நேமிநாத உரையின் காலம் பதினைந்தாம் நூற்றாண்டா?

0

 

முனைவார் ஹெப்சி ரோஸ் மேரி. அ,உதவிப்பேராசிரியர், கேரளப்  பல்கலைக்கழகம்,திருவனந்தபுரம்.

தமிழ் இலக்கண மரபில் தொல்காப்பியத்தைப் பின்பற்றி எழுந்த நூல்களில் ஒன்றே நேமிநாதம்.  இது ஒரு சமண நூல்.  சமணர்களால்  வணங்கப்படும் இருபத்து நான்காம் தீர்த்தரங்கர்களுள் இருபத்தி இரண்டாம் தீர்த்தரங்கரான  நேமிநாதர் பெயரால் இந்நூல் வழங்கப்படுகிறது.  நேமிநாதம் தோன்றிய காலத்தில் ஒரு புகழ்பெற்ற நூலாக இருந்திருக்க வேண்டும்.  ஏனெனில்  நன்னூல் தோன்றுவதற்கு முன் தொல்கப்பியத்தைக் கற்பவர் முதலில் இந்நூலைக் கற்ற பின்னரே தொல்காப்பியத்தைக் கற்றுவந்தனர்.  தொல்காப்பியக் கடலைக் கடக்க நேமிநாதம் சிறுபடகாகப் பயன்பட்டது  என்பதை,

‘தொல்காப்பியக் கடலிற் சொற்றீபச் சுற்றளக்கப்

பல்காற்கொண் டோடும் படகென்ப  ( நே. நா. சி.பா) என்னும் சிறப்புப்பாயிரம் வரிகள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. இந்நூலுக்கு சிறந்த உரை ஒன்று உண்டு.  இதன் காலம் பற்றி அறிஞர் பெருமக்கள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைப்பர். அக்காலத்தை ஆராய்வதாகக் இக்கட்டுரை அமைகிறது.

நேமிநாத உரை

நேமிநாதத்திற்குச் சிறந்த உரை ஒன்று உள்ளது.  இவ்வுரையாசிரியரின் ஊர், பெயர் எதுவுமே தெரியவில்லை என்றும் இதன் உரையாசிரியர் வயிரமேகர் என்றும் இருவேறு கருத்துக்கள் ஆய்வுலகில் நிலவுகின்றன.  நேமிநாத பழைய உரையாசிரியர் வயிரமேகம் என்னும் பெயரைக் கொண்டவர் என்றும் இவரே  நேமிநாத விருத்தியுரை எழுதியவர் என்றும் அவர் வயிரமேகம் என்னும் பெயரைக் கொண்டவர் என்றும் இவரே நேமிநாத விருத்தியுரை எழுதியவர் என்றும் அவ்வுரை வயிரமேக விருத்தி என வழங்கும் என்று மு. ராகவையங்கார் தம் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுவதாக மு. அருணாசலம் குறிப்பிடுகிறார்.

“மூவரா யவரின்  முதல்வராய் அதிதி

புதல்வராய முப்பத்து முத்

தேவரா யவர் தம் ராசராசபுரி

வீதி மாதர் கடைதிறமினோ ( த.ப.10)

என்ற தக்கயாகப் பரணித் தாழிசையில் அதன் உரையாசிரியர் வயிரமேக விருத்தி என்ற நூலைக் குறிப்பிடுகிறார்.  ‘முப்பத்து முத்தேவராயவர் தம் ராசராசபுரி என வரும் தொடருக்கு முப்பத்து மூன்று தேவர்கள் ஆராயும் அவருடைய இராசராசபுரி என்று பொருள் கூறிப் பின்னர் தேவராயவர் தம் என்பதில் தேவர் ஆயும் அவர் எனச் செய்யுமென்னும் பெயரெச்சத்தின் உகரமும் மகரவொற்றும் கெட்டன எனவுணர்க.  இது வயிரமேக விருத்தியுள் விளங்கும் என்று குறிப்பு எழுதியிருக்கிறார்.  வயிரமேக விருத்தி என்பது இலக்கணம், பற்றிய ஓர் விருத்தியுரை என்பதாகும்.  அன்றியும் செய்யும் என்னும் பெயரெச்சத்தில் மெய்யுடன் உகரம் கெடுதலையே தொல்காப்பியம் இளம்பூரணருரை (233) நன்னூல் மயிலை நாதருரை ஆகியன குறிப்பிடும்.  ஆனால் மெய்யுடன் உகரம் கெடுதலோடு ஏற்று ஒற்றும் கெடும் எனபதை விளக்கிக் கூறியவர் வயிரமேக விருத்தியுரைக்காரர் என்பது தக்கயாகப் பரணி உரையாசிரியர் கூற்றாகின்றது.

அந்தக் கொளகையை முதன் முதலில் வெளியிட்ட நூலாசிரியர் நேமிநாதம் செய்தவரேயாவர்.

செய்யு மென்னும் பேரெச்சத்தீற்று மிசைச்சில்லு கரம்

மெய்யொடும் போம் ஒற்றொடும்போம் வேறு ( நே. நா. 63)

என்று நேம்மிநாதம் இக்கருத்தை வெளியிடுவதைக் காணலாம்.  இவ்வாறு நேமிநாத ஆசிரியர் இக்கருத்தைச் சொன்னாரே ஒழிய, சொற்சுருங்கக் கூறிய அவரது சூத்திரக் கருத்தினை முன்னூல் பிராமாணத்துடன் விளக்கிக் கூறியவர் அந்நேமிநாத உரையாசிரியரே ஆவார்.  ஆகவே ஆயவர் என்பதை ஆயுமவர் என விரித்து அதற்கு விதி விளக்குமிடமாகத் தக்கயாகப் பரணியுரையாசிரியர் கூறும் வயிரமேக விருத்தி என்பது நேமிநாத விருத்தியே என்று கருதலாம் என்பர் அருணாசலம் (1969).  இவ்வுரை கருத்துரையும் பொழிப்புரையும் உதாரணமும் வினாவிடைகளும் சூத்திரத்தின் பொருள் நன்கு விளங்குவதற்குரிய உரைகளும் மேற்கோள்களும் கொண்ட விருத்தி உரையாகத் திகழ்கின்றது.

உரையாசிரியரின் காலம்

நேமிநாதம் ஒரு தொகுப்பு நூல், சுருக்க நூல், சுருக்க நூலுக்கு உடனுக்குடன் உரை எழுதாவிடில் பின்னே தெளிவு குன்றிப்போகும் என்பதனாலும் ஜைன இலக்கணங்கள் அனைத்தும் நூலாசிரியரை ஒட்டிய காலத்திலேயே உரையைப் பெற்றிருக்கின்றன என்பதாலும் நேமிநாதமும் குணவீரபண்டிதரின் காலத்திலேயே உரையைப் பெற்றிருக்க வேண்டும் என க. ப அறவாணன் ( 1974) குறிப்பிடுகிறார்.

நேமிநாதம் 74 ஆம் பாடல் உரையில் ‘முத்தன் என்கோ முதல் மூர்த்தி என்கோ’ என்ற திரு நூற்றந்தாதிப் பாடலை ( 31) மேற்கோளாக எடுத்துக் காட்டுகிறார் உரையாசிரியர்.  இவ்வந்தாதியின் காலம் 14 ஆம் நூற்றாண்டின் இறுதி. ஆகவே இவ்வுரையாசிரியரின் காலம் இதே காலம் அல்லது இதற்குச்சற்றுப் பிற்பட்டது. 14 ஆம் நூற்றாண்டின் இறுதி  அல்லது 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்று கொள்வது பொருத்தமாகும் என்று மு. அருணாசலம் கூறியுள்ளார் ( 1969:109) பிற்காலத்தில் இக்கருத்தை இலக்கண அறிஞர்கள் பலரும் ஏற்றுக் கொண்டனர்.  நேமிநாத உரையாசிரியரின் காலம் 14 ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 15 ஆம் நூற்றண்டின் தொடக்கம் என்று கூறுவதற்குக் காரணமாய் அமைந்த ‘ முத்தன் என்கோ முதல் மூர்த்தி என்கோ” என்ற திரு நூற்றன்ம்தாதிப் பாடல் கேரளப் பல்கலைக்கழகச் சுவடியியல் நூலகத்தில் உள்ள நேமிநாத பழைய சுவடி (6370) ஒன்றில் காணப்படவில்லை.  இதைப் பார்க்கும்போது இப்பாடல் பிற்காலத்தில் இடைச்செருகலாக நுழைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.  எனவே இவரது காலம் கி.பி 14 ஆம்  நூற்றாண்டுக்கு  முற்பட்டது.  க.ப. அறவாணன் கூறுவது போல மூல நூலாசிரியர் காலத்தை ஒட்டியே எழுதியிருக்கலாம் என்பது தெளிவு.

மேலும் இவ்வுரையயின் காலம் கி.பி 15 ஆம் நூற்றாண்டு என்றால் இவ்வுரையாசிரியர் தம் உரையில் தொல்காப்பியம் ( 11, 12, 13… ) அணியியல் ( எ.4) யாப்பருங்கலக் காரிகை ( சொல்40) யாப்பருங்கல விருத்தி ( சொல்.54) போன்ற இலக்கண நூல்களை மேற்கோள்களாகக் காட்டும் உரையாசிரியர் தமது காலத்திற்கு முன்தோன்றிய நன்னூலை ஓரிடத்திலாவது குறிப்பிட்டிருக்க வேண்டும்.  ஆனால் இவர் அவ்வாறு குறிப்பிடவில்லை.  எனவே இவர் பவணந்திக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும்.  மேலும் நன்னூலின் பழைய உரையாசிரியரான மயிலைநாதர் தமது உரைநடையில் நேமிநாத உரையாசிரியரின் உரையைப் பத்தொன்பது இடங்களில் மேற்கோள்காட்டியுள்ளார்.  எனவே மயிலைநாதரின் காலம் நேமிநாத உரையாசிரியரின் காலத்துக்கு முற்பட்டது என்பது தெளிவு.  எனவே மயிலை நாதரின் காலம் நேமிநாத உரையாசிரியரின் காலத்துக்கு முற்பட்டது என்பது தெளிவு.  மயிலை நாதர் பவணந்தியின் காலமாகிய 13 ஆம் நூற்றாண்டிற்குப் பின் வாழ்ந்தவர்.  நூலுக்கு உரை தேவைப்படும் அளவு பிரசித்தியடையக் குறைந்தது ஒரு நூறு  வருடம் செல்லுமென்று கொண்டாலும் இவரது காலம் 14 ஆம் நூற்றாண்டுத் தொடக்கமாகலாம் ( 1969) என்று அறிஞர் பெருமக்கள் கருதுகின்றனர்.  எனவே நேமிநாத உரையாசிரியர்   நேமிநாதம் தோன்றிய அதே காலத்தில், உரைகள் எழுந்த தொடக்கத்திலேயே அதாவது 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ வாழ்ந்தவராதல் வேண்டும் என்பது தெளிவு.

பயன்பட்ட நூல்கள்

அரவிந்தன். மு வை      -உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம். 1968

அருணாசலம். மு  , தமிழ் இலக்கியவரலாறு,12,13,14 ஆம் நூற்றாண்டு, பாரி நிலையம் சென்னை, 1970.

அறவாணன். க.ப.சைனரின் தமிழிலக்கண நன்கொடை, ஜைன இளைஞர் மன்றம், சென்னை, 1974

கோவிந்தராச முதலியார் – நேமிநாதம், தென்னிந்திய சைவசித்தாந்த. நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1973

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *