எழுதப்படாத பக்கங்களை வாசிக்கத் தொடங்கியவன்

0

-முனைவர் ஆ. சந்திரன்

“ஆகாயத்திலிருந்து விழும் தீப்பந்தங்கள் அனைத்தையும் தன்னுடைய வாய்க்குள் போட்டுக் கொள்ளும்” என்பதை முன்னரே அறிந்தவர்கள்  போல இருந்தன அவர்களுடைய செயல்பாடுகள். அதனால் தானோ என்னவோ தங்களுடைய முன்னோர்கள் பற்றி இப்படி எழுதியிருந்தனர். “கூகுலில் எழுதப்படும் தமிழ் எழுத்துக்கள் போன்ற கட்டுமஸ்தான உடல்வாகு. யானைகளைத் தலைதெறிக்க புறமுதுகிட்டு ஓடவிடும் வலிமையான வீரர்கள். தோல்வியை எதிரிகளுக்குப் பரிசாக வழங்குவதே தம்முடைய நோக்கம் என்ற வாசகங்களின் மேல் வீற்றிருக்கும் மன்னன்” என்று.  இந்த உண்மை மன்னனில் இருந்து வெளியேறிய போது, அழிவிலிருந்து மீண்ட அந்தத் தேசம் புது சரித்திரம் எழுதும் வேலை தொடங்கியிருந்தது. புதிய மன்னனின் அரசாணையின் பேரில் அது தொடங்கப்பட்டிருந்தது என்பது மிகமுக்கியமான ஒன்று. அவ்வாறு எழுதப்பட்ட புதிய சரித்திரத்தை நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நம்ப மறுத்தவர்களின் வாயில் வலுக்கட்டாயமாக விஷம் கூட ஊற்றப்பட்டது. அந்த விஷத்தின் சுவை தெரியாமல் இருக்க ஒரு சிலருக்கு மட்டும் ஆம்லெட் சைடிஸாகப் பெறும் சிறப்புச் சலுகை இருந்தது. சிதைவிலிருந்து உருவான நகரின் எல்லையில் அமைந்திருந்த அடர்ந்த வனப்பகுதியில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மக்களின் எச்சங்கள் பதுங்கி இருந்தன. அம்மண்ணின் மேல் தவழ்ந்து விளையாட்டுப் பழகி வளர்ந்ததால், அவற்றின் மீது அவனுக்கு இயற்கையாகவே ஒரு பிடிப்பு இருந்தது. “பெயரின் முன் ஒட்டிக்கொண்டிருந்த தாயின் நினைவுகளை அழிக்க வேண்டும். அவ்வாறு செய்பவர்களுக்குப் புதுப் பெயருடன் மெல்ல பட்டாணியும் கிடைக்கும்” என்று உத்தரவாதம் வீதிகள் தோறும் கால்முளைத்து நடக்க ஆரம்பித்தன. அவற்றின் மீது ஏறியவர்களின் பார்வையில் கலிஸ்டட்டிட்  பரிதாபமாகக் காட்சியளித்தான். அவனுடைய வாய் கலிஸ்! கலிஸ்! என்று முணுமுணுத்துக்கொண்டிருந்தது. அது அவனுடைய தாயின் பெயர்.

வேகமாக வலப்பக்கமாக ஓடிக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு எதிராக நடைபோட ஆரம்பித்தன பாபிணகன் கால்கள். அதனால் அவனது காலடிச் சுவடுகள் அந்நாட்டில் தனியாகத் தெரிந்தன. அந்தக் கால்களைத் தொடர்ந்து தயக்கத்துடன் சிலர் நடக்க ஆரம்பித்தனர். அப்படி நடந்தவர்களுக்கு ஒரு தலைவன் திடீரெனக் கிடைத்தான். அதனால் அவனைப் பின்தொடர்வதில் அம்மக்களுக்கு ஒரு நிம்மதி கிடைத்தது. அதனால் அவர்களின் நடையின் வேகம் அதிகரித்தது. மக்களின் நடைக்கு ஏற்ப அவனுடைய தலைவனுக்குக் விலைமதிப்பற்ற பொற்காசுகள் பரிசாகக் கிடைத்தன. பரிசு கொடுத்தவரின் முகம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டதைத் தலைவனின் ஒன்று விட்ட தம்பியின் மகன் கண்டு கண்பிடித்த மறுநாள் அதிகாலையில் இறந்து போனான். அவன் இறந்த செய்தி மக்களின் தலைவனான திடதத்தனின் கையெழுத்துடன் அறிவிக்கப்பட்டது. “என் உயிருக்கும் மேலான இளவலின் மரணம் இயற்கையானது. நெடுநாள் வயிற்றுவலியால் அவன் துடித்துக்கொண்டிருந்தான் என்பது நீங்கள் அறிந்த ஒன்றே! வலிதாங்காமல் துடித்துக்கொண்டிருந்த அவனுடைய உயிரை அதிகாலை 3.33 மணிக்கு  எடுத்துக்கொண்டு வயிற்று வலி பறந்து போனதை நானே நேரில் பார்த்தேன்” என்று  அந்த அறிவிப்பு அமைந்திருந்தது. வாசகத்தின் கீழ், தலைவன் தன்னுடைய கட்டைவிரலால் கிறுக்கியிருந்தார்.  அந்தக் கிறுக்கலின் உள்ளே பதுங்கியிருந்தது ஒரு இராஜ இரகசியம். அது “தலைவனின் நூறாவது மகனின் ஆறாவது வாரிசுக்கு மட்டும் புரிய வேண்டும் என்று டிசைன் செய்யப்பட்டிருந்து. அதன் குறிப்பு ஒன்றினைப் பேழையில் மறைத்து வைத்துவிட்டு அத்தலைவன் தன்னுடைய இறுதி மூச்சினைக் கடைசியாக ஒருமுறை வேகமாக இழுத்துவிட்டான். அவன் இறந்த இரண்டாவது சகாப்பத்தின் கடைசி நாள் நள்ளிரவில் கீழ்வானில் ஓர் ஒளிவட்டம் தோன்றியது. முழுநிலவு நாளில் தோன்றிய அதை மக்கள் இரவெல்லாம் கண்விழித்துக் காத்திருந்து பார்த்து மகிழ்ந்தனர். வானில் அன்று வழக்கத்திற்கு மாறாக ஒன்பது கோள்களும் ஒரு புள்ளியில் வந்துநின்று தம்முடைய மகிழ்ச்சியைக் கைக்லுக்கி பரிமாறிக்கொண்டிருந்தன.  அப்போது “இந்த சாம்ராஜ்ஜியத்தின் மகாசக்கரவத்தி நான்” என்று முடிசூட்டி மகிழ்ந்த முதல் மன்னனின் வாழ்க்கை முழுமை அடைந்தது. நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த மகாசக்கரவத்தியின் ஏகபத்தினி அன்று ஓர் பாலகனைப் பிரசவித்தாள். ஊரே அதைக் கொண்டாட ஆரம்பித்தது.

பாதியளவு நிரம்பியிருந்த குளத்தின் மையத்தில் வீசியெறிந்த கல்லை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த முதியவரின் நரை தண்ணீரின் மெல்லிய அலைகளுக்கிடையே நன்றாகவே தெரிந்தது. அப்போது மழைக்காலமாக இல்லாவிட்டாலும் அக்குளத்தில் மட்டும் தண்ணீர் பாதிக்குமேல் இருந்தது. மழைக்குப் புறம்பான காலத்தில் இரண்டு நாட்களுக்கு முன் பெய்த மழைநீரும் அதில் கலந்திருந்ததால் தெளிவாய் இருந்தது. வட்ட வடிவிலான அலைகள் அவரை நோக்கி விரைந்துகொண்டிருந்தன. அவரது பார்வை மையத்திலிருந்து தன்னுடய காலடியைத் தொட விரையும் அலைகளுடன் பயணித்து திரும்புவதற்குள் கல்லெறிந்த இடம் அடையாளம் இன்றிப் போனது. அதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர், தன்னுடைய நெஞ்சில் இருந்த சுமை விலகியதாய் உணர்ந்தார். அப்போது அவருக்குப் பிறந்த புதுத்தெம்பு அவரை தெற்கு நோக்கி இழுத்தது. எதையோ சாதித்தவர்போல் அங்கிருந்து புறப்பட ஆரம்பித்தார். தன்னுடைய கைத்தடியை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தபோது அவருடைய ஆறாவது விரலில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.

அறிமுகமில்லாத ஆனால் தன்முன்னோர்கள் வாழும் தேசத்தில்தான் வாழ்கிறேன் என்பதை உணரும் போது அவனுக்கு வயது 99 ஆகியிருந்தது.  என்றாலும், அவனுடைய நடையில் அது தெரியாததில் வியப்பொன்றும் இல்லை. அது அந்நிலத்தின் நியதிகளில் ஒன்று. “யுகப் புதல்வன் அந்நிலத்திற்குக் கொடுத்திருந்த வரம் அது” என்பதை மக்கள் அறிந்துகொண்டது முதல் மூப்பின் வியர்வைத்துளிகள் அம்மண்ணில் சிந்துவது முற்றிலும் நின்று போயிற்று. வேண்டிய இடத்தின் வரைபடம் அவர்கள் கண்முன் தோன்றும். அதனால் அவர்களுடைய கால்களுக்கு வேலையில்லாமல் போனது. சிலர் பயனற்ற அந்த கால்களை வெட்டி மியூசியத்தில் வைத்துப் பராமரிக்கவும் ஆரம்பித்தனர். அப்படி பாதுகாத்தவற்றில் சில இரவு வேளைகளில் யாருக்கும் தெரியாமல் நடைப் பயிற்சியில் ஈடுபட்டன. குறுக்கும் நெடுக்கமாக மண்புழுக்கள் போல் நடக்கும் அவற்றினைப் புகைப்படம் எடுத்தவனின் கைகள் மீது பரிசு மழை பெய்தது. அவற்றில் இருந்து தப்பிக்க அவன் அடிக்கடி குகைக்குள் ஓட ஆரம்பித்தான். அவ்வாறு ஓடிக்கொண்டிருந்த ஒருநாள் அவன் தோள் மீது அவனுக்குத் தெரியாமல் வானரம் ஒன்று தொற்றிக் கொண்டது. அதன் பிறகு அவன் அடிக்கடித்  தண்ணீருக்கு அருகிலிருந்த குளத்திற்குச் செல்ல ஆரம்பித்தான். தாகம் தணிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் அவன் முகம் தாமரை போல் மலர ஆரம்பித்தது. அதை அவனுடைய கண்கள் ஒவ்வொரு முறையும் ஏமாற்றின.

10.30 மணிக்கு வந்தடைவேன் என்று கங்கன் முன்கூட்டியே அனுப்பிய குறுஞ்செய்தி பொய்க்கவில்லை. ஆனால் வெறும் 20 நிமிடங்கள் மட்டும்தான் கால தாமதமானது. ஆதலால்தான் அவன் ரொம்ப கூலாக இருந்தான். ஒரு மணிநேரம் காத்திருப்போம். அதற்குள் வரவில்லை என்றால் பிறகு என்ன செய்வதென்று காத்திருந்தவர்களுக்கு, ஒன்றரை மணிநேரம் தேவைப்பட்டது. தங்கள் முடிவை மாற்றாமல் இருப்பதற்கு. அதற்குக் காரணம் கங்கன் நாற்பது நிமிடங்கள் முன்னரே வந்துவிட்டதுதான் என்றும் நினைக்கலாம். அல்லது அவர்களுடைய பொறுமைக்குப் பொற்காசுகளும் தரலாம். கிளம்பலாம் என்று முடிவெடுத்தால், கிளம்பவேண்டியது தானே! என்றும் நினைக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை. முடிந்த ஒன்றின் தொடர்ச்சியா, தொடர்ச்சியின் முடிவா? என்ற கேள்விகளும் எழுந்திருக்க வாய்ப்புகள் உண்டு. “வயது ஆகிவிட்டாலே இப்படித்தான். எதையும் ஞாபகத்ததுல வைக்க முடியருதில்ல” என்ற முணுமுணுப்புகளுக்கு மத்தியில் எதிர்ப்பார்த்துக் காத்திருப்பதில் பெரிய மன வருத்தம் ஏற்படவில்லை. என்றாலும், நாடு மக்கள் பழக்க வழக்கம் என எல்லாம் அவனுக்குப் பழகியதாக இருந்தாலும், ஏனோ அன்று புதிதாகத் தோன்றியது. அதனால் அவன் தன்னுடைய ஊருக்கே திரும்பிப்போக முடிவுசெய்தான்.

ராப்பகல் சந்திப்பு. கைத்தடியுடன் ரயிலில் இருந்து இறங்கிய பெரியவருக்கு மாலை மரியாதை மலிந்தன. அவருடைய கால்களின் நிழல்கள் ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பின்படி அந்தப் படிக்கட்டுகளைக் கடந்து சென்றன.  நல்ல மேய்ப்பனாய் இருந்து புகழ்பெற்றதால் வானில் இருந்து நேரடியாய் பூமிக்கு வந்தது ஆயிரம் ஆண்டுகளில் அவனுக்கு ஒட்டகச்சிவிங்கியின் கழுத்துப் பரிசாகக் கிடைத்திருந்தது. அதனால் அவன் அந்த கூட்டத்தின் ஒப்பற்ற நாயகனாய் மாறினான். மக்களின் துயரங்களைக் காதில் வாங்கி அவற்றை வானதிற்கு அப்பால் வீசியெறிந்து கொண்டிருந்தபோது தடியுடன் வந்த பெரியவரின் நிழல் காத்திருந்து இரகசியமாக களவில் மகிழ்ந்ததை அந்த ஊரில் இருந்த சிலருடைய வாய் முணுமுணுத்துக்கொண்டிருந்தன. அவை பெரியவரின் கைதடியை வாங்கிக்கொண்டதும் அமைதியடைந்தது.

ஜிலேப்பியைப் பிச்சிப்போட்டது போல் தலையெழுத்து இருந்ததைப் பற்றிய நினைவுகள் ஏதும் அவர்களிடம் இப்போது இருக்கவில்லை. எப்படி இந்த மாற்றம் ஏற்பட்டது என்று வரலாற்றை அவர்களின் குழந்தைகளும் நன்கு அறிந்திருந்தனர். ரத்தவெள்ளம் அடிக்கடி ஊரின் வழியாகப் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்து ஏன் இந்த வாழ்க்கை நமக்கு என்று வேதனையுடன் இருந்த போதுதான் அவர்களின் வேதனைத் துடைக்கும் மருந்தாய் அவர்களிடம் வந்து சேர்ந்தான் அந்தப் புனிதன். அவனுடைய பயணத்தின் தொடக்கம் எங்கிருந்து ஆரம்பித்தது என்பதைப் பற்றிய  நினைவு அவனிடம் இருக்கவில்லை. ஆனால் அவன் போய்ச்சேரும் இலக்கைப் பற்றிய வரைபடத்தைத் தன்னுடைய நெற்றியில் வரைந்துவைத்திருந்தான். அவனுடைய வருகைக்குப் பிறகு ரத்த வெள்ளம் ஊரை நோக்கி வருவது முற்றிலும் நின்று போனது. மக்கள் ஆற்றில் நீச்சல் பழகி மகிழ்வதை வாடிக்கையாக்கிக் கொண்டனர்.

ஐந்து சகோதரர்களைத் துரத்தியடித்த பூரிப்பு நெடுநேரம் அவர்களுக்கு நீடிக்கவில்லை. ஆசை யாரை விட்டது.  அவர்களை விட்டு வைக்க. மூத்தவனை இளையவர்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்துவிட்டு இருக்கும் சொத்தை இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம் என்று நினைத்தார்கள். ஆனால் விதி வேறொரு கணக்கை கையில் வைத்திருந்தது என்பது துரத்தப்பட்ட சகோரதரர்களுக்குத் தெரிந்த போதும் அவர்களால் அதைத் தடுக்க முடியவில்லை. காலக்கணக்கில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய முன்னோர்களின் பாதையில் பயணிப்பதையே விரும்பினார்கள். அதனால் அவர்களின் வாரிசுகளில் பலர்  தங்களுடைய உருவத்தை மாற்றிக்கொண்டால் என்ன? என நினைத்தனர். அப்படி மாற்றிக்கொண்டவர்களில் பலர் பின்னாளில் சரித்திரத்தில் தங்களுடைய பெயர் பொறிக்கப்படுவதை வேடிக்கைப் பார்க்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள்.

இரவின் இருளில் மறைந்து வாழ்ந்து பழகியதால் எல்லாம் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததில் வியப்பில்லை. ஆனால் அவர்களை யாரும் கண்டுகொள்ளக் கூடாதென்பதில் கவனமாக இருந்தார்கள். அதனால்  கோழியை அறுத்து அதன் முட்டையைக் கரியுடன் கலந்து கள் குடித்து உண்டான போதயை யாருக்கும் தெரியாமல் இரகசியமாக வைத்திருந்தார்கள். தங்களைப் பற்றிய உண்மையை யாரும் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக அவர்கள் பூமியில் இரத்தத்தை அவ்வப்போது தெளிப்பார்கள். சில வேளை அவர்களே ஆடுகளாக வேடமிட்டும் அலைவார்கள். அப்போது தானே அவர்களுக்கு நல்ல மேய்ப்பன் கிடைப்பான். அவனை வைத்து அவர்கள் விளையாட்டைத் தொடரமுடியும். அவர்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக இரண்டு பெரிய கண்களைத் தயாரித்து வானில் உலவவிட்டு மகிழ்ந்தார்கள். அதைப் பார்த்து மக்கள் அங்கே பார் இரண்டு கண்கள் என்று அதிசயத்து நின்றனர். ஆனால் உண்மையில் அவை இரண்டு கண்கள் அல்ல. ஏன் அவை கண்களே அல்ல. என்பதைக் கண்டு பிடித்தான் வள்ளரிஸ். அதனால் அவனுடைய உடல் இருட்டறையில் அடைக்க சத்தமில்லாமல் ஏற்பாடு நடந்தது. யார் அவனை இருட்டறையில் அடைத்தார்கள்? என்ற செய்தியும் இருட்டிலே அடைந்து கிடந்ததுதான் வேடிக்கை என்றாலும், அதையும் அறிந்துகொண்டவனின் கண்களும் இருளில் அடைக்கப்பட்டது வியப்புதான். அவ்வாறு இருட்டில் அடைப்பட்டுக்கிடந்தாலும் அவற்றிற்கு அந்த ஒற்றைக் கண் தெளிவாகத் தெரிந்தது. அதை அவனால் நன்றாக இப்பொழுதும் பார்க்க முடிந்தது. அப்படி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்தக் கண்ணில் இருந்து சில உருவங்கள் ஓசையின்றி நடைபோட்டுக்கொண்டிருந்தன. அவை அவனுக்கு வியப்பைத் தரவில்லை என்றாலும் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தான். இருளின் நீளத்திற்கு உருவங்கள் தொடர்ந்தன …….

வேகமாக அடுத்தப் பக்கத்தைப் புரட்டிய ஜெயந்தனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்தப் பக்கத்தில் எதுவும் எழுதப்படவில்லை. அந்த புத்தகத்தின் அடுத்தடுத்தப் பக்கங்களும் அவ்வாறே வெறுமையாக இருந்தன.  பாதிக்குமேல் ஒன்றும் எழுதப்படாத அட்டை கிழிந்திருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு விரக்தியுடன் தூங்கப்போனான். படுக்கையறையில் வெகுநேரம் உறக்கம் இல்லாமல் தவித்தவனின் கண்களை உறக்கம் மெல்ல தழுவ முயன்றது. அப்போது அவனுடைய கண்கள் எதை எதையோ பார்க்கத் தொடங்கின.

பக்கங்களைத் திருப்பி வாசிக்க ஆரம்பித்தான்…

*****

கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
திருப்பத்தூர், வேலூர்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *