திவாகர்

 

என் மனம் பூராவும் குழப்பத்தாலும் பயத்தாலும் தயக்கத்தாலும் இழுபட்டது. இவள் இப்படி இத்தனை வெளிப்படையாக இருப்பாள் என சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். இவள் ஏன் இப்படி கேட்கிறாள் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க நேரமில்லைதான். சட்டு புட்டென்று பதில் சொல்லிவிட்டு ஓடிவிட வேண்டிய சூழ்நிலை.. ஆனால் ஓட முடியுமா?

”ம்.. பரவாயில்லே.. உண்மையைத் தானே சொல்லறோம்.. உன் வைஃப் ஒண்ணும் சொல்லமாட்டாங்க.. என்ன சாரதா.. நான் சொல்லறது சரிதானே.. ம்.. பாருங்க எங்க மோகன் எவ்வளோ ஆவலா எதிர்பார்க்கிறார்ன்னு. கம் ஆன் ஆனந்த்.. நாம் ரெண்டு பேரும் காதலிச்சது உண்மைதானே.. பத்தோ பன்னிரெண்டோ காதல் கடிதம் எழுதிண்டோமே.. உண்மைதானே’

”ஆமாம் சார் ஆமாம்.. இவள் சொல்வது சரிதான்.. இவள் என் காதலி.. இரண்டு பேரும் உயிருக்குயிராக காதலித்தோம்.. ஆனால் கலியாணம்தான் செய்துகொள்ளவில்லை..” என்று சொல்லமுடியுமா.. அதுவும் யார் எதிரில் குறுகுறுவென அவளையேப் பார்த்துக் கொண்டிருக்கும் மனைவி சாரதாவின் எதிரில்..

எனக்குதான் இத்தனை பயமே தவிர அந்த மோகன் மட்டும் அவள் சொல்வது போல ஆவலாக இருந்தான் என்பது என்னவோ உண்மைதான்.. சித்ராவே மறுபடியும் ஆரம்பித்தாள்.

”உனக்குத் தெரியாது ஆனந்த்.. நான் எத்தனையோ தடவை சொன்னாலும் இவர் ஒப்புக்கவே மாட்டார்.. நான் விளையாட்டுக்குச் சொல்றேன்னு கிண்டல் பண்ணுவார்.”

அந்த மோகன் சிரித்தான்.. “ஹே சித்து.. இவர் முழிக்கற முழிலேர்ந்து தெரியறது.. இப்ப உன்னை நம்பறேன்.. டோண்ட் கம்பெல் ஹிம்.. மிஸ்டர் ஆனந்த்.. தப்பா எடுத்துக்காதீங்க.. இவ நிறைய தடவை உங்களைப் பத்தி சொல்லறச்சே நான் கிண்டல் பண்ணுவேனா.. இவ கொஞ்சம் சீரியஸ் டைப்.. அவ்வளவுதான்.. வாங்க ஸ்டார்பக்ஸ் போகலாம்.. ஒரு காபி சாப்பிட்டாதான் இவளுக்கு டென்ஷன் தீரும்.’

லண்டன் ஐ எனும் அந்த சிறப்புமிக்க டூரிஸ்ட் இடத்தில்தான் இத்தனை குழப்பமும் நடந்தேறிக் கொண்டிருந்தன. மோகன் ஏதோ சுமுகமாக தீர்த்து வைப்பது போல பாவனை செய்தாலும் காபி அருந்தும்போதும் சித்ராவே மெதுவாக கேட்டாள்.

’ஆனந்த்.. போகட்டும். உனக்குதான் என் லவ் லெட்டர்லாம் ரொம்ப பிடிக்கும் இல்லையா? உங்கிட்டே என்னோட லவ் லெட்டர் ஏதானும்  இருந்தா கொடேன்.. இவர்கிட்டே காண்பிக்கணும்.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. இந்த லவ் லெட்டர் கான்செப்ட்டே இப்பல்லாம் கிடையாதா?.. நானும்  எழுதியிருக்கேன்னு சொன்னா இவர் சிரிக்கிறார்.. நீயா.. அப்படி என்ன எழுதுவே.. என்ன இருக்கு எழுத..?’ அப்படின்னு அப்பப்ப கேட்பார்.. இந்தக் காலத்து லவ்வோட கம்பேர் பண்ணறச்சே நாம் எவ்வளோ டீசெண்டா காதலிச்சோம்’னு இவர்கிட்டே சொன்னா இவருக்கு எதுவும் புரியாது. அப்படி என்ன இருக்கு அந்த டீசெண்டான லவ்வுல’ன்னு கேட்டு சிரிப்பார். உங்கிட்டே இப்போ என்னோட லெட்டர் ஏதுனா இருக்கா.. இவருக்குக் காண்பிச்சு எக்ஸ்ப்ளெயின் பண்ணனும்.. சொல்லேன் பிளீஸ்..’

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து நான் இவளைப் பார்க்கிறேன்.. அதுவும் அவளுக்குப் பிடித்த லண்டன் மாநகரத்தில்.. அதே குரலினிமை.. அதே அழகு மயில்.. அதே சிரிப்பு.. அதே படபடப்பு..

இல்லையென தலையாட்டினேன். அவளுடைய காதல் கடிதங்களெல்லாம் படிக்கப்பட்டதால்தான் இந்தக் காதலே நிறைவேறவில்லை.. அவை யாவையும் கருணை காட்டப்படாமல் கொளுத்தப்பட்டன என எப்படி இவளிடம் சொல்வேன். என் மௌனம் அந்த மோகனுக்குப் பிடிக்கவில்லை போலும். பேச்சை மாற்றினான். தன் குடும்பத்தைப் பற்றி சொன்னான். எங்களைப் பற்றி கேட்டான். வீட்டுக்கு ஒரு வார இறுதியில் வந்து இரண்டு நாள் தங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எங்களுக்கு வைக்கப்பட்டது. கொஞ்சநேரம் கழித்து லண்டனையும் சென்னையையும் கம்பேர் செய்த பேச்சுக்குப் பிறகு கிளம்பினோம். அவர்கள் கை குலுக்கி விடை பெற்றார்கள். கையை குலுக்கும்போது சித்ராவின் கை வேகமாக அழுத்தியதோடு ‘ரொம்ப தேங்க்ஸ்’ என்று சொல்லவும் சொல்லி விட்டு சென்றார்கள்.

சாரதா என்னைப் போலவே அதிகம் பேசவில்லை. விந்தையாகப் பார்ப்பது போல பார்த்தாலும் இத்தனை நேரம் என்னவெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாளோ.. வீட்டுக்குத் திரும்பும்போது கூட மௌனமாகத்தான் திரும்பினோம். ‘மாமா, பசங்ககிட்டே நாம் இவங்களையெல்லாம் பார்த்தோம்னு பெருமையா ஏதும் பீத்திக்காதீங்க.. அப்புறமா நாம பேசிக்கலாம்’, சாரதா காரை விட்டு இறங்குமுன் சொன்னவள்தான். அந்த அப்புறமா என்ற வார்த்தையில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.

என் சொந்த அக்காவின் ஒரே பெண்தான் சாரதா.. என் அக்காவை எங்கள் வீட்டின் எஜமானியாகத்தான் சிறிய வயதிலிருந்துதான் நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் என் அக்காவுக்கும் பதினான்கு வயது வித்தியாஸம். பெரிய பெண்ணாகவே நான் நினைவு தெரிந்த நாளிலிருந்து பார்த்துப் பழகினாலும் என் மீது ஏகப்பட்ட பாசம் வைத்திருப்பவள். அம்மாவை விட அக்காவிடம்தான் அதிகம் வளர்ந்தேன். அவள் கல்யாணம் ஆகி அடுத்த தெருவில்தான் குடித்தனம் போனதால் அவள் வளர்ப்புக்கு எவ்வித பஞ்சமும் ஏற்பட்டதில்லை. அவள் பெண்ணான சாரதாவோடு அதிகம் பழகவிடமாட்டாள். ஏன் என்று எனக்கும் புரியவில்லை அப்போது ஆனால் இனம் புரியாத ஒரு பயம் மட்டும் அவளிடம் உண்டு. என்னை கண்கொத்திப் பாம்பாக கண்காணிப்பாள். சிகரெட் பிடித்துவிட்டு இரண்டு சாக்லெட் வாயில் போட்டுக் கொண்டு மென்று தின்றாலும் கண்டுபிடித்து விடுவாள்.. அக்காவின் ஆணையே இந்த இரண்டு வீடுகளில் செல்லுபடியாகுமென்பது  இன்னொரு விஷயம். . இப்படிப்பட்ட அக்காவிடம்தான் சித்ரா ஒருமுறை சரியாக மாட்டிக்கொண்டு சிக்கினாள்.

இஞ்ஜினீரிங் கல்லூரியில் சித்ரா எனக்கு இரண்டு வருடம் ஜூனியர். அழகு மயில். ஆமாம்.. ஒருமுறை அவள் மயில்நடனம் ஆடியபோதுதான் அந்த அழகில் மயங்கி விழுந்தேன்.. தைரியமாக அவளிடம் என் காதலைச் சொன்னபோது முதலில் சாதாரணமாக எடுத்துக்கொண்டவள் பிறகு என்ன நினைத்தாளோ.. முறுவலித்து ஏற்றுக் கொண்டாள். எத்தனையோ நண்பர்களுக்குத் தெரிந்தாலும் எங்கள் காதல் விவகாரம் என் வீட்டுக்குத் தெரியாதுதான். ’கல்லூரி காலத்து பருவ காதலாக இல்லாமல் நம் காதல் காலாகாலத்துக்கும் இனிக்கும் பரிபூரணக் காதல்’ என இவளே ஒவ்வொரு கடிதத்திலும் எழுதுவாள்தான். பளிச்சென இருக்கும் எழுத்துகள் எத்தனை முறை படித்தாலும் சுகமானது. ஒவ்வொரு சமயம் மனப்பாடமாக அப்படியே அவளிடமே சொல்வேன். அவளுக்கு ஆவல் அதிகம் பிறக்கும். அடுத்த கடிதம் இன்னமும் ஆழமாக இருக்கும். கல்லூரி படிப்பு முடிந்து  மேல்படிப்பும் முடித்து நான் வேலைக்குச் சென்றபின்னரும் அவள்தான் என் ஜீவநாடியாக இயங்கிவந்தவள். அவள் அருகே இல்லாத தருணத்தில் அவள் கடிதங்களோடு பேசிக்கொண்டு பைத்தியமாக மாறியிருந்த காலங்கள் அவை. அப்படிப்பட்ட சமயத்தில்தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் கதாநாயகி என் அக்கா. வில்லன் நான்.. அகப்பட்டு மாட்டிக்கொண்டு பலியானது சித்ராதான்.

அன்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். அலுவலகத்தில் என்னை லண்டன் மாற்றியிருப்பதாக கடிதம் வாங்கிக் கொண்டு வந்திருந்தேன். இது கூட சித்ராவின் நீண்டநாள் கனவை நனவாக்கத்தான்.. அவளுக்கு லண்டன் மீது கொள்ளை ஆசை. ஆங்கில புதினங்களில் வரும் லண்டன் வர்ணனைகள் அவளை மிகவும் கவர்ந்தவை. ஷேக்ஸ்பியரின் பரம ரசிகை. 221பி, பேகர் ஸ்ட்ரீட் அவளது பிறந்த வீடாக நினைத்துப் பெருமை கொள்ளுவாள். அவளுக்கு மிகவும் பிடித்த ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரத்தின் நினைவு வீடான அந்த இடத்தை வாழ்க்கையில் ஒருமுறையாவது தரிசிக்கவேண்டும் என்பது அவள் ஆசை.  கல்யாணம் ஆனபின்னர் லண்டனில் செட்டில் ஆவது என்பது அவள் வாழ்வின் லட்சியம் கூட. அவளுக்காகவே என் அலுவலகத்தில் கொஞ்ச காலமாக கஷ்டப்பட்டு லண்டன் அலுவலகத்துக்கு வேலை செய்ய அனுமதி பெற்றவன். அன்று அந்த அனுமதி கிடைத்த மகா சந்தோஷத்துடன் இல்லம் வந்து சேர்ந்தவனுக்கு அங்கே நான் நேசிக்கும் சித்ராவும், என் பாசத்துக்குரிய அக்காவும், கையில் கடிதங்களுடன் காணப்பட்டார்கள். சித்ராவின் கண்கள் அழுது சிவந்திருந்தன. அக்காவோ அவனைப் பார்த்ததும் ஆக்ரோஷத்துடன் உலகத்தையே அழிக்கப்போகும் இராட்சஸி போல நடுக்கூடத்தில் நின்றிருந்தாள்.

இந்தக் கோலத்தில் அங்கே என்ன நடந்திருக்கும் என என்னால் ஊகிக்க முடிந்தது. ஒரு ஓரமாக ஏதுமறியாத குழந்தை போல என் அம்மா நின்றிருக்க அவள் பக்கத்தில் இருந்த சித்ராதான் முன்னால் வந்தாள். ஒரே வார்த்தை.. ஒரு வார்த்தைதான் பேசினாள். ‘குட் பை ஆனந்த்.. இனி நமக்குள் எந்த உறவும் கிடையாது..” அழுதுகொண்டே சொல்லிவிட்டு வெளியே வேகமாக சென்று எங்கள் காரில் அமர்ந்துகொண்டு சென்று விட்டாள்.

என் அக்கா உடனடியாக ஏதும் பேசவில்லை. அம்மாதான் ஏதோ சமாதானப்படுத்தினாள். வீட்டுக்குள்ளேயே குதிர் போல ஒரு அழகான பெண் எனக்காகக் காத்துக்கொண்டிருக்க ஏன் இன்னொரு பெண்ணை நாடினேன் என்று அம்மா கேட்கும்போது முதலில் புரியவில்லை. பிறகுதான் சாரதாவைப் பற்றிப் பேசுகிறாள் என்பது புரிந்தது. நான் அப்பாவியாக அக்காவைப் பார்த்தேன். காதலைப் பற்றியும் காதலி பற்றியும் எரிச்சல் கொண்டிருந்த அக்காவிடம் எந்தக் கருணையும் இல்லை. கடகடவென சமையலறை சென்றவள் நான் கத்தக் கத்த எந்த இரக்கமும் காட்டாமல் அத்தனைக் கடிதங்களையும் எரியும் ஸ்டவ்வின் நீல நெருப்புக்கு இரையாக்கி தன் எரிச்சலைத் தணித்துக் கொண்டாள். பிறகு என்னிடம் வந்தாள்.

“சரி, இது இத்துடன் போகட்டும்.. இந்த விஷயம் அப்பாவுக்கும் தெரியவேண்டாம், சாரதாவுக்கும் தெரியவேண்டாம். யாருக்குமே சொல்லக்கூடாது. எம் மேலே சத்தியம்.. சரியா.. அம்மா, இதோ பார்.. நான் என் வீட்டுக்காரரிடம் பேசி நல்ல முகூர்த்தம் பார்க்கிறேன். செய்யவேண்டிய சீர் எல்லாம் குறையில்லாமல் செய்கிறேன்.. உன் பையனை இந்தக் கலியாணம் வரைக்குமாவது நீ ஜாக்கிரதையா பார்த்துக்கோ.. அவ்வளவுதான் சொல்வேன்..’ சொன்னவள் என்னை ஒரு முறை குரோதத்துடன் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டாள். அம்மாதான் சொன்னாள். முதல்நாள் அவள் வீட்டுக்கு வந்த போது என்னிடம் ஏதோ பேசவந்தாளாம். ஆனால் நான் கவனிக்காமல் ஏதோ கடிதங்களுடன் பேசிக்கொண்டிருந்தேனாம். கொஞ்சநேரம் கோபமாகப் பார்த்துவிட்டுப் போய்விட்டாள். காலையில் நான் ஆஃபீஸ் சென்றவுடன் வந்தவள் என் அறையில் நுழைந்து நான் என் பீரோவில் வைத்திருந்த கடிதங்களையெல்லாம் எடுத்துப் படித்து விட்டு கோபத்துடன் காரில் ஏறி என் நண்பர்களைப் பிடித்து அவர்கள் மூலமாக சித்ராவின் வீட்டுக்குப் போய் சண்டை போட்டு அவளைப் பயமுறுத்தி தன்னுடன் அழைத்துக் கொண்டு  இதோ இப்படிச் சொல்லவைத்துவிட்டாள்.

வாழ்க்கையே சுக்கு நூறாகி உடைந்துவிட்டதை அன்றுதான் உணர்ந்தேன். அம்மாவிடம் அழுதேன். லண்டன் பயண கடித விவகாரத்தை சொன்னேன். கலியாணம் செய்துகொண்டு சாரதாவுடன் ஜாலியாகப் போயேன்’ என்று அப்பாவித்தனமாகப் பேசினாள் அம்மா.

அடுத்த சிலநாட்களில் சித்ராவை நான் சந்திக்க எத்தனை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. சே.. என்ன பைத்தியக்காரத்தனம் இது.. ஒரு அக்காக்காரி முறைத்தால் காதல் முறிந்துவிடுமோ. காதல் என்பது என்ன இத்தனை பலவீனமான உணர்ச்சியா? காதல் என்பது எத்தனை பலம் வாய்ந்தது என்பதை எப்படி உணர்த்துவது? அந்த காதல் உணர்வு இல்லையென்றால் கஷ்டப்பட்டு காதலிக்காக லண்டன் பயணம் வரை நான் ஏற்பாடு செய்திருப்பேனா? என் அக்காவுக்குப் பயந்துபோய் சித்ரா இப்படிச் செய்யலாமா.. எவ்வளவு ஆசை ஆசையாக லண்டன் வாழ்க்கையை ஊகித்து வந்தோம்? ஏய் சித்ரா பதில் சொல்லு.. ஒருமுறை என்னிடம் பேசு என்றெல்லாம் அவள் தோழிகள் மூலமாக செய்தி அனுப்பினாலும் அவள் வரவில்லைதான்.

அடுத்த மாதத்தில் சாரதாவின் கழுத்தில் நான் கட்டிய தாலியுடன் லண்டன் பயணம் செய்யும்போது சாரதா மட்டுமே உண்மையான மகிழ்ச்சியில் இருந்தாள். அம்மாவும் அக்காவும் வெளியே மகிழ்ச்சியைக் காண்பித்தாலும் உள்ளுக்குள் ஏதோ பய உணர்வுடன் இருந்துகொண்டிருப்பது எனக்குத் தெரியும். நான் ஏதாவது எதிர் ஏற்பாடு செய்துவிடுவேனோ என்ற பயம் கடைசி வரையில் அக்காவுக்கு இருந்தது. நான் அப்படித்தான் தயார் நிலையில் இருந்தாலும் சித்ரா அசைந்து கொடுக்கவே இல்லையே.. இரண்டு கை தட்டினால்தான் ஓசை வரும்.

ஆனால் அன்றிலிருந்து அக்கா தம்பி உறவு முறை முறிந்து போய்விட்டது என்பது வாஸ்தவம்தான்.. ஒரு புதிய மாமியாரைப் போலத்தான் பழகினேன்.. அக்காவும் அந்த தூரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே விரும்பினாள் போலும். இந்த இலண்டனில் கடந்த பன்னிரண்டு வருட வாழ்க்கையில் இரண்டு முறை பிரசவத்துக்காக உதவி செய்யவும், ஒருமுறை கணவருடனும் இன்னொருமுறை அம்மா அப்பாவுடன் வந்திருந்தாள். ஒவ்வொரு முறையும் நான்கைந்து மாதங்கள் இருந்தாலும் இருவரும் ஏதோ மாமியார் மருமகன் உறவில் மட்டுமே இருப்பது போல நடந்துகொண்டாமே தவிர பழைய தம்பி நான் என்பதை போகப் போக மறந்துதான் போனேன். ஆனால் சாரதா மட்டும் என் மேல் அன்பையும் பாசத்தையும் பொழிகின்றவள். அவள் கூட இரண்டு முறை எங்களிடையே இருந்த தூரத்தைப் பற்றிக் கேட்டவள்தான். ‘என்ன இருந்தாலும் எங்கம்மா உங்களுக்கு சொந்த அக்காதானே மாமா, ஏன் இப்படி வித்தியாஸமா விலகிப் போய் பழகறீங்க’ என்று கேட்டதற்கு நான் சிரித்து மழுப்பி விடுவதால் அவளும் நாளாக நாளாகக் கண்டு கொள்வதில்லைதான். ஆனால் அக்காவைப் பார்க்கும்போதெல்லாம் சித்ராவின் நினைவு தவிர்க்கமுடியாதது என்பதை அக்கா அறிவாள்.. அவள் பெண் அறியமாட்டாள் இல்லையா..

அதே போல நானாக என் அக்காவைக் கூப்பிட்டு இங்கே அழைத்துக் கொள்ளவும் விருப்பப்படவில்லை. அவளேதான் வருவாள். போவாள். இந்த விஷயத்தில் சாரதாவுக்கு ஏராளமான கோபம் கூட என் மீது உண்டு. அந்த கோபத்தையும் எப்போதாவது என் மீது பிரயோகிப்பாள். நான் கண்டு கொள்வது இல்லை கூட.

அன்றிரவு பிள்ளைகளுக்கு வழக்கப்படி ஏதோ கதை சொல்லி தூங்க வைத்துவிட்டு படுக்கைக்கு வந்தேன். காத்திருக்கிறாள்.. தூங்காமல் காத்திருப்பாள் அவள் என்பது எனக்கும் தெரியும்தான்.

கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. அவளே ஆரம்பித்தாள்.”மாமா, நமக்கு இந்த முதலிரவு இரண்டாவது இரவுன்னு மூவாயிரம் நாலாயிரம் இரவு வந்தாச்சு.. ஒருநாளாவது அந்தப் பெண்ணைப் பத்திப் பேசலையே ஏன்.. எனக்கு அது மட்டும்தான் பிடிக்கலே.. எங்கிட்டே சொல்லியிருக்கலாம் இல்லையா.. என்கிட்டே சொல்றதிலே ஏன் பயப்பட்டீங்க.. இப்ப பாருங்க.. அந்த சித்ரா புருஷன் ஹாயா சிரித்துக் கொண்டே எவ்வளோ ஈஸியா இந்த விஷயத்தை ஹாண்டில் பண்ணினான். நீங்க அங்க தவிச்ச தவிப்பு இருக்கே.. நல்லா கவனிச்சேனே..  எனக்கு பயங்கர கோபம் வந்து நானே ஏதாவது சொல்லிடலாம்னு கூட நினைச்சேன்..”

அவளைப் பார்த்தேன்.. அவளுக்கு என் மேல் பூரண அன்பு சற்றும் குறையவில்லை என்பதும் புரிந்தது. அவள் முன்நெற்றியில் விழுந்த முடிக்கற்றைகளை பின்னுக்குத் தள்ளிக்கொண்டே கேட்டேன்.

‘உன்கிட்டே இதெல்லாம் சொல்லாதது என்கிற வரையில் நீ கேட்டது சரிதான். சாரு, நான் இதுக்குப் பதில் சொல்றதுக்கு முன்னாடி நான் உன்னை ஒரு கேள்வி கேட்கலாமா?” அவள் தலையை அழகாக அசைத்தாள்.

“நீ யாரையாவது கல்யாணத்துக்கு முன்னாடி காதலிச்சிருக்கியா?”

”ஓ! இந்த மாமாவைத்தான் சின்னப்பலேர்ந்து மனசுக்குள்ளே காதலிச்சிருக்கேன்.” என்று என்னை இடித்தாள்.. ”ஆனா அது காதல் அது இதுன்னு சொல்லத் தெரியாது. சின்னப்பலேர்ந்து எங்கம்மா  எங்கிட்டே ‘உன் மாமாதான் உன்னைக் கட்டிக்கப் போறான்.. அதனால அடிக்கடி நீ அவனோட கிட்டக்கப் போய்ப் பழகக் கூடாது.. ந்னு ஒரு பயத்தை உருவாக்கிட்டா.. அதனால காதலா உங்ககிட்டே பழகறதுங்கறது என்னால அப்ப முடியலே.. காரணம் எங்கம்மாதான்.. அவ சொல்றதும் சரிதானே.. கல்யாணத்துக்கப்பறம் உங்க மாமா உன் கையிலதானடின்னு அடிக்கடி சொல்வாள். நீங்களும் நானும் ஒருவர் கையில் ஒருவர்தானே..”

அவள் பேசுவதை ரசித்தேன். ’காதலை வெளிப்படையாக சொல்லாததற்குக் காரணம் அவள் அம்மாவாம். பைத்தியக்காரி, அதே அம்மாதான் என் காதலையும் உன்னிடம் வெளிப்படையாக சொல்லாததற்குக் காரணம்’ என்று சொல்லிவிடலாம்தான். ஆனால் சாரதா பாவம், மென்மையான மனசு அவளுக்கு.

‘சாரதா! இப்போ காலம் எவ்வளோ மாறிப் போச்சு பார்த்தியா.. ஒரு காலத்துல இப்படியெல்லாம் காதல் விவகாரம் இன்னிக்கு ஏற்படற மாதிரி வெளிப்பட்டால் உடனே குடும்பத்துல பெரிய குழப்பம்லாம் வரும்.. ஆனால் நீ எளிதா எடுத்துக்கற.. ஒருவேளை உன் மனசைப் புண்படுத்தக்கூடாதே’ன்னு நான் சொல்லலே’ன்னு இந்த விஷயத்தை எடுத்துக்கோ.. அவ்வளோதான்.”

“அதெல்லாம் போகட்டும்.. ஆசை ஆசையா உங்களுக்கு ரொம்ப பிடிக்கறாமாதிரி லெட்டர்லாம் எழுதினாளாமே.. நான் சாயங்காலம் வந்ததும் உங்க பீரோவைக் கூட தேடினேன்.. கிடைச்சா அவளுக்கு போன் பண்ணி ரிடர்ன் பண்ணலாம்னு.. போன் நம்பர்லாம் ஷேர் பண்ணிண்டோமே.. ஆனா எதுவும் கிடைக்கலே”

அடிப்பாவி, இவள் என்னை நம்பவே இல்லை. “என்ன சாரு இது… விட்டுடு’ன்னு சொன்னேன் இல்லே.. விட்டுடேன்..”

அவள் விடவில்லை. “ஆமா.. அப்படி என்னதான் எழுதிப்பீங்க.. என்ன இருக்கு எழுத?” அந்த மோகன் கூட இதையே சொன்னான். சாரதா கொஞ்சநேரம் ஆழமாக யோசிப்பது போல பார்த்தாள்.

”ஆங்.. எனக்கு புரிஞ்சுபோயிடுச்சு மாமா.. இது கணவன் மனைவிக்குள்ள இருக்கற ஒரு ஈகோ பிரச்னை மாமா.. நல்லா யோசிச்சுப் பாருங்க.. எத்தனைதான் காலம் மாறினாலும், சொசைடி’ல ரொம்ப முன்னேற்றம்னு பேசினாலும் யாருமே தன்னோட பழைய காலத்து காதல் தோல்விக் கதையை சொந்தப் புருஷன்கிட்டேயே இப்படி பிரம்மாண்டமா பெருமை அடிச்சுக்க மாட்டாங்க.. அதுவும் பாருங்க சித்ரா அதைப் பத்தியே பேசினாளே தவிர இப்ப இருக்கறவிதத்தையோ என்ன செய்யறேங்கறதையோ எதுவும் பேசலே . எல்லாமே அவ புருஷன் சொன்னதுதான். அதனால சித்ரா உங்களை இன்னைக்கு சந்திச்சதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தியிருக்கா. அதாவது ஒரு பாயிண்ட் புருஷனை விட ஸ்கோர் பண்ணியே ஆகணும்னு வீம்பு.  இப்படி ஒருவேளை இருக்கலாம். சித்ராவின் பழைய காதல் கதையை அந்த மோகன் எப்பவும் கொஞ்சம் கீழ்ப்படுத்தி பார்த்திருக்கலாம். ஒரு வீம்புக்காக இவளும் இதைப் பெரிதுபடுத்தியிருக்கலாம். இந்தக் கால நாகரீகம்ங்கறதே கல்யாணத்துக்கு முன்னாடி பழகி இருக்கணும்’னு பேசறதுதானே. ஓருவேளை இந்த விஷயத்துல மோகன் இவளைப் புண்படுத்தி இருக்கலாம். அல்லது வேற ஏதாவது சொல்லி நோக அடித்திருக்கலாம். இதை ஒரு சவாலா எடுத்துண்டு சித்ரா சமாளிச்சே ஆகணும்ங்கிற மனநிலைல இருக்கணும். வாழ்க்கைல காதல் என்பது ஒரு வயசுல வருவது சகஜம்தான்.. அதை டீசெண்ட் லவ் இண்டீசெண்ட் லவ் நு எப்படி பிரிக்கிறாங்களோ..  ஆனா ரொம்ப ரொம்ப பிராக்டிகல் வாழ்க்கையா மாறிப்போன இந்த கால கட்டத்துல இந்த கல்யாணத்துக்கு முன்னாடி வந்த காலேஜ் காதல்லாம் ஒரு பெரிய பிரச்னையா மாமா? மக்கு மாமா.. இன்னிக்கு நீங்க நல்லா மாட்டிகிட்டீங்க.. அவ்வளவுதான் சொல்வேன்”. அவள் என் தலையை கலைத்துக் கொண்டே சிரித்தாள்..

ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்தான் அறிவாளோ.. இந்த பெண்கள்தான் எவ்வளவு ஆழமாக சிந்திக்கிறார்கள். இவள் மட்டும் இப்படி ஒரு கோணத்தில் சொல்லாமலிருந்தால் நான் ஏதேதோ பைத்தியக்காரத்தனமாக நினைத்துக்கொண்டு இந்த இரவெல்லாம் முழித்துக் கொண்டிருப்பேனோ என்னவோ.. காதல் என்பது ஒவ்வொருத்தருக்கும் வேறு வேறு வகையில் உதவுகிறதோ.. அன்றைய தினம் அக்காவுக்கு இந்த காதல் என்பது எரிச்சலாகப் பட்டது. ஆனால் அதையே சாக்காக வைத்து எங்கள் கல்யாணத்தையும் உடனடியாக நடத்திவிட்டாள்., இதோ இன்று அவள் வயிற்றில் பிறந்த பெண் மிக அழகாக காதல் என்பதைப் பற்றி காலத்துக்கேற்றவாறு எடுத்துச் சொல்கிறாள். காதலில் விழுந்த சித்ராவோ அதே காதலை வைத்து தன்னைத் தூக்கிக் கொள்ளப் பார்க்கிறாள்.. ஆமாம்.. காலம் அது கழியக் கழிய காதலைப் பற்றிக் கூட ஒரு முதிர்ச்சியான அனுபவத்தைத் தருகிறதுதான். அன்று காதலை மறுத்த அக்கா செய்தது தவறுதான் ஆனால் இன்று அதன் பரிகாரமாக அவள் இப்படி ஒரு அருமை மகளைத் தனக்குப் பரிசாக அளித்திருக்கிறாள் என்றல்லவா படுகிறது.  ஏனோ அக்காவைப் பார்க்கவேண்டும் போலத் தோன்றியது.

”சாரு.. இப்பவே அக்காவுக்கு போன் பண்ணி விசாவுக்கு அப்ளை போட்டு இங்கே சீக்கிரம் வரவழையேன்.. ஒரு ஆறு மாசம் இருக்கட்டுமே. எனக்கு என்னவோ எங்க அக்காவிடம் பழைய தம்பியா இருக்கணும்னு ஆசை”

என் திடீர் மாற்றம் சாரதாவுக்குப் புரியவில்லை. சம்பந்தமே இல்லாமல் தன் அம்மாவைக் கூப்பிடச் சொல்லும் என்னை ஆச்சரியம் விலகாமல் பார்த்தாள். ஆனால் அவள் எழுந்த துள்ளலில் அவள் மகிழ்ச்சியும் ஏராளமாக இருந்ததை கவனிக்கத்தான் செய்தேன்.

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “காதல் என்பது..

  1. மிக அருமையாக இருக்கிறது!. மிக நுண்ணிய மன உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் வரிகள்… அந்தந்த காலக்கட்டத்துக்கேற்ற சூழல் மாற்றங்களை மிக இயல்பாக உணர முடிகிறது!.. பகிர்வுக்கு மிக்க நன்றியும் நல்வாழ்த்துக்களும்!.

Leave a Reply to Dhivakar

Your email address will not be published. Required fields are marked *