பண்பாட்டு நோக்கில் சங்ககாலப் புலவர்களின் வாழ்வியல்

2

முனைவர் சி.இராமச்சந்திரன்,

ஆராய்ச்சி உதவியாளர்,செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.

சங்ககாலத்தில் நிலவிய சமூக, பொருளாதார, பண்பாட்டைத் தெரிந்துகொள்ளும் வரலாற்று ஆவணங்களாக சங்க இலக்கியங்கள் விளங்குவதுடன், சங்ககால மக்கள் பல்வேறுபட்ட வாழ்க்கைச் சூழலை எதிர்கொண்டுள்ளனர் என்பதையும் சங்கப் பனுவல்கள் வழி உணர்ந்துகொள்ள முடிகிறது. எதையும் மிகைபடக் கூறாமலும் எதையும் குறைவுபடக் கூறாமலும் உள்ளதை உள்ளபடி பதிவுசெய்திருக்கும் புலவர் பெருமக்கள் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் தனித்துவமான வாழ்வியலை நமக்குக் கொடையாக வழங்கியிருக்கின்றனர். பரிசில் வேண்டிப் பாடிய புலவர்கள் அவர்களின் கவிதையாக்கங்களை நமக்கு இன்று பரிசாகக் கொடுத்துள்ளனர் என்று கூறுவதும் இங்குப் பொருத்தமாக இருக்கும். சங்ககாலத்தில் இருந்த செல்வச் செழிப்பைப் பாடிய புலவர் பெருமக்கள் அதன் மறுபக்கமான வறுமைக் கோலத்தையும், அதனை எதிர்க்கொண்டு வாழும் விளிம்புநிலை மக்களையும் குறிப்பிடத் தவறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தங்களது வறுமை நீங்க மிக அதிகப் பொருட்களைப் பெற்று இன்புற்று வாழவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் சங்ககாலப் புலவர் பெருமக்கள் பெருமையில்லாதவர்களைப் பாடி பரிசில் வேண்டி நிற்கவில்லை என்பதற்கு “வாழ்தல் வேண்டி பொய்கூறேன்; மெய்கூறுவல்” என்னும் மருதனிளநாகனாரின் கருத்தும், “நற்பொருள்களை விளங்க எடுத்துரைத்தாலும் ஒரு சிறிதும் விளங்கிக் கொள்ளமாட்டாத பெருமையில்லாத மன்னர்களை எம் இனத்தவராகிய புலவர்கள் பாடமாட்டார்கள்” என்று புலவர்களின் தன்மான உணர்வுக்குச் சான்றுதரும் உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரின் கருத்தும் அவர்களின் புலமைச் செருக்கினைக் காட்டுவதாக உள்ளது. நல்லறிவுடைய புலவர்களின் பொய்யாத புகழ்ந்துரைகளையே மன்னர் பெருமக்களும் விரும்பினர், அதையே தாம் பெறுதற்குரிய நற்பேறாகக் கருதினர் என்பது அவர்களின் தகுதியைக் காட்டுகிறது.

தம் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுவாழும் வசதியற்ற புலவர்கள் பலர் சங்ககாலத்தில் புகழும் கொடையுள்ளமும் கொண்ட மன்னர்களைப் பாடிச் சென்று பரிசில் பெற்றுத் தம் குடும்பச் சிக்கல்களையும் பிறர் வறுமையையும் போக்கியுள்ளனர். குமண வள்ளலின் கொடையுள்ளத்தை அறிந்த பெருஞ்சித்திரனார் அவனிடம் சென்று, “எனது மனைக் கண் உண்ணுதற்குரிய உணவில்லாமையால், என் இளம் புதல்வன் தாய்ப்பாலும் பெறாது கூழையும் சோற்றையும் விரும்பி, அடுக்களையிலுள்ள கலங்களைத் திறந்து பார்த்து, ஒன்றுங்காணாது, அழுகின்றான். அவனுடைய அழுகையைத் தணிக்கக் கருதிய என் மனைவி, ‘அதோ புலி வருகின்றது!’ என அச்சுறுத்தியும், வானத்தில் அம்புலியைப் பார்!’ என விளையாட்டுக் காட்டியும் அவன் அழுகை தணியாமைக்கு வருந்தி, ‘நின்னுடைய பசி வருத்தத்தை நின் தந்தைக்குக் காட்டுவாயாக,’ எனச் சொல்லி நின்று மனங்கலங்குகின்றாள்,” என்று அவனிடம் பரிசில் வேண்டி நிற்கிறார். கொடுப்பதற்கும் தன் புலமையைப் போற்றுவதற்கும் தகுதியுள்ள ஒரு மன்னனிடம்தான் தன் வறுமையை பெருஞ்சித்திரனார் எடுத்துரைக்கிறார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

மன்னர்களைப் பாடிப் பரிசில் பெற்றுச் செல்வதை மட்டும் தம் கடமையாகக் கொண்டிராமல் அவர்களின் சுகதுக்கங்களிலும் குடும்ப விவகாரங்களிலும் பங்குபெற்றுள்ளனர் புலவர் பெருமக்கள். பரத்தை ஒழுக்கம் மேற்கொண்டிருக்கும் பேகனை நோக்கி, “மெல்லிய தகைமை பொருந்திய கரிய மயில் குளிரால் நடுங்குமென்று அருள் செய்து போர்வை கொடுத்த, அழியாத நற்புகழினையும், மதமுடைய யானையையும், மனம் செருக்கிய குதிரையையும் உடைய பேக! யாங்கள் பசித்தும் வந்தோம் இல்லை; எம்மால் புரக்கப்படும் சுற்றமும் எம்பால் உடையேம் இல்லை; கலாப்பழம் போன்ற கரிய கோடுடைய சிறிய யாழை, இசை இன்பத்தை விரும்பி உறைவார் அவ்விசையின்பத்தால் தலையசைத்துக் கொண்டாடும்படி வாசிப்பேம்; அருள் வெய்யோய்! அறத்தைச் செய்வாயாக; இன்று இரவே இனமாகிய மணியையுடைய உயர்ந்த தேரேறிச் சென்று, காண்பதற்கு இன்னாதாக உறைகின்றவள், பொறுத்தற்கரிய நின் நினைவால் உண்டாகிய மனைவியின் நோயைத் தீர்ப்பாயாக; இதுவே யாம் நின்னிடத்து இரந்துவேண்டும் பரிசிலாகும்” (புறம்.145) என்று அறிவுறுத்துகிறார் பரணர். இப்பண்பைத் தமக்குப் பரிசில் வழங்கும் மன்னனின் உள்ளமும் இல்லமும் நலமோடு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு என்று கூறலாம். பேகன் மனைவி கண்ணகியின் சிக்கலைத்தீர்க்க கபிலர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் போன்ற புலவர்களும் முயற்சியெடுத்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

பாரியின் பறம்புமலையைப் பாடிப் பரிசில்பெற்ற புலவர் கபிலர், அவன்மீது கொண்ட நட்பின் காரணமாக அவன் இறந்தபிறகு பாரியின் பெண்பிள்ளைகளுக்கு ஒரு தந்தையாக இருந்து மணம் முடித்து வைக்க நினைத்து விச்சிக்கோ என்ற மன்னனிடம் சென்று, பாரிமகளிரை மணக்குமாறு வேண்டி நிற்கின்றார். இப்புலவரின் கடமையுணர்வை இங்குக் காணமுடிகிறது (புறம்.200). மேலும் சேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு நடைபெற்ற போரில், அவன் மார்பில் குத்திய வாள் புறமுதுகில் வெளிப்பட்டது. அதன்பொருட்டு அவன் நாணமுற்று வடக்கிருந்து உயிர்துறந்தான் (புறம்.65). அவன் இழப்பைத் தாங்கிக்கொள்ளமுடியாத கழாத்தலையார், “தனித்துத்திரியும் ஞாயிறு அமைந்த பகற்பொழுது, அவனில்லாத இவ்விடத்தில் எமக்கு முன்பு கழிந்து சென்ற நாட்களைப் போல அமையாது” என்று வருந்திப் பாடுகிறார். வெற்றிபெற்ற கரிகாற் பெருவளத்தானின் வெற்றியைப் பாடும் புலவர் வெள்ளிக்குயத்தியார், மதம் பொருந்திய ஆண் யானையை உடைய கரிகால் வளவனே! போர் மேற்சென்று கொன்று நின்னாற்றல் தோன்றுமாறு வென்றாய்; குறைவுபடாது பெருகும் புதுவருவாயை உடைய வெண்ணியில் ஊர்ப்புறத்தின் போர்க்களத்தில் மிகப் புகழமைந்த உலகை விரும்பிப் பொருந்தியவனும், புறப்புண்ணிற்கு நாணி வடக்கிருந்தோனுமான பெருஞ்சேரலாதன் நின்னைவிட நல்லன் அல்லனோ? என்கிறார். எதிரிநாட்டு மன்னரின் வீரத்தையும் புலவர்கள் அஞ்சாது எடுத்துரைத்துள்ளனர் என்பதை இச்செய்தி வாயிலாக அறியமுடிகிறது.

சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறையுடன் கொண்ட பகையால் கிள்ளி கருவூரிடத்திற்கு யானை மீது ஏறி, தன் படையுடன் போரிட வருகிறான்; இவன் வருகையை அரசனிருக்கும் மாடத்தில் நின்று இரும்பொறையுடன் காண்கிறார் புலவர் ஏணிச்சேரி முடமோசியார், இவன் தான், புலியின் தோலால் செய்த கவசத்தில் விளங்கும் புள்ளிகள் சிதையுமாறு ஏவிய அம்புகள் பிளந்ததும் பரந்து அழகுடையதுமான மார்பினையுடையனவாய், எமனைப் போல விளங்கி ஆண் யானையின் மீது அமர்ந்தவன்; இவன் அமர்ந்த யானை கடல் நடுவே செல்லும் மரக்கலம் போலவும் விண்மீன்களிடையே செல்லும் நிலவினைப் போலவும் விளங்கும்; அது சுறாக்கூட்டம் போன்ற வாளுடைய வீரர் சூழத் தான் வரும்போது தன்னுடைய பாகரும் அறியாதபடி மதங்கொண்டது; இவன் தீதின்றிப் பெயர்வானாக; (புறம்.13) என்கிறார். தன் மன்னன் உடனிருந்தும் பகை மன்னனை வாழ்த்திய செம்மையையும் துணிவையும் ஏணிச்சேரி முடமோசியாரின் பாடலால் அறியமுடிகிறது.

மலையமானின் மக்களை யானைக் காலால் இடறி வீழ்த்தக் கருதிய கிள்ளிவளவனைத் தடுத்து, அச்சிறுபிள்ளைகளைக் கோவூர்கிழார் காப்பாற்றினார் (புறம்.46). மேலும் கொடை வண்மையுடையவரை நாடிவருதல் புலவரியல்பு; அவ்வாறே இளந்தத்தன் எனும் புலவர் நெடுங்கிள்ளியை நாடினார். ஆனால், அப்புலவரை ‘ஒற்றன்’ எனக் கருதினான் நெடுங்கிள்ளி; அவரைக் கொல்லாது கோவூர்கிழார் காத்தார் (புறம்.47). மன்னர்கள் செய்ய முற்படும் தவற்றை எடுத்துரைத்து அவர்களைப் பழிபாவங்களிலிருந்து காத்தற்பொருட்டு தம் கருத்துக்களையும் வழங்கியுள்ளனர் புலவர் பெருமக்கள் என்பதை இதனால் அறியமுடிகிறது.

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை நோக்கி, “தம்மால் கொடுக்க இயலும் பொருளை இயலுமென்று சொல்லிக் கொடுத்தலும், யாவர்க்கும் தம்மால் கொடுக்க இயலாத பொருளை இல்லையென்று சொல்லி மறுத்தலும் ஆகிய இரண்டும் தாளாண்மை உடையார்பால் உள்ளன; தனக்கு இயலாததனை இயலும் என்றலும், இயலும் பொருளை இல்லையென்று மறுத்தலும் ஆகிய இரண்டும் விரைவில் இரப்போரை வாட்டமுறச் செய்வதோடு, ஈவோரின் புகழைக் குறைவுபடச் செய்யும்; இப்பொழுது நீ என்பாற் செய்ததும் அவ்வாறே ஆயிற்று; இஃது எத்துணையும் எம் குடியில் உள்ளார் முன்பு காணாதது; இப்பொழுது யாம் கண்டேம்; யானும் வெயில் என்று நினைந்து செல்லுதலை வெறுக்காமலும், பனியென்று கருதிச் சோம்பியிராமலும் செல்கின்றேன். என்னை விட்டு நீங்காது, கல்லால் செய்தாற்போன்ற வறுமையின் மிகுதியால் வளிமறையாகிய மனையிடத்து உறைபவள் என் மனைவி; அவள் நாணைத் தவிர வேறில்லாத கற்பினையும், ஒளியுடைய நுதலினையும், மெல்லிய சாயலினையும் உடையவள்; அவளை நினைந்து போகின்றேன்; நீ எமக்குச் செய்த அத்தீங்கினால் (பரிசில் கொடாததால்) நின் பிள்ளைகள் நோயின்றி இருப்பாராக; நின் வாழ்நாள் சிறந்து மிகுவதாகுக” (புறம்.196) என்கிறார் ஆவூர் மூலங்கிழார். இப்பாடல் பரிசில் கொடுக்காமல் நீட்டித்த மன்னனைச் சாடியுரைப்பதாகவுள்ளது. பரிசில் கொடுக்காமல் காலம் தாழ்த்திய மன்னர்களைப் புலமைச் சமூகத்தினர் அஞ்சாமல் பாடிச் சென்றுள்ளனர். அதனைப் பிரதிபலிக்கும்  ஒரு பாடல் இவை எனலாம்.

பல்வேறு இன்னல்களையும் இடையூறுகளையும் தாங்கிக்கொண்டு காடுகளையும் மலைகளையும் கடந்துச் சென்று மன்னர்களைப் பாடிப் பரிசுபெற்ற புலவர்கள், செறிவான கவிதைகளாகச் சங்க இலக்கியங்களை நமக்குப் படைத்தளித்துள்ளனர்.  ஆற்றுப்படைப் பாடல்களைப் பார்த்தால் அது ஒரு பயண இலக்கியத்தைப் படித்ததைப் போன்ற ஒரு உணர்வினை நமக்குத் தரும். புறப்பாடல்கள் நம் முன்னோரின் வீரத்தையும், கொடையையும் எடுத்துரைக்கும். தமிழரின் காதலையும் கற்பையும் அகப்பாடல்கள் பிரதிபலிக்கும். இவ்வாறு அரிய கொடையாகிய சங்கப் பாடல்களைக் கொடுத்த புலவர்களின் வாழ்வில் வறுமையும் வளமையும் என இரண்டும் சேர்ந்து இருந்ததை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பண்பாட்டு நோக்கில் சங்ககாலப் புலவர்களின் வாழ்வியல்

  1. சமுகத்தின் உயிா்நாடியை நயமாக எடுத்துரைத்த ஐயாவிற்கு நன்றி.

  2. புலவர்கள், தனக்காக வாழாமல் அவர்களின் வறுமையிலும் அரசர் பெருமக்களை வாழ்த்தி செம்மை நிறை வாழ்விலிருந்து வீழாமல் வாழ்ந்ததை ஆசிரியர்
    அழகாக இங்கு எடுத்துரைத்தமைக்கு நன்றி

Leave a Reply to முனைவா் ம. இராமச்சந்திரன்

Your email address will not be published. Required fields are marked *