சேட்படுத்துதல் – துறைக்குறிப்புவழிப் பாடற்பொருண்மை

0

-சா. மங்களேஸ்வரி

தலைமக்களின் காதல் ஒழுக்கம் புறத்தார்க்குப் புலப்பட்டு அலராகுமென அஞ்சிய தோழி, தலைமகனைத் தலைவியிடமிருந்து சேய்மைப்படுத்துவாள். இந்நிகழ்வைச் சேட்படுத்துதல் என இலக்கண நூலார் குறிப்பிடுவர். இச்சேட்படுத்துதல் தலைவிமீது தலைவன் கொண்டுள்ள காதற்பிணைப்பையும், தலைவியின் காதல் ஆழத்தையும், தோழி அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமையும். அந்நிலையில் தோழி தலைவனுக்குத் தன் தோழியின் அருமையை எடுத்துரைத்தும், பெருமையைச் சுட்டியும், பேதைமையுடையாள் என விளம்பியும் தலைவியின் இன்றியமையாமையைத் தலைவனுக்குப் புலப்படுத்துவாள். இந்நிகழ்வு, தலைவனின் காதலுறுதியை அறிந்து கொள்வதற்கும், தலைவியின்மேல் உள்ள காதலை அதிகப்படுத்தி, வரைவு முடுக்குவதற்காகவும் தோழி மேற்கொள்ளும் தந்திர உத்தி என்றே எண்ண இடமளிக்கிறது.

இலக்கண – உரையாசிரியர்கள்வழி சேட்படுத்துதல்

இச்சேட்படுத்துதலைத் தொல்காப்பியர்,

“நீக்கலி னாகிய நிலைமையும் நோக்கி”1
“இழந்து குறையுற்ற கிழவனைத் தோழி
நிரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும்”2 எனவும் கூறுவார் களவியல் நூற்பாவிற்கு(99) நச்சினார்க்கினியர் “தோழி இவ்விடத்துக் காவலார் கடியரெனக் கூறிச் சேட்பட நிறுத்தலிற் றனக்கு உண்டாகிய வருத்தத்தையும் பார்த்து”3 எனவுரை பகர்வார். பொருளியல் நூற்பாவிற்கு(233) இளம்பூரணர்; “இரந்து குறையுற்றி தலைமகனைத் தோழி நிரம்ப நீக்கி நிறுத்தலன்றி….”4 எனவுரை கூறுவர். தமிழ்நெறி விளக்க ஆசிரியர். பகற்குறியிலேயே. “சேட்ப நிறுத்தலுஞ்”5 நிகழும் என்கிறார்.

துறைக்குறிப்பு வகைப்பாடு

சேட்படுத்துதல் நிகழ்வில் ஏழு பாடல்கள் (நற் -45, 75, 80, 301, 377: ஐங்குறு -91: அகநா -58:) அமைந்துள்ளன. இப்பாடல்களின் துறைக்குறிப்புகளின் பொருண்மை கொண்டு ஆராயின், தொல்காப்பியர் குறிப்பிடும் பின்னிற்றலுக்கான எட்டுச் சூழல்களும், மற்ற இலக்கண நூல்கள் சேட்படுத்துதலின் சூழலுக்கான எட்டுச் சூழல்களுடன் பெரும்பான்மை ஒத்துக் காணப்படுகின்றன.  எனினும் நான்கு துறைகளிலே, சங்க இலக்கியப் பாடல்களின் பொருண்மைகள் அமைந்துள்ளன. அவ்வகையில் தோழி பெருமையிற் பெயர்த்தல் துறையில் “குறை வேண்டிய தலைமகனைச் சேட்படுத்தது”6 எனவும், தலைவி அருமை சாற்றல் துறையில் சேட்படுத்தப்பட்ட தலைவன் தன் ஆற்றாமையைத் தோழி கேட்குமாறு கூறும் துறைக்குறிப்பும்(நற்-75), தலைவன் அன்பு மிகுதியால் கொண்ட ஆற்றாமை கண்டு தோழி கூறும் நற் -301ஆம் பாடலின் துறைக்குறிப்பும் வகைப்படுத்தப்படுகிறது.

பேதைமையூட்டல் துறைக்கு “…. தோழி இவள் இளையள், விளைவு இலள் எனச் சேட்படுத்தது”8 எனவும், தையல் மறுத்தல் துறையில் அகநா-58ஆம் பாடலின் துறைக்குறிப்பும், ஆற்றாமைப் பொருண்மை எல்லாப் பாடல்களிலும் புலப்படுகின்றன. எனினும் சேட்படுத்துதலுக்கான சூழலாக எங்கும் சுட்டப்படவில்லை. ஆயினும், ஆற்றாமைத் துறையில் தலைவனின் ஆற்றாமையைப் புலப்படுத்தும் நற்-80ஆம் பாடலின் துறைக்குறிப்பும், தலைவியின் ஆற்றாமையைத் தலைவன் புலப்படுத்தும் நற்-377ஆம் பாடலின் துறைக்குறிப்பும் அமைவதை வகைப்படுத்தமுடிகிறது.

சேட்படுத்துதலில் தோழி

சேட்படுத்தல் பொருண்மையில் சங்க இலக்கியத்தில் தோழி கூற்றில் மூன்று பாடல்கள் காணப்படுகின்றன. இப்பாடல்களில் நற்றிணை 301ஆம் பாடல் தோழி தன்னுள்ளே கூறிக் கொள்வதாக அமைந்துள்ளது. இப்பாடல்கள் துறைக்குறிப்புகளின் பொருண்மை கொண்டு ஆராயின்தலைமக்களிடையே குலவேறுபாடுகள் இருந்தாலும் அவர்கள் இணைய வேண்டுமென எண்ணுதல், தலைவியின் இளமைத் தன்மை மாறாதவள் ஆதலால், நின்னுணர்வை உணராள் என்றுரைத்தல், தலைவனின் காதலையும், தாயின் பேரன்பையும் ஒருங்கே பெற்ற தலைவியின் காதல் நிலையில் தோழி தடுமாறுதல், என்பன பின்னணிச் சூழல்களாக அமைகின்றன. இதனைக் கருத்தில் கொண்டே துறையாசிரியர்கள் துறைக்குறிப்பை வரைந்திருப்பர். இதனடிப்படையில் ‘பெருமையிற் பெயர்த்தல் (குலமுறைகூறி மறுத்தல்) (நற்-45), பேதைமையூட்டல் (ஐங்குறு -91), தலைவியின் அருமை உள்ளல் (நற் -301)’ போன்ற துறைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பெருமையிற் பெயர்த்தல் (குலமுறை கூறி மறுத்தல்)

தலைமக்களின் காதலை உணர்ந்த தோழி, அவர்களின் காதலின் புரிதல் தன்மையைப் புலப்படுத்துவதற்காகச் சிறிது காலம் சேய்மைப்படுத்துவாள். இச்சேய்மைப்படுத்துதலுக்கான காரணங்களில் ஒன்றாகப் ‘பெருமைதனை எடுத்து மொழிதலை’ மேற்கொள்வாள். இப்பெருமையிற் பெயர்த்தல் தலைவியின் பெருமைதனைத் தலைவனுக்கும், தலைவனின் பெருமைதனைத் தலைவனுக்கும் உணர்த்தி, அதனால் நினக்கு ஒப்பானவள் எம் தலைவி அல்லள் எனத் தோழி மொழிவது இத்துறையாகும். இத்துறையில், தலைவனின் பெருமையைப் புலப்படுத்துவதாக ஒரு பாடல்(நற் -45) அமைந்துள்ளது.

மீனெற் பரதவர் மகள்

இத்துறையிலமைந்த ‘குறை வேண்டிய தலைமகனைச் சேட்படுத்தியது’ என்னும் துறைக்குறிப்பிற்கு ‘இவளே கானல் கண்ணிய காமர் சிறுகுடி’  எனத் தொடங்கும் நற் -45ஆம் பாடல் அமைகிறது. இப்பாடல், ‘எம் தலைவி பரதவ மகள்; நீயோ மன்னனின் மகன். நும்மால் உண்டாகும் பெருமைக்கு யாங்கள் தகுதியுடையேம் அல்லேம். ஆதலின் நீவிர் செல்வீராக’ எனத் தோழி தலைமகனைச் சேட்படுத்தும் பொருண்மையில் அமைந்துள்ளது.

‘மீனெறி பரதவர் மகளே நீயே
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வர் காதல் மகனே’ (நற் -45:3-5)

‘பெருநீர் விளையுள் எம்சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்ம னோரின் செம்மலு முடைத்தே’  (நற் -45:9-11)

என்ற செய்யுளடிகள், தலைவனின் பெருமையினைச் சுட்டுவதாக அமைந்திடினும், இகழ்ச்சிக்குறிப்பாக, தலைவன் சிறிது காலம் தலைவியை மறந்திருந்ததால் உண்டான தோழியின் சினமொழிகளாக அமைந்துள்ளதை அறியமுடிகிறது. இதனை “அவன் தன்னை அரியனாகச் செய்துகொண்டு இவர்களைச் சின்னாள் மறந்திருத்தலானே அவனை இகழ்ச்சிக் குறிப்பாற் தலைவனாகக் கூறினாளெனவுமாம்”9 என விளக்குவர் பொ.வே.சோமசுந்தரனார். இவர் இப்பாடலின் 3,4 அடிகளில்,

“மீனெறி பரதவர் காதல் மகளே
நீயே, நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்10

எனவும் துறைக்குறிப்பில் “குறைவேண்டி நின்ற தலைவனைத் தோழி சேட்பட உரைத்தது”11 எனவும் சிறு மாற்றங்கள் செய்திடினும், பாடலின் பொருண்மையும், துறைக்குறிப்பின் பொருண்மையும் சேட்படுத்துதல் துறைக்குள்ளே அமைந்துள்ளதை அறியமுடிகிறது.

தலைவியின் அருமை உள்ளல்

களவொழுக்கத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்ட தலைவனிடம் தோழி ‘தலைவி காண்பதற்கு அரியள். மிக்கோளினும் மிக்கோள். ஆதலின் காண்பதரிது’ எனக் கூறி அவனைச் சேட்படுத்துதல் ‘அருமை சாற்றல்’ துறையாகக் கொள்வர் இலக்கணிகள். மாறாக, சேட்படுத்தும் பொருண்மையிலமைந்த இப்பாடலில் (நற் -301) தலைமகனைச் சேட்படுத்தியப் பின் தோழி, ‘இளமைப் பருவத்தள், குறிஞ்சி மேனியள், குவளைக் கருங்கண்ணள், அழகுமயில் சாயலள், கிளி பேச்சினள்,……. எனப் பலவாறாகத் தம் மகளின் அழகினைப் பாராட்டி மகிழ்கிறாள் அவள் தாய். யான் அத்தலைவியின் மகிழ்விற்காகத் தலைவனுடன் கூட்டுவிப்பதை அறிந்தாள் அத்தாய் என்னாவாளோ?’ எனக் கவன்றுரைப்பதால் இத்துறைக்குத் ‘தலைவியின் அருமை உள்ளல்’ என்னும் துறையாக வருவிக்கப்பட்டுள்ளது.

இத்துறையிலமைந்த ‘சேட்படுத்து, ‘பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையினான்’ என்று தோழி தன்னுள்ளே சொல்லியது.’ என்னும் துறைக்குறிப்பிற்கு ‘நீன்மலைக் கலித்த கருங்கோற் குறிஞ்சி நாண்மலர் புரையும் மேனி’   எனத் தொடங்கும் நற் -301ஆம் பாடல் அமைகிறது. இப்பாடல் ‘தலைவியின் இளமை, அழகு, சாயல், மொழியினைத் தலைவன் தன் காதற் பெருக்காற் பாராட்டினான். அதே காதலை யாயும், யானும் அவளிடம் கொண்டுள்ளோம். யான் தலைவனுடன் கூட்டுவிப்பது அறிந்தால் தாய் என்னாவாளோ?’ எனத் தோழி தன்னுள் கவன்றுரைப்பதாக, ஔவை.சு. துரைச்சாமிப்பிள்ளையின் பாடலடிக்கேற்ப பொருண்மை உரைத்திருப்பர். மாறாக, ஏனை உரையாசிரியர்கள் தலைவியைத் தாய் பாராட்டுவதாக உரைத்திருப்பர் உரையாசிரியர்கள், பதிப்புக்களின் பாடலடிகள், உரைகள் வேறுபடினும், தோழியின் கவன்றுரைத்தல் பொதுவாக அமைந்துள்ளன.

இப்பாடலின் துறைக்குறிப்பிலும் ஔவை.சு.துரைச்சாமிப்பிள்ளை “இஃது, அன்பின் இயல்பினால் தகுவதோர் ஆற்றாமையினான் என்று தோழி தன்னுள்ளே யாய் மறப்பருமை சொல்லிச் சேட்படுத்தது” எனப் பாடலடிக்கேற்ப மாற்றியமைத்திருப்பர். எவ்வாறாயினும் இப்பாடல், துறைக்குறிப்புகளின் பொருண்மை ‘தலைவியின் அருமை உள்ளல்’ துறையில் அமைந்துள்ளது.

தொகுப்புரை

தலைவனின் காதலுறுதியை அறிவதற்காகவும், தலைவியை அலரிலிருந்து காப்பதற்காகவும் தோழி, தலைவனைச் சில காலம் சேய்மைப்படுத்தும் நிகழ்வு சேட்படுத்துதலாகும். இந்தத்துறையில் ஏழு பாடல்கள் அமைந்திடினும் தோழி கூற்றாக மூன்று பாடல்கள் அமைகின்றன. இச்சேட்படுத்துதல் குறித்து தொல்காப்பிய நூற்பாவழியும், நச்சினார்க்கினியர், இளம்பூரணர் ஆகியோரின் உரைவழியும், பின்னிற்றல், பகல் – இரவுக் குறிக் காலங்களிலும், அலர் தோன்றும் காலங்களிலும் நிகழும் என்பது எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

பெருமையிற் பெயர்த்தல் (குலமுறை கூறி மறுத்தல்) துறையில் ‘எம் தலைவி பரதவ மகள். நீயோ மன்னனின் மகன். நும்மால் உண்டாகும் பெருமைக்கு யாங்கள் தகுதியுடையேம் அல்லேம். ஆதலின் நீவிர் செல்வீராக’ எனத் தோழி தலைமகனைச் சேட்படுத்தும் நற் -45ஆம் பாடலின் பொருண்மை துறைக்குறிப்பினொடும், துறையினுள்ளும் அமைந்துள்ளது நோக்கப்பட்டுள்ளது. நற் -301ஆம் பாடலில் தலைவனின் அன்பிற்கு நிகரான தாயின் அன்பு எண்ணித் தோழி மருளும் பொருண்மை கொண்ட பாடலுக்கு ஔவை.சு. துரைச்சாமிப்பிள்ளை குறிப்பிடும் துறைக்குறிப்பு பாடலின் பொருண்மைக்கேற்ப அமைந்துள்ளது என எடுத்தியம்பப்பட்டுள்ளது.

சான்றெண் விளக்கம்

  1. தொல்காப்பியர், தொல்.பொருள்., 99:19
  2. தொல்காப்பியர், தொல்.பொருள்., 233:1-2
  3. நச்சினார்க்கினியர், தொல்.பொருள்., 403
  4. இளம்பூரணர், தொல்.பொருள்., 350
  5. உ.வே. சாமிநாதையர்(பதி.ஆசி), தமிழ்நெறி விளக்கம், 17:3
  6. அ. நாராயணசாமி, பொ.வே.சோமசுந்தரனார், நற்றிணை நானூறு பா.எ -45
  7. சேட்படுத்துதல்: மூன்று பாடல்கள் (நற் -45, 301: ஐங்குறு -91:)
  8. பொ.வே.சோமசுந்தரனார், ஐங்குறுநூறு பா.எ -91
  9. பொ.வே.சோமசுந்தரனார், நற்றிணை நானூறு, ப -81

*****

கட்டுரையாசிரியர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி.

நெறிப்படுத்துநர் – முனைவர் சு. இராசாராம்
பேராசிரியர், தமிழ்த்துறை
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *