குருவிகுளம் அருள்மிகு மேல மாரியம்மன் திருக்கோயில் – ஓர் அறிமுகம்

3

கிருஷ்ணமூர்த்தி. சோ.

மனிதன் பண்டைக்காலந் தொடங்கி இன்றளவும் இறைவன் மீது கொண்ட பக்தியினால் வழிபாடு நடத்தி வருகின்றான். வழிபாடு மனத்திற்கு அமைதியும், வேண்டியன கிடைக்கவும் நிகழ்த்தப்படுகிறது. வழிபாட்டினைப் பெருந்தெய்வ வழிபாடு என்றும் சிறுதெய்வ வழிபாடு என்றும் இருவகைப் படுத்தலாம்.

அம்மன் வழிபாடு

நாட்டுப்புற மக்களிடையெ சிறுதெய்வ வழிபாடு மிகவும் போற்றப்பட்டு வருகிறது. அதிலும் அம்மன் வழிபாடு மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றது. அந்த அம்மன்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்பப் பல பெயர்களிட்டு அழைப்பர். அவ்வாறே குருவிகுளத்தில் அமைந்துள்ள அருள்மிகு மேல மாரியம்மன் திருக்கோயில் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

கோயில் அமைவிடம்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் வட்டத்தில் குருவிகுளம் அமைந்துள்ளது. குருவி + குளம் = குருவிகுளம் என இயல்பாகப்  புணர்ந்துள்ளது. குருவிகள் அதிகமாக உள்ள ஊர் என்றும் ஊரைச் சுற்றிக் குளங்கள் அதிகமாக இருப்பதால் குருவிகுளம் என்று அழைக்கப்படுகிறது. அருள்மிகு மேல மாரியம்மன் திருக்கோயில் குருவிகுளத்தின் மேற்குத் திசையில் இருப்பதால் இப்பெயர் பெற்றது.

ஊரின் பெயர்க்காரணம்

குருவிகுளம் என்ற சிறப்புமிக்க ஊரானது பழங்காலந் தொட்டே அதன் வரலாறு சிறப்பிடம் பெறுகிறது. அதாவது, ‘பட்சி தடாகம்’ என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் காலச்சக்கரம் சுழல அவ்வூரானது ‘பட்சி’ என்றால் ‘பறவை’ என்று பொருள். ‘தடாகம்’ என்றால் ‘குளம்’ என்று பொருள். இவ்வாறே ‘பட்சி தடாகம்’ என்பது பறவைகளில் அதிகமாக இருக்கும் குருவியின் காரணத்தால் ‘குருவிகுளம்’ என்று வழங்கப்படலாயிற்று.

கோயில்தோற்றம்

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாகக் குருவிகுளத்தில் கோயில் தோற்றுவிக்கப்பட்டது. இக்கோயிலானது குருவிகுளத்தில் தேவர் இன மக்களால் ஏற்படுத்தப்பட்டது. இக்கோயில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து உருவாக்கப்பட்டது.

கோயிலின் உள்ளே மாரியம்மனின் வலப்பக்கத்தில் விநாயகரும் இடப்பக்கத்தில் முருகனும் உள்ளனர். கோயிலின் வெளிப்பிரகாரத்தில் வலப்புறம் கருப்பசாமி கோயிலும் இடப்புறம் வைரவரும் உள்ளனர்.

கோயிலைச் சுற்றி வரும்பொழுது தென்புறத்தில் வடக்குமுகமாக முத்துமாரியம்மனும் காளியம்மனும் வீற்றிருக்கிறார்கள். வடப்புறத்தில் துர்க்கையம்மன் இருக்கிறார். அதற்கு அருகாமையில் நாகாத்தம்மனும் இருக்கிறார்.

கோயிலின் உள்ளேயே என்றும் வற்றாத தீர்த்தக் கிணறு ஒன்றும் உள்ளது. அதன் அருகில் தேவர் இன மக்களின் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையும் உள்ளது. இவற்றை எல்லாம் அழகுபடுத்தும் விதமாகக் கோயிலைச் சுற்றிலும் பசுமையான பூச்செடிகள் வளர்ந்து கண்ணைக் கவரும் வண்ணம் விளங்குகின்றது.

திருக்கோயில் வளர்ச்சி

அருள்மிகு மேல மாரியம்மன் திருக்கோயில் தொடக்கக் காலத்தில் சிறு மண்பீடமாகவே அமைக்கப் பெற்றிருந்தது. அதன் பின்னர், தேவர் சமூகத்தினரால் கற்களாலான பீடம் அமைக்கப் பட்டிருந்தது.

அன்னையின் அருள் பெற்ற பலர் அன்னைக்குச் சிறு கோயிலாவது இவ்விடத்தில் கட்ட வேண்டுமென்று முடிவெடுத்தனர். அதன்படி சிறுகோயில் எழுந்தது. அதன்பிறகு அது பெரிய கோயிலாக இன்று காண்போர் வியக்கும் வண்ணம் எழுந்தருளியுள்ளது.

அம்மனின் திருவுருவம்

“இறைவனுக்குள்ள இயல்பு நிலைக் குணங்களின் சின்னங்களாகத்தான் ஆலய விக்கிரகங்கள் விளங்குகின்றன”1 என்பர்.

அவ்வகையில் அருள்மிகு மேல மாரியம்மன் கோயில் கிழக்கு பார்த்து அமைக்கப்பட்டுள்ளது.மேலும் அம்மனின் திருவுருவம் சிறுகுழந்தை வடிவில் நின்ற கோலத்தில் விளங்குகிறது. ‘குழந்தையும் தெய்வமும் ஒன்று’ என்பார்கள்.அதற்கேற்ப குருவிகுளம் மேல மாரியம்மன் பன்னிரெண்டு வயது குழந்தையைப் போலவே காட்சியளிக்கின்றது.அம்மன் இரண்டு கைகளை உடையவளாக வலக்கையில் உடுக்கையும் இடக்கையில் சூலாயுதமும் ஏந்தியவளாகச் சிங்க வாகனத்தில் எழுந்தருளியுள்ளாள்.

விழாக்கள்  

“விழா என்பது விழைவு என்ற சொல்லின் திரிபாகும்,”2 இவ்வுலகில் வாழ்கின்ற மக்கள் இப்பிறவியில் இன்பமுடன் வாழவே விரும்புவர்.அவ்வாறு வாழ இறைவனை நினைத்து இறைவனுக்காகத் திருவிழாக்கள் கொண்டாடுவர்.அதுபோல், குருவிகுளம் மேல மாரியம்மன் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களை மாத விழாக்கள், ஆண்டு விழாக்கள் என இரண்டாகப் பிரிக்கலாம்.

மாத விழாக்கள் 

மாத விழாக்கள் சிறப்பு வழிபாடு என்றும் கருதப்பெறும்.இங்கு மார்கழி மாதத் திருப்பள்ளியெழுச்சி, தைப்பொங்கல், சிவராத்திரி, திருக்கார்த்திகை, விநாயகர் சதுர்த்தி, சித்ரா பௌர்ணமி, தமிழ் வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப்பூசை, நவராத்திரி போன்ற நாட்களிலும், செவ்வாய் மற்றும் வெள்ளி போன்ற நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்த்தப்பெறுகின்றன.

ஆண்டு விழா

பங்குனி மாதம் அம்மனுக்கே உகந்த மாதமாகக் கருதப்படுகின்றது.இந்தப் பங்குனி மாதத்தில்தான் இங்கு பொங்கல் விழாக் கொண்டாடப்படுகின்றது.

இக்கோயிலில் இன்றியமையாத திருவிழாவாகக் கருதப்படுவது, பங்குனிப் பொங்கல் திருவிழாவாகும்.இத்திருவிழா பங்குனி வளர்பிறையில் நடத்தப்படுகிறது.இத்திருவிழா கொண்டாடுவதற்குக் குருவிகுளம் தேவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் சிறப்புக்கூட்டத்தைக் கூட்டி விழாநாள் குறிப்பர்.விழா நாட்களுக்கு ஒருவாரம் முன்னதாகவே கொடி சாட்டப்படும்.

கொடி சாட்டுதல்

கொடி சாட்டுதல் நாள் அன்று காலை சுமார் ஐந்து மணியளவில் ஊர்மக்கள் அனைவரும் மஞ்சள் நீரை அம்மனுக்கு ஊற்றி அபிடேகம் செய்து ஊர்ப்பெரியவர்களுக்கும், விரதமிருப்பவர்களுக்கும் காப்புக் கட்டுவர்.பின்னர் ஒவ்வொரு தெருவாகச் சென்று காப்புக் கொடியைக் (வேப்பிலையால் கட்டப்பட்டது) கட்டும்பொழுது அத்தெருப் பெண்கள் குலவை இட்டு வணங்குவர்.அன்றிலிருந்து திருவிழா தொடங்குகின்றது.

கொடி சாட்டிய நாளில் இருந்து தெருக்களையும், வீடுகளையும் மிகச் சுத்தமாக வைத்திருப்பர்.மேலும் புலால் உணவைத் தவிர்ப்பர்.அந்த வாரத்தில் வெளியூர்களுக்குச் செல்லமாட்டார்கள்.அப்படித் தவிர்க்க முடியாத காரணத்தினால் செல்ல நேரிட்டாலும் அன்றிரவே வந்துவிடுவர்.

முதல் நாள் விழாவிலிருந்து ஏழு நாட்களும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்துவர்.எட்டாம் நாள் பொங்கல் விழா மிகச் சிறப்பாகவும் பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.ஒன்பதாம் நாள் விழாவில் அம்மனுக்கு வலப்புறம் இருக்கும் கருப்பசாமிக்குப் பலியிடுதல் விழாவும் நேர்த்திக்கடன் செலுத்தும் விழாவும் நடைபெறும்.பத்தாம் நாள் விழாவில் மஞ்சள் நீரைத் தெளித்து விழாக் கொண்டாடுவர்.

தல விருட்சம்

அம்மனுக்கு உகந்த மரமாக வேம்பு கருதப்படுகிறது.ஆகையால் தான் “செழியர் புகழ் விளைத்த”3 பகுதியான குருவிகுளம் மேல மாரியம்மன் திருக்கோயிலில் தல விருட்சமாக வேம்பு உள்ளது.

கோயிலைச் சுற்றிலும் வேம்பு அதிகமாகக் காணப்படுகின்றது.‘வேப்பிலையில் குடியிருப்பவள் அன்னை’ என்று அவ்வூர் மக்களால் அம்மன் பெரிதும் போற்றப்படுகிறாள்.

திருவிழாச் சிறப்பு நிகழ்ச்சிகள்

திருவிழா நாள் அன்று மாலையில் மாவிளக்கு எடுத்தல், கரகம் கிளம்புதல், முளைப்பாரி எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல், தீர்த்தக்குடம் எடுத்தல், பொங்கலிடுதல், எண்ணெய்க்காப்புச் சாத்துதல், தீபம் ஏற்றுதல் ஆகியவை ஆண்டுவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாகக் கருதப்படுகின்றன.சில ஆண்டுகளுக்கு முன்னர் பூ மிதித்தல் விழாவும் நடைபெற்றது.ஏனோ, சில காரணங்களினால் இன்று கைவிடப்பட்டுள்ளது.

நம்பிக்கைகள்

“நம்பிக்கையானது மக்களுடைய உள்ளுணர்ச்சிகளின் வெளிப்பாடாகும்.நம்பிக்கை மனித வாழ்வின் உயிர் நாடி.உலகம், ஓர் அச்சில் சுழல்வதைப் போல, நம்பிக்கையை வைத்தே உலக மக்கள் இனம் இயங்குகிறது.”4 இவ்வாறு அனைத்துச் செயல்பாடுகளும் இறைவனின் அருளாலேயே நிகழ்கின்றன என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு.அதனால்தான் இப்பகுதி மக்கள் மேல மாரியம்மன் மீது தீராத நம்பிக்கை கொண்டுள்ளனர்.

தொகுப்புரை

அருள்மிகு மேல மாரியம்மன் கோயில் சிறு மண் பீடமாக இருந்து இன்று மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.இக்கோயிலில் மாத விழாக்கள், ஆண்டு விழா என்ற வகையில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.ஆண்டுவிழாவில் பல வகையான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.மேலும் குருவிகுளம் மேல மாரியம்மன் தீய சக்தியிலிருந்து தம்மைக் காக்கின்றாள் என்ற தீராத நம்பிக்கையை இப்பகுதி மக்கள் கொண்டுள்ளனர்.

சான்றெண் விளக்கம்

1.இரத்தின சண்முகனார். தெய்வ வழிச் சிந்தனைகள், பக்கம்.121

2.சேதுபாண்டியன்.தூ, (ப,ஆ), பல்நோக்குக் கட்டுரைகள்,பக்கம்.38

3.அண்ணாமலை ரெட்டியார் காவடிச்சிந்து, கழுகுமலை நகர் வளம்,பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடநூல்.

4.பாலுச்சாமி.நா, (ப.ஆ) வாழ்வியற் களஞ்சியம், தொகுதி பதினொன்று,1991-பக்கம்.220–221.

*********

கட்டுரையாளர் – தமிழ்த்துறைத் தலைவர்,

பிர்லா பொதுப் பள்ளி,

தோகா, கத்தார்.

கைப்பேசி எண் : +974-55294870

மின்னஞ்சல் : krishnatamilbps@gmail.com

—————–

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “குருவிகுளம் அருள்மிகு மேல மாரியம்மன் திருக்கோயில் – ஓர் அறிமுகம்

  1. மாரியம்மன் கோயில் குறித்த செய்திகள் பயனுள்ளதாக உள்ளது. தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள்.

  2. SEMA APPA,MARIAMMANIN SIRAPAI PURIYA VAITHATHARUKU.
    KADAVULUKU PYANTHAVAN MANITHAN ENPATHAI PURINTHEN.
    MELUM SATHANAIKAL PADAIPATHATRUKU EN VALTHUKKAL.
    ALL THE BEST

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *