–சே.முனியசாமி

‘‘ரெண்டு புள்ளைகள கரசேத்தாச்சு.. இவனுக்கு ஒன்னும் அமைய மாட்டுதே. ஜோசியக்காரன் சொன்னதுபோல சொந்தத்துல பொண்ணெல்லாம்  அமையாது  மேற்கு தெசலைய தான் அமையும் போல… என் கவலையே அவந்தானு’’ பார்க்கிறவங்கிட்ட புலம்பிட்டே இருப்பாங்க கவின் அம்மா.

கவின் அந்த ஊர்ல முதல் பட்டதாரி மட்டுமல்ல பி.எச்டி வரை படிச்சவன். பள்ளிப் படிப்பை முடிச்சு மேற்படிப்பிற்காக வெளியூர் போனவன் பதினேழு வருசமா படிப்பு படிப்புனு மூழ்கிட்டான். படித்துக் கொண்டேயிருக்கவும் வயது கடந்ததும் தெரியல. முற்றிய நெல்மணி போல வயசும் முப்பதுக்கும் மேல தாண்டியது.

ஒருவழியாய்த் திருநெல்வேலி பக்கம் கல்லூரியில் பணி கிடைத்தது. கை நிரம்ப சம்பாத்யம் இல்லையென்றாலும் வெளியே நல்ல உத்தியோகத்தில் இருக்கேன் எனச் சொல்லுகின்ற அளவுக்கு இருந்தது. வயது ஒருபக்கம் கூடிக்கொண்டே யிருந்தாலும் நாலா பக்கமும் பெண் தேடுகிற போட்டாப் போட்டியில் உறவினர்கள் அக்கறை கொண்டிருந்தனர்.

மாதத்திற்கு நான்கு முறையாவது ‘அந்த ஊர்ல பொண்ணு இருக்கு… இந்த ஊர்ல பொண்ணு இருக்குனு’ ஏதாவது தகவல் வந்துவிடும். ஏதோ ஒரு நம்பிக்கையில் சென்று பல ஏமாற்றங்களைச் சந்தித்தது கவினுக்கு புதிதல்ல. இவ்வாறு நாட்கள் புரண்டோடின. வேலை பார்க்கின்ற இடத்திலிருந்து ‘முப்பது கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பொண்ணு இருக்கு, டீச்சருக்கு படிச்சுருக்கு. டெட்டுல பாஸாகி இண்டர்வீயு போய்ட்டு வந்துருக்கு.. அடுத்த ரெண்டு மாசத்துல அரசு உத்தியோகம் கிடச்சரும்னு…’ பழக்கப்பட்ட மாணிக்கம் சார் மூலம் தகவல் கிடைத்தது. இவ்வளவு சொல்லியும் வேண்டமெனக் கூறினால் நன்றாக இருக்காதெனச் சரியென மொழிந்தான் கவின்.

 ‘‘தகப்பன் இல்லா பிள்ள … நல்ல பொண்ணுப்பா… உங்களுக்கு மேட்ச் ஆகும். நம்ம பார்த்ததுல செட் ஆகாம இருந்தது கிடையாதுனு..’’ அடுக்கிக் கொண்டே போனார் மாணிக்கம் சார். இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது எவ்வளவோ பாத்தாச்சு.. இதையும் பாத்துரலாமுனு கவின் மனதில் சிந்தனை ஊடுருவியது. இதுக்கு மேலையும் வேண்டாமெனச் சொன்னால் நல்லாயிருக்காது என எண்ணிப் பச்சைக் கொடி காட்டினான் கவின்.

மாணிக்கம் சார் மத்திய அரசு ஊழியர். ஊரில் எல்லாராலும் மதிக்கக்கூடியவர். நாலு செய்தி தெரிந்தவரும்கூட. எங்காவது நல்லது கெட்டதுனா இவர்தான் முன்நிற்பார். அதனால் மாணிக்கம் சாருக்கு ஊர்ல மதிப்பு நிரம்பயிருந்தது. அவரை ஒரு தடவைப் பார்த்து பேசிப் பழகியதே தவிர மற்றபடி உறவுனு சொல்லிக்க முடியாத பழக்கம்.

‘தனக்குத்தான் சர்க்கார் வேலை இல்ல. தனக்கு வர்றவளுக்காவதுக்கு சர்க்கார் வேலையிருந்தா கொஞ்சம் உதவியாயிருக்குமென’ கவின் மனதில் துளிர்விட்டது. இப்படிச் சிந்தனையில் மூழ்கியிருக்கையில் ‘அடுத்த வாரம் பொண்ணு வீட்டுக்குப் போய் பொண்ண நேர்ல பாத்திடலாம் தம்பி…’ என மாணிக்கம் சார் சொன்னதும் தலையாட்டினான் கவின். உடனே தம்பி உங்க செல் நம்பரச் சொல்லுங்க எனக் கூறியதும், ஒன்பது ஏழு எட்டு ஆறு சைபர் எனத் தொடங்கி  சைபர்  எனக் கூறி முடித்தான். அப்படியே உங்க நம்பர்லயிருந்து ஒரு மிஸ்டுகால் கொடுங்க என்றதும் சில விநாடிகளில் மாணிக்கம் சார் எண்ணைச் சேமித்து நன்றி சார்னு விடைபெற்றான் கவின்.

நியமிக்கப்பட்ட நாள் வந்தது. காலை பத்து மணியிருக்கும். கவின் எண்ணிற்கு மாணிக்கம் சார் அழைத்திருந்தார். வணக்கம் சார் என்றதும்,  ‘சாயந்தரம் நாலு மணிக்கு போகலாம்பா….’ அவங்க வீட்டுல உங்களப் பத்தியெல்லாம் சொல்லிட்டேன்பா… என மாணிக்கம் சார் கூறினார். சரிங்க சார் சரியான நேரத்திற்கு வந்துறேனு.. கூறி இணைப்பை துண்டித்தான்.  சரியாக மூன்று மணியிருக்கும் புது எண்ணிலிருந்து கவின் செல்லுக்கு அழைப்பு வந்தது. வழக்கம் போல வணக்கம் சொல்லுங்க என்றதும்…. ஒரு இளம்பெண்ணின் குரலில் ஹலோ…என்ற சப்தம் கேட்டு நிசப்தமாக இருந்தது. கொஞ்சம் சத்தத்தை உயர்த்தி  நீங்க யாருனு தெரிஞ்சுக்கலாமா? என்றான் கவின். உடைந்த குரலில் கண்ணீர் மல்க காரசாரமாய் மூன்று நிமிடங்கள் பேச்சு தொடர்ந்தது. ‘மாணிக்கம் சார் சொன்ன பொண்ணு பேசுறேன். இன்னைக்கு என்னைப் பொண்ணு பார்க்க வாரதீங்க..ப்ளீஸ்.. எண்ட்டா எதும் கேட்காதீங்க’….என்ற குரலில் புலம்பல் சத்தம் ஒலித்தது. ஏங்க எதும் பிரச்சனையா? என்ன காரணமுனு தெரிஞ்சுக்கலாமா? எனப் பல கோணங்களில் பரிவுடன் பேசினாலும் எதையும் கேட்காதீங்க ப்ளீஸ்…. புரிஞ்சுக்குங்க…ப்ளீஸ் என்ற பதில் மட்டும் வந்தது. முடிவாக நான் வரலையினா மாணிக்கம் சார அவமானப்படுத்தற மாறி ஆகிடும். ஏதோ பார்மாலிடிக்கு வந்துட்டு போயிடுறேனு சொல்லியும் தொடர்ந்து ப்ளீஸ் வராதீங்க… புரிஞ்சுகிடுங்க…. என்பது மட்டும் திரும்பத் திரும்ப வந்தது. கவின் எவ்வளவு சொல்லியும் கேட்டபாடில்லை. இணைப்பைத் துண்டித்து முகத்தை கழுவிக் கிளம்பத் தயாரானான்.

சரியாய் நான்கு மணி. மாணிக்கம் சார் வீட்டை நோக்கிச் சென்றான். கவினைக் கண்டதும் வாப்பா… உக்காருப்பா என்றதும் அமர்ந்து கொண்டான். ப்ரெஞ்பேட் வைத்து தன் முகத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்தார். பத்து நிமிஷம் வைட் பண்ணுப்பானு… சென்று வெள்ளை நிற ஜிப்பா அணிந்ததும் போகலாம்னு கூறினார் மாணிக்கம் சார். கருமையான தோற்றதில் இருந்தாலும் நரைத்த தலையும், வெள்ளை நிற ப்ரெஞ்பேடும், ஜிப்பாவும் யாவரும் மதிக்கத்தக்க தோற்றத்தில் வெளிப்பட்டார். என் பைக்லேயே ரெண்டு பேரும் கிளம்பி போயிட்டு வந்தராலாம்பா என்றதும் பின்புறம் சீட்டில் ஏறி அமர்ந்த இருபது நிமிடத்தில் இருவரும் பெண் வீட்டை அடைந்தனர்.

வண்டியை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் நுழைந்த போதுதான் தெரிந்தது, அது பொண்ணு வீடல்ல, மாணிக்கம் சாரின் நெருங்கிய உறவுமுறை பசீர் என்பவர் வீடென்று தெரிந்தது. பசீரும் மணியும் ஒரே உறவு முறையாய் இருந்தாலும் கால் நூற்றாண்டுகளுக்கு முன் இசுலாமிய மதம் மாறியவர். பஷீரின் மனைவி அரசு பள்ளியில் சத்துணவு அலுவலர். அதே பள்ளியில் அவருக்கு உதவியாக பணிபுரியும் பெண் பக்கத்து வீடு என்பதால் பாசமுடன் அப்பெண்ணுக்கு மண வாழ்வு அமைக்க முயற்சித்தனர் என்பதை அறிய முடிந்தது.

பசீர் சாரிடம் நல விசாரிப்புகள் அதிகரித்துக் கொண்டேயிருந்து முடிவுக்கு வந்தது. பெண் வீட்டார் சார்பில் பெண்ணின் அம்மாவும் அண்ணனும் வந்திருந்தனர். ஒரு பொண்ணுதான் கஷ்டப்பட்டு படிக்க வைச்சுருக்கோம்… ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு கடன கப்பிய வாங்கி செய்றோம் என அவரவர் பங்கிற்கு தங்களால் முடிந்த சொற்களை அசைபோட்டனர்.. பின்பு கவின் பற்றிய பின்புலத்தை அறிமுக நோக்கில் மாணிக்கம் சார் ஏற்ற இறக்கமாய் கூறிமுடித்தார். சரிமா பொண்ண வரச் சொல்லுங்க என்ற பஷீர் சார் சத்தத்தைக் கேட்டதும் நிசப்தம் ஆகியது. இடப்புறமும் வலப்புறமும் தலா இரண்டு சிறுபிள்ளைகளுடன் குனிந்த தலையுடன் பட்டுச் சேலை கட்டி பொண்ணு வரவழைக்கப்பட்டாள். வாமா… வந்து இந்த காப்பியே எல்லாருக்கும் கொடுமா.. என கணத்த குரலில் பஷீர் சார் சத்தம் கேட்க எல்லார் கையிலும் காபி இருந்தது. தம்பி நீங்க ஏதாவது பேசறதாயிருந்தா பேசிக்கிடுங்க என்றார் மாணிக்கம் சார். எப்படா கிளம்புவோமுனு என்ற சிந்தை மட்டும் கவினை ஆட்கொண்டது. கவின் தன் பங்கிற்கு ஏதோதோ பட்டும் படாமலும் பேசினான். இவருதாமா உன்னை பாக்க வந்துருக்காரு …நீ எதும் பேசனும்னா பேசிக்கமானு பஷீர் சார் மெல்லிய குரலில் புன்னகைத்தார். பதினாறாம் வாய்ப்பாடு தெரியாதவனிடம் தப்பில்லாமால் முழுவதுமாய் சொல்லு என கண்டிக்கும்போது, ஏற்படும் கலக்கத்தைப்  போல கலங்கி நின்றது பொண்ணு. எதாவது பேசுமா…. இந்த மாறி டெட்டுல பாஸாகி இண்டர்வீயு போய்ட்டு வந்தாச்சு.. அடுத்த ரெண்டு மாசத்துல அரசு உத்தியோகம் கிடச்சரும்னு’ உன் வாயால சொல்லுமா? என பஷீர் சார் முணுமுணுத்தார்.  பிரமை பிடித்திருந்தது போல முகம் இருந்தது. முகத்தில் கண்களில் தவிர மற்ற இடங்களிலிருந்து வியர்வை நதியாய் பெருக்கெடுத்து ஓடியது. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போல நடுக்கத்துடன் பஷீர் சார் சொன்னதை கவினைப் பார்த்து சொல்லத் தொடங்கியது….

அங்கு குழுமியிருந்தவர்கள் பொண்ணுக்குக் கூச்சமாயிருக்குமென்று பேசி சிலாயித்தார்கள். அப்போதுதான் மூன்று மணிக்கு வந்த அலைபேசியில் இளம்பெண்ணின் குரல் நினைவுக்கு வந்தது. ‘‘ வந்துராதிங்க ப்ளீஸ்… நான் டெட்டுல பாஸ் ஆகல. மார்க் ரொம்ப கம்மி. ஆனா ரிசல்ட் வந்த போது, பஷீர் சார் மார்க் என்னமானு கேட்டார் பெயிலுனு சொன்னா தப்பா எடுத்துருவாங்கனு பயத்துல தொண்ணுத்தி மூனு மார்க்னு, அடுத்த வாரம் சென்னையில சர்டிபிக்கட் வெரிப்பிக்கேஷனு சொல்லிட்டேன். நான் பாஸ்னு நம்பித்தான் உங்கள வரச் சொல்லிருக்காங்க.. எனக்கு என்ன பண்றதுனு தெரியலனு…’’ சத்தம் குறுகி அழுகை சத்தம் மட்டும் காதில் ஒலித்தது. அனைத்தும் தெரிந்திருந்தும் ஒரு பெண்ணைத் துன்பத்திற்குள் இழுத்துச் சென்று விட்டோமே என்ற கவலை கவினை வாட்டியது. தொண்டைய கரகரத்து… வீட்டுல பெரியவங்கள்ட பேசிட்டுப் பதில் சொல்றேனு சொல்லிட்டு புன்னகைத்தவாறே மாணிக்கம் சார் பைக்ல ஏறி இருபது நிமிட பயணத்தைத் தொடங்கினான் கவின்.

*****

கதாசிரியர் – தமிழ் உதவிப்பேராசிரியர்,
ஜெ.பீ. கலை அறிவியல் கல்லூரி, அகரக்கட்டு, தென்காசி,
திருநெல்வேலி மாவட்டம்
மின்னஞ்சல்: muniyasethu@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *