சங்கப் பாடல்களில் கூற்றும் / கதைசொல்லியின் குரலும்

0

முனைவர் ஆ.சந்திரன்

உதவிப்பேராசிரியர்

தமிழ்த் துறை

தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)

திருப்பத்தூர்

வேலூர்

பண்டைக்கால புலவர்களின் உணர்வின் வெளிப்பாடுகளை நமக்கு உணர்த்தி நிற்பவை சங்கப் பாடல்கள். ஏறக்குறைய ஐந்நூறு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகால அளவில் பரந்து விரிந்த தமிழ் நிலப்பரப்பில் புலவர்களின் தன்னுணர்ச்சிப் பாக்களாக உருவான அப்பாடல்கள் பின்னர், அகம் – புறம், திணை – துறை, கூற்று என்று பல நிலைகளில் பகுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. புறப்பாடல்களில் கூற்று என்பது புலவர் பெயரால் அமைகிறது. ஆனால் அகப்பாடல்கள் கூற்று என்று வரும் போது தலைவன், தலைவி, தோழி என்று கற்பனை பாத்திரத்தின் பொதுப் பெயராக அமைகிறது. இங்கு கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்று உண்டு. அது அகப்பாடல் பற்றியது. அதாவது அகப்பாடல்கள் புறப்பாடல்கள் போல் புலவர்களால் பாடப்பட்டிருந்தாலும் பாடலைப் பாடியவராகத் தலைவனோ, தலைவியோ, தோழியோ அல்லது வேறு ஏதோ ஒரு பாத்திரமாகவோ கருதப்படுகிறது. அதாவது பாடலாசிரியன் வேறு – பாடலில் வெளிப்படும் குரல் வேறு என இது அமைகிறது.

பாடப்பட்டுள்ள பாடல்களின் சில அடையாளங்களைக் கொண்டுதான் இது தலைவன் குரல், இது தோழி குரல், இது தலைவி குரல் என்று இனங்காணமுடிகிறது. இத்தகைய ஒரு சிந்தனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர் கொண்டிருப்பது வியப்பான ஒன்று.  என்றாலும், அவ்வாறு அவர்கள் வகுத்துச் சென்ற கூற்று என்ற வரையறை அனைத்தும் சரியாக அமைந்துள்ளனவா? அவற்றில் மாற்றம் செய்ய இடமுள்ளதா? மாற்றம் செய்ய வேண்டிய தேவை உள்ளதா? என்பன போன்ற கேள்விகளை இன்று சிலர் எழுப்புகின்றனர். அப்பாடல்களின் நுட்பமான பொருளை அறிந்தால் இம்மாதிரியான கேள்விகளுக்குப் பதில்சொல்ல முடியும்.

“கதைசொல்லியின் குரல்” என்ற புதிய சிந்தனை பாடலின் நுட்பப் பொருளை அறிய உதவும்  என நம்பலாம். யார் இந்தக் கதை சொல்லி. கதாசிரியருக்கும் இந்தக் கதை சொல்லியின் குரலுக்கும் என்ன உறவு என்பது பற்றிய விளக்கம் இங்கு அவசியமாகிறது. ”எல்லா இலக்கியப் படைப்புகளும் –எழுத்து ரூபத்தில் இருப்பதால் – அடையாள ரீதியாக சிலவற்றைச் சொல்லும்” இந்த அடையாளங்களில் ஒன்றாக ஒரு குரல் வருவதுண்டு. இந்தக் குரல் ஆசிரியன் குரல் அல்ல. கதைசொல்லியின் குரல்” (தமிழவன்). இந்த விளக்கத்தின்படி பார்க்கும்போது கதை, கதாசிரியனைத் தாண்டி நின்று ஒலிக்கும் குரலாகக் கதைசொல்லி அமைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

“கதைசொல்லியின் குரல்”  என்ற சிந்தனையை முன்னிருத்தி தமிழவன், முனைவர் ஆ. முத்தையன் முனைவர் ஆ.சந்திரன் முதலானோர் நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் சில புதிய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். இவை இயல்பான வாசிப்பில் காண இயலாதவை. இத்தகயை ஒரு முயற்சி அதாவது, “கதைசொல்லியின் குரல்” என்ற சிந்தனையை முன்நிறுத்தி சங்கப் பாடல்களை வாசிக்கும் முயற்சி இதுவரை நடந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அதே வேளை சிவத்தம்பியின் சில கருத்துகள் இம்மாதிரியான அடையாளக் குரலைக் காணமுடியும் என்பதற்கு வழிகாட்டியாக அமைகிறது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

புறநானூற்றுப் பாடலின் கதையாடலைக் கட்டவிழ்க்கும் அவர் “மாவாராதே மாவாராதே எனும் பாடலில் வரும் சோகம் பற்றியோ, கைம்மை காரணமாகச் சாணி மெழுகிய நிலத்தில் போடப்பெற்ற வீரன் ஒருவனின் உடலை எரிப்பதா புதைப்பதா எனக் கேட்கப்பெறும் வினாவின் உக்கிரத்தையோ அன்றேல் ‘துடியன், கடம்பன் பாணன் பறையனென்று இந்நான்கல்லது குடியுமில்லை‘  என்ற பாடலில் காணப்படுகின்ற புதிய மரபு நிராகரிப்பையோ நன்கு விளங்கிக் கொண்டவர்களாக மாட்டோம். புறத்திணைப் பற்றி விதந்துரைக்கப்படாத பல அமிசங்கள் புறநானூறு ஏறத்தாழ 250 ஆவது பாடலுக்குப் பின்னரே பெரும்பாலும் காணப்படுகின்றன” (தமிழின் கவிதையியல். பக்: 12, 13) என்று கூறும் சிவத்தம்பி, தலைவனின் பிரிவால் வாடும் பெண்ணின் அங்கலாய்ப்பாய் அமையும் அப்பாடல் புறத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அத்துடன், குறிஞ்சிப்பாட்டின் தோழி வெளிப்படுத்தும் (குறிஞ்.பா.26-29) கருத்தை ஐயப்படும் அவர், “சங்க அகமரபைப் போன்று இல்லாமல் பிற்கால கோவை இலக்கியங்களில் வரும் தோழி பேசுவது போல் அக்கருத்து அமைவதாகக்” (தொல்காப்பியமும் கவிதையியலும்.பக்: 23, 24) குற்றம் சாட்டுகிறார். இவ்விரு கருத்துகளும் அவருடைய நுட்பமான வாசிப்பின் வெளிப்பாட்டால் உருவானவை. இவை பாடலின் கருத்தோ அல்லது கதாசிரியன் கருத்தோ எனில், இவை கதைசொல்லியின் குரலை அடையாளங் கண்டுகொண்டதால் உருவான கருத்து என்பது புனலாகும். அதனால் கதைசொல்லியின் குரல் என்ற சிந்தனையை அவர் முன்வைத்தார் என்பது அல்ல இங்கு பொருள். அச்சிந்தனையைத் தமிழ் இலக்கியத்தில் பரிசோதித்தவர் தமிழவன். அதே நேரம் சிவத்தம்பியிடம் அப்படிப்பட்ட சிந்தனை இருந்துள்ளது என்பதும் இங்குக் கவனிக்கத்தக்து.

சங்கப்பாடல்கள் அனைத்தையும் இந்தக் கோணத்தில் ஆராய்ந்தால் அகம் – புறம் என்பதைத் தாண்டிய தனிமனித உணர்வுகள் பலவற்றை வெளிக்கொணரமுடியும் என நம்பலாம். அந்த முயற்சியின் துவுக்கமாக எட்டுத்தொகையில் இடம்பெற்றுள்ள அகப்பாடல்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு அவற்றின் அடையாளக் குரல் – அது முன் வைக்கும் கருத்து ஆகியனவற்றை ஆராய முயல்கிவது இக்கட்டுரையின் நோக்கமாகிறது.

நற்றிணை 124 ஆம் பாடல் தன்னுடைய துணை பிரிந்த போது வருந்தும் அன்றில் பறவை போன்ற தனிமைத் துயர் தரும் பருவம் இது எனவே இப்போது நீங்கள் என்னை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டாம் என்ற பொருளைத் தருகிறது. ஆனால் “பிரிவுணர்த்தப் பட்ட தோழி தலைவர்க்கு உரைத்தது” என்று இப்பாடலுக்கு கூற்று வரையறுக்கப் பட்டுள்ளது. இது பொருத்த முடையதாகத் தோன்ற வில்லை.

பொதுவாக தலைவன் கார் காலத்தின் தொடக்கத்தில் வருவேன் என்று கூறிச் செல்வான். தலைவி அப்பருவம் வரும்வரை ஆற்றியிருப்பாள். கார்காலம் வந்தும் அவன் வர தாமதமானால் வருந்துவாள். முல்லை மலர் அவள் வாட்டத்தை அதிகரிக்கும். வாடைத் துயர் அவளை அதிகம் வாட்டும். இவ்வாறு பிரிவு பற்றிய பாடல்கள் அமையும். ஆனால் இப்பாடலில் தலைவன் பிரியக் கருதிய காலம் தலைவியின் ஆற்றாமையை அதிகரிக்கும் கூதிர் பருவம். அதாவது தலைவன் திரும்பி வரவேண்டிய பருவத்தில் பிரியக் கருதுகிறான். அவ்வாறன சூழலைத்தான் பாடல் புலப்படுத்துகிறது. அப்பாடலின் விளக்கம் வருமாறு.

“தன் துணை பிரிந்த காலத்து மற்றோர் அன்றிற்பறவை ஆற்றாது இறந்துபடுதல் போலத் தனிமையுற்று இருக்கும் துன்பமான வாழ்வினை யானும் ஆற்றவியலாது இருக்கும் தன்மையானேன். ஈங்கையின் அரும்பும், மல்லிகை மலரும் உயர்ந்த மணலால் அமைந்த திடலில் உதிர்கின்றன. மான்கள் வன்மையான குளம்புகளினால் மிதித்து அழுத்துகையினால், வெள்ளியை உருக்கிச் சாய்க்கும் கொள்களத்தை ஒத்து வடியும் தெளிந்த நீர்க்குமிழியையுடைய தண்ணீரைப் பெற்றதாகக் கூதிர்ப்பருவம் வந்துவிட்டது. இப்பருவமே யான் ஆற்றாதிருப்பதற்குக் காரணம் ஆகும். ஆதலின் ஐயனே! என்னை விட்டு நீங்காது இருப்பாயாக. நீ நெடுங்காலம் வாழ்வாயாக!” (நற். 124)

மேற்கண்ட பாடலில் “புன்கண் வாழ்க்கை”- “யானும் ஆற்றேன்” “அதுதான் வந்தது” என்பன  தலைவியன் துன்பத்தை வெளிப்படுத்துகின்றன. அதாவது தலைவன் பிரிவைத் தாங்க இயலாமல் தவிக்கும் தலைவியின் குரல் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆக இப்பாடல் தலைவி கூற்றுப் பாடல் என்று கொள்வதே சரியாக இருக்கும்.

அடுத்து நற்றிணை 132 பாடலைப் பார்ப்போம். “பெரிதாய் விளங்கும் இவ்வூரின்கண் உள்ள யாவரும் துயில்கின்றனர். விழித்திருப்பவர் என ஒருவரும் இல்லை” (நற்.132-1) என்று தொடங்கும் இப்பாடல் அதன் பிறகு மழை பொழிவு, ஊரில் இரவு வேளையில் புரியும் கடுங்காவல் பற்றி விவரிக்கிறது. அவ்வாறு இரவு முழுவதும் காவல் கடுமையாக இருப்பதால் தலைவி தலைவனைச் சந்திக்க வாய்ப்பில்லாமல் போகிறது. அதனால் அவள் ”இன்றுகொல் அளியேன் பொன்றும் நாளோ” (நற்132-11) என்று புலம்புகின்றாள் என்று முடிகிறது. இப்பாடலில் தோழி பற்றிய குறிப்பு இல்லை. தோழியிடம் தலைவி பேசுவதாகப் பொருள்கொள்ளவும் இடமில்லை என்பது பாடலில் தெளிவாகப் புலப்படுகின்றது. அப்படி இருக்க இப்பாடல் தோழி கூற்றுப்பாடல் என்று கூற்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

நற்றிணை 36 ஆம் பாடல் “இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது”  என்று கூற்று வரையறுக்கப்பட்டுள்ளது.

குறுங்கை இரும் புலிக் கோள்வல் ஏற்றை,
பூ நுதல் இரும்பிடி புலம்ப, தாக்கி,
தாழ்நீர் நனந்தலைப் பெருகளிறு அடூஉம்
கல்லக வெற்பன் சொல்லின் தேறி,
யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து

அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி,
புரைஇல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து,
ஆனாக் கௌவைத்துஆக,
தான் என் இழந்தது, இவ் அழுங்கல் ஊரே! (நற். 36)

இப்பாடல் தோழி கூற்றுப் பாடல் என்று கொள்ள இடமிருப்பதாகத் தெரியவில்லை. “தலைவனின் சொல்லை நம்பி யாம் எம் நலனை இழந்தோம்” (நற்.36) என்று வருந்தும் தலைவி “இவ்வூர் எதை இழந்தது இப்படி என்னைப் பழி கூறிக் கொண்டுள்ளது” (நற்.36) என்று புலம்புகிறாள். இது பாடலில் தெளிவாக உள்ளது. அப்படியிருக்க இது எவ்வாறு தோழி கூற்றாக அமையும் என்பது கேள்விக்குறி.

ஆனால் “தலைவன் இரவுக்குறியிடத்தே வந்து நிற்க, அதனை அறிந்த தோழி அவன் விரைவில் வரைந்து கொள்ளுதல் வேண்டித் “தலைவனின் சொல்லை நம்பி யாம் எம் நலனை இழந்தோம். ஊர் அலர் தூற்றுகிறது. எம்மைப் போல் இந்த ஊரும் துயிலாது அமைய எதனை இழந்தது” என்று கூறு முகத்தால் “ஊர் உம்மைக் கண்டு கொள்ளும் எனவே வரைந்து கொள்க“ என்று வற்புறுத்துவதாக கூற்று விளக்கம் வலிந்து கூறுவதாகத் தோன்றுகிறது.

தலைவனை அடைய இயலாது தவிக்கும் தலைவியின் உள்ளக் குமுறல் என்பது தான் இப்பாடல் தரும் பொருள். அப்படி வாசிக்க பொருள் தெளிவாகும் நிலையில் வலிந்து பொருள் கொள்ள வேண்டுமா என்பது சிந்திக்க வேண்டியதே. இவ்வாறு கூற்று முறையில் மாற்றம் கோரி நிற்கின்ற பாடல்கள் பல இந்நூலில் உள்ளன.

கதைசொல்லியின் குரல் முன்வைக்கும் கருத்துகள் சில

 “பூவின் அன்ன நலம் புதிது உண்டு

நீ புணர்ந்தனையேம் அன்மையின் யாமே

நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி

மாசு இல் கற்பின் மடவோள் குழவி

பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு

சேணும் எம்மொடு வந்த

நாணும் விட்டோம் அலர்க இவ் ஊரே” (நற்.15)

தலைவியின் நலத்தைக் களவில் நுகர்ந்தான் எனினும் வரைவுக்கு அவன் உடம்படவில்லை என்ற தன் மனவருத்தத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது இப்பாடல். இது தலைவனால் ஏமாற்றப்பட்ட ஒரு தலைவியின் ஆதங்கத்தின் வெளிப்பாடு. அப்படி இருக்க இப்பாடல் தோழிக் கூறுவதாக இதற்கு கூற்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் ஆதங்கக் குரலாக வெளிப்படையாகத் தெரியும் இது ஆய்வுக்குரிய ஒன்று.

அதே வேளையில் காதலிப்பதற்கு முன்பு ஆணின் பண்புகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற சிந்தனையையும் இக்குரல் முன்வைக்கிறது. பெண்ணைக் காதலித்து பின் கைவிடும் செயல் அக்காலத்தில் இருந்துள்ளதை இது வெளிப்படுத்துகிறது.

அகநானூற்றுப் படலில் தோழியின் குரலாக வெளிப்படும் கதைசொல்லியின் குரல் இக்கருத்தை வெளிப்படையாகவே கூறுகிறது. “நெறி தவறிய அறமிலி ஒருவன் இளம்பெண் ஒருத்தியின் அழகிய பெண்மை நலத்தை கவர்ந்து கொண்டான். பின்னர் அவளை அறியேன் என்று அறவோர் முன்னர் அறமற்ற பொய்ச் சூளும் உரைத்தான். அவர் தம் சேர்க்கையை அறிந்தார் வாய்க் கேட்டறிந்த அவையத்தார் அவன் செய்த அடாச் செயலை உண்மையெனத் தெளிந்து தளிர்கள் கொண்ட பெரிய மரத்தின் கவர்த்த கிளையில் அவனை இருகக் கட்டி வைத்து அவன் தலையில் நீற்றினைப் பெய்தனர்” (அகம். 256.13 – 21).

இப்பாடலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான மற்றொரு அம்சம் இந்தச் செய்தி பரத்தையருடன் தலைவன் நீராடிய போது எழுந்த அலருக்கு உவமையாகத் தோழியால் கூறப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று மறுப்பவனுக்கு தண்டனை வழங்கப்படும். ஆனால் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு பரத்தையர் எத்தனைப்பேருடன் வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். இது அக்கால சமூக முரண் பாட்டை நமக்கு உணர்த்துகிறது. வழக்கமாகப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழாசிரியா்கள் கூறும் “ பண்டைத் தமிழர் வாழ்வு ஒருவனுக்கு ஒருத்தி என அமைந்திருந்தது“ என்ற கூற்றை இது மறுக்கிறது.

இவ்வாறு பெண்ணின் ஆதங்கம் அகப்பாடல்கள் பலவற்றில் வெளிப்படுவதைக் காணமுடிகிறது. அவ்வாறான பாடல்கள் சிலவற்றைக் காண்போம்.

“காட்டில் உள்ள மயிலானது பாறையில் ஈன்ற முட்டைகளைக் கருங்குரங்கின் விளையாடும் குட்டிகள் உருட்டி விளையாடும் குன்றுகளையுடைய நாடன்” (குறு.38) என்று தலைவியின் குரலாக வெளிப்படும் கதைசொல்லி, பெண்ணின் (தலைவியின்) நெஞ்சம் பற்றி அறியாமல் அவளை ஒரு போகப்பொருளாக மட்டும் பார்க்கிறான் ஆண் (தலைவன்) என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது. குரங்கு உயிருள்ள முட்டையை கல்லாக நினைத்து விளையாடுவது போல ஆண் பெண்ணின் உடலை நினைக்கிறான். தனக்கும் மனம் உண்டு. அதில் ஆசைகள், ஏக்கங்கள் உண்டு. அவற்றைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தன் உடலை மட்டும் விரும்புகின்ற ஆணின் சுயநல சிந்தனையைத் தோலுரித்துக் காட்டுகிறது இந்தப் பெண்ணின் குரல்.

குரங்கின் பண்பை வைத்து சமூகத்தின் இன்னொரு பண்பினை வெளிப்படுத்துகிறது மற்றொரு பாடல். அப்பாடல் குறுந்தொகை 69 ஆம் பாடல். “இருளில் தாவுதலையுடைய ஆண்குரங்கு இறந்துவிட்டது. கணவனை இழந்து வருந்தும் பெண்குரங்கு கைம்மை வாழ்வினை விரும்பவில்லை. தலைவனைப் போன்ற தொழிலை இன்னும் கற்காத தன்குட்டியைச் சுற்றத்தவரிடம் ஒப்படைத்துவிட்டு உயரந்த மலை சிகரத்திலிருந்து விழுந்து இறந்துபோனது” (குறு.69) என்று வெளிப்படும் கதைசொல்லியின் குரல் கவனிக்கத்தக்கது. “தாவுதலைத் தன்குட்டி கற்கவில்லை.  ஆனால் அதன் தந்தை அதைக் கற்றிருந்தது. அதனால் அது இறந்தது. தான் கைம்மை நிலைக்குத் தள்ளப்பட்டதால் இனி நான் வாழ தயாரில்லை. எனவே என் குட்டியை அதன் தந்தையைப் போல் வளர்க்க வேண்டாம் என்று கூறி உயிர் துறக்கிறது.

இப்படலில் கூறப்படும் கருங்குரங்கு என்பதை ஆணின் குறியீடாகக் கொள்ள இடமுள்ளது. இப்படி கொண்டால், மந்தி என்பது பெண்ணைக் குறிக்கிறது. குட்டி குழந்தையைக் குறிக்கிறது. இப்படிக் கொண்டால் இப்பாடல் ஆணால் கைவிடப்பட்ட பெண் தன் குழந்தையை நல்ல முறையில் (தந்தையைப் போல் அல்லாமல்) வளர்க்குமாறு கூறி இறந்துபோவது இயல்பாக நடைபெற்றுள்ளதை அறியமுடிகிறது. இவ்வாறு கணவனால் ஏமற்றப்பட்ட பெண்கள் வயிற்றிலிருந்த தம் குழந்தை பிறக்கும் வரை அவர்களுக்காக உயிர் வாழ்தனர் என்பதும், அக்ககுழந்தைகளின் எதிர்காலத்தை உறுதிசெய்த பின்னர் தம் உயிரைத் துரந்தனர் என்பதும் புலனாகிறது. இது அச்சமூகத்தில் நிலவிய ஒன்றாக விளங்கிக்கொள்ளமுடிகிறது.

இது மாதிரியான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதை மற்றொரு குறுந்தொகைப் பாடலும் கூறுகிறது. “தலைவியின் நோய்க்குக் காரணம் குறிஞ்சி நிலத்தலைவன் தகுதியில்லாதவன் போலக் கட்டுவிச்சி இது தெய்வத்தால் வந்தது என்று தீமை பயக்கும் மொழிகளை உரைத்தாள்…. வலிய குட்டியின் தந்தையாகிய கடுவனும் அக்கொடிய தலைவனை அறியும். அது தன் கண்களால் கண்ட நிகழ்ச்சியைக் கண்டிலேன் எனப் பொய் கூறாது” (குறு.26) என்று தோழியின் குரலாக வெளிப்படும் கதைசொல்லி ஆணின் தகுதி- பெண்ணின் துயரம் பற்றிய பதிவுகளை நமக்குத் தருகிறது. இப்பாடலில் கூறுப்படும் ஆண் பெண்ணுக்குத் தகுதியில்லாதவன். அதனால் குறிசொல்லும் பெண் இது தெய்வத்தால் வந்தது என்று பொய் சொன்னாள் என்கிறது கதைசொல்லி. அடுத்து அவர்களுடைய காதலை அறிந்தது ஒரு குரங்கு. அதனால் “இவ்விருவரும் காதலித்தார்கள்“ என்று கூறமுடியாது. எனவே தலைவியின் வேதனை அவள் உள்ளத்தை வருத்திக்கொண்டுள்ளது. வருந்துவதைத் தவிர அவளால் வேரென்ன செய்யமுடியும்.

” கதைசொல்லியின் குரல் என்ற அடையாளத்தைக் கொண்டு சங்கப்பாடல்களை வாசிக்கும் போது இவ்வாறு பல புதிய செய்திகளை நாம் அறியமுடியும். அத்துடன் வரையறை செய்துள்ள கூற்று என்ற அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். அகம் என்ற போர்வையில் மறைந்திருக்கும் பல உண்மைகளை மீட்டெடுக்க முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்து நாம் கவனிக்கவேண்டிய ஒன்று குழந்தை பேய் என்ற வெளிப்பாடுகள். “குழந்தையைக் கவர்ந்து கொண்ட பேயை என்ன செய்யமுடியும்? அதுவாக வந்து கொடுத்தால் தான் உண்டு. இல்லையென்றால் போனது போனதுதான் என்று விட்டு விடவேண்டியதுதான்“. அதைத்தவிர வேறேதும் செய்யமுடியாது என்று வெளிப்படும் கதைச்சொல்லியின் குரல் அகமரபை விட்டு வெளியேறிய நிலையைக் காட்டுவதாக உள்ளது. அதாவது இனி தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று காதலனால்  ஏமாற்றப்பட்ட பெண்ணின் அவலத்தை இது புலப்படுத்துகிறது.

தலைவனே! நேற்று உன்னோடு தங்கி உறங்கியவள்…. பூந்துகள் கமழும் கூந்தல் விளங்கிய வகையில் அசையுமாறும், இடையிற் கட்டிய உடை சரியவும், நெருங்கிய வளை ஒலிக்கவும் கண்ணால் பெயர்த்து நோக்கியபடி எமது தெருவில் சென்றாள்… அவள் உன்னுடைய தழுவலிலிருந்து நீங்கி எமது தெருவில் சென்றாள். அத்தகைய இளம் பருவமுடைய பரத்தையை நான் கண்டேன். அவள் உன்னோடு நீடு வாழ்வாளாக” (நற்.20) என்ற கதைசொல்லியின் குரல் இங்கு கவனிக்கத்தக்கது. தன்னை விட்டு நீங்கினாலும் பரவாயில்லை. நீ விரும்பிய – உன்னை விரும்பிய இளம் பெண்ணிடமாவது நீ சேர்ந்து வாழ் என்று தன்னைப் போன்ற வேறொரு பெண்ணுக்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்யத் தயாரக இருக்கும் பெண்ணின் பண்பையும், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளும் ஆணின் பண்பையும் விளக்குகிறது இப்பாடல். பாடல் இவ்வாறு பொருள் தர, “பரத்தையரோடு இருந்து மீண்டவன் ‘யாரையும் அறியேன்‘ என்று கூற, அதற்கு பதில் கூறுவதாக இப்பாடல் அமைகிறது என்றும் தோழி வாயில் மறுத்தது என்றும்” இதற்கு வகுக்கப்பட்டுள்ள வரையறை மறுபரிசீலனைக்கு உரியது.

இவ்வாறு ”கதைசொல்லியின் குரல் என்ற அடையாளத்தைக் கொண்டு சங்கப்பாடல்களை வாசிக்கும் போது பாடலின் பின்புலத்திலுள்ள செய்திகளை நாம் அறியமுடியும். அத்துடன், வரையறை செய்துள்ள “கூற்று“ என்ற அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். அகம் என்ற போர்வையில் மறைந்திருக்கும் மக்களின் வாழ்வியல் உளப்பாங்கை  மீட்டெடுக்க முடியும்.

பயன்பட்ட நூல்கள்

  1. செயபால். முனைவர் இரா., அகநானூறு மூலமும் உரையும், 2004 (முதல் பதிப்பு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.
  2. பாலசுப்பிரமணியன். முனைவர் கு. வெ., நற்றிணை மூலமும் உரையும், 2004 (முதல் பதிப்பு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.
  3. மோகன். முனைவர் இரா., பத்துப்பாட்டு மூலமும் உரையும், 2004 (முதல் பதிப்பு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.
  4. நாகராசன். முனைவர் வி., குறுந்தொகை மூலமும் உரையும், 2004 (முதல் பதிப்பு), நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை – 600 098.
  5. சிவத்தம்பி. கா, தமிழின் கவிதையியல், 2007 குமரன் புத்தக இல்லம், சென்னை – 600 026.
  6. ………………… தொல்காப்பியமும் கவிதையியலும், 2007, குமரன் புத்தக இல்லம், சென்னை – 600 026 .
  7. தமிழவன், அமைப்பியலும் அதன் பிறகும் (ஸ்ட்ரக்சுரலிசம் நூலின் விரிவாக்கப்பட்ட பதிப்பு),  2008, அடையாளம், 1205 / 1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி – 621 310.
  8. …………………, பழந்தமிழ் அமைப்பியல் மற்றும் குறியில் ஆய்வுகள், 2009 (முதல் பதிப்பு), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600 113.
  9. சந்திரன். முனைவர் ஆ., சங்கப்பாடல்களும் கதைசொல்லியின் குரலும், புதிய அவையம் மின்னிதழ்,  http://shcpub.edu.in/shc/publish_paper/?name=Puthiya+Aaviayam
  10. ……..  மாதொரு பாகன் கதைசொல்லியின் குரல், சிற்றேடு தமிழ் காலாண்டிதழ், 2016, volume 2 issue 5 பக் 45 –  48.
  11. முத்தையன் முனைவர் ஆ., நடனக்காரியான 35 வயது எழுத்தாளர், சிற்றேடு தமிழ் காலாண்டிதழ், 2016, volume 3 issue 2, பக் 36 – 39.
  12. ………….. மொழிதல் கோட்பாட்டு நோக்கில் பன்றிக்குட்டி, சிற்றேடு தமிழ் காலாண்டிதழ், 2018, volume5 issue 1 பக் 48 – 51

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *