முனைவர் இரா. மதன் குமார்
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

முன்னுரை

சைவசமயத்தில், சரியை முதலான நால்வகைநெறிகளும் பெருமானைப் பெற்றுய்வதற்கான படிநிலைகளாகின்றன. அவ்வரிசையில், சமயக்குரவர் நால்வர்தம் அணுகுமுறைகளையும் முறையே மகன்மைநெறி, தொண்டுநெறி, தோழமைநெறி மற்றும் ஞானநெறி எனப் போற்றுதல் மரபு. நால்வகைநெறிகளுள், பூவுலகின்கண் ‘தொண்டுநெறியை நிலைநிறுத்தத் திருவவதாரம் செய்தருளியவர், ‘திருநாவுக்கரசு நாயனார்’. அவரை, ஞானகுருவாக்கி, ’தொண்டுநெறிக்கோர் தூமணி’ எனச் சிறப்புற்றவர், ‘அப்பூதியடிகள்’. திலகவதியாரை முதலாக உடைய இத் திருத்தொண்டர் மரபு, எளியராகிய அடியவர்கள், அரும்பொருளாகிய இறைவனை அடைவதற்குத் ‘தொண்டுநெறியே துணையாகும்’ என விளக்கிநிற்பது; ‘பொய்யன்பிலா தொண்டர்க்கும் தொண்டராம் புண்ணியமே’ என்ற திருமுறை வாழ்வியலை என்றென்றும் விளங்கச்செய்வது; ‘தொண்டின் திலகம்’ எனத் திலகவதியம்மையாரும், அவ்வருள்திலகத்தின் திருப்பொலிவாகத் திருநாவுக்கரசுப் பெருமானும், அதன் அருள்மணமாய் அப்பூதியாரும், அவர்தம் மனைவியாரும், அவர்களது திருமகனாகிய மூத்ததிருநாவுக்கரசும் விளங்குகின்ற மேன்மையுடையது. அவ்வகையில், தொண்டர்சீர் பரவுகின்ற திருத்தொண்டர்புராணத்தில், இப்பெருமக்களது பக்திநெறியானது, ‘தொண்டுநெறியே, சைவப்பெருநெறி’ என விளங்குகின்ற பாங்கினை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

பெண்குலத்திலோர் பொன்மணி

திருமுனைப்பாடி நாட்டின் திருவாமூரின் வேளாளர் குலத்தின், குறுக்கையர் குடியில் சிவம் பெருக்கும் இணையராக விளங்கியவர்கள், புகழனாரும், மாதினியாரும். அத்திருக்குடியில் மட்டுமல்லாது, உலகனைத்திலும் சைவநெறியைக் காக்கப் பிறந்தவர், ‘திலகவதியார்’. அவ்வருள்மேன்மை கருதியே அம்மையாரை, தெய்வச்சேக்கிழார் பெருமானும், ‘திருவனைய திலகவதி’ (திருநாவு.புரா.:17) என்று போற்றியுள்ளார். அவருக்குப்பின் பிறந்தவரே ‘மருள்நீக்கியார்’. பின்னாளில் தம் தம்பியாரின் வாயிலாகத் தொண்டுநெறியாகிய சைவப்பெருநெறியைத் தழைக்கச்செய்கின்ற பெருநோக்கில் அவர்தம் வாழ்க்கையும் விளங்கியது.

திலகவதியாருக்கு, கலிப்பகையாருடனான திருமணவாழ்க்கைக் கூடாதநிலை நேர்ந்தது.  சில காலத்தில் பெற்றோரையும் இழக்க நேரிட்டநிலையில் அத்திருமகளார் தம் உயிர்த்துறக்க முற்பட்டார். ஆயினும், ‘யாதொரு ஆதரவுமற்ற தமது தம்பியார் உளராகவேண்டும்’ என இரங்கிய அன்பின் மேன்மையினால், அவர் உயிர் தாங்கியிருந்து, ஒப்பரிய சைவ அறங்களை மனையிலிருந்தே புரிந்துவந்தார்.

“தம்பியா ருளராக வேண்டு” மென வைத்ததயா
  வும்பருல கணையவுறு நிலைவிக்க, உயிர்தாங்கி,
  யம்பொன்மணி நூறாங்கா, தனைத்துயிர்க்கு மருடாங்கி
  யிம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதி யாரிருந்தார்.  திருநாவு.புரா.: 34) என்பது தெய்வச்சேக்கிழார் பெருமானின் திருவாக்கு.

திலகவதியாரின் திருநோக்கம்

சைவ அறத்தில் தலைநின்றிருந்த அவர்தம் தம்பியார், மெய்ப்பொருள்தேடலின் பொருட்டு, சமண சமயம் சார நேரிட்டது. அந்நிலையிலும் அவருக்கெனவே வாழ்ந்து, தியாகச்செல்வியாகத் திகழ்ந்த திலகவதியார், திருவதிகைத் திருத்தலத்தில், ‘திருத்தொண்டர்’ என்னும் நிலைதாங்கி, கைத்தொண்டில் சிறந்தார். அத்துடன், ‘தமது தம்பியாரை மீண்டும் சைவசமயத்திற்கு ஆட்படுத்தத் திருவருள் வாய்க்கவேண்டும்’ எனப் பெருமானைப் பணிவதையே தமது பணியாகக் கொண்டிருந்தார். ஆண்டுகள் பல கழிந்தன; தம்பியாரும், ‘தருமசேனர்’ எனப் பெரும்பெயர் பெற்று, சமணசமயத்தில் மயங்கியிருந்தார். அவர்தம் மயக்கத்தை மட்டுமன்றி, ஆருயிர்கள் அனைத்தின் அறியாமை மயக்கையும் தொண்டுநெறி வழியே நீக்கியருளத் திருவருள் கனிந்தது.

தம்பியாரை,  தீராத சூலை நோய்ப் பற்றி நலிவித்தது. உயிர்க் கவரும் கூற்றுவனை ஒத்த சூலையிலிருந்து பிழைத்தருள வேண்டி, தமது தமக்கையாரின் துணையினை நாடச்செய்தது. அதற்கென, தமது நோய்நிலையினை அறிவித்து, தமக்கையாரை உடன் அழைத்துவர ஏவலாளரை ஏகினார். ஆயினும்,‘சைவநெறி திறம்பாத வாய்மையின் நல்லாராகிய திலகவதியார், சமண்பள்ளிக்குத் தாம் ஏகுகின்ற எண்ணமில்லை’ என்பதனைத் தம் தம்பியாருக்கு உறுதிபட உரைத்தருளினார். அத்துடன், ‘உயிர்ப்பிணியையும் ஒருங்கே நீக்கவல்ல திருவதிகைப் பெருமானின் திருத்தலத்தை நாடி வரவுள்ள தமது தம்பியாரின் வருகையினை எதிர்நோக்கியிருந்தார்.

அவரது சித்தத்தின் படியே, அங்குவந்த தம்பியாருக்குத் தாமே ஞானகுருவாகியிருந்து,  திருவாளன் திருநீறு தந்தருளித் தீக்கையும் செய்தருளினார். அத்துடன், தாம் முன்சென்று, தம்பியாரைத் திருக்கோயிலுக்குள் வழிநடத்தினார். அருள்மொழிகளுடன் கூடிய அவர்தம் ஆற்றுப்படுத்தலால், பெருமானின் திருமுன்பை அடைந்த நாயனாரிடத்தில், பெருமானைப் பாடிப் பணிகின்ற உள்ளுணர்வு மேலிட்டது.

உலகுயிர்களின் பிறவித்துன்பத்தை நீக்கியருள்கின்ற திருப்பதிகச் சொல்மாலைகளின் தொடக்கமாக, ‘கூற்றாயினவாறு’ எனத் தொடங்கிப் பாடினார். அதுபொழுது முதலாக, ‘தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்’ எனச் செந்தமிழ்ப்பதிகம் பாடிப் பணிகின்ற பாங்கில், ‘நாவுக்கரசு’ என்னும் ஞானத்திருப்பெயரும் இறைவனால் சூட்டியருளப் பெற்றார். இவ்வாறு, திருநாவுக்கரசராகிய நாயனாரை சைவப்பேருலகத்துக்குத் தருகின்ற பெருநோக்கத்தில் திலகவதியாரின் திருவாழ்வு அமைந்திருந்தது. அப்பெருநோக்கத்தை நிறைவேற்ற வேண்டி, சூலைநோயினைத் தந்தருளிய பெருமான், அதைத் தீர்த்தருளத் திலகவதியாரின் மெய்ம்மைத் திருவாக்கும், திருநீறும் கருவியாகும்படி அருளினான். அத்துடன், அத்திருச்செல்வியே, நாயனாருக்கு ஞானகுருவாகவும் விளங்கத் திருவருள் செய்தருளினார். அவ்வருள் சிறப்பையே நாயனார், ’பெருமான், திலகவதியாரைத் தமக்குத் தாயாகவே தந்தருளினான்’ என்று அன்புருகப் போற்றியுள்ளார்.

            ‘அம்மை யார்? எனக்கு என்று அரற்றினேற்கு
            அம்மையாரைத் தந்தார்ஆரூர் ஐயரே’ (5:7:6) என்ற திருவாக்கின்படி, நாயனாருக்கே மட்டுமன்றி, அம்மையார்,  மன்னுயிர் அனைத்தையும் தொண்டுநெறியில் வளர்த்தெடுக்கவந்த திருத்தாயாகவும் விளங்கக் காண்கிறோம்.

 உழவாரப் படையாளியைத் தந்தார்
தாயாகவும், ஞானகுருவாகவும் வாய்த்த தமக்கையாரின் அருளாணையின்வண்ணம் தம்பியாரும், சரியையாகிய கைத்தொண்டினையே தமக்குரிய ஞானநெறியாகக் கைக்கொண்டார். கைத்தொண்டில் திறம்பாதிருந்து, ‘உழவாரப் படையாளி’ என மிளிர்ந்தார். அப்பெருநெறியில், பதிகம் ஏழெழுநூறு பகர்கின்ற பரம கவியோகியாக அவரைச் சைவஉலகுக்குத் தந்தளித்த தனிப்பெருமை, திலகவதியாரின் தொண்டுநெறிக்குக் கிடைத்த வெற்றியாகும். சுருங்கக்கூறின், திலகவதியாரின் தியாக வாழ்க்கை, ‘ஆருயிர் அனைத்தின் மேலும் கொண்ட ஒப்பரிய அருள்வாழ்க்கை’  என்பது மிகையில்லை. அவ்வருள் பாங்கினைக் குறிக்கவே தெய்வச்சேக்கிழார் பெருமான், ‘தூண்டுதவ விளக்கனையார்’ எனப் பெருமாட்டியைப் போற்றிப் பணிந்துள்ளார். ‘தூண்டு தவம்’ – உலகச் சார்பினை விடுத்துச் சிவநல்வினையாகிய சிவச்சார்பினையே அடையும்படி தூண்டும் தவம்; இங்குத் தம்மையே தூண்டிக்கொண்டதன்றித் தம்பியாரையும் அவர்மூலம் உலகத்தாரையும் தூண்டும் தவம் (திருநாவு.புரா.:46, சிவக்கவிமணியார் உரை)’ எனத் திலகவதியாரின் திருத்தொண்டு, ‘தவம்’ என்று போற்றப்பெறுகிறது.

 ‘திருநாவுக்கரசு’ என்னும் திருநின்ற செம்மையர்

உயிர்கள், தத்தம் வினைவழியே, எழுவகைப் பிறப்புகளிலும் மாறிமாறி பிறந்திளைக்கின்றன. அவ்வப் பிறப்புகளிலும் அவை புல், பூடு, புழு, மரம், பறவை, பாம்பு, மனிதர் என இனப்பெயர் பெறுகின்றன. அவற்றுள், மனிதப்பிறப்பினருக்குப் பெற்றோரால் இடப்பெறுகின்ற பெயர்கள் உண்டு. அவை, ‘ஊனப்பெயர்’ என்றே வழங்கப்பெறும். ‘மனிதர்கள், தாம் கொள்கின்ற, அழிகின்ற உடலுக்கே அத்தகைய பெயர்கள் சூட்டப்படுகின்றன’ என்பதனை உணர்வதில்லை; காலங்கள் பல கடந்தும் அவை நிலைப்பதில்லை.  அத்தகைய ஊனப்பெயர்களையும் கடந்து, ஞானகுருவால், ‘தீட்சைத்திருப்பெயரும்’, அனைத்து உயிர்களுக்கும் அம்மையப்பனாகிய பெருமான், சூட்டியருள்கின்ற ‘ஞானத்திருப்பெயரும்’ உள்ளன. அத்திருப்பெயரை உணர்வதும், பெருமானைப் பற்றி உய்வதும் பிறப்பின் பயன்களாகின்றன. அதற்கு, ‘ஞானகுருவின் திருப்பெயரை மந்திரமாக ஓதுதலே’ கருவியாகும்.

      ‘ஊனப்பே ரொழிய வைத்தார்
      ஓதியே யுணர வைத்தார்
      ஞானப்பேர் நவில வைத்தார்’ (4:30:7)

நாயனார், ‘மருள்நீக்கி’ என்னும் இயற்பெயர்த் தாங்கி, மண்ணுலகில் மாந்தர்தம் அகவிருளையும், சமண் முதலான பொய்யிருளையும் போக்கவந்தவர். அவர், முந்தைய பிறப்பிலேயே ஞானம் முதிரப்பெற்றவராக, ‘வாகீசர்’ எனப் பெயர் தாங்கியிருந்தவர். ஆயினும், இராவணனின் அறியாமைச் செயலுக்கு அவர் துணைநின்றநிலை உண்டு. அக்காரணத்தால், நிகழ்பிறப்பில் தாம், மண்ணுலகில் வந்தவதரித்த அருள்நோக்கத்தைப் பலகாலம் மறந்திருந்தார். சமண் மயக்கில் ஆழ்ந்திருந்து, ‘தருமசேனர்’ என்னும் திருப்பெயர்த் தாங்கியிருந்தார்.  அவ்வறியாமை நிலை, ‘பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப் பொறை’ (திருநாவு.புரா.: 73) எனப் புராணத்துள் சுட்டப்பெற்றுள்ளது.

நாயனார், புறச்சமயத்தில் ஒழுகியதால் பெற்ற, ‘தருமசேனர்’ என்னும் பொய்ப்பெயர் அவரிடமிருந்து அகன்றுபோகப் பெருமான் திருவுள்ளம் கொண்டான். திலகவதியாரின் திருவிண்ணப்பத்தின் படியே, தம்பியாரைச் சைவத்துக்கு மீளவும் ஆட்கொண்டருள வேண்டி, சூலைநோயினைத் தந்தருளினான். திருவதிகையில், சூலையும் நீங்கி, ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரும் சூட்டியருளினான். அத்துடன், அத்திருப்பெயரின் வாயிலாக, ‘திருநின்ற செம்மையாகிய திருத்தொண்டின் வாய்மை ஏழுலகிலும் என்றென்றும் நின்று நிலைக்கட்டும்’ என வானோசையாகத் திருவருள் ஆணையும் தந்தருளினான். அவ்வருள் நிலையானது, இனிவரும் நாளிலும், ’திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரால், செய்வதற்கரிய சைவப் பெருநலங்கள் பல விளைய இருந்ததன் குறிப்பு மொழியாகும்.

      ‘மேவுற் றவிவ்வே லையினீ டியசீர்
      வீரட் டமமர்ந் தபிரா னருளாற்
    “பாவுற் றலர்செந் தமிழின் சொல்வளப்
      பதிகத் தொடைபா டியபான் மையினால்
      நாவுக் கரசென் றுலகே ழினுநின்
      னன்னா மநயப் புறநண் ணுக” வென்
     றியாவர்க் கும்வியப் புறமஞ் சுறைவா
     னிடையே யொருவாய் மையெழுந் ததுவே’. (திருநாவு.புரா.: 74)

தொண்டுநெறியே குருநெறியான தகைமை
‘பாலூட்டி, குழந்தையைப் பேணுதல், தாயின் கடனாதல் போன்று, பெருமானும் அனைத்துயிருக்கும் கருணைசெய்தலைத் தன் கடமையாகக் கொள்கின்றான். மேலும், எவ்வுயிர்க்கும் கருணைசெய்தலாகிய தனது அருங்குணத்தைத் தன் காதல் அடியவர்க்கும் அளித்தருள்கின்றான்.

 ‘காதலாம் அடியவர்க்குக் குணங்களைக் கொடுப்பார்’ (4:49:9) அவ்வாறு, அன்புநெறிக்கு ஆட்பட்டு, அதற்குக் கருவியாகவல்ல தொண்டுநெறியில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியே திருநாவுக்கரசு நாயனாரும்,

            ‘தன் கடன் அடியேனையும் தாங்குதல்
             என் கடன் பணி செய்து கிடப்பதே’           (5:19:9) என்று தொண்டுநெறிக்கு ஆட்பட்டார். அவ்வாறு, அவரைத் தொண்டுநெறியில் ஆட்படுத்தி, உலகுய்யச்செய்வதே பெருமானின் திருக்குறிப்பாகவும் அமைந்திருந்தது.  அதனாலேயே, அவரது ஞானகுருவாக வாய்த்த திலகவதியாரும், திருவதிகைத் திருத்தலத்திலிருந்து, சைவம் தழைக்கச் சரியைத் தொண்டு செய்பவராக விளங்கத் திருவருள் விளைந்திருந்தது; அதன்வழியாகவே,  திருநாவுக்கரசு நாயனாரும் தொண்டுநெறியையே தமக்குரிய குருநெறியாக ஏறிட்டுக் கொண்டார்.

அளப்பரும் சீருடைய அடியார் திருநாமம்

பெருமான், ‘வேதங்களும் அறிய இயலாத நுட்பமுடையவன்’. அரியவனான அவன், தனது அருங்குணங்களை அடியவர்கள் விளங்கி உய்யும் பொருட்டுப் பேராயிரமும் கொண்டருள்கின்றான்.

‘ஆயிரம் பேருகந் தானு மாரூ ரமர்ந்தவம் மானே’         (4:4:8)

திருவைந்தெழுத்தும் அவனது திருப்பெயராகி, பிறவிக்கு வாயிலாகின்ற வினைகளைத் திண்ணமுறத் தீர்த்தருள வல்லது’ என்பதனைத் திருஞானசம்பந்தப்பெருமான்,

       ‘எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால்
             நல்லார் நாமம் நச்சி வாயவே’ (3:49;5) என்று போற்றியுரைத்தார். அவ்வருஞ் சிறப்புக்குச் சான்றாகவே, திருநாவுக்கரசுப் பெருமானும்,

            ‘கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
             நற்றுணை யாவது நமச்சி வாயவே’ (4:11:1) எனப் பாடினார்.

திருவைந்தெழுத்தையே தெப்பமாகப் பெற்று,  நீர்க்கடலோடு, பிறவிக்கடலிலிருந்தும் மீண்டருளினார். பேராயிரத்தையும், திருவைந்தெழுத்தையும், அடியவர்கள் உய்வதற்குத் தனது திருப்பெயர்களாகக் கொண்டருள்கின்ற பெருமான், தன்னடியவனாகிய மருள்நீக்கியாருக்குத் திருவதிகைத் திருத்தலத்தில், தானே உவந்து, ‘நாவுக்கரசு’ என்னும் திருப்பெயரைச் சூட்டியருளினான். (ஒற்றெழுத்தை நீக்கிக் கண்டால், ஐந்தெழுத்தாகும்) அத்திருப்பெயரையும், திருவைந்தெழுத்தாகவே விளங்கச்செய்தான்.

‘தனது அடியார்களுக்கும் தொண்டனென’ விளங்குகின்ற பெருமான், தனது திருப்பெயரின் சிறப்பினை அடியார்கள் ஓதி உய்வதைக் காட்டிலும், தனது அடியவரின் திருப்பெயர்களை அவர்கள் ஓதி உய்யவேண்டிப் பெருங்கருணை புரிகின்றான். அத்துடன், அத்திருப்பெயர், மந்திரமாக விளங்கி, உடற்பிணியையும், உயிர்ப்பிணியையும் ஒருங்கே நீக்கவல்ல சிறப்பில் பொலியச் செய்கின்றான். அவ்வாறு, அவன், ’நாவுக்கரசு’ என்னும் திருப்பெயருக்குத் தந்த அருள்வல்லமையை விளக்கியுரைக்கின்ற அரும்புகழ்ப் புராணமாக ‘அப்பூதியடிகளின் திருவரலாறு’ விளங்குகிறது.

பெயர்நலம் விளக்க வந்தார்  

பெருமான், நஞ்சுண்டருளிய திருவிளையாடல், அவனது பெருந்திறத்தைக் குறிப்பது. அதன்பொருட்டு அவனுக்கு, ‘திருநீலகண்டன்’ என்னும் திருப்பெயர் அமைகிறது. திருஞானசம்பந்தர், ‘அவ்வினைக்கு இவ்வினை’ என உயிர்களைத் தொடர்ந்துவருகின்ற வலிய வினைகளையும், ’திருநீலகண்டமாகிய’ பெருமானின் திருப்பெயர் நீக்கியருளும் என்பதனைத் திருக்கொடிமாடச் செங்குன்றூரில் மெய்ப்பித்துள்ளார். அங்கு, அடியாரின் குளிர்சுரத்தைப் போக்கக் கருவியான, ‘திருநீலகண்டத் திருநாமம்’, திருநீலகண்டக் குயவனாரின் பிறவிநோயையும் நீக்கியருளியது. அத்திருப்பெயரின் அரும்பெருமை, சைவப்பேருலகில் நின்றுநிலைப்பதற்கு, குயவனார் கருவியானார். அவ்வாறே, ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரை உலகேழிலும் மந்திரமாக நிலைபெறச் செய்வதற்கு, அப்பூதியடிகள் கருவியானார்.  பெருமானுக்கு அமைந்த திருப்பெயர்களின் பொருளுணர்ந்து, அவற்றை இடையறாது பற்றுங்கால், அத்திருப்பெயர், சிவத்தையே பற்றுகின்ற பேரறிவை உயிருக்கு நல்குகிறது. அது ஒப்பரிய சிவஞானத்திற்குத் திறவுகோலாகிறது. அத்துடன் அரும்பேறாகிய திருவருளையும் குறைவின்றிச் சுரந்தருள்கிறது.

அத்தகைய பேரறிவே, ‘பதிஞானம்’ என வழங்கப்பெறும். பக்குவமுடைய ஆன்மாக்கள், முற்பிறப்புகளின் தவப்பயனால் உயிரறிவு விளங்கப்பெற்று, திருமுறைநெறியில் ஞானப்பேற்றுக்குத் தலைப்படுகின்றன. அவ்வாறு, திருமுறைகளைக் கற்றும், கேட்டும்  பலபிறப்பின் துயர்நீங்குகின்ற நல்வினைப்பயன் அனைத்து உயிர்களுக்கும் வாய்ப்பதில்லை. அவ்வுயிர்கள், அறியாமையால் உலகியல் வலைப்பட்டு, தீவினையே பெருக்கி, துன்பப்பிறவிகளுக்குத் தலைப்படுகின்றன. சிற்றறிவுடைய அவ்வுயிர்களுக்கும், ‘எளிய உய்யும்நெறியை’ விளக்கியருள்கின்ற அருங்கருணையே அப்பூதியாரின் திருவவதார நோக்கமாகிறது. அவர், அந்தணராக, அனைத்துயிரின்பாலும், அந்தமிலா அருங்கருணை பூண்டிருந்தார். அதனால், அவர்தம் தீவேட்டலாகிய மறைத்தொழிலும், கலியுகத்தின் கொடுந்துன்பங்களிலிருந்து மன்னுயிர்களைக் காக்கின்ற அறச்செயலாக மிளிர்ந்தது.

             ‘கலிமெலிய அழலோம்பும் அப்பூதி’    (4:12:10)

என்பது நாவரசர் நான்காம் திருமுறையில், அப்பூதியடிகளைக் குறித்துப் பாடியுள்ள திருக்குறிப்பாகும்.

மறைத்தொழிலுடன், கா வளர்த்தும், கனிதரு சோலைகள் பேணியும், குளங்கள் புதுக்கியும், தண்ணீர்ப் பந்தல்கள் நலம்பெற அமைத்தும், அறச்சாலைகள் பலவற்றை அன்புடன் சமைத்தும், தமது ஞானகுருவாகிய நாவுக்கரசரின் நற்தொண்டுநெறி சிறக்கின்ற உயர்த்தவத்தைப் பேணினார். இப்பெருஞ் சிறப்பினைச் சாற்றவே நம்பி ஆரூரர் பெருமான்,

      ‘ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்’ (திருத்தொண்டத்தொகை: 4) எனப் போற்றியுரைத்துள்ளார்.

பதி புண்ணியச் செல்வர்
தன்னலம் மறந்து செய்கின்ற நற்செயல்கள் புண்ணியங்களாகின்றன. ‘அவை நடந்தேறத் தாம் கருவியாக அமைந்துள்ளோம்’ என்கின்ற பக்குவநிலையால் நல்வினைத் தொடர்பாகிய புண்ணியப்பயன் உயிரைத் தொடர்ந்து, அதற்கேற்பப் பிறப்பில் படுதல் உயிர்களுக்கு நிகழ்வதில்லை. அவ்வாறன்றி, எந்த ஒரு செயலையும், ‘யான் செய்கின்றேன்’; ‘எனது அறிவாலும், வலிமையாலும் செய்கின்றேன்’ என்ற தன்முனைப்பு, செயலில் பற்றினையும், அதன்வழியான இன்ப துன்பங்களில் நாட்டத்தையும் தந்து பிறப்புகளுக்கு வாயிலமைக்கின்ற அவலம் நேர்கிறது. அத்தகைய நிலையினை, ‘பசு புண்ணியம்’ என்பர்.

பதிபுண்ணியங்களாகிய நற்செயல்கள், சீவன்முத்தர்களால்,  பெருமானை முன்னிட்டுச் செய்யப்படுவன. அவற்றால் வினைப்பற்றும், இன்பதுன்ப நாட்டமும், அதற்கேற்ப பிறப்பின் தொடர்ச்சியும் அமைவதில்லை. அத்தகைய பக்குவநிலையே, ‘சீவன்முத்த நிலை’ எனப்படுகிறது. உலகியல் தொடர்போடு வாழ்கின்றபோதிலும், சீவன்முத்தர்கள் தாங்குகின்ற உடலானது உயிரைத் தாங்குகின்ற கருவியாக மட்டுமே அமையவல்லது. அவ்வுடலின் கருவி கரணங்கள் உலகியலின் இன்ப, துன்பநாட்டத்தைக் கடந்து, திருவருளாகிய பேரின்பதுக்கு நிலைக்களமாகின்றன. அவ்வுடலின் வழியான சிந்தையும், சொல்லும், செயலும் சிவசிந்தனைக்கு உரியவையாகப் பண்படுகின்றன. அம்மெய்யுணர்வின் வழியிலேயே, அப்பூதியடிகள் திருநாவுக்கரசரை ஞானகுருவாக ஏறிட்டுக் கொண்டார். ‘குருவே சிவம் எனக் கூறினன் நந்தி’ என்ற பெருநோக்கில், அவர்தம் திருப்பெயரால் அனைத்து அறங்களையும் செய்கின்ற பாங்கில் உயர்ந்தார். ‘அனைத்தையும் ஆக்குகின்ற அருமை முதல்வர் அவரே’ எனப் பணிந்து, அறப்பணிகளுக்கு, ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரிட்டுச் சிறந்தார். அத்துடன், தம் மக்களுக்கும், மனையிடை நின்ற பொருள்களுக்கும், ‘திருநாவுக்கரசு’ என்றே திருப்பெயர் வழங்கி அறம்சிறக்கச் செய்தார்.

அன்பில் சிறந்த அப்பூதியார்

அப்பூதியார், சாதி, குலம் என்னும் தடுமாற்றம் நீங்கித் தெளிந்த சிந்தையராய், ஆளுடைய அரசுகளின்பால் நீங்காத அடிமைத்திறம் பூண்டவர். முக்கரணங்களாலும், ‘திருநாவுக்கரசரையே’ ஞானகுருவாக ஏறிட்டுக் கொண்டு தொண்டுநெறியில் நிலைநின்றவர். அவர்,  ‘கானிடைத் தவமும், கனலிடைப் புகுதலும், உடல்வாடி நோதலும் இன்றி, உள்ளத்து அன்பின் மொழியாக, ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரினை, பேசியும், எழுதியும் சைவப்பெருஞ் சாதனைக்கு வித்திட்டார். ‘நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்’ என்னும் திருமொழியை, திருவருள் ஆணையாகப் பொலியச் செய்தவர். தாம், அறுவகைத் தொழிலையும் ஆற்றுவிக்கின்ற திருஞானச் செல்வராக விளங்கியபோதிலும், தன்னறிவை ஆற்றுவிக்கத் தனி குருவின் திருவருளை நாடியவர். அவ்வடிமைத்திறம், சைவசமயத்தின் அடிப்படையாகிய குருநெறியைத் திறம்பட வலியுறுத்துகிறது. அதிலும், நாயனாரைக் கண்ணால் காணாதபோதிலும்,  அவர்பால் அடிமைத்திறம் பூண்ட நிலை, அப்பூதியடிகளின் பெரும்பக்திக்குச் சான்று. அளப்பரும் இச்சாதனையால்,

            ‘உற்றானலன் தவம், தீயில் நின்றானலன் ஊண்புனலா
            அற்றானலன் நுகர்வும், திருநாவுக் கரசெனுமோர்
சொற்றா னெழுதியுங் கூறியுமே யென்றுந் துன்பில்பதம்
            பெற்றான் ஒருநம்பி அப்பூதியென்னும் பெருந்தகையே’  என, நால்வர் நான்மணி மாலையின் (பாடல்: 38) திருப்பாடலால் போற்றப்பெற்றுள்ளார்.

காணாதே பக்திகொண்ட பெரும்பக்தர்

திருப்பழனம் முதலான திருப்பதிகளை வணங்கிப் பணிந்த நாயனார், திங்களூருக்கு வந்தார். அவ்விடத்தில், தமது திருப்பெயரால், அறங்கள் பல இயற்றப்படுவதைக் கண்டார். தாழ்வெனும் தகைமை மீதூர, அடியவராகிய தம்மையும் ஒரு பொருளாகக் கருதித், தம் பெயரால் அறங்களைப் புரிகின்ற திருவன்பரின் திருவடியினை வணங்கிப் பணிய ஆவல்கொண்டார். அங்கிருந்தாரிடத்தில் அவ்வன்பர்தம் ஊரும், பேரும், மனையும் முதலாயின குறித்து வினவி அறிந்தார். அவரைக் கண்ணாரக் கண்டு பணிகின்ற பெருவிருப்பில், அவர்தம் இருப்பிடம் சேர்ந்தார். வீட்டின் வாயிலில் இருந்து அழைக்க, அப்பூதியார் மனையின் உள்ளிருந்து வந்தார்.

நடமாடும் கோயிலாகிய அரனடியாரின் வருகையினை எண்ணி மகிழ்வுற்ற அப்பூதியார்,   ‘அடியாருக்குத் தக்கவகையில் தொண்டாற்றவேண்டும்’ என விரைந்தார். மனத்தின் விரைவு, சொல்லில் வெளிப்பட்டது. ‘இறைவரீர்! அடியேனை நாடி வந்ததன் நோக்கம் யாது?’ எனக் கேட்டுப் பணிந்தார். இம்மொழி கேட்ட நாயனார், ‘தாங்கள் இயற்றுகின்ற அறங்கள் அனைத்துக்கும், ‘திருநாவுக்கரசு’ என்னும் பெயர் வழங்கிவருவதன் காரணம் யாது?; அதனினும் செம்மையுடைய திருப்பெயர்களும் உண்டே?’ என வினவினார். இதைக் கேட்ட அப்பூதியார் அளவிலாத துன்பமுற்றார். தம் முன்னால் எழுந்தருளியிருந்தவர், சிவவேடத்தால் சிறந்திருக்கின்ற நிலையிலும் அறியாமையுடன் அவ்வாறு வினவியதாகக் கொண்டார். ஆயினும், அத்திருப்பெயரின் அருஞ்சிறப்பையும் அறிந்திராத அடியாருக்கு அதனை அறிவுறுத்தியருள எண்ணினார்;  ‘அத்திருப்பெயரினும் சிறந்ததொரு திருப்பெயரும் உளதோ?’ என அவர்பால் வினவினார்.

’சிவனெனும் ஓசை அல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மை’ எனப் பாடிச் சிவனடிமை பூண்டவர், திருநாவுக்கரசு நாயனார். அவரையே சிவமாகக் கண்டு, குறையாத அடிமைத்திறம் பூண்ட அப்பூதியார், ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரைக் காட்டிலும், திருவாகிய செம்மைநிறைந்த திருப்பெயர்களும் உளதோ?’ என்று அவரை நொந்துரைத்தார்.

               “நம்மையுடை யவர்கழற்கீழ் நயந்ததிருத் தொண்டாலே
               யிம்மையிலும் பிழைப்பதென வென்போல்வா ருந்தெளியச்
               செம்மைபுரி திருநாவுக் கரசர்திருப் பெயரெழுத
               வெம்மைமொழி யான்கேட்க விளம்பினீர்” (அப்பூதி. புரா.: 14)
இத்திருப்பாடல், ‘தொண்டில் நிலைத்த அப்பூதியாரின் தூயதிருவுள்ளத்தை விளக்கிக்காட்டுகிறது.  ‘நம்மையுடைவர்’ என்பது, சிவனாரைக் குறிக்கிறது. ‘என் போல்வார்’ என்பது, சிற்றறிவுடைய தீவினை யுர்களை’.

நமக்காக நாயனாரின் பெயரை நயந்தார்

நம்மையுடையவராகிய, இறைவரைப் பணிந்தால், இப்பிறப்பினையே இறுதியாக்கி, இனிப் பிறவாமை பெறலாம்; அதற்குச் சிவனாரின் திருவடியைப் பற்றுகின்ற ஞானநெறிக்குத் தலைப்படுதல் வேண்டும். ஆயினும், எம்மைப்போன்று சிற்றறிவே உடையவருக்கு அப்பெருநெறியானது, பற்றுதற்கு அரியது; அதனால், எளியவாறு அப்பெருநெறியினை அணுகுகின்றவகையில், சிவனடியாரை  நயந்தேன்’; அவர்களுக்குரிய பல தொண்டினையும் செய்யத்தலைப்பட்டேன்; திருத்தொண்டுநெறியால் உலகுய்யச் சமணத்திலிருந்து, சைவத்துக்கு மீட்டருளப்பெற்று ‘வாக்குக்கோர் மன்னவர்’ என்று திருப்பெயர் பெற்றுச் சிறந்த நாயனாரே, ‘தொண்டுநெறிக்கோர் தூமணியாகத் திகழ்கின்றார்; அவர், ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் செம்மை மனத்தினர்; வீடும் வேண்டா விருப்புடன், அன்பர் பணியாகிய திருத்தொண்டில் நிலைநின்றவர்; யானும்,  அவ்வழியே நின்றுய்ய அவரையே ஞானகுருவாக்கிக் கொண்டேன். அன்றுமுதலாக, அவர்தம் திருப்பெயராலேயே அறங்கள் பலவும் பொலிவுற்றுச் சிறக்கின்றன’ என்று விடைகூறினார்.

இத்திருப்பாட்டில், மன்னுயிர்களின்பால் அவர்கொண்ட கருணையால், அவற்றின் அறியாமையைத் தன்பால் ஏறிட்டுக்கொண்டும், தம்மை, அறியாமை மிக்கவராகவும் அப்பூதியார் குறித்தருளியுள்ளார். இம்மறுமொழிகளைத் தெய்வச்சேக்கிழார் பெருமான், இரண்டு திருப்பாடல்களில் குறித்தருளியுள்ளார். நாடகத்தால் அவனடியார்போல் நடித்து, தம்மை முன்னிருத்திச் சுயம் நிறுவுதலையே பக்திநெறியாகக் கொண்டுள்ள மூடர்களுக்கான வழிகாட்டுதலாக, அப்பூதியடிகளின் நிலை அமையக்காண்கிறோம்.

அவர், அந்தணருக்கு உரியதாகிய ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் மற்றும் ஏற்றல் என்னும் அறுவகத்தொழிலில் ஈதலையும் திறம்படச்செய்தார். திருவருளால்,  அறச்செயல்களுக்கான பொருள்செல்வம் அனைத்தையும் பெற்றுச் சிறந்தபோதிலும், அறமாற்றி அருள்செல்வத்தையும் சேர்க்க முனைந்தார். அந்நிலையில் தன்முனைப்பு அற்ற உயர்ஞானத்தைக் கடைப்பிடித்தார். நாயனாரைக் காணாதபோதிலும், அவரது திருப்பெயரால் அறங்கள் சிறக்க நல்லெண்ணம் கொண்டார். குருவையே சிவமாகக் கருதி, தம் மக்கள் முதலான சுற்றத்தாரையும் அந்நன்நெறியில் ஒழுகி உய்யச்செய்தார்.

பணிவில் தலைநின்ற பெரியார்

அப்பூதியடிகளார் தம்மிடத்தில் கூறிய மறுமொழிகளைக் கேட்ட அளவில், நாயனாருக்கு, அவர்மீதான  நன்மதிப்பு மேலும் பெருகியது. ’அடியவனே, சூலைதந்து பெருமானால் ஆட்கொள்ளப்பெற்ற சிறுமையேன்’ என்றுகூறி, அவரைப் பணிந்தார். அதுகாறும், தம் முன்னால் எழுந்தருளியிருந்த அடியார், தமது ஞானகுருவாகிய திருநாவுக்கரசு நாயனாரே’ என்பதை அறியாத அப்பூதியார், நாயனாரின் மொழி கேட்டு, சிரத்தின் மேற் கரம்குவித்து, கண்ணீர் அரும்ப, சொல் தடுமாறி, மயிர்ப்புளகம் எய்தி, தரையினில் வீழ்ந்து நாயனாரின் திருவடியினைப் பணிந்தார். அவ்வாறு தமது திருவடி பணிந்து எழுந்த அப்பூதியாரைத் தாமும் எதிர் வணங்கி, நாயனார் எடுத்தருளினார்.

            ‘மற்றவரை யெதிர்வணங்கி வாகீச ரெடுத்தருள
             அற்றவர்க ளருநிதியம் பெற்றார்போ லருமறையோர்
             முற்றவுளங் களிகூர முன்னின்று கூத்தாடி
             உற்றவிருப் புடன்சூழ வோடினார் பாடினார்’   (அப்பூதி. புரா.: 18)

மேற்கண்ட பாடலில், ‘தன்னடியவராகிய அப்பூதியாரைத் திருநாவுக்கரசுப் பெருமான், வணங்கினார்’ எனக் குறிக்கப்பட்டுள்ளமையும், அவரிடத்தில் தம்மை அறிமுகம் செய்துகொள்ளுங்கால், ‘சிறுமையேன்’ என்று கூறியே பணிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கவை.

நாயனாரின் தொண்டுநெறிக்கு, ‘ஆருயிர்கள்பால் அவர்  அளவில்லாது பெருக்கிய கருணையும், அவ்வளப்பரும் கருணையின் வெளிப்பாடாகிய பணிவும்’ இருகண்கள் எனத் திகழ்ந்தன. அப்பெருநிலையால் உடலும் உள்ளமும் பொலிவுற்ற பாங்கினாலேயே நாயனார், திருஞானசம்பந்தப் பிள்ளையாரைச் சிவிகையில் தாங்கி, ‘அப்பர்’ எனத் திருப்பெயர் ஏற்றார். அப்பெரும்பண்பில் மேலும் பெருகிய பாங்கினாலேயே, அப்பூதியடிகளிடத்திலும் தம்மை, ‘சிறியேன்’ எனவும் பணிந்தும், அவரை வணங்கியும் அன்பில் பெருகினார்.

பெறலரும் புதல்வனின் பெருஞ்சாதனை

அப்பூதியாரின் திருமனைக்குள் எழுந்தருளிய நாயனாருக்கு விதிப்படி, ஆசனமும், அருச்சனையும் செய்வித்து திருவமுது படையலுக்கான ஏற்பாடுகளையும் அப்பூதியடிகளார் மேற்கொண்டார். நாயனார், திருவமுது செய்தருள வேண்டி, உண்கலம் அமைக்கத் தமது மூத்ததிருமகனாகிய, மூத்ததிருநாவுக்கரசை வாழைஇலை கொண்டுவரப் பணித்தார். அத்திருமகனும், அதற்காக மிகமகிழ்ந்து, இலையினை அரிய முற்பட்ட வேளையில், நச்சரவொன்று அவன் உடலில் பல்பதித்தது.

‘நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்’ எனப் பாடிச் சைவப்பெருநெறி வாழ உயிர்க் காத்து அருளப்பட்டவர், நாவரசர்.  அவரைப் பணிகின்ற அடியாரும் அவ்வாறு நமனை வென்று நல்வாழ்வு பெறவல்லவர்கள்’ என்பதனை உலகுக்கு உணர்த்துகின்ற பெருவாய்ப்பாக மேற்கண்ட செயல் நிகழ்ந்தேறியது. அத்துடன், உண்மையடியார்கள், தம் இன்னுயிரைத் தந்தும், தொண்டுநெறியை வாழச்செய்வர்’ என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மூத்ததிருநாவுக்கரசின் உடலில் விடமேறிய நிலையினை, ‘ஏழாம்விட வேகம்’ எனப் புராணம் குறிக்கிறது.

  ‘எரிவிட முறையே யேறித் தலைக்கொண்ட வேழாம் வேகந்
தெரிவுற வெயிறுங் கண்ணு மேனியுங் கருகித் தீந்து
விரிவுரை குழறி யாவி விடக்கொண்டு மயங்கி வீழ்வான்
பரிகலக் குருத்தைத் தாயார் பால்வைத்துப் படிமேல் வீழ்ந்தான்’  (அப்பூதி. புரா.: 27)

‘உடலின் செரிமான மண்டலம் முதலாக, தோல் மண்டலம் ஈறாக அமைந்த அனைத்து உறுப்பு மண்டலங்களையும் கொடியவிடம் தாக்கியதால், இனிப் பிழைத்தேற வாய்ப்பில்லை’ என்னும் வகையில், பெருந்துன்பத்தை அப்பிள்ளை அனுபவித்திருக்கக்கூடும். ஆயினும், தொண்டின் மணியாகத் திகழ்கின்ற பெற்றோரின் பெருந்தொண்டுக்கு இழுக்குநேராத வண்ணம், தான் அரிந்துவந்த வாழையிலையினைத் தாயிடத்தில் ஒப்படைத்த பிறகே அவனது ஆவி உடலிலிருந்து பிரிந்ததாகக் குறிப்புள்ளது. உயிர் பிரிகின்ற தருவாயிலும்,  பெற்றோரின் தொண்டில் துணைநின்ற, ‘மூத்ததிருநாவுக்கரசின்’ பெயரால் தொண்டுநெறி இன்றளவும் செழித்தோங்குகிறது.

திருத்தொண்டில் துளங்காத இணையர்

பக்திநெறியினை, உலகியல்  பயனுக்காகக் கடைப்பிடிப்போர், நன்மையால் இன்பமும், தீமையால் துன்பமும் அடைவர். நன்மைக்கும், அதன் இன்பத்துக்கும் தாமே பொறுப்பேற்பதும், தீமைக்குத் திருவருளைப் பழிப்பதும் அவர்கள் இயல்பாக அமையும். ஆனால், சீவன்முத்தர்களாகிய அப்பூதியாரும், அவர்தம் மனைவியாரும் ஆருயிர்களைக் காக்கின்ற அரனே, ‘திருநாவுக்கரசு’ எனத் திருப்பெயர்த் தாங்கித் தம்பால் எழுந்தருளி வந்ததாக எண்ணிப் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.

            ‘நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
                     உன்நாமம் என்னாவில் மறந்தறியேன்’         (4:1:6)

எனத் திருநாவுக்கரசரின் திருப்பெயரையும், அவர்த் திருப்பெயரிலான தொண்டிலும் திறம்பாது நின்றனர். அதிலும், ‘வாராது வந்த மாமணி’ எனத் தமது மனைக்கு நாயனாரே எழுந்தருளியநிலையில், பெருஞ்செல்வம் பெற்ற பெருமகிழ்வில் திளைத்திருந்தனர்; அவருக்குத் திருவமுது படைக்கத் திருவருள் கூட்டுவித்தநிலையில், அதற்கு இடையூறாக மகனுக்குத் தீராத துன்பம் நேர்ந்ததனைக் கண்டனர். பெறலரும் புதல்வனாகிய மூத்ததிருநாவுக்கரசின் திருமேனியில் விளங்கிய குறிகளைக் கண்டு, அவன் விடத்தினால் உயிரற்று வீழ்ந்ததனை உறுதிசெய்து கொண்டனர்; அவ்வாறு நிகழ்ந்ததும், திருவருளின் சித்தம் என்றே துணிந்தனர். அத்தெளிவுடன்,  மறுகணமே  அடியவராகிய நாயனாருக்கு அமுதுபடைக்கின்ற அரியவாய்ப்பு தவறாதவகையில்,  மகனது உடலைப் பாயினில் சுற்றி மறைத்துவைத்தனர்.

திருத்தொண்டில் நிலைநின்ற அவ்விணையரின் ஒப்பரிய உளப்பாங்கினைத் தெய்வச் சேக்கிழார்பெருமான், ‘துளங்குதல் இன்றித் தொண்டர் அமுது செய்வதற்குச் சூழ்வார்’ எனக் குறித்தருளியுள்ளார். ‘துளங்காமை’, என்றது, ‘சிவனடிமைத்திறம் பற்றிய அன்பின் நிலையினின்று நிலைபெயராமை’ (அப்பூதி. புரா.: 28, சிவக்கவிமணியார் உரை:பக்.: 253).

  ‘தொடருந் தொண்டரைத் துக்கந் தொடர்ந்துவந்
     தடரும் போதர னாயருள் செய்பவர்’ (5:51:8) என்ற நிலையில், ‘திருவருளின் துணைநின்று தமது துன்பத்தை நீக்கியிருக்கவேண்டும்’; அதற்கு வாய்ப்பின்றி விளைந்த பெருந்துன்பத்தை நீக்கியருள, ‘நாயனாரைச் சரணடைவோம்’ என்றும் தன்னலத்துடன் அப்பூதிஇணையர் சிந்திக்கவில்லை. மாறாக, இருவரும், குருவிடம் கொண்ட அடிமைத்திறத்திலிருந்து பிறழாதவர்களாயினர்; உள்ளத்தால் தடுமாற்றம் ஒழித்தவர்களாயினர். உயர்த்தொண்டாக, நாயனாருக்கு அமுதுபடைக்க ஆயத்தமாயினர்.

திருநீற்றுத் திருமரபால் அருஞ்சாதனை

‘விதியை மதியால் வெல்லுதல்’ என்பது, திருநாவுக்கரசு நாயனார் போன்ற அருளாளர்களால் மட்டுமே அமைவது. அவர்களது பதிஞானம், முற்றுணர்வாக விளங்கி அனைத்தையும் அறிகின்றவகையில் மேம்பட்டு நிற்பது. அவ்வாறே நாயனாரும், அம்மனையிடத்தே விரும்பத்தகாத ஒன்று, நிகழ்ந்ததனை உளக்குறிப்பாக அறிய நேர்ந்தது. இருப்பினும், அதனை வெளியிட விரும்பாத மனத்தினராய், அப்பூதி இணையரின் திருத்தொண்டினை ஏற்றருள மனம் கனிந்தார். அதற்கேற்ப, இணையர் இருவரும் உடனிருந்து, நாயனாருக்கு அனைத்துச் சிறப்புகளுடனும், திருவமுது படைக்க முனைந்தனர். அவ்வேளையில், ‘திருவாய் பொலியச் சிவாயநமவென்று திருநீறு’ அளித்தருள எண்ணி, மூத்ததிருநாவுக்கரசையும் அவ்விடத்திற்கு அழைத்துவரும்படி, நாயனார் கூறினார். அடியார்கள் திருவமுது செய்தருளுவதற்கு முன்னர், தம் உடனிருப்போர்களுக்குத் திருவருள் பொலிவாகத் திருநீற்றினை வழங்கிச் சிறப்பது மரபு. அத்திருமரபே, மூத்ததிருநாவுக்கரசை மீண்டும் உயிர்ப்பெறச் செய்கின்ற சைவ அருஞ்சாதனைக்குக் கருவியானது.

அதுகேட்ட பெற்றோர், நாயனாரின் திருவருள் ஆணையினை நிறைவேற்றத் திருவருள் துணைபுரியாத தமது நிலையினை எண்ணிக் கலங்கினர். மகன், இறந்துபட்டதை அறிந்தபோதும்கூட பெற்றோர்கள் தடுமாற்றம் அடையவில்லை; ஆனால்,  நாயனாரிடத்தில், ‘நிகழ்ந்ததனை மறைத்துநிற்கின்றோம்’ என்ற குற்றவுணர்வால், அவர்களிடத்தில் தடுமாற்றம் நிகழ்ந்தது. மகன், விடத்தால் இறந்துபட்டதனை விளக்கிக் கூறாது, ’இப்போது இங்கு அவன் உதவான்’ (அப்பூதி. புரா.: 32) என்று தடுமாறி உரைத்தனர்.  அதனைக் குறிப்பினால் உணர்ந்த நாயனார், ‘அனைவரையும் உய்விக்கின்ற திருநீற்றினை அவன் பெறுவதற்கு இயலாதவண்ணம் நிகழ்ந்ததனை உள்ளவாறு கூறுக’ எனத் தாயன்பின் பரிதவிப்புடன் மொழிந்தார். பிள்ளைக்கு நேர்ந்ததனைக் கூறக் கேட்டு, ‘உம்மையும், உமது மக்களையும் போன்று தொண்டில் திறம்பாதவர் எவரும் இல்லை’ என்று நாயனார் வியந்து மொழிந்தார்.

அரனருளால் உண்மைத்தொண்டர்கள், ‘விதியையும் மாற்றம் செய்வர்’ என்பதனை விளக்கிக்காட்ட, திங்களூர்த் திருத்தலத்தின் திருவாயிலின் திருமுன்பிலிருந்து, ‘ஒன்றுகொலாம்’ எனத் தொடங்கிப் பாடினார். அத்திருப்பதிகத்தின் பத்தாம் திருப்பாடலில், ‘பத்து கொலாம் அவர் பாம்பின்பல்’ (4:18:10) எனக் குறித்துப் பாடிய அளவில், மீண்டும் மகன் உயிர்ப்பெற்று எழுந்தான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து மீண்டவனைப்போல, இயல்பாக எழுந்துவந்த பிள்ளைக்கு நாயனாரும் திருநீறளித்து மகிழ்ந்தார். ‘மாண்ட மகன் மீண்டருளிய நிலையானது, ‘அப்பூதியாரின் தொண்டின் உறுதியால் வாய்த்தது’ என்பதனைப் புராணம், ‘தொண்டின் நெறியினைப் போற்றி வாழ்ந்தார்’ எனக் குறிக்கிறது.

 ‘பிரிவுறு மாவி பெற்ற பிள்ளையைக் காண்பார் தொண்டின்
        நெறியினைப் போற்றி வாழ்ந்தார்; நின்றவப் பயந்தார் “தாங்கள்
        அறிவரும் பெருமை யன்ப ரமுதுசெய் தருளு தற்குச்
        சிறிதிடை யூறு செய்தா னிவ” னென்று சிந்தை நொந்தார்’ (அப்பூதி. புரா.: 37)

தொண்டில் வலிமையும் எளிமையும்

உயிர்ப்பெற்று எழுந்த மகனைக் கண்ட பெற்றோர், அவ்வேளையிலும், ‘பெறலரும் தம் மகனை மீளப்பெற்றோம்’ என மகிழ்வில்லையாம்; மாறாக, ‘நாயனார் திருவமுது செய்தருளக் காலம் தாழ்ந்ததற்கு, இம்மகனே காரணமாயினன்’ என்று உள்ளத்துள் வருந்தினராம்; அத்துடன், அனைத்தையும் அறியத்தக்கவராகிய நாயனாரிடத்தில் மகனுக்கு நிகழ்ந்ததனை மறைத்துநின்ற அவச்செயலுக்கான அச்சத்தையும் சுமந்து நின்றனராம்.  (மேலது பாடல்). இவ்வாறு, அப்பூதியார் மற்றும் அவர்தம் மனைவியாரின் மனநிலை தொண்டில் வலிமைபெற்றிருந்தது. அத்துடன், அங்கிருந்த நாயனாரிடத்திலும் செயற்கரும் சாதனையைச் செய்தளித்த பெருமிதம் மிளிரவில்லை; சிவனடியைப் பற்றுகின்ற பெருநிறைவாகிய பணிவே அவரிடத்தில் நிலைத்திருந்தது. அத்துடன், அப்பூதியார் மற்றும் அவர்தம் மனைவியாரின் வருத்தமும், அச்சமும் ஒருங்கே நீங்கும்படி, அப்பூதியாரையும், அவர்தம் மக்களையும் உடனிருத்தி, நாயனார் திருவமுதும் செய்தருளினார். (அப்பூதி. புரா.: 37) நாயனார், அடியாரையும் உடனிருக்கச் செய்து, அமுதுசெய்வித்த அன்பின்திறம், எல்லைகள் கடந்த தொண்டின் எளிமையையும், உயர்வையும் குறிப்பதாகும்.

 முடிவுரை

‘உடல்சுமந்து, பிறவியில் புகுகின்ற அவலம் நீங்கவேண்டில், உடலாலும், உள்ளத்தாலும் பணிவைப் புலப்படுத்துகின்ற தொண்டுநெறியே உற்ற துணையாகும்’ என்பதற்குத் திலகவதியார் திருச்சான்றாக விளங்குகின்றார். நாயனார், சூலையால் துன்புற நேர்ந்தது, வினைக்கழிவாய் நிகழ்ந்ததாகும். சீவன்முத்தர்களை, வினைப்பயன் உடலளவில் மட்டுமே துன்புறுத்தும்; அவர்களது உயிருக்கு உற்ற துணையாகப் பெருமான் விளங்கிப் பண்படுத்த வல்லவன்’ என்பதைத் திருநாவுக்கரசு நாயனார் புராணம் தெளிவுற உணர்த்துகிறது.

 நாயனாரின், திருக்கழிப்பாலைத் திருப்பதிகம், ஆருயிர்கள் ஈடேற வேண்டிப் பெருமான்,  ‘ஞானமும் நாவில் வைத்தார்’ என மொழிகிறது. ஞானத்துக்குக் கருவியாகப் பெருமானால், அருளிச்செய்யப்பட்டவையே, வேதமும், ஆகமமும், இதிகாசமும், புராணமும். அவற்றின் எளியநிலை விரிபொருளாகத் திருநாவுக்கரசு நாயனாரின் திருப்பதிகங்கள் விளங்குகின்றன.  அவை சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுங்கால், செல்நெறியாகப் பெருமானின் திருவடியைக் கூட்டுவிக்கவல்லன. அதற்கேற்ற வகையில், உயர் ஞானமற்ற அறிவிலிகளும் ஈடேற அவர்தம் திருப்பெயரே திருமந்திரமாக வல்லது’ என்பதற்கு அப்பூதியடிகள் நாயனார் புராணம் சான்றாகின்றது.

அடிகள் புரிந்த திருத்தொண்டுநெறியை, அவர்தம் மனைவியாரின் அருளுள்ளமும் தாங்கி நிற்கிறது. இது, பண்பட்ட இல்லற வாழ்வியலுக்குச் சான்றாகிறது. மேலும், ‘நன்மக்கள்பேறு’  என வள்ளுவப்பெருந்தகை குறிப்பிட்டதும், ‘பிறருக்குத் தொண்டுசெய்கின்ற நன்மக்கள்பேற்றையே’ எனலாம். அதற்கு, மூத்ததிருநாவுக்கரசின் தொண்டுள்ளம் சிறந்த சான்றாகிறது. ’தொண்டுநெறியாகிய பக்திநெறியே’ இப்பெருமக்களது வாழ்வியலாகிறது.

‘தொண்டுநெறியே, திருவாகிய செம்மைவாழ்க்கை’ என வாழ்ந்த திலகவதியாருக்கும், திருநாவுக்கரசு நாயனாருக்கும், அப்பூதியடிகளுக்கும், அவர்தம் மனைவியாருக்கும், திருமகனாருக்கும் அடிமைபூண்டு, ‘தொண்டர்க்கும் தொண்டராம் புண்ணியமே’ எனப் பணிகின்ற பக்திவாழ்வியலை, திருவதிகைத் திருவீரட்டானம் மற்றும் திங்களூர் முதலான திருமுறைத் திருத்தலங்கள் விளக்குகின்றன. உலகியல் பயன்களுக்காக அவற்றை வலம்வருகின்ற அறியாமை நீங்கி, அவ்வத் திருத்தலங்களையும், அவற்றின் உயிர்நாடியாக உள்ள தொண்டுநெறியின் வழியில் பணிவது, பகுத்தறிவுடன் கூடிய பக்தி மறுமலர்ச்சிக்குத் துணையாகும்.

ஆய்வுத்துணை நூல்கள்:

  1. பெரியபுராணம்- தொகுதி:3 , பாகம்: 1,2 – சிவக்கவிமணி சி.கே.சுப்ரமணியனார் (உரையாசிரியர்), பன்னிரு திருமுறை ஆய்வுமையம், கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21.பதிப்பு ஆண்டு: திசம்பர், 2017.
  2. தேவாரத் திருப்பதிகங்கள் (அடங்கன்முறை), பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் (பதிப்பாசிரியர்), கங்கை புத்தக நிலைய வெளியீடு, ஐந்தாம் பதிப்பு: சனவரி, 2005.

இணையம்:
thevaaram.org
maduraitamilproject.org.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *