தலைவரும், அதிகாரியும்

நிறுவனமோ, குடும்பமோ, எந்த தலைவருக்கும் ஒரே நியதிதான். பிறர் சொல்வதைக் காதுகொடுத்து கேட்டுவிட்டு, சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி வேலையைப் பகிர்ந்தளித்துவிட்டு ஒதுங்கிவிட்டால் எந்தக் காரியமும் சிறப்பாக முடியும்.

நானே வல்லவன்!

பல பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களின் பொதுக்கூட்டம் நடைபெறும்போது, ஒரே குரல்தான் ஒலிக்கும் – தலைமை ஆசிரியரது. `பதவி கிடைத்துவிட்டது. இனி நான் கற்க வேண்டியது எதுவுமில்லை!’ என்ற அகங்காரம்! பாதிக்கப்படுபவர்கள் என்னவோ மாணவர்கள்தாம்.

தலையை நிமிர்த்திக்கொண்டு எல்லாரையும் விரட்டிக்கொண்டே இருக்கவேண்டும், அப்போதுதான் தம் பேச்சுக்கு மறுபேச்சே இருக்காது, தாம் நினைத்தபடி நடப்பார்கள் என்று எண்ணிய தலைவர்கள் நிலைப்பது கிடையாது. இவர்களுக்குத் தம் குறை நிறைகள் புரிவதில்லை.

எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் அடுத்த வகுப்பிற்கான மணி அடித்ததுமே ஆசிரியர்கள் அறைக்கு வெளியே நின்றுகொண்டு, சுழலும் கதவைப் பிடித்து நிற்பார். “Teachers! Go to class!” என்று ஆசிரியர்களை தத்தம் வகுப்பிற்குப் போகப் பணிப்பார்.

`நான் ஒரு பெரிய அதிகாரி!’ என்ற பெருமிதம் அவரை அப்படி நடக்க வைத்திருக்கலாம். ஆனால், ஒரு நல்ல தலைவர் இப்படி நடக்கமாட்டார். எல்லா அதிகாரிகளையும் `தலைவர்’ என்று ஏற்க இயலாது.

ஒவ்வொரு முறையும் இப்படியே அதிகாரம் செய்ய, எங்களுக்கு எரிச்சல் மூண்டது. நாங்கள் என்ன மிருகங்களா, ஓயாமல் ஒருவர் விரட்ட?

“நமக்காக கதவைத் திறந்துவிடுகிறாரே! அவர் கையில் ஆளுக்குப் பத்து காசு வைத்துவிட்டுப் போகலாமா?” என்று ஒரு ஆசிரியை கேட்க, அனைவரும் பெரிதாகச் சிரித்தோம். இயலாமையைத் தணித்துக்கொள்ள கேலி பேசுவதும் ஒரு வழி.

குறைகளைப் பெரிது பண்ணுகிற அதிகாரி

ஒரு தலைவரானவர் தன் கீழ் இருக்கும் ஒவ்வொருவரின் குணாதிசயத்தையும், குறை, நிறைகளையும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். குறைகளையே பெரிதுபடுத்திக்கொண்டிருந்தால், யாருக்குத்தான் கடமை உணர்வுடன் செயலாற்றப் பிடிக்கும்! பிறரிடம் நல்லவிதமாக நடந்துகொண்டால்தானே நல்லெண்ணம் நீடித்திருக்கும்?

கதை

தலைமைப் பொறுப்பிலிருக்கும் ஒருவர் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவள் மஹானி.

எதிர்பாராத அல்லது நடக்கக்கூடாத சம்பவங்கள் நடந்துவிட்டால் அவைகளை எப்படிச் சமாளிப்பது என்று அமைதி குலையாது யோசிக்கும் திறமை அமைந்திருக்கவில்லை அவளுக்கு. சிபாரிசுதான் மஹானியை தலைமை ஆசிரியையாக உயர்த்தி இருந்தது. அதனால் பதவிக்கு ஏற்ற மனத்துணிவு இருக்கவில்லை.

ஒரு முறை, மாணவர்கள் புகை பிடிக்கக்கூடாது என்ற பள்ளி விதிமுறையை மீறிய மாணவர்களைத் திட்டப்போனாள் மஹானி. அவர்களோ, `அந்த ஆசிரியர், இந்த ஆசிரியர்,’ என்று சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு, `அவர்கள் மட்டும் சிகரெட்டு பிடிக்கிறார்களே!’ என்று அவளையே திருப்பிக்கேட்டார்கள், திமிருடன்.

மஹானி தன் நிதானத்தை இழந்தாள். தனக்குக் கீழே வேலை பார்ப்பவர்களின் மரியாதையைக் காப்பது தன் கடமை என்று உணரத் தவறினாள்.

விளைவு?

பள்ளியெங்கும், ஏன், ஒவ்வொரு வகுப்பறையிலும், அவள் கத்தியது கேட்கும்படி ஒலிபெருக்கியில், மாணவர்கள் கூறியதைப் பரப்பினாள் – அந்த ஆசிரியர்களின் பெயர்களையும் மறவாது குறிப்பிட்டு! அதன்பின், பரிதாபத்துக்கு உரிய அந்த ஆசிரியர்கள் எந்த முகத்துடன் மாணவர்களை நிமிர்ந்து பார்ப்பார்கள்?

`தன்னையே பிறர் தட்டிக்கேட்கும்படி வைத்துவிட்டார்களே இந்த ஆசிரியர்கள்!’ என்ற பதட்டம்தான் ஏற்பட்டது.

`ஆசிரியர்கள் இங்கு மாணவர்கள் இல்லை. அவர்களும் உங்களைப்போல் இருக்க வேண்டிய அவசியமில்லை!’ என்று அடித்துச்சொல்லும் தைரியம் மஹானிக்கு இருக்கவில்லை.

முட்டாள்தனமாக தன் கீழ் வேலை பார்த்த ஆசிரியர்களைத் தாக்கி, அவர்களுடைய மரியாதையையும் இழந்தாள்.

நல்ல தலைவர் எந்நிலையிலும் நிதானம் தவறாது இருக்க முயலவேண்டாமா?

சொந்தக் கதை

மாணவர்கள் சட்டைக்காலர்வரை நீண்ட தலைமுடி வளர்த்துக்கொள்ளக்கூடாது என்ற விதி மலேசியப் பள்ளிகளில் உண்டு. அதை மீறிய ஒரு மாணவனை நான் கண்டித்தபோது, “நீங்கள் மட்டும் முடியை நீளமாக வளர்த்துக்கொண்டிருக்கிறீர்களே!” என்று சாடினான்

நான் நிதானமாக, “நான் ஆணுமில்லை, இங்கு படிக்க வந்த மாணவனுமில்லை,” என்று பதிலளித்தேன்.

என்னைக் கேவலப்படுத்துவதாக நினைத்து அவன் கூறியது அவனுக்கே அவமானத்தை விளைவித்தது. முகம் சிறுக்க அப்பால் போனான்.

மாற்றவேண்டியதை மாற்று!

ஒரே நிலையில் இருப்பது ஒருவருக்குப் பாதுகாப்பான உணர்வை அளிக்கலாம். ஆனால், `மாறுதல்’ என்பது பல சமயங்களில் நன்மை விளைவிக்கும். மாறும் காலத்திற்கேற்ப நாமும் மாறத் தயாராக இருக்கவேண்டும்.

எந்த மாறுதலையும் ஏற்கத் துணிவற்ற தலைவர்கள் பிறர் சொல்வதைக் கேட்பதில்லை. தம் சொற்படி கேட்காதவர்களுக்குத் தண்டனை அளிக்கவும் தயங்குவதில்லை. இப்போக்கினால் அவர்களுக்கும் நிம்மதி கிடையாது, அவர்கள் சொற்படி நடப்பவர்களுக்கும், ஏன், எதிர்ப்பவர்களுக்கும்கூட நிம்மதி பறிபோய்விடும்.

குறுக்கீடு எதற்கு?

எந்தக் காரியமும் செய்ய ஆரம்பிப்பதற்குமுன் அதன் நெளிவு சுளிவுகளைப்பற்றித் தெளிவாகச் சொல்லிவிட்டால் குழப்பம் வராது.

வேலையைப் பிறருக்குப் பகிர்ந்தளித்தபின் அடிக்கடி குறுக்கிடும் தலைவர்களைப்பற்றி என்ன சொல்ல! இப்போக்கினால் வேலையும் தாமதமாகும், செய்பவருக்கும் எரிச்சல் மூளும்.

தகுதி இருக்கிறதா என்று முதலிலேயே பார்த்துத்தானே வேலையை அளித்திருப்பார்கள்? பின் எதற்காக குறுக்கிடுவது?

மாறாக, அவர்களுடன் இணைந்து செய்தால் உறவு பலப்படும். விறைப்பாக நடந்துகொள்வதற்குப் பதில் தட்டிக்கொடுத்து வேலை வாங்கினால், இரு தரப்பினருக்கும் நிறைவாக இருக்குமே!

பிழைகளே பாடம்

ஒரு வேலையில் புதிதாக நியமனம் ஆனவுடன் தவறுகள் புரிவது இயற்கை. அதனால் மேலதிகாரி கண்டபடி தாக்கினால், முன்னேறுவது எப்படி? அறியாமல் செய்யும் பிழைகளைப் பாடமாக எடுத்துக்கொள்ளும் சுதந்திரம் இருந்தால், பொறுப்புகள் அதிகரிக்கும்போது மன உளைச்சலும் அதிகமாகாது தடுக்கலாம்.

அப்படியே ஒருவர் பிழை புரிந்தாலும், தலைவர் பலபேர் முன்னிலையில் அவரை அவமானப்படுத்தாது, தனியாக அழைத்துச் சொல்லலாமே!

ஒரு குடும்பத்தலைவியிடமிருந்து கற்ற பாடம்

“உன் தாய் உன்னை ஓயாமல் திட்டிக்கொண்டே இருக்கிறாளா! உன்னால் எப்படி பொறுக்க முடிகிறது?” ஒரு பெண் தன் தோழியைக் கேட்டாள், அதிசயத்துடன்.

“நான் சரியாக நடந்துகொள்ளாததால் திட்டுகிறாள். அதோடு, தனியாக அழைத்துத்தானே செய்கிறாள்!” என்ற பதில் வந்தது.

அந்த தாய் மகளைத் திருத்தும் நோக்கத்துடன் கடுமையாகப் பேசியிருக்கலாம். பிரச்னை என்று வந்தால், அதை எப்படி மாற்றுவது என்றும் வழி காட்டியிருக்கலாம். ஆனால், மகளுடைய நிலையில் தன்னை வைத்துப் பார்த்து, அவளுடைய தன்னம்பிக்கைக்குப் பங்கம் வராதபடி நடந்துகொண்டாள். அதனால் வருத்தம் உண்டானாலும், தாய்மீது கோபம் எழவில்லை மகளுக்கு.

ஒரு தலைவர் முறைகேடாக நடந்தால், பிறரும் அவ்வழியைத்தான் பின்பற்றுவார்கள். (`தலைவரே அடிக்கிறார், நாம் செய்தால் என்ன?’ – இது லஞ்ச ஊழல் பெருகியிருக்கும் நாட்டில் ஒருவர் தன்கீழ் வேலை பார்த்தவர்களுக்குக் கூறிய அறிவுரை!))

`நகத்தைக் கடிக்காதே!’ என்று ஓயாமல் மகளைக் கண்டிக்கும் தாய்க்கே அப்பழக்கம் இருந்தால், மகள் எப்படித் திருந்துவாள்?

பிறரிடம் தாம் எதிர்பார்ப்பதன்படி தாமும் நடப்பவர்களே சிறப்பான வழிகாட்டிகளாக அமைகிறார்கள்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *