அடித்தள மக்களின் எழுச்சியும் ஆணதிகாரத்திற்கு எதிரான வளர்ச்சியும் ( ‘சுகிர்தராணி’யின் கவிதைகளை முன்வைத்து )

0

முனைவர் ந. இரகுதேவன்

உதவிப்பேராசிரியர்

தமிழியல்துறை, தமிழியற்புலம்,

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

மதுரை 21.

மின்னஞ்சல் : nsragudevan@gmail.com

 

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால்

செம்மை மாதர் திறம்புவதில்லை யாம் 

(பாரதி கவிதைகள்.புதுமைப்பெண்..195)

என்ற பாரதியின் கவிதை வரிகளுக்கு ஏற்ப பெண்கள் இன்று அனைத்துத் துறைகளிலும் புதுமை படைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நூற்றாண்டில் இதன் வெளிப்பாடு இலக்கியங்களின் வழியே குறிப்பாக புதுக்கவிதைகள் வழியாக தன் உணர்வுகளையும், தன் உரிமைகளையும் சமுதாயத்தில் தேடிப்பெறும் பெண்களின் போராட்ட வாழ்வு வரலாற்றில் நல்லதொரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலைப்பாடு உருவாவதற்கு அடித்தள மக்கள் மற்றும் விளிம்புநிலை குடும்பத்திலிருந்து வெளிவந்த பெண்சக்தியே அடிப்படைக்காரணம் எனலாம். இவ்வுண்மையை கைப்பற்றிய என் கனவுகேள், இரவு மிருகம், அவளை மொழிபெயர்த்தல், தீண்டப்படாத முத்தம், காமத்திப்பூ, இப்படிக்கு ஏவாள் போன்ற சுகிர்தராணியின்கவிதைகளின் வழி எடுத்துரைக்கலாம் என எண்ணுகிறேன். ஏனெனில், நெடுங்காலமாகவே பெண்கள்  சமையலறையிலும், படுக்கையறையிலும் மாறிமாறி ஆணதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு ஒடுங்கிக்கிடப்பதையும்,  இன்று பெண்ணுடலை வைத்து பெரும்புரட்சி நிகழ்வதையும் இவரது கவிதைகளின் வழி காணமுடிகிறது. மேலும், தமிழ்ச்சமூகம் பேசமறுத்த பெண் பிரச்சனையையும், பெண் இன்பத்தையும், பெண் அரசியலையும், பெண் விடுதலையையும், பெண்ணின் போராட்ட வாழ்வையும் வெளிப்படைத் தன்மையோடு இவரது கவிதைகள் தலித்தியம் சார்ந்து ஒன்றுக்கொன்று முழுவீச்சுடன் எடுத்துரைக்கின்றது. சமுதாயத்தில் உயர்சாதி இந்துக்களுக்கென்று உணவு, உடை, பழக்கவழக்கங்கள், பண்பாடு, நாகரிகம், கலை, இலக்கியம் போன்ற அனைத்தும் மிக ஒழுக்கத்துடனும் நேர்த்தியுடனும் இருப்பதாகவும் இதுதான் உயர்பண்பாட்டிற்கான அழகியல் என்றும் காலந்தோறும் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அடித்தள மக்களுக்கும் இதுபோன்ற அழகியல் இருப்பதை எவரும் உணர்வதில்லை. கல்வி கற்பது, புரோகிதம் செய்வது, நீதி வழங்குவது, நாட்டை ஆள்வது போன்ற அனைத்துப் பணிகளுக்கும் தாங்கள்தான் தகுதியானவர்கள் என்ற உயர்சாதிப் பண்பாட்டின் அழகியலுக்கு எதிராக தலித்துகள் தங்கள் வாழ்வியல் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி இ

துதான் தலித் அழகியல், தலித் பண்பாடு இதுதானென்று உணர்த்த வேண்டிய தேவை இன்றைய காலகட்டத்தில் மேலோங்கியுள்ளது. இதனை சுகிர்தராணி தன் கவிதைகளின் வழி பெரும்பாலும் இச்சமூகத்திற்கு உணர்த்த விரும்புகிறார். எனவேதான்,

மெல்லிய

புலால் நாற்றம் வீசுகின்ற

நானும்

தசைகளை முற்றாகப்

பிய்த்தெடுத்த எலும்புகள் தொங்கும்

என் வீடும்

கொட்டாங்கச்சியில் தோலைக்கட்டி

பறையொலி பழகும்

விடலைகள் நிறைந்த

என் தெருவும்

ஊரின் கடைசியில் இருப்பதாக

நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்

நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்

முதலில் இருப்பதாக.”                      (சுகிர்தராணி. இரவுமிருகம்..31)

என்ற கவிதை வரிகளில், அடித்தள மக்கள் எனப்படும் தலித்துக்களின் பண்பாடு, உணவு, தொழில், இருப்பிடம், பழக்கவழக்கங்கள், நாகரிகம் போன்றவையெல்லாம் ஏழ்மையிலும் எளிமை நிறைந்ததாக இருப்பதால் ஆதிக்கச் சாதியினர் இதனை அழகியலாகப் பார்க்காமல் மிகவும் இழிவாகப் பார்க்கின்றனர் என்பதனை தலித் அழகியலோடு எடுத்துரைத்துள்ளார் சுகிர்தராணி. ஆண்டைக்கு அடிமையாகப் பணிபுரிந்ததால் மாட்டிறைச்சி உண்ணுதல், காலில் செருப்பணிதல், நல்ல ஆடை ஆபரணங்களை அணிந்துகொள்ளுதல், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்லுதல், தோலில் துண்டு அணிதல், கடைகளில் தேநீர் அருந்துதல், கோவிலுக்குள் நுழைதல், பொதுவெளியில் நடமாடத் தடைவித்தும் பல்வேறு பொதுச் செயல்பாடுகளுக்கு ஆதிக்கச்சாதியினர் பல நூற்றாண்டுகளாக தடைவிதித்திருந்தனர். மேலும், இரட்டைக்குவளை முறைகளும், தலித்துகளின் வாயில் மலம் திணித்தும் சிறுநீர்கழித்தும் செய்யும் கொடுமைகள் தொடர்நிகழ்வாகவே உள்ளன. அவர்களின் நிலங்களை பறிமுதல் செய்யும் செயல்களும், அவர்களின் வாழ்விடங்களை தீக்கிரையாக்கும் வன்முறைகளும் சமகால தீண்டாமை நிகழ்வுகளாக இன்றும் அரங்கேறிவருவதை தொலைக்காட்சிகளும் பத்திரிகை போன்ற ஊடகங்கத் தகவல்களின் வழி அறிந்துகொள்ளமுடிகிறது. அரசுப் பணியில் சாதிய இந்துக்களால் தலித் சமூகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் மீது நிகழ்த்ப்படுகின்ற சாதியத் தீண்டாமை வன்மங்களும் கனந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதை அரசாங்கம் கண்டுகொள்ளதில்லை என்பது உண்மை. மேலும் சாதிக் கொடுமைகளைச் செய்பவர்கள் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இத்தகைய சாதியக் கொடூரத் தாக்குதலால் உயிரிழப்புகளும் நடைபெறுகின்றன. இவ்வாறு முடியும்போது அரசாங்கம் நஷ்டஈடு அறிவித்துவிட்டு விலகிச் சென்றுவிடுகிறது. தவறு செய்தவர்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மனித உரிமை ஆணையம்தான் இந்த கொடிய நிகழ்வுகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் இத்தகைய கொடிய நிகழ்வுகளைச் செய்பவர்கள்மீது தக்க தண்டனையையும் வழங்கி வருகிறதுஇதனைத் தீண்டப்படாத முத்தம்என்ற கவிதைத்தொகுப்பில்,

எம் வாய்களில் திணிக்கப்பட்ட

மலத்தையெல்லாம் திணித்தவர்கள்மீதே

துப்பத் தெரிந்துகொண்டோம்

எம் வயிறுகளுக்குச்

சாணிப்பால் புகட்டிய கரங்களை

நரம்பறுக்கவும் கற்றுக்கொண்டோம்

மறுக்கப்பட்ட தெருக்களில்கூடச்

செருப்பணிந்து செல்லும்

செருக்கினைப் பெற்றுவிட்டோம்

ஆண்டைகள் முன் அடிபணிந்தே

வளைந்துபோன முதுகெலும்புகளை

நிமிர்த்திப் போடவும் அறிந்துகொண்டோம்

நீரற்ற ஓடைகளில் நிகழும்

கௌரவக் கொலைகளிலிருந்து

உயிர்த்தெழவும் உணர்ந்துகொண்டோம்

கைநாட்டுகளைத் தடமழித்து

ஏடெடுக்கவும் எழுந்துநின்றோம்

ஒடுக்கப்பட்ட தோற்பறையிலிருந்து

விடுதலையின் மாஇசையை

மீட்டெடுக்கவும் பழகிக்கொண்டோம்”  (சுகிர்தராணி. தீண்டப்படாத முத்தம்..27)

என்ற கவிதையின் வழி, அடித்தட்டு மக்கள் மீது ஆதிக்கசாதியினர் நிகழ்த்திய அத்தனை மனிதவிரோதச் செயல்களையும் கோடிட்டுக் காட்டுவதோடு, அதனிலிருந்து விடுபடும் வழியை அறிந்துகொண்டோம் என தன்னினத்தின் விடுதலையைச் சாதிக்க முயலுகிறார் சுகிர்தராணி. மேலும், இச்சமூகத்தின் மீதான தாக்குதலுக்குத் தன் எழுத்துக்களையே ஆயுதமாக எடுத்துக்கொண்ட இம்மனநிலை தலித்பெண்ணாக தன்னை தரம் காட்டிக்கொள்ள ஏற்புடையதாகவும் எண்ணியிருக்கிறார். ஏனெனில், “தலித் பெண்களின் அனுபவங்கள் தனித்துவமானவை. உயர்சாதி ஆணாதிக்கச் சமூகத்தின் வன்கொடுமைக்குப் பலியான வரலாறு அவர்களுடையது. இந்திய வரலாற்றில் அடிமைகளாக விற்கப்பட்டப் பெண்கள், தேர்க்கால்களில் பலியிடப்பட்ட பெண்கள், விபச்சாரிகளாக்கப்பட்ட பெண்கள் என்றெல்லாம் பார்த்தோமானால், இவர்களில் பெரும்பாலானோர் தலித் பெண்கள் என்பது தெரியவரும். இன்றளவும் காவல்நிலையப் பாலியல் வன்முறைகளைக் கணக்கெடுத்துப் பார்த்தோமானால், அதிலும் தலித் பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டோர் என்பது புலப்படும்.” (அன்புக்கரசி, மோகன் லார்பீர், (.) தலித் பெண்ணியம்..42) என்ற கருத்துடன் இப்படிக்கு ஏவாள்என்ற கவிதைத்தொகுப்பிலுள்ள பின்வரும் கவிதையைப் பொருத்திப்பார்க்கின்ற பொழுது சமுதாயத்தின் இழிநிலையை அறிந்துகொள்ள இடமளிக்கிறது. அதனைக் கவிதையினூடாகப் பயணிக்கின்றபொழுது உண்மை நிலையை உணரமுடியும்.

                எங்கள் ஆடைகளை அவிழ்ப்பீர்

                அம்மணமாக்குவீர்

                வன்புணர்வீர்

                தமையனோடு புணரச் சொல்வீர்

                பிறப்புறுப்பில் துறடு செருகுவீர்

                முலைகளை அரிவீர்

                வாய்க்காலில் வீசுவீர்

                அமிலத்தை ஊற்றுவீர்

                தலையைத் துண்டிப்பீர்

                காலை வெட்டுவீர்

                காணாப் பிணமாக்குவீர்

                மலத்தை வாயில் திணிப்பீர்

                மூத்திரத்தைக் குடிக்கச் செய்வீர்

                சேரியெனப் பிரித்து வைப்பீர்

                செருப்புமாலை போடுவீர்

                வேசீ என்பீர்

                பறையன் என்பீர்

                தீயிட்டுக் கொளுத்துவீர்

                மரத்தில் தொங்கவிடுவீர்

                தீண்டாமைச் சுவரெழுப்புவீர்

                தனிக்குவளை கொடுப்பீர்

                செருப்பணியத் தடை விதிப்பீர்  

                காதலித்தால் நாடகம் என்பீர்

                ஆணவக்கொலை செய்வீர்

                இனி எவையும் மிச்சமில்லை

                நீங்கள் செய்வதற்கு

                ஆனால்

நான் செய்ய ஒன்றுண்டு

                அது

                கொலையும் செய்வாள் பறச்சி.    (சுகிர்தராணி. இப்படிக்கு ஏவாள்..31)

என்ற கவிதையில், அடித்தள மக்கள் மீது ஆதிக்கச்சாதியினர் நிகழ்த்திய வன்முறைகளை நன்கு உணர்த்தியுள்ளார். அதிலும், தலித் மக்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறையை எதிர்க்க வேண்டியவர்களாக தற்காலத்தில் இருக்கிறார்கள் என்பதனை கொலையும் செய்வாள் பறச்சிஎன்று ஒற்றைவரியில் ஆதிக்கச்சாதியினருக்கு முடிவுரைத்துள்ளார். இம்முடிவில்தான் தலித் பெண்ணடிமை நிலையும், தலித் மக்களின் மீதான சமூகத் தாழ்வுநிலையும் முழுவேகத்தோடு சமூகப்புரட்சியாக உருவெடுத்து மனிதப் பண்பாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு என்பனை உணர்த்தியுள்ளார். ஏனெனில், இதுபோன்ற மனிதப் பண்பாடு வளர்ச்சியுறுவதற்கு ஏற்றதொரு காலமாக இந்நூற்றாண்டு அமைந்துள்ளது என்பர். இதற்கு தலித்திலக்கியமும், தலித் இயக்கங்களும் பெருந்துணை செய்வது இம்மக்களுக்கான வழிகாட்டியாக அமைகிறது. தலித் மக்கள் சமூகத்தில் ஆதிக்கச்சாதியினரால் அழுத்தி வைக்கப்பட்டதற்கும், பொருளாதாரத்தில் மிகவும் பின்னுக்குத்தள்ளப்பட்டு வறியவர்களாய் இருப்பதற்கும், மனிதத் தரத்தில் மலிந்த விலங்குகளைப் போல நடத்தப்படுவதற்கும் சுயசிந்தனையும், தன்னம்பிக்கையை வளர்க்கும் கல்வியெனும் அறிவுச்செயல்பாட்டைப் பல நூற்றாண்டுகளாகப் பெறமுடியாமல் தடை செய்யப்பட்டு வருவதே இதற்குக் காரணம் என்பதை கவிதையின் வழி உணரமுடிகிறது.

 “செத்துப்போன மாட்டைத்

தோலுரிக்கும்போது

காகம் விரட்டுவேன்

வெகுநேரம் நின்று வாங்கிய

ஊர்ச்சோற்றைத் தின்றுவிட்டு

சுடுசோறெனப் பெருமைபேசுவேன்.

தப்பட்டை மாட்டிய அப்பா

தெருவில் எதிர்ப்படும்போது

முகம் மறைத்து கடந்துவிடுவேன்

அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும்

சொல்ல முடியாமல்

வாத்தியாரிடம் அடிவாங்குவேன்

தோழிகளற்ற

பின்வரிசையிலமர்ந்து

தெரியாமல் அழுவேன்

இப்போது

யாரேனும் கேட்க நேர்ந்தால்

பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்

பறச்சி என்று.                                    (சுகிர்தராணி. இரவுமிருகம்..32)

என்ற கவிதையில், தலித் பெண்கள் கல்விக்கூடங்களில்; எதிர்கொள்ளும் சொல்லஇயலாத சாதியப்பிரச்சனைகளைத் தன்னிலிருந்து மிக இயல்பாக கிளர்ந்தெழும் வார்த்தைகளால் கவிதையாக்கியுள்ளார் கவிஞர் சுகிர்தராணி. இதுபோன்று ஒடுக்குமுறைக்கு எதிராக இழப்பதற்கு இனி எதுவுமில்லை எனத்துணிந்த தலித் பெண்களின் முயற்சிகளால்தான், புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்குத் தடைகளாய் இருக்கின்ற முதலாளித்துவம், பார்ப்பனியம், ஆணாதிக்கம், சாதியம் இவற்றை இம்மண்ணிலிருந்து வேரறுக்க முடியும் எனவும் உணர்த்தியுள்ளார். எனவேதான், சமூகத்தின் ஏளனங்களைப் புறந்தள்ளிவிட்டு பளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்றுஎனத் தன் எழுத்துகளால் எல்லோரிடமும் உரையாடுகிறார்.

தமையனைக் கூடச்சொல்லும் வக்கிரம்

இரவின் உச்சாடனமாய் ஒலிக்க

ஆதிக்கத்தின் கருந்திரவத்தைப் பருகியவர்கள்

என் யோனியில் பள்ளம் பறித்துப்

பருத்த கம்பொன்றை நிறுத்துகிறார்கள்

என் வலியின் ஓலத்தில்

அரங்கேறுகிறது ஒரு சாதிக்கூத்து”                          (தீண்டப்படாத முத்தம்..13)

என்ற கவிதை வரிகளில், தலித் பெண்கள் மீது உயர்சாதி ஆண்கள் நிகழ்த்துகின்ற பாலியல் வல்லுறவுகளை ஒரு பக்கம் சுட்டிக்காட்டிவதோடு, தன்னுடன் பிறந்த தமையனோடு புணரச்சொல்லும் வக்கிரபுத்தியுடைய மேட்டுக்குடி மக்களின் அருவெருக்கத்தக்க குணநலன்களையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும்,

 

முதுகு வீரியக் காய்ந்தால்

அதன்பெயர் பறவெயில்.

உலரும் புழுத்த தானியத்தை

அலகு கொத்தி விரையும்

அது பறக்காகம்.

கையிலிருப்பதை

மணிக்கட்டோடு

பறித்துச்சென்றால்

அது பறநாய்.

நிலத்தை உழுது

வியர்வை விதைத்தால்

அது பறப்பாடு.

சகலத்திற்கும் இப்படியே

பெயர் என்றால்

இரத்தவெறியில் திளைக்கும்

எது அந்தப் பறக்கடவுள்.”              (சுகிர்தராணி. இரவுமிருகம்..33)

என்ற கவிதையில், பல்வேறு இனக்குழுக்கள் வாழ்கின்ற மரபார்ந்த தமிழ்ச்சமூகத்தில் நெடுங்காலமாக நிலவுகின்ற தவறான அணுகுமுறையினை புதுக்கவிதையால் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் சுகிர்தராணி. அதாவது, இயற்கை தரும் தாங்க இயலாத அதீத வெயிலைக் காணும்போதும், சுகாதாரமில்லாத உணவினை உண்பவர்களை பார்க்கும்பொழுதும், ஒருவன் பொருளை மற்றொருவன் பறித்துச்செல்லும் போதும், மனிதர்கள் உடல் நோவும்படி உழைத்துத் தேயும்போதும், இருவர் கைகலப்பில் திட்டித்தீர்க்கும் போதுமான பல்வேறு சமூகக் காரணங்களில் தொழிலால் பெயர்பெற்ற பறையர்களை உள்ளிழுத்துப் பேசுவது சகமனிதர்களின் இயற்கையாகிப் போனது. இப்படிச் சகலத்திற்கும் இவர்களை திட்டித்தீர்க்கும் இந்தச்சமூகம் இரத்தவெறியில் திளைக்கும் கடவுளர்களில் எது பறக்கடவுள்எனச் சுட்டிக்காட்ட முடியுமா என வினவுகிறார் இச்சிந்தனையாளர்.

தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், அணி சேராத தொழிலாளர்கள் போன்றவர்கள் பல்வேறு போராட்டங்களால் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்தான் சமுதாயத்தில் எந்தவொரு நல்ல மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும். இந்த மாற்று முயற்சிக்குத் தலித் பெண்களும் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என்பதே சுகிர்தராணியின் கவிதைகள் வழி பெறப்பட்ட நிதர்சனமான உண்மை. இவ்வாறு தன் இருப்பில் நின்று இவ்வையகம் முழுவதும் நிகழ்கின்ற மனிதவிரோதச் செயல்களை உற்றுநோக்கி தன்னிலையில் சரியெனப்படும் எதையும் கவிதைகளாக்கி இச்சமூகத்தில் உலவவிட்டுள்ளார் கவிஞர் சுகிர்தராணி. மேலும்,

எங்கள் வளநாடுஎன்னும் கவிதையில்,

எல்லா வளங்களும் நிறைந்திருக்கின்றன

என்னுடைய நாட்டில்

பச்சைத்தமிழன் சிவப்புத் தமிழன்

என்னும் இனப்பிரச்சனை இல்லை

செந்தமிழ் சென்னைத்தமிழ்

என்னும் மொழிப்பிரச்சனை இல்லை

இரத்தத் தூண்களின் மீது கட்டப்பட்ட

புத்த விகாரைகள் இல்லை

தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப்

பயன்படுத்தும் கொடூர யுத்தமில்லை

உயிர்பிழைக்கப்

பதுங்கிக்கொள்ளும் குழியுமில்லை

போர்நிறுத்தம் என்னும் மாய்மாலமில்லை

சயனைடு குப்பியைக் கழுத்திலணிந்த மாவீரரில்லை

கொல்லப்பட்ட பிறகும்

புணரப்பட்ட பெண் போராளிகளில்லை

பிஞ்சுக் குழந்தைகள்மீது

குண்டு வீசப்பட்ட செஞ்சோலைகளில்லை

உயிரோடு உடலையும் காணாமலடிக்கும்

முள்வேலி முகாம்களில்லை

கூட இருந்தே குழிபறிக்கும்

கருணையற்ற துரோகிகளில்லை

வாய்க்காலில் எல்லாம் முடிந்தபோது

பள்ளியறைகளில் யாரும் படுக்காமலில்லை

இப்படியெல்லாம் எழுதிக்கொண்டிருக்கும்

எனக்கு மானமுமில்லை

நான் தமிழச்சியும் இல்லை.                          (சுகிர்தராணி. தீண்டப்படாத முத்தம்..20)

என்ற கவிதையில், அண்மைக் காலங்களில் அரங்கேறிய ஈழநாட்டின் இனப்படுகொலையை அருகில் இருந்தும் இல்லாமலிருந்தது போல் வேடிக்கை பார்த்த தமிழினத்தின் சமூக அரசியல் மனிதர்களை ஒப்பீட்டளவில் கேள்விக் கணைகளால் சிந்தனைக்குள்ளாக்கியிருக்கிறார் சுகிர்தராணி. ஏனெனில், வளங்கள் யாவும் நிறைந்து காணப்படுவது எங்கள்நாடு, உயிர்வாழ்வதற்கு எவ்விதச் சிக்கலும் இங்கு இல்லை, இனப்பிரச்சனை, மொழிப்பிரச்சனை, ஆயுதப்போர் என்று எவ்வித உடல்நோவும், உயர்நோவும் இல்லாத வளமான மாநிலம் எங்களுடையதென்று மார்தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அடித்தள மக்களையும், விளிம்புநிலை மக்களையும் தங்களுக்குள் ஒருவரென்று மனிதநேயத்தோடு உறவாட மறந்து தமிழகத்தின் எதோவொரு மூலையில் நாள்தோறும் ஆதிக்கச்சாதி வெறியர்கள் இவர்களை நசுக்கிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான வன்முறைகளையும் கைவிட்டு வளமான நாடு எங்களுடையது என்றுரைத்தால் இம்மண்ணுக்கான மரபுகளை யாவரும் கொண்டாடி மகிழலாம். அவ்வாறு இல்லாததால்தான் இனம், மானம் என்று பெருமைபேசும் தமிழகத்தில் இருந்தும் இப்படியெல்லாம் எழுதிக்கொண்டிருக்கும் எனக்கு மானமுமில்லை நான் தமிழச்சியும் இல்லைஎன்று தனக்கான வாழ்விடத்தை வெறுத்தொதுக்குகிறார் சுகிர்தராணி.

அரசியல் வரலாறும், ஆளும் பரம்பரையினரின் வரலாறும், மேல் சாதியினரைப் புகழ்ந்தெழுதும் வரலாறும்தான் வரலாறு என்று நெடுங்காலமாக இச்சமூகத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ஆனால், உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்க்கை வரலாறுகளை எவரும் பேசுவதுமில்லை. பேச விடுவதுமில்லை. இப்படியான அதிகாரம் இம்மண்ணில் அரங்கேறும் ஆதிக்கச்சாதி வெறியர்களின் செயல்பாடுகளை எதிர்த்து ஒரு பெண்மையின் ஆளுமை குரலெழுப்புவது சற்று வியப்பிற்குரியதே. காதலின் மென்மையையும் காமத்தின் வன்மையையும் தாய்மையின் கசிவையும் தந்தைமையின் நெகிழ்வையும் மகளின் அன்பையும் தோழமையின் இணக்கத்தையும் பகைவெல்லும் துணிவையும் போராளியின் வீரமுழக்கத்தையும் ஒரு செயல்பாட்டாளியின் கருணையையும் தன் எழுத்துக்களால் வெளிப்படுத்திய சுகிர்தராணி, அடித்தள மக்களின் தீராத விடுதலை வேட்கையை இரத்தநாளங்கள் துடிக்க நரம்புகள் புடைக்கப் பெண்மொழியின் உச்சாடனத்தோடு கவிதைகளாக்கியுள்ளார்.

–               ஏதேனும் நல்ல மாற்றங்கள் இச்சமூகத்தில் என்றாவது நிகழ்ந்துவிடாதா என்று

பார்வை நூல்கள் :

 

1.             விகரு.இராமநாதன்                         –               பாரதியார் கவிதைகள்

ஸ்ரீ இந்து பதிப்பகம், சென்னை – 17.

பதினேழாம் பதிப்பு – 2009.

2.             சுகிர்தராணி                                       –               கைப்பற்றி என் கனவுகேள்           

                                                                                                காலச்சுவடு, நாகர்கோயில். (2002)   

3.             …………                                                   –               இரவு மிருகம்

                                                                                                காலச்சுவடு, நாகர்கோயில். (2004)   

4.             ………..                                                                     –               அவளை மொழி பெயர்த்தல்

                                                                                                                காலச்சுவடு,  நாகர்கோயில். (2006)  

5.             ………….                                                   –               தீண்டப்படாத முத்தம்

                                                                                                காலச்சுவடு, நாகர்கோயில். (2010)   

6.             ………….                                                   –               காமத்திப்பூ

                                                                                                காலச்சுவடு,  நாகர்கோயில். (2012)  

7.             …………..                                                   –               இப்படிக்கு ஏவாள்

காலச்சுவடு,  நாகர்கோயில். (2016)  

8.             அன்புக்கரசி,

மோகன் லார்பீர் (.)   –               தலித் பெண்ணியம்

தலித் ஆதார மய்யம்

தமிழ்நாடு இறையியல் கல்லூரி,

அரசரடி, மதுரை – 16.

9.             ராஜ்கௌதமன்                  –               தலித்திய விமர்சனக் கட்டுரைகள்

காலச்சுவடு பதிப்பகம்,

நாகர்கோவில்01.

முதற்பதிப்பு – 2012.

ஆசிரியர் குறிப்பு

.இரகுதேவன் சேலம் மாநகரைச் சார்ந்த இவர், பணிநிமித்தம் காரணமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், திறனாய்வு என தலித் இலக்கிய வெளியில் தொடர்ச்சியாக பயணித்து வருகிறார். இலக்கியப் பதிவுகள் மற்றும்  செவ்விலக்கியம் சில பார்வைகள் என்ற திறனாய்வு நூலும், ‘வேறுவழிசிறுகதைத்தொகுப்பும், ‘மூணாங்கொடிஎன்னும் தமிழக அரசின் பரிசுபெற்ற நாவல் மற்றும் வெந்தீ என்ற நாவலும் பூட்டிய கதவு பூட்டியே கிடப்பதில்லை என்ற கவிதைத்தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன.

 

……………………………………………………………………………………………………………………………………………………

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *