இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (285)

0

அன்பினியவர்களே!

அன்பினுமினிய வணக்கங்கள். காலத்தின் ஓட்டத்தோடு போட்டி போட்டுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் எமக்கு வாரங்கள் அவசரமாய்ப் புரண்டு கொண்டு ஓடுவது தெரிவதில்லை/ இதோ மற்றொரு மடலில் உங்களுடன் உறவாட விழைந்து இம்மடல் வரைகின்றேன். இந்த ஒரு வாரத்தில் இங்கிலாந்தில் எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்து விட்டன. சில அனைவராலும் வரவேற்கப்பட்டவை, மற்றும் சில அனைவராலும் வெறுக்கப்பட்டவை வேறு சிலவோ கலவையான உணர்வுகளைக் கொண்டவை.

முதலாவதாக இங்கிலாந்தின் பிரதமர் திரேசா மே அவர்களின் நிலையை எடுத்துப் பார்த்தோமானால் அவரது எதிர்காலம் சிக்கல் மிக்க கேள்வியாகவே இருக்கிறது. “ப்ரெக்ஸிட்” எனும் ஒரு பெரிய சுமையை எப்போது பிரதமனாரோ அப்போதே தனது கழுத்தினூடு மாட்டிக் கொண்டு விட்டார். நவம்பர் மாதம் இங்கிலாந்தின் எதிர்கால ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான வர்த்தக உறவுகளை நிர்ணயிக்க கால எல்லை வகுக்கப்பட்டிருந்தது. ஏனெனில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதகான நாள் 2019 மார்ச் மாதம் 29ஆம் திகதி என்பது உலகறிந்த உண்மை. இவ்வெளியேற்றத்தின் பின்னால் சுமார் இரண்டு வருட காலத்துக்குள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உறவுகளுக்கான சட்ட மூல நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக கூட்டப்பட்ட விசேட கூட்டத்தில் இதற்கான உடன்படிக்கை எட்டப்படவில்லை. சர்ச்சை மிகுந்த விடயமாக வட அயர்லாந்து விளங்குகிறது. அதற்கிடையில் தெரேசா மே அவர்களின் அமைச்சரவையில் பல குழப்பங்கள். அமைச்சர்களில் சிலர் தெரேசா மே அவர்களின் நிலைப்பாட்டையும் ஒன்றியத்துடனான வர்த்தக உறவு பற்றிய அவரது கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சியோ இதனை உபயோகித்து எப்போது அரசைக் கவிழ்க்கலாம் என்று காத்திருக்கிறார்கள். பாராளுமன்றத்துக்கு வெளியேயும் நாடு பிளவுபட்டுக் கிடக்கிறது. பிரதமர் தெரேசா மே ஒரு நூலிழையில் ஊசலாடுகிறார்.

இந்நிலையில்தான் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் நிதியமைச்சரினால் இவ்வருடத்துக்குரிய பட்ஜெட் தாக்கலாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு காலமும் அதாவது சுமார் எட்டு வருடமாக முன்னாள் பிரதமர் டேவிட் கமரன் அவர்களின் அமைச்சரவையினால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பொதுச்செலவீனக் கட்டுப்பாடு இப்போது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகவே நிதியமைச்சர் தனது உரையில் குறிப்பிடிருந்தார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த கன்சர்வேடிவ் கட்சியின் மகாநாட்டில் பிரதமர் தனது உரையின்போது இக்கொள்கை முடிவுக்குக் கொண்டு வரப்படும், இதுவரை மக்கள் அனுபவித்த பொருளாதாரச் சிக்கல்கள் முடிவடையும் என்று அறிவித்திருந்தார். இவ்வறிவித்தலை ஊர்ஜிதம் செய்யும் வண்ணமே நிதியமைச்சரின் உரையும் அமைந்தது. ஆனால் இது எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது என்பதில் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. புதிதாக ஒரு நிதியும் ஒதுக்கப்படவில்லையே இதுவரை காலமும் சிக்கனம் எனும் பெயரில் ஒவ்வொரு துறைக்கும் கிடைக்க வேண்டிய நிதியைக் குறைத்தவர்கள் அதை இப்போது திரும்பக் கொடுக்கிறார்கள். இதிலென்ன பெரிய பிரதாபம் என்கிறார்கள் சில அரசியல் அவதானிகள். முக்கியமான துறைகளான காவற்துறை, கல்வித்துறை போன்றவற்றினை விடுத்து போக்குவரத்துப் பாதைகளின் குழிகளைப் பழுதுபார்ப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது நகைப்புக்கிடமானது என்கிறார்கள் வேறு சிலர். பிரபல வர்த்தக நிலையங்கள், மற்றும் மத்தியதரக் குடும்பங்களின் வரிக்குறைப்பு என்பன வரவேற்கப்படாமலில்லை. இதன் தாக்கம் மொத்தத்தில் எப்படி இருக்கும் என்பதை ப்ரெக்ஸிட் எனும் அந்தப் பூதாகரமான நிகழ்வின் பின்னாலேயே முற்றாக உணர்ந்து கொள்ள முடியும்.

மீண்டும் துப்பாக்கி வேட்டுக்கள் அமெரிக்காவை அதிர வைத்திருக்கின்றன. அநியாமாகப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த யூதர்களில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமேரிக்காவை மட்டுமல்ல அகில உலகையுமே கலக்கி விட்டிருக்கிறது. இந்நிகழ்வினைப் பலவிதமான கோணங்களில் பல முனைகளில் இருந்து பலர் அலசியிருக்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் இது ஒரு இனைத்துவேஷப் படுகொலையே! இக்கொலையைச் செய்தவனின் கொடூரச் செயலின் பின்னணியில் எது செயல் பட்டிருக்கிறது எனும் கேள்வி பல முனைகளில் இருந்துஎழுகிறது. இன்றைய மேற்குலக அரசியல் ஒழுங்கீன, நிற, மத வெறிப் பின்னணியைக் கொண்டதாக இருக்கிறதோ எனும் கேள்வி கூட எழுக்கிறது. பல முன்னணி அரசியல் தலைவர்களின் பொறுப்பற்ற உரைகள் கூட இதற்கான காரணமாக இருக்கலாமோ என்றுகூடச் சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். எது எப்படியிருப்பினும் எத்தனையோ இன்னல்களைக் கடந்து இன்று தமக்காக ஒரு வாழ்வைக் கட்டியெழுப்பியிருக்கும் யூத இன மக்களுக்கு இது ஒரு பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்பதே உண்மை

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்,
சக்தி சக்திதாசன்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *