-புனிதா

குளிர்ந்த காடுகள், பல்வேறு மரங்கள், கண்ணுக்கெட்டிய தூரம்வரை  எங்கும் பச்சை அருவி அமுதம் போல் பாயும் என்றவுடன் எங்கள் சிவகாசியை மலைப் பிரதேசம் என்று நினைத்து விடாதீர்கள்.

பலருக்கு வாழ்வு தரும் கற்பகத் தரு உள்ள நகரம். அதன் முக்கியத் தொழில்கள் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு, சுண்ணாம்புக் கல் எடுத்தல் போன்றவை. இங்கே ஆடம்பர வாழ்க்கை இல்லை. சாதாரண நிலையிலும் மக்கள் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வருகின்றனர். பட்டாசுத் தொழில்தான் படிக்காதவர்களின் வாழ்வாதாரம்.

அப்படிப்பட்டவர்தான் கருப்பசாமி. அவர் வயது 22. துடிப்பானவர். இள ரத்தம் அல்லவா? அழகான புத்திசாலியும் கூட. ஆனால் வறுமை அவர் வாழ்வில் பூகம்பத்தைக் கிளப்பியது. 17 வயதில் இருந்தே வேலைக்குச் செல்கிறார். கருப்பசாமியின் நண்பர் அய்யாசாமி. இரண்டு பேரும் சம வயது. அய்யாசாமிக்குத் திருமணம் முடிந்து சந்தோசமான வாழ்க்கை வாழ்கிறார்.

இரண்டு பெரும் ஒன்றாகப் பட்டாசுக் கம்பனிக்கு வேலைக்குப் போவார்கள், வருவார்கள். இணை பிரியாத நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு நொடியும் உயிர் ஊசலாடும் வேலை தான். தினமும் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைமைதான்.

படிக்க வேண்டிய காலத்தில் படிக்காததால் காலம் அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டது. ஆனால் அவர்கள் இரண்டு பேருக்கும் எப்போதும் சிரிப்பும் சந்தோசமான பேச்சும்தான். எதற்கும் வருத்தப் படவே மாட்டார்கள்.

அப்படி ஒருநாள் வேலைக்குப் போகும்போது தான் கருப்பசாமி தனக்குப் பெண் பார்த்திருப்பதாகவும் இரண்டு மாதங்களில் திருமணம் என நிச்சயம் செய்திருப்பதாகவும் சொன்னார். அப்போது அய்யாசாமியின் மனைவி கர்ப்பமாக இருந்தார். இரண்டு மாதங்களில் குழந்தை பிறக்கும் சூழ்நிலை.

நண்பர்கள் இருவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி. இன்னும் இரு மாதங்கள் தான். அதன் பின் அவர்கள் வாழ்வில் பெரிய சந்தோசம் வரப்போகிறது. மனம் ததும்பி வழிந்த மகிழ்ச்சியை முகம் நிறைந்த சிரிப்பைப் பார்த்து அவர்களது நண்பர்கள் செய்தியை கண்டு கொண்டு எல்லோருமாகக் கொண்டாடினார்கள். இந்த அத்தனை மகிழ்ச்சியும் சில மாதங்கள், சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து கருப்பசாமியின் அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. திடீரென்று வந்த இந்த இடியால் நண்பர்கள் இருவரும் அனலில் விழுந்த புழுவைப் போல் துடித்தார்கள். அவர்கள் நெஞ்சில் மேலும் ஈட்டியைச் சொருகுவது போன்று மருத்துவ செலவுக்கு காப்பீடு போக 2 லட்சம் செலவாகும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.

கந்து வட்டி, மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கினாலும் ஒரு லட்சம் தான் கிடைத்தது. மீதி ஒரு லட்சத்திற்கு அவன் பட்ட பாடு! அய்யோ!! இரு நாட்களாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை, பிச்சைக்காரனாக ரோடு ரோடாக கடன் கேட்டு ஓடினான். எந்தக்  கடவுளும் அவனுக்கு உதவவில்லை.

மனம் சோர்ந்து திரும்பி வரும் வழியில் ரோட்டிலேயே மயங்கி விழுந்து விட்டான். அந்த வழியாகச் சென்ற அவன் முதலாளி அவனைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தி அவனைக் கூட்டி வந்தார்.

“ஏன் இப்படி இருக்கிறாய்? என்ன நடந்தது” என விசாரித்தார்.

நடந்த எல்லாம் கேட்ட அவர் இரக்கமுள்ள மனம் கொண்டவர். மருத்துவச் செலவுக்கான தொகையைக் கொடுத்து உதவினார். அவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லாமல் கையெடுத்துக் கும்பிட்ட கருப்பசாமி மனம் முழுவதும் நன்றி நிறைந்திருந்தது.

அம்மா குணமாகி வீடு திரும்பியதும் கருப்பசாமியின் கல்யாண வேலைகள் ஆரம்பமாயின. பத்திரிகை அடித்து ஊருக்கெல்லாம் உறவுக்கெல்லாம் கொடுத்து மகிழ்ச்சியோடு கருப்பசாமி எல்லாரையும் அழைத்தார்.

அய்யாசாமியும் அப்பாவாகப் போகிற மகிழ்ச்சியில் மிதந்தார். அய்யாசாமியின் மகனை தேவர்கள் பூப்போட்டு ஆசீர்வதித்து பூமிக்கு அனுப்பினார்கள். அதே சமயத்தில் அந்தக் குழந்தையின் அப்பாவின் தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டி விட்டார்கள். ஆம்!

கல்யாணம் எனும் கனவும் குழந்தை என்ற ஆசைக் கனவும் பட்டாசின் வெடிச் சத்தத்தில் கலைந்து போயின. யாரோ செய்த சிறு தவறு பல குடும்பங்களின் நிம்மதியை, மகிழ்ச்சியை, குழந்தைகளின் படிப்பைத் தலைகீழாக மாற்றி விட்டது.

எங்கும் கரிக்கட்டை போலப் பிணங்கள்.

“அம்மா அப்பா”,

“என்னால் தாங்க முடியலையே”

 என்று எங்கும் ஓலம் கேட்க அழுகையும் அவலக் குரல்களும் அந்தச் சுற்று வட்டாரம் முழுவதும் எதிரொலித்தது. ஒவ்வொருவருடைய கை எது? கால் எது? என்று பிரித்தறிய முடியாதவாறு மனித உறுப்புகள் சிதறிக் கிடந்தன.

எல்லாரும் தங்கள் உறவுகளை, உறவுகளின் உறுப்புகளை தேடியபடி இருந்தனர். அந்தக் குவியலில் தான் கருப்பசாமியும் அய்யாசாமியும் கிடந்தார்கள். அய்யாசாமியின் மகன் பிறந்தவுடன் பெருங்குரலெடுத்து அழுதான். அதென்னவோ மற்றக் குழந்தைகளின் அழுகை போல சாதாரணமாக இருக்கவில்லை. தன் தந்தையின் மரணத்துக்கும் சேர்த்து அழுவது போல் இருந்தது. மகனின் முதல் சுவாசம் தந்தையின் கடைசி சுவாசம்.

புயலுக்கு பின்வரும் அமைதி போல இந்த பேரிடருக்குப் பின் பெரும் அமைதி பிறந்தது. எல்லா முகங்களும் சோகத்தைச் சுமந்தபடி இருக்க உதடுகள் சொற்களற்ற மௌனத்தைத் தாங்கி வலம் வந்தன.

எல்லாம் முடிந்த பின்னர் அரசு நிவாரணத்தொகை அறிவித்தது. மரணம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் என்று அறிவித்தது. ஓர் உயிரின் விலை 1 லட்சம் தானா??

அரசாங்கம் கொடுக்கற 1 லட்சத்தை வைத்துக் கொண்டு மொத்தக் காலத்தையும் கடத்திவிட முடியாது. எல்லாரும் தங்கள் இழப்பைத் தாண்டி பிழைப்பைத் தேடிச் செல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

அய்யாசாமியின் மனைவி கைக்குழந்தையுடன் செய்வதறியாது திகைத்து நின்றாள். கடந்து வந்துதானே ஆக வேண்டும் எந்தச் சோகத்தையும்!!!

பிழைப்பைத் தேடிச் செல்லத் தொடங்கினாள் அந்தத் தாய். அந்த நேரத்தில் கூட “ஏய்! இவ புருஷன் செத்து ஒரு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ளயும் வேலைக்கு கிளம்பிட்டா பாரு!” என்ற அங்கலாய்ப்புகள், ஏச்சுப் பேச்சுக்கள். தன்னுடைய சின்னஞ்சிறு பூங்குழந்தைக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டாள்.

எங்கே வேலைக்குப் போவது?? ‘பட்டாசு தொழில்தான் ஆபத்துணு சொல்லிவிட முடியாது. எல்லாத் தொழில்லயும் ஆபத்து இருக்கத்தான் செய்யும்’ தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டவளாக பட்டாசு தொழிற்சாலைக்குள் நுழைந்தாள். வேறு எந்தத் தொழிலும் செய்யத் தெரியாத அவள். வேறு தொழிலுக்கு அங்கே வாய்ப்பும் தான் ஏது?

ஆபத்து நிறைந்த இந்தத் தொழிலிலும் அரசு விதிக்கிற பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றினால் ஆபத்தைக் குறைத்து விடலாம் என்று தோன்றினாலும் அவள் அடி மனத்தில் எப்போதும் நிறைந்திருக்கும் வேண்டுதல் ஒன்று இருக்கிறது.

‘தந்தையை இழந்து விட்ட தன்னுடைய சின்னச் சிட்டுக்காகவாகிலும் தனக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது’ என்பது தான் அது!.

எதிர்காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையில் ஊசலாடியபடி தான் அங்கே பல மனித உயிர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் வாழ்விலும் இந்தத் தீபாவளித் திருநாள் ஒளி வீசட்டும்!!

*****

கதாசிரியர் – மாணவி,
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *