். அப்பகுதி சிவன், காமனை எரித்த இடம். ஆதலால் அங்கே நிகழ்ந்த காமநிகழ்ச்சியை இறைவன் ஏற்கவில்லை! உலகியலின்படி, கைலையில்நடந்து கொண்ட மூவரையும் நிலவுலகிற்கே அனுப்ப இறைவன் திருவுளம் பற்றினார்!

ஆலால சுந்தரரை இறைவன் அழைத்து,’’ நீங்கள் தொடங்கிய காமவின்பத்தை நிலவுலகு  சென்று  நிகழ்த்திய பின், மீண்டும் கைலாயம் வருக!’’ ,என்று கூறியருளினார். அவ்வாறு இறைவன் கூறியதும் அவர் திருவிளையாடல் ஆகும். ஆலால சுந்தரரை உருவாக்கியதும், கமலினி, அனிந்ததை  ஆகியோர் உருவாகி யதும், அவர்கள் காதல் கொண்டதும் ஒரு காரணத்துக்காகவே யாகும்!

அவர்கள் மூவருள் ஆலால சுந்தரர் நிலவுலகில் தென்னகத்தில் அவதரித்தது அவரால் தென்பாரதம் மேலும் பெருமை பெறுவதற்கே யாகும்! அவ்வாறு அவர் தென் திசையைப் பெருமைப் படுத்தத்   ‘’ திருத்தொண்டத் தொகை’’ என்ற ஒரு நூலை   முதல் நூலாக  அளிப்பதற்கே யாகும்!   இதனைச் சேக்கிழார்,

‘’மாதவம் செய்த  தென்திசை  வாழ்ந்திடத்

தீதி லாத் திருத்  தொண்டத்தொ  கைதரப்

போது  வார்அவர்   மேல்மனம்  போக்கிடக்

காதல்   மாதரும்  காட்சியில்  கண்ணினார்!’’

என்று பாடினார்.

இந்தியநாட்டின் தென்திசை பெருந் தவங்களை செய்த திசை. இப்பகுதியில் தில்லைத்  திருக்கோயிலில் சிவபிரான் உமையம்மை காண ஆனந்த நடனம் ஆடுகின்றார்! இச்சிதம்பரத்தைப் பெற்றமையால் தென்திசை இணையற்ற திசையாயிற்று, இந்தத் திசையில்  அடியார்களின் பற்றுக்கோடாக விளங்கும் பெரும்பற்றப் புலியூர் ஆகிய தில்லை உள்ளது. இத்தில்லையில்தான் புலிக்கால் முனிவர் எனப்பெறும் வியாக்கிரபாதர் இறைவழிபாடு செய்து நமக்கு வழிகாட்டினார். அனசூயையின் தவத்தால் அவள்தன்  கூப்பிய  கரத்தில் இறையருளால் வந்து தோன்றிய பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம் தில்லையாகும். இந்த இருவரும் இத்தலத்தில் இறைவன் அருள்நடனத்தைக் கண்டு மகிழ்கின்றனர்.

நிலமகளின் இதயக்கமலம்போல் தோன்றும் திருவாரூரும்  இந்தத் தென்திசையில் தான் உள்ளது. புற்றிடங்கொண்டார் , பூங்கோயில் கொண்ட ஊர் திருவாரூர். இங்கேதான் உலகம் புகழும் கமலாலயக்குளம் உள்ளது. தில்லை தோன்றும் முன்னும் பின்னும் தோன்றிய தலங்களே  திருவாரூரும் , காஞ்சியும் ஆகும். அவற்றை சமட்டிப் பிரணவம், வியட்டிப் பிரணவம் என்பர்.அனைத்தும் ஒடுங்கும்   ஆகாய தத்துவமாகச் சிவன் தோன்றும் இடம் தில்லை. ஆகாயத்தத்துவம் மனத்தால் காணத்தக்கது. அனைத்தும் தோன்றும் மண்ணின் தத்துவமாக விளங்குவன திருவாரூரும் ,காஞ்சிபுரமும் ஆகும்.பிருதிவி தத்துவம் இருகண்களால் காணத்தக்கது. இழந்த தம் இருகண்களையும் சுந்தரர் காஞ்சியிலும் திருவாரூரிலும் பெற்றார்.

மேலும் சிவபிரானின் திருவருளை  முழுமையாகப் பெற்ற  திருநந்திதேவர் அவதரித்த பெருமை உடையது திருவையாறு. தத்துவ நிலையில் சிவபாத கங்கை, தேவிகங்கை,இடப கங்கை, திருநந்தி தேவரது உவகை நீர், காவிரி ஆகிய ஐந்து நதிகளாலும் பூசிக்கப் பெற்ற  இறைவன் ஐயாறப்பர். காவிரியின் துணைநதிகள் ஐந்தும் பாயும் ஐயாறும் இதுவே!  இங்கே சிவபெருமானின் ஐந்தொழில்ளும் ஐந்து ஆறுகளாய்த் திகழ்கின்றன. சித்தாந்த சந்தான பரம்பரையின் மூத்தவரான திருநந்தி தேவரின் ஊர் திருவையாறு.

மேலும் சைவ சித்தாந்தத்தை உலகில் தாபித்த பரமாச்சாரியாராகிய திருஞான சம்பந்தர் அவதரித்த தலம் சீர்காழி. இறுதிக் கால வெள்ளத்திடையே ஒரு தோணி மேல் பெருமான் தோன்றிய தலம் சீர்காழி. ஆகவே இது திருத்தோணிபுரம் எனப்பெற்றது. இத்துடன் சிவபரம்  பொருளின் பெருமைகளை வெளிப்படுத்தும் பல தலங்கள் கொண்டது தென்திசை! ஆகவே, சேக்கிழார் ,’’ மாதவம் செய்த தென்திசை’’ என்றார்.

இந்தத்  தென்திசையின் பெருமைமேலும்ஓங்கிடவே,சுந்தரர்,    ’’திருத்தொண்டத் தொகை’’, என்ற அருள்நூலை, திருத்தொண்டர் புராணத்தின்  முதனூலாக அளித்தார். சிவபிரானின் திருவருளை, மாதவத்தால்  பெற்ற தென்திசை தொண்டர்களின் பெருமையால் மேலும் உயர்ந்தோங்கியது. இதனையே சேக்கிழார் ‘’ தீதிலாத் திருத் தொண்டத் தொகை தர ‘’ என்கிறார். இதற்காகவே இறைவனருளால் உருவான சுந்தரர், கைலாய மலை நந்தவனத்தில் மலர் கொய்யப் போதுவார்  மேல் மனம் போக்கினார்!  இவையனைத்தையும் சொல்லுக்குச்சொல் நயம் தோன்றும் படிச் சேக்கிழார் பாடிய அழகிய பாடலின் திறம் போற்றுதற்கு உரியது!

========================================================================

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *