பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

வெங்கட்ராமன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.10.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி – 182

  1. உதகை மலை இரயில்..
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    -ஆ. செந்தில் குமார்.

    நீராவி எஞ்சின் பொருத்திய மலைரயில் உதகை செல்கிறதே..
    நீல வானத் திடையே தவழும் மேகத்துள் செல்கிறதே..
    காடுகள் சுரங்கம் அனைத்தையும் கடந்து ஊர்ந்து செல்கிறதே..
    குன்னூர் கேத்தி ஊர்களைக் கடந்து உயரத்தில் செல்கிறதே..

    செல்லும் வழியில் பள்ளத்தாக்குகள் கண்களுக் கோர் விருந்து..
    செல்லக் குழந்தைகள் முதியோர் அனைவர்க்கும் இப்பயணம் அருமருந்து..
    இருப்புப் பாதை நடுவில் இருக்கும் பற்சக்கர அமைப்பு..
    இரும்பைப் போன்ற வலுவானப் பிணைப்பைத் தந்திடும் அதற்கு..

    கொஞ்சிடும் இயற்கை எழிழைப் பருக உதவிடும் இவ்வண்டி..
    குறைந்த வேகத்தில் செல்லுமெனினும் குதூகலம் தரும் வண்டி..
    மலைகளின் அரசி நீலமலையின் சிறந்ததோர் அடையாளம்..
    மாநிலம் போற்ற கிடைத்தது இதற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்..

    பாம்பைப் போன்று வளைந்து நெளிந்து செல்லும் இவ்வண்டி..
    பயணிக்கத் தூண்டும் அம்சங்கள் அனைத்தும் கொண்டது இவ்வண்டி..
    எங்ஙனமேனும் ஒருமுறை அதிலே பயணம் சென்றிடுவோம்..
    எந்திர வாழ்வில் அலுத்த மனதுக்கு புத்துணர்வூட்டிடுவோம்..

  2. மனித அறிவின் இறை

    சுரண்டலில் மனித ரத்தம்
    உறிஞ்சிய அட்டைகளின்
    அடையாளம்

    மத யானையின் வெறி
    அடங்கலில் நெருப்பின்
    உணவாய் நீயும் மனிதனும்

    காதல் பாடலின் இசையாய்
    மனித உறவுகளின் ஒற்றுமையாய்
    உலகம் பாடும் உன்னத
    படைப்பு

    சமத்துவத்தின் சங்கமமாக
    நீ நிற்கும்போது
    உலகம் வியக்கும்
    வேறுபட்ட மனித உணா்வைக்கண்டு

    நீராவியில் தொடங்கி
    எண்ணெயில் வேகமெடுத்து
    மின்சாரத்தில் பறந்து செல்லும்
    உன்றன் பயணத்தில்

    எப்போதும் மனிதா்கள்
    வேற்றுமையில் ஒற்றுமை
    அவரவா் அடையாளத்தோடு.

  3.    பயணம்!!
       —————-
    தட தடனு ஓடும் ரெயில்..
    தம்ம் கட்டும் பழைய ரெயில்!
    நீராவி என்ஜின் புகை
    நீலவானம் எங்கும் பரவ
    நீலகிரி ஓடும் ரெயில்!!
    பச்சைக்கொடி காட்டியதும்
    இச்சைகளை இறக்கிவிட்டு
    காரியமே கண்ணாகக்
    கடமையிலே கருத்தாகும்!
    விஞ்சுகிற இயற்கையின்
    கொஞ்சுகிற அழகினை
    நெஞ்சு மகிழ ரசித்திட
    செயற்கை தந்த கொடை!!
    வெட்டிப்பேச்சு சத்தமும்
    குட்டித்தூக்ககுறட்டையும்
    சட்டையே செய்யாமல்
    மலை ஊரும் தேர்ப்படை!!
    பறவைகளும்விலங்குகளும்
    பழகிடுச்சு அதன் ரவுசு!!
    புகைவண்டி சொல்லுவதை
    புரிந்துகொள்ளும் மனசு…
    பொன்னான தன்பிறப்பின்
    பொறுப்புணர்ந்து பயணித்து
    போகவேண்டிய இடம் சேரும்!!
    (ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…
    பவானி… ஈரோடு…)

  4. ரயிலே…

    பசுமை மிகுந்த மலையினிலே
    பவனி வருமுனைப் பார்த்ததிலே
    பசுமையாய்த் தெரியும் நினைவினிலே
    பரவச மாகும் மனசெல்லாம்,
    வசதி வாய்ப்புகள் வந்ததுமே
    வேறு பட்டிடும் மனிதன்போல்
    திசையது மாறா திருந்தின்பம்
    தொடரந்து தாராய் மலைரயிலே…!

    செண்பக ஜெகதீசன்…

Leave a Reply to ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி

Your email address will not be published. Required fields are marked *