செங்கம்  வட்டார நடுகற்களில் பாணரசர்கள் – வரலாற்று நோக்கு

1

-முனைவர். இரா. மூர்த்தி

பண்டைய காலத்தில் வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட தமிழ் நிலப்பரப்பில் பாணர்கள் எனும் பிரிவினர் வாழ்ந்து வந்தனர். இடம்விட்டு இடம் நகர்ந்து தங்களது வாழ்வை அமைத்துக் கொண்டதால் இவர்களது வாழ்வு அலைகுடி வாழ்வாகக் கருதப்பட்டது என்று சங்கப்பாடல் வாயிலாக விளங்கிக் கொள்ள முடிகின்றது.

இப்பாணர்களில் பலர் சிற்றசர்களையும், பேரரசர்களையும் வாழ்த்திப் பாடி, ஆடி மகிழ்வித்து தமக்குத் தேவையான பொன்னும் பொருளும் பெற்று வந்தனர். பாண்மகளிர்கள், விறலியர்கள் அரசர்கள் முன்னிலையில் பாடிக்கொண்டு ஆடவும் செய்துள்ளனர். அத்தகைய ஆடல்களைக் கண்டு அரசர்கள் நாணயங்கள், பொன்னலாகிய ஆபரணங்கள், உடைகள்,  நாடுகள், ஊர்கள், கள் (உணவு) ஆகியன வழங்கி சிறப்பித்து மகிழ்ந்ததோடு முறையாகச் சென்று வழியனுப்பவும் செய்துள்ளனர்.

பாணர்களில் சிலர் அரசர்கள் மட்டுமின்றி நிலக்குடிகளிடம் சென்று பாடி, ஆடி மகிழ்ந்து தேவையான தானியங்களையும், உணவினையும் பெற்று வந்துள்ளனர். பாணர்களில் சிலர் திணைக்குடிகளிடம் சேர்ந்து மக்களோடு மக்களாக வீதிகளில், தனி வீதிகளில் வாழ்ந்து வந்துள்ளதை ஆற்றுப்படை வெளிக்காட்டுகிறது.

இருப்பினும், பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களது ஆட்சிக் காலத்தில் பாணர்களில் ஒரு பிரிவினர் சிற்றரசராகவும், படைத்தளபதியாகவும், போர்வீரராகவும், அரசர்களுக்கு ஆலோசனைகள் கூறுபவராகவும் இருந்துள்ளனர். அவை குறித்துக் செங்கம் கல்வெட்டுக்கள் பதிவு செய்துள்ளன. மேற்கூறிய கருத்தாக்கத்தைக் கொண்டு சங்க இலக்கியங்கள் பதிவு செய்யும் பாணர்கள், பாண அரசர்களின் வாழ்வு, அவர்களது ஆட்சிப் பகுதியினைச் செங்கம் கல்வெட்டில் கூறும் பாணஅரசர்களின் வாழ்வு மற்றும் செங்கம் பகுதி களஆய்வு மூலம் கிடைத்த தரவுகள் வாயிலாகப் பாணர்களின் வாழ்வினை வெளிக்காட்டுவதே இக்கட்டுரையின் மையமாகும்

பாணர்கள் – விளக்கம்

பாணர்கள் என்போர் தமிழ்க் குடியின் தொல்குடியினராவர். இப்பாண் மரபினர் பல திறப்பட்ட இனமக்களின் கூட்டுக் கலைஞர்களாவர். அவர்களைப் “பாணர், பொருநர், கூத்தர், விறலியர், கோடியர், வயிரியர் எனச் சுட்டுகின்றனர். வீரயுகக் காலத்தில் முதன்மையான கலைஞர்களாகப் பாண்மரபினரே முன் வைக்கப்பட்டனர். இப்பாணர் என்ற சொல் புறநானூற்றில் மட்டும் இருபத்தாறு இடங்களில் வருகின்றது.”1 (க.காந்திதாசன்-சங்க இலக்கியத்தில் பாணர் வாழ்வியல்.ப.15) என்கிறார். தொல்காப்பியத்தில், “கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்”(தொல்.புறத்.36)” 2 என்றும்,

“துடியன் பாணன் பறையன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியுமில்லை”
3 (புறம்.335:7-8)

என்று புறநானூற்றுப்பாடலும் புலப்படுத்துகின்றது. ஆற்றுப்படைகள் பாணர்களில் சிலரை,

  1. சீறியாழ்ப்பாணர் – சிறுபாணர்
  2. பேரியாழ்ப்பாணர் – பெரும்பாணர்
  3. மண்டையாழ்ப்பாணர் – மண்டைப்பாணர்
  4. இசைப்பாணர் – பனுவல்பாடுநர் என்று வகைப்பத்திக் கூறவும் செய்துள்ளன. 

இலக்கியங்களில் பாணர்கள்

சங்க காலத்தில் பாணர்கள் அரசியல் தூதுவர்களாகவும், அரசர்களுக்குள் போர் மூளாமல் போரினைத் தடுத்தும், துன்பம் நிகழாமல் காக்கவும் முயற்சி செய்துள்ளனர். அதே நேரத்தில் நாடாளும் மன்னர்களாகவும், குறுநில மன்னர்களாகவும் இருந்துள்ளனர். இதனை,

“விழவு அயர்ந் தன்ன கொழும்பல் திற்றி
எழாஅப் பாணன் நன்னாட் டும்பர்”
4 (அகம்.113)

என்ற அகநானூற்றுப் பாடல் கூறுகிறது. அப்பாணன் நாடு தமிழகத்திற்கு வடபுலம் சார்ந்திருந்தது என்பதை “வடாஅது பல்வேற் பாணன் நன்னாடு” 5 (அகம்.325) எனும் பாடல் வாயிலாக அறியமுடிகிறது. அந்நாடானது பாலியாற்றின் வடகரையில் இருந்ததென்றும், அங்கிருந்த பாண்மலை குறித்த செய்தி கல்வெட்டின் வழியாக அறிய முடிகிறது. அந்நாட்டினர் வாணர், வாணாதிராயர், வாணதரையர் என்று பெயர் சுட்டப்பெறுகின்றனர். இப்பெயர்களே பல்லவர்களுக்கு உட்பட்ட பல்லவர்களது ஆட்சி காலத்தில் வழங்கவும் படுகிறது.

உரையூர் வெளியன் தித்தன் என்பான் நாட்டில் பாணன் ஒருவன் இருந்தான். கங்க நாட்டுக் கட்டி என்பான் அப்பாணனோடு மோதவந்து தித்தனும், பாணனும் கட்டிய பறையார்ப்பு, படையார்ப்பு இரண்டையும் கண்ட ‘கட்டி’ தோற்று ஓடிவிட்டான் இதனை,

வலிமிகு முன்பின் பாணனொடு மலிதார்த் தித்தன் ஆர்ப்பு” 6 (அகம்.226)

“பாணன் மல்லடு மார்பின் வலியுற வருந்தி
எதிர் தலைக் கொண்ட ஆரியப் பொருநன்” 7 (அகம்.386) என்று குறிப்பிடுகின்றது அகநானூறு.

ஆரிய நாட்டைச் சேர்ந்த பொருநன் ஒருவனும் குட்டை நாட்டைச் சேர்ந்த கணையன் ஒருவனும் ஒன்றுகூடி அப்பாணனோடு போருக்கு வந்து தோற்றுள்ளனர். இப்பாணர்கள் தம்முடைய திறனாலும் சிறப்பாலும் வேந்தர்களிடமிருந்து நாடுகளைப் பெற்றுள்ளனர். பாண்டிய நாட்டில் மன்னன் ஒருவன் சோழநாட்டை வென்று அதனைப் பாணனுக்கு வழங்கியுள்ளனர். அந்நாட்டுத் தலைவன் வாணன் மதுரையைக் கைப்பற்றி அதனைப் பாணனுக்கு வழங்கியுள்ளான்.

“பொன்னி வளநாடு பாணன் பெறப் புரிந்தான்
பாணன் மதுரைப் பதியினை வைத்த பிரான்”
8  (பெருங்.188-191)

என்ற பாடல் வரி சுட்டுகிறது. அகநானூற்றில் சொல்லக்கூடிய பாணன் நன்னாடு, பாலியாறு, பாண்மலை கல்வெட்டில் செல்லக்கூடிய வாணவர், வாணாதிராயர், வாணதரையர், ஆரிய நாட்டுப் பொருநன், குட்டநாட்டுக் கணையன் பாண்டிய மன்னன் பொன்னி வளநாடு (சோழநாடு), பாணன் மதுரைப்பதி இவைகள் அனைத்தும் பாணர்களின் வாழ்வு வெளிப்பாட்டை, அரசாட்சியை, போர்த்திறத்தைச் காட்டுகிறது. இப்பெயர் சொல்லாட்சிகள் செங்கம் பகுதியில் கிடைக்கும் நடுகற்களிலும் கிடைக்கிறது. ஆக, பாணர்கள் சங்க காலத்தில் தமிழ்நிலம் முழுவதும் இருந்துள்ளது தெரிய வருகிறது.

இதில் பல்லவர்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குறுநில மன்னர்களாகவும் சோழர், பாண்டியர்களுக்கு மத்தியில் போர்வீரர்களாவும், படைத்தளபதியாகவும், பசுக்களைக் கவர்ந்து மீட்டுவரக்கூடியவர்களாகவும் இருந்துள்ளனர்.

செங்கம் வடஆர்க்காடு, தருமபுரி – பெரும்பாணஅரசர்கள், போர்வீரர்கள்
மதுரை, நெல்லை   – இசைப்பாணர்கள்
தஞ்சை (சோழநாடு)   – குறுநில மன்னர்கள், படைத்தளபதியாக இருந்துள்ளனர்.

கல்வெட்டுகளில் பாணரசர்

வட ஆர்க்காடு மாவட்டம் செங்கம் வட்டத்திற்கு உட்பட்ட வீராணம் என்னும் ஊரில் ஆய்னாரப்பன் கோயில் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் நடுகல்லாக நடப்பட்டுள்ளது. இக்கல் கி.பி.9 – ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கம்பவர்மனின் 14-ஆம் ஆட்சி ஆண்டில் நடப்பட்டது. இங்குள்ள கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும், வலது கையில் வாளும் ஏந்திய நிலையில் உருவத்தின் மேற்பகுதியிலும், வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இக்கல்லில் “பல்லவ மன்னன் கம்பவர்மனது பதினான்காவது ஆட்சி ஆண்டில், பாண அரசன் வயிரமேகன் வாண கோட்டியையும், இலாடைப்பாடியையும், மிலாட்டையும், சோழ நாட்டைச் சேர்ந்த காவிரியின் வடகரையிலுள்ள பகுதிகளையும் ஆள்கின்றபோது, வேணாடு முந்நூரையும், எயில்நாடு ஐந்நூரையும் ஆண்டு வந்த நந்திப் பெருமானார் மகன் அக்கழி மல்லன் என்பார் வெண்ணத்தையும், சாத்தனூரையும் ஆண்டு வந்தார். அச்சமயம், மங்கள நாட்டைச் சேர்ந்த மாதேவரின் படை சாத்தனூரைத் தாக்கியது. அப்போது வெண்ணத்தைச் சேர்ந்த மழநாடன் மொடப்பன் பின்பு சென்று போரிட்டு வேணாட்டெல்லையில் வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது.” 9(செ.நடு: ப.9)

“சோழ மன்னன் முதலாம் பராந்தகனின் நான்காம் ஆட்சி ஆண்டில் பாண அரசர் வேட்டுவதிரையரின் ஆளும் மேற்கோவலூர் நாட்டைச் சேர்ந்த அளவில் பாடியில் வாழும் ஆந்தைப்பொன்னி என்பானுடன் போரிட்டு வீரமரணம் அடைந்துள்ளான்.”10 (செ.நடு.ப.8) இச்செய்தி செங்கம் வட்டத்திலுள்ள அய்த்தாம்பாளையம் எனும் ஊரில் நடுகல்லாக நடப்பட்டுள்ளது. இதன் பெயர் தற்போது வேடியப்பன் கோவிலாகும்.

பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மனின் இராண்டாம் ஆட்சி ஆண்டில் பாண அரசரின் சேவகரும் மேல் கொன்றை நாட்டைச் சேர்ந்த மேல் வேளூரை ஆள்பவருமான பனையாமாரியார்”11 (செ.நடு.ப14) என்பார் ஆநிரைகளைக் கவர்ந்தபோது வீரமரணம் அடைந்துள்ளார். இங்கு ஆட்சி செய்த மன்னன் பாணர் ஆவர். அவர்களுடைய ஆட்சிப் பகுதி வேளூராக இருந்துள்ளது.

பாணர்கள் ஆநிரைகளை மீட்டலுக்காக இறத்தல்

செங்கம் வட்டம் சே.கூடலூர் ஏரிக்கரையிலுள்ள சுடுகாட்டின் அருகில் கி.பி.7ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாணர்களின் நடுகல் நடப்பட்டுள்ளது. இதில் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனின் முப்பத்தெட்டாவது ஆட்சி ஆண்டில் பாண அரசருடைய மருமக்களான கந்த விண்ணனார் கூடலில் ஆநிரை கவர்ந்தபோது பொன்னாரம்பணார் கொல்லச் சேவகன் காகண்டி அண்ணாவன் என்பவன் அவ்வாநிரைகளை மீட்டு வீரமரணம் அடைந்துள்ளான்.” 12 (செ.நடு.ப.12)

பாண அரசர்கள்

தருமபுரி பகுதியிலும் அதனை அடுத்த செங்கம் பகுதியிலும் கிடைக்கின்ற நடுகற்கள் கி.பி.6-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.8-ஆம் நூற்றாண்டுவரை பாண அரசர்களைப்பற்றி பேசுகிறது. இப்பாண அரசர்கள் குறுநில மன்னர்களாக ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களது ஆட்சி மரபு பல்லவர்கள், கங்கர்கள் ஆளுகைக்கு உட்பட்டே நடந்துள்ளது தெரியவருகிறது.

பல்லவர்கள் காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு கி.பி.6-ஆம் நூற்றாண்டிலிருந்து சிறப்பாக ஆட்சி புரிந்துள்ளனர். ஆட்சிப் பரப்பு தொண்டை நாட்டுப் பகுதி மட்டுமின்றி தகடூர்ப் பகுதியிலும் பரவி இருந்தது. இவர்களுடைய கல்வெட்டுகள் ‘கோவிசையை’ என்று தொடங்குகின்றன.

செங்கம் பகுதியில் கிடைத்த நடுகற்கள் பெரும்பாலனவற்றில் ‘கோவிசையை’ கொண்டே தொடங்குகின்றன. ஆதலால் பாணஅரசர்கள் பல்லவர்களுக்கு உட்பட்ட இடங்களிலே ஆட்சி செய்துள்ளனர்;. கங்கர்களது ஆட்சியும் தகடூர்ப் பகுதிகளுக்கு உட்பட்டே இருந்துள்ளன. இவர்களுடைய நடுகற்கள் கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை ஆகும். கங்க மன்னர்களின் கீழ் ஆட்சி செய்த ‘அரிமிறை மாவலி வாணராயர்’, ‘மாவலி வாணராயர்’ போன்ற பாண அரசர்களின் கல்வெட்டுகள் செங்கம் பகுதியில் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டுகள் அனைத்தும் போரில் மாண்ட வீரார்களின் நினைவாகவும், பசுக்களை மீட்டு அதன் நினைவாக இறந்த தன்மையையும் சுட்டிக் காட்டுகின்றன.

செங்கம் பகுதியில் கிடைக்கும் இக்கல்வெட்டுகள் அனைத்தும் இன்று வெவ்வேறு பொதுப்பெயர்களைக் கொண்டு வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான கல்வெட்டுகள் ஆற்றோரப் பகுதிகளிலும் சில கல்வெட்டுகள் சுடுகாட்டுப் பகுதிகளிலும் கிடைக்கின்றன. இதன் பெயர்கள் அனைத்தும் வழக்கில் மாற்றப்பட்டு பொதுப்பெயர்களாக வழங்கப்படுகின்றன.

அப்பொதுப் பெயர்களே அவர்களின் தற்கால அடையாளம் ஆகும். அதில் வேடியப்பன், கரிவேடியப்பன், கரிய வேடியப்பன், வேடர், சிலைக்காரன், வீரக்காரன், முனியப்பன், ஐயனாரப்பன், ஐயனார், கிருணராயப்பன், மீனாரப்பன் என்றும், மொசவேடியப்பன், நொண்டி வேடியப்பன், ஓட்டைவேடியப்பன் எனச் சில பட்டப் பெயர்களாலும் வழங்கப்பட்டு வருகின்றன. சில பேர்கள் அவை காணப்படும் இடம் சார்ந்து “சாவுமேட்டு வேடியப்பன், நத்தமேட்டு வேடியப்பன், ஏரிக்கரை வேடியப்பன்” எனவும் குறிக்கப்பட்டுள்ளன. அடிப்படையில் இப்பெயர்கள் அனைத்தும் வீரன் என்பதுடன் தொடர்புடையவானகவே உள்ளன. இப்பெயர்கள் செங்கம் பகுதியில் வழங்கப்பட்டு வந்தாலும் இவை பாணர்களின் வாழ்வினையே அதிகம் வெளிக்காட்டுகின்றன.

ஆனால் இன்று, சங்ககாலப் பாணர்கள் வடஇந்தியாவில் தொல்குடியினராக இருக்க கூடிய “கோண்டுப்” பழங்குடியினரின் மரபாக இருந்து வருகின்றனர். தமிழகத்தில் ‘சாதிப்பிள்ளைகள்’ அல்லது ‘குடிப்பிள்ளைகளாகத் தொடர்கின்றனர்.”13 என்று பக்தவத்சல பாரதி (பாணர்கள் இனவரைவியல், ப.1) கூறுகிறார்.

அதே நேரத்தில் 1901ஆம் ஆண்டு கணக்கெடுப்பு அறிக்கையில் தமிழ்ப் பாணர்கள் “மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் தையல் தொழில் செய்து வருகின்றனர். திருநெல்வேலிப் பாணர்களை மேஸ்திரி என்றும், ஒரு சில பாணர்கள் தங்களைப் பாண்டிய வேளாளர் என்றும் கூறிக்கொள்கின்றனர்.  தூத்துக்குடி, பாளையங்கோட்டை, தென்காசி, செங்கோட்டை, நயினாகரம், கோவில்பாட்டி, நாகர்கோவில், கயத்தாறு, மதுரை, திருச்சி, விருதுநகர், புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர், குற்றாலம்,  ஸ்ரீவில்லிப்புத்தூர், புளியம்பட்டி போன்ற பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களைப் பாணர்கள் என்றே அழைத்துக் கொள்கின்றனர். 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பாணர் சமூகத்தினர் தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு இலட்சம் பேர் வாழ்கின்றனர். இவர்களில் ஆண்கள் 60 சதவீதமும், பெண்கள் 40சதவீதமும் இருப்பதாகக் கணக்கெடுப்பு கூறுகிறது.

முடிவுகள்

பாணர்கள் என்ற பிரிவினர் சங்க காலம் முதல் இன்றுவரை அதே பெயரைத் தாங்கி நின்று கலைப்பிரிவிலிருந்து மாறி இன்றைய நிலையில் தையல் தொழில் செய்யும் மக்களாக வாழ்கின்றனர். இத்தகைய தொழில் மாற்றத்திற்கு வறுமை, போதிய வருமானம் இன்மையே காரணம் என்கின்றனர். பல்லவர், சோழர், கங்கர், பாண்டியர்கள் காலத்தில் போர்வீரர்களாகவும், குறுநில மன்னர்களாகவும், அரசர்களாகவும், ஆநிரைகளை மீட்கும் வீரர்களாகவும் இருந்த பாணர்கள் அவர்களது நினைவாக மாற்றுப் பெயருடன் சிறுதெய்வக் கடவுள்களாகச் செங்கம் பகுதியில் பல்வேறு பொது இடங்களில் வைத்து வழிபடப்படுகின்றனர். அதே நேரத்தில் சங்க இலக்கியங்கள் ஆற்றுப்படை நூல்கள் அனைத்திலும் இப்பாணர்கள் கலைஞர்களாக வாழ்ந்துள்ளது தெரிய வருகிறது. ஆகவே பரந்து விரிந்த தமிழக நிலப்பரப்பில் பாணர்களின் வாழ்வானது வெவ்வேறு நிலையில் இருந்துள்ளதை இதன்வாயிலாக அறிய முடிகிறது. மேலும் இப்பாணர்களின் வாழ்வியலைத் தொல்லியல், கல்வெட்டுகள் வாயிலாக விரிவாக ஆராய முற்பட்டால் பாணர்கள் பூர்வீக வாரலாற்றினை வெளிக்கொணர முடியும்.

துணைநூற்பட்டியல்

  1. க. காந்திதாசன் – சங்க இலக்கியத்தில் பாணர் வாழ்வியல். ப.15, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, தரமணி, சென்னை.06
  2. தொல்காப்பியம், புறத்திணையியல், ப.36
  3. புறநானூறு – கழக வெளியீடு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி. பாடல்.335:7-8
  4. அகநானூறு – கழக வெளியீடு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி. பாடல்.113
  5. மேலது நூ. பாடல்.325
  6. மேலது நூ. பாடல்.226
  7. மேலது நூ.பாடல்.386
  8. பெருங்கதை.பக்.188-191
  9. இரா. நாகசாமி – செங்கம் நடுகற்கள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை 1972. ப.9
  10. இரா. நாகசாமி – செங்கம் நடுகற்கள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை 1972. ப.8
  11. இரா. நாகசாமி – செங்கம் நடுகற்கள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை 1972. ப14
  12. இரா. நாகசாமி – செங்கம் நடுகற்கள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை 1972.ப.12
  13. பக்தவத்சல பாரதி – பாணர் இனவரைவியல், ப.1, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, சென்னை.-06

*****

கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.
E-Mail: ramvini2009@gmail.com
செல் , 9751104241

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “செங்கம்  வட்டார நடுகற்களில் பாணரசர்கள் – வரலாற்று நோக்கு

  1. செங்கம் வட்டார பகுதியில் காணப்படும் தொன்மையான வரலாற்றைக் கட்டுரை எடுத்துரெக்கிறது. சிறந்த தகவல்களைக் கூறிய ஆய்வாளருக்கு நன்றிகள். தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி ஐயா அவர்கள் விட்டுசென்ற பணிகள் உண்மையுடன் தொடர விருப்பம். நன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *