குருவை நிந்தித்த இந்திரனின் துயரம்

0

-முனைவர் த. ராதிகா லட்சுமி     

பழங்காலத்தில் மாணவர்கள் குருவின் இல்லத்தில் தங்கி குருவிற்குப் பணிவிடை செய்து கல்வியை, வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தனர். தற்கால மாணவர்கள் குருவைக் கடமையைச் செய்பவராக கருதி கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படுபவராக விளங்குகின்றனர்.

‘பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு:’

என்ற வள்ளுவத்தின்படி பணிவின்மையால் குருவை நிந்தித்த இந்திரன் உயர்ந்த பதவியை இழந்து பிரமக்கொலை, பிரமகத்தி தோஷம் அடைந்து துன்புற்று ஓடி ஒளிந்தான். தேவருலகத் தலைவன் இந்திரன் தன் குருவான வியாழபகவானைப் பொருட்படுத்தாததன் விளைவைத் திருவிளையாடற்புராணத்தின் வழி அறியலாம்.

அலட்சியப்போக்கு:

முன்னர் கிருத யுகத்தில் தேவேந்திரன் தேவமகளிரின் அமுதம் போன்ற பாடலிலும், ஆடலிலும் மனம் திளைத்து மகிழ்ச்சி எனும் மதுக்கடலில் மூழ்கி இருந்தான். அப்போது இந்திரன் தன் குருவான சிவனையொத்த வியாழபகவானின் வருகையை உணராது, வழிபாடற்று வாளா இருந்தான். மகளிரின் மயக்கத்தில் வீழ்ந்தவர்களுக்கு நல்வாழ்வும் சாத்தியமோ? இதனை நன்குணர்ந்த  வியாழபகவான் அவ்விடம் விட்டு நீங்க, இந்திரனின் செல்வம் பொலிவில்லாமல் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. இது குருத்துரோகத்தால் ஏற்பட்ட கேடு என்பதைத் தெளிந்துணர்ந்த இந்திரன் தன் குருவைத் தேடிச் சென்றான். எங்குத் தேடியும் காணாதவனாய் அச்சத்துடன் நான்முகனை அடைந்து நடந்த நிகழ்வை எடுத்துரைத்தான். குருவை மதிக்காமல் நிந்தித்ததால் பாவம் கொழுந்துவிட்டு எரிவதையறிந்த நான்முகன் சூழ்ச்சியுடன் ‘உன் பழைய குருவைக் காணும் வரையில் துவட்டாவின் மகன் மூன்று தலைகளையுடைய அசுரர் குலத் தோன்றல் விச்சுவ உருவனைக் குருவாக கொள்க’ எனக் கூற  இந்திரனும் உடன்பட்டான்.

 இந்திரன் தேவர்களுக்கு நன்மை உண்டாக வேள்வி செய்யுமாறு புதிய குருவிடம் உரைக்க, விச்சுவனோ அசுரர்களுக்கு நன்மை புரியும்வகையில் வேள்வியைத் தொடங்கினான். இந்திரன் தன் ஞான திருஷ்டியால் விச்சுவனின் செயலில் வேறுபாட்டை அறிந்து வச்சிராயுதப் படையால் மோதி மூன்று தலைகளையும் தனித்தனியே பிளந்தான். அவை காடை, ஊர்க்குருவி, கிச்சிலியாக மாறிப் பறந்தன. அதன் ஊனுடன் கூடிய குருதியைப் பேய்களின் வாயில் புகட்ட இந்திரனுக்குப்  பிரமக்கொலை பாவம் வந்து சேர்ந்தது.

பிரமக்கொலைப் பாவம்:

தேவர்கள் இப்பாவத்தை நீர், மண், பெண்டிர், மரம் போன்றவற்றின் மேல் கூறு செய்து சுமத்தினார்கள். அவர்கள் இப்பாவம் நீங்க வழி யாது? என வினவினர். அதற்கு ‘நீரில் நுரையாகியும், நிலத்தில் உவர்ப்பாகியும், பெண்ணில் பூப்பாகியும், மரத்தில் பிசினாகியும் நீங்குக’ என்றுரைத்தனர். அதற்குப் பின்னும் ‘இப்பழி சுமந்ததற்கு உண்டான பயன் யாது?’ என வினவினர். நீர் இறைக்குந்தோறும் சுரந்து பொலிவடையும், மண்தோண்டிய குழியும் மண்ணினாலேயே வடுவொழிந்து நிரம்பும், சூலுற்ற பெண் கருவுயிர்க்கும் வரை கணவனுடன் வாழ்வர், மரம் வெட்டப்படினும் மீண்டும் தழைக்கும் என நீங்காத பலனை அளித்தார்கள். இதனால் இந்திரன் பிரமக்கொலை பாவத்தினின்று நீங்கினான். ஆனால் துவட்டா தன் மகன் விச்சுவனைக் கொன்ற இந்திரனைப் பழிவாங்குவதற்காக கொடும் வேள்வியினைச் செய்தான். இவ்வேள்விக் குண்டத்தினின்று ஆலகால விஷம் போன்ற தோற்றத்தைக் கொண்ட கையில் வெற்றிமிக்க வாட்படையினையுடைய விருத்திராசுரன் தோன்றினான். துவட்டா ‘தேவேந்திரனின் உயிரைப் போர் செய்து வாங்கி வா’ என  விருத்திராசுரனிடம் ஆணையிட்டான்.

வலுவிழந்த வச்சிரப்படை:

அறமும், பாவமும் போர் செய்தலைப் போன்ற யுத்தத்தில் இந்திரன் விருத்திராசுரனின் மேல் வச்சிரப்படையை வீசினான். விருத்திராசுரன் இரும்பு உலக்கையை எடுத்து இந்திரனின் புயத்தில் அடிக்க மூர்ச்சையுற்றான். சிறிதுநேரத்தில் தெளிந்த இந்திரன் ‘இப்பகைவனுக்கு எதிர்நின்று யான் போர்புரியும் வலிமைபெற்றவன் அல்லேன்’ எனக் கருதியவனாய் நான்முகனை அடைந்தான். பின்பு நான்முகனோடு சென்று திருமாலை வணங்க அவர் விருத்திராசுரனை அழிக்கும் வழியை எடுத்துரைத்தார். ‘உன் வச்சிரப்படை மிகவும் பழையதாகியதால் பகைவரின் உயிரை உண்ணும் வலிமையை இழந்துவிட்டது. அதனால் வேறு புதிய படைவேண்டும். நான் பாற்கடலைக் கடையும் நேரத்தில் அசுரர்களும், தேவர்களும் கொடிய படைக்கலன்கனோடு வருவது குற்றமென உரைத்து அவ்வாயுதங்களை ததீசி முனிவரிடம் சேர்ப்பித்தோம். பலவாண்டுகளாகியும் அசுரர்களும், தேவர்களும் ஆயுதங்களைக் கேட்காததால் ததீசி முனிவர் அவற்றை விழுங்கி விட்டார். அப்படைக்கலன்கள் அனைத்தும் திரண்டு முதுகெலும்பாய் பொருந்தி வச்சிரப்படையாயிற்று. நீ ததீசி முனிவரைக்கேட்டால் கருணைவடிவமான அவர் அதனை உனக்குத் தருவார் என்று கூறினார். ததீசி முனிவரிடம் சென்ற இந்திரன் நிகழ்ந்தவற்றைக் உரைத்து தேவர்களைக் காக்கவல்ல பொருள் நும் உடலில் உள்ள வச்சிரப்படையே’ என்று பகர்ந்தான்.

என் உடலை வழங்கி அறமும், புகழும் பெறுவேன் எனில் இவ்வுடம்பினால் பெறும் பயனும் வேறுண்டோ? என்ற ததீசி முனிவர் சிவயோக சமாதியில் நின்று கபாலத்தைக் கிழித்து சிவவுலகை அடைந்தார். தேவதச்சன் அவ்வள்ளலின் முதுகெலும்பை வலிமைமிக்க வச்சிரப்படையாக்கி இந்திரனின் கையில் வழங்கப் போர் தொடங்கியது.

பிரமகத்தி தோஷம்:

தேவர், அசுரர்களுக்கிடையிலான இப்போரில் பூமியை மூடிய பிணக்குவியல் மலை போன்ற அண்டத்தைச் சிதைவுப்படுத்தியது.  இந்திரனின் கணைகளுக்கு எதிர்க் கணையை விடுக்கவியலாத விருத்திராசுரன் அஞ்சிக் கடலினுள் சென்று மறைந்தான். சினத்துடன் கடலினுள் சென்ற இந்திரனால் அசுரனைத் தேடிப்பிடிக்க இயலவில்லை. இந்திரன் மீண்டும் நான்முகனை நாட அவர் விந்தியமலையை அடக்கிய அகத்தியரைச் சென்று கண்டால் உபாயம் கிடைக்கும் என்று வழிப்படுத்தினார். அகத்தியரும் இந்திரனின் துயர் துடைக்க சிவனைத் தியானித்து விருத்திராசுரன் மறைந்திருந்த கடலை உளுந்தின் அளவாகக் குறுக்கி அதனைக் குடித்தார். நீரற்ற கடலில் தவம் புரியும் அசுரனைக் கண்ட இந்திரன் அவன் தலையை வெட்டியெறிந்தான். இந்திரனைப் பிரமகத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. இதனால் அச்சமுற்ற இந்திரன் ஒரு குளத்தில் இருந்த தாமரைத் தண்டின் நூலுள் மறைந்தான்.

பெண்வேட்கை:

தலைவன் இல்லாத இந்திரலோகம் பொலிவிழக்க தேவர்கள் அசுவமேதயாகம் புரிந்த நகுடனைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர். இந்திரப்பதவியேற்ற நகுடன் இந்திராணியை அழைத்து வருமாறு பணிக்க அவள் வியாழபகவானைப் பணிந்தாள். இந்திரனை விடுத்து வேறொருவனைத் துணையாகக் கொள்ளுதல் அறமோ? என வினவினாள்.  வியாழபகவானும், ‘அகத்தியன் முதலான ஏழுமுனிவரும் தாங்க மாமணிச் சிவிகையில் வருபவனே தேவர்களைக் காக்கும் தலைவன். அவனே உன் கணவன்’  என உரைக்க இந்திராணியும் உடன்பட்டாள். இந்திராணியின் தூதை அறிந்த நகுடன் பெண்வேட்கையால் பின்வரும் இடரினை நினையாது, சிவிகையைச்  சுமந்து வரும் முனிவர்களின் பெருமையை அறியாது விரைந்து செல்லுங்கள் எனும் பொருள் கொண்ட ‘சர்ப்ப’ என்று கூறினான். அகத்தியரும் அவன் சர்ப்பம் என்று கூறியதால் ‘சர்ப்பமாகவே மாறக் கடவாய்’ என சாபமிட்டார்.

ஆற்றுப்படுத்திய குரு:

 பின்பு தேவர்கள் தங்கள் குருவான வியாழ பகவானைப் பணிந்து ‘மன்னன் இல்லாத இடரினைத் தீர்க்க வல்லீர்’ என வேண்டினார். குருவும் குளத்தில் மறைந்திருந்து இந்திரனை அழைத்து வந்தார். கொடிய பெரும்பாவத்தில் மூழ்கிய இந்திரன் வியாழபகவானைப் பணிந்து வணங்கி, ‘குருவே! என் பாவம் நீங்கும் வழி யாது?’ என வினவினான். வியாழபகவானும் கடம்பவன சிவனை வணங்கி பிரமகத்தி தோஷம் நீங்கும் வழியை தன் மாணவனுக்கு எடுத்துரைத்தார்.

இறைவனுக்குச் செய்த குற்றத்தை ஆசிரியரே ஆராய்ந்து தீர்க்கவல்லவர். ஆனால் ஆசிரியருக்குச் செய்த குற்றத்தை அவ்வாசிரியரே நீக்குதலின்றி வேறு எவராலும் நீக்கிடமுடியாது.

‘ ஈசனுக் கிழைத்த குற்றந் தேசிகன் எண்ணித் தீர்க்குந்
தேசிகற் கிழைத்த குற்றங் குரவனே தீர்ப்பதன்றிப்
பேசுவ தெவனோ தன்பாற் பிழைத்த காரணத்தால் வந்த
வாசவன் பழியைத் தீர்ப்பான் குரவனே வழியுங் கூற ‘

தன்னிடம் தவறு செய்தமையால் வந்த பழியை இந்திரன் தீர்ப்பதற்கு வியாழபகவானாகிய அக்குரவனே வழியையும் வகுத்துரைத்தான்.

குருவிடம் செய்த தவற்றினால் இந்திரன் விச்சுவனை அழித்து துவட்டாவின் பகையை ஈட்டினான். துவட்டாவினால் விருத்திராசுரனுக்கு அஞ்சும் நிலை ஏற்பட்டது. ததீசி முனிவர், அகத்திய முனிவர்களின் உதவியால் விருத்திராசுரனை அழித்த நிலையிலும் நிம்மதி கிட்டாமல் பிரமகத்தி தோஷமே பிடித்தது. இப்பாவத்திற்கு அஞ்சிய இந்திரன் தாமரையில் ஒளிய  இந்திராணியை நகுடன் கைக்கொள்ள நினைக்கிறான். இவ்வாறு இந்திரன் பல்வேறு துன்பங்களை அடைய குருவான வியாழபகவானே பிரமகத்தி தோஷம் நீங்கும் வழியை வகுத்துரைக்கிறார். இப்புராணத்தின் வாயிலாகக் குருவை நிந்திப்பவன் துன்பம் அடைவது உறுதி என்பது புலனாகின்றது.

குறிப்புகள்

  1. திருவிளையாடற்புராணம்; (இந்திரன் பழி தீர்த்த படலம்) – உரையாசிரியர் பி.ரா.நடராஐன்
  2. தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் – ராஜ்கௌதமன்
  3. குறள்நெறி அறம் – புலவர் கே.ஏ.ராஜீ

*****

  கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை,
ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
பொள்ளாச்சி.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *