இரட்டைக் காப்பியங்கள் காட்டும் கனவுகளும் நம்பிக்கைகளும்

2

  -த.அமுதஜோதி                           

 மனித வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளைக் கற்பனை கலந்த சுவையோடு கூறுபவை காப்பியங்கள். இக்காப்பியங்களில் வரும் கனவுகளும் நம்பிக்கைகளும் மக்கள் சமுதாயத்தில் காலங்காலமாக நடைபெற்று வரும் வழக்கமாக உள்ளது. இவை அவர்களது வாழ்வியலின் பிரதிபலிப்பாக விளங்குகின்றன. இத்தகைய கனவு மற்றும் நம்பிக்கைகள் இன்றும் மக்களின் வாழ்வில் இடம்பெறும் பாங்கினை காண்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

 கனவுகள்

உடல் துயின்றாலும் உள்ளம் துயில்வதில்லை. ஆழ்ந்த  உறக்கமில்லாத நிலையில் மனத்திரையில் தோன்றும் காட்சி தான் கனவு. மானிட வாழ்க்கையில் கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். மனிதனின் எண்ணத்தில் உயிர்த்தெழும் கனவுகள், உள்ள உணர்வுகளைப் பிரதிபலித்துக் காட்டுகின்றன. எதிர்கால விழைவுகளையும் தொடர்புபடுத்திக் காட்டுகின்றன.

கனவு சிலருக்குப் பித்த நோயாலும், உண்ட உணவு செரிக்காமையாலும் வரக் கூடும். இது விழிப்பு நிலைக்கும் உறக்க நிலைக்கும் இடையில் உணர்வு தோய்கிறபோது உண்டாகும். அடிமனத்தில் தோய்ந்த எண்ணங்களும் எண்ணங்களின் விளைவுகளும் இடைவிடாத நினைவுகளும்  கனவுகளாக வரும் என்பர் ச.தண்டபாணி தேசிகர்.

கனவுகளை நல்லகனவு, கெட்ட கனவு எனவும் பகற் கனவு, இரவுக்கனவு எனவும் பிரிப்பர். மக்களுக்கு நன்மையோ, தீமையோ வருவது கனவு மூலம் தெரிந்துவிடும். என்று நம்புகின்றனர்.

கனவு-விளக்கம்

கனவு என்ற சொல்லின் வேர்ச்சொல் கனாகாணுதல் என்பதாகும். கனவு பற்றித் தொல்காப்பியர்,

கனவும் உரித்தால் அவ்விடத்தான                      (தொல்,பொருள்,நூ-195)

நாணல் துஞ்ச லரற்றுக் கனவெனாஅ   (தொல், பொருள்,நூ-256)

கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல்    (தொல்,பொருள்,நூ-266)

எனும் நூற்பாக்களில் கூறியுள்ளார். இதன் மூலம் தொல்காப்பியர் காலம் தொட்டு  கனவு பற்றிய சிந்தனை இருந்தமையை உணர முடிகின்றது.

சிலம்பில் கனவுகள்

சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் கனவு, கோவலனின் கனவு, பாண்டிமாதேவியின் கனவு  என மூன்று வகை கனவுகள் கூறப்பட்டுள்ளன. இக்கனவுகள் பின்வரும் நிகழ்வுகளை முன்  உணர்த்திய  உளவியல் விருப்பங்கள் மற்றும் நிமித்தங்கள் ஆகும். பழங்காலப் புராணங்களிலும்  காவியங்களிலும் சரித்திர நாயகர்களின் கனவுகளைப் பற்றியும் அவற்றால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும் எழுதியுள்ளனர். பெரும்பாலும் கனவுகள் எதிர்காலத்தைப் பற்றியே வருவதுண்டு. கனவானது நல்ல செய்திகளைக் கூறுவதை விட எதிர்காலத்தில் நடக்க கூடிய தீமையை உணர்த்துகின்றது. இதைப்போன்ற கனவுகள் எச்சரிக்கை ஊட்டுவதாக அமைகின்றன.

கண்ணகியின் கனவு

சிலம்பில் கண்ணகியின் கனவு எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கூறுவதாக அமைகின்றது. ஆகையால் இக்கனவை எச்சரிக்கைக் கனவாகவும் ஏதோ ஒரு குறியீட்டை  மையமாக வைத்து அமைந்ததாகவும் கூறலாம். கண்ணகி தோழி தேவந்தியிடம் தான் கண்ட கனவினைப்  பற்றிக் கூறும்பொழுது

கடுக்கும்  என்நெஞ்சம் கனவினால்  (சிலம்பு,9-4)

என்று அச்சத்துடனே  ஆரம்பிக்கின்றாள். இதன் மூலம் கனவு  அச்சத்தை ஏற்படுத்தும் என்ற உளவியல் கருத்து இங்கு கூறப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. கோவலனுக்கு எதிர்காலத்தில் தீங்கு வரப்போகிறது என்றும் புகாரை விட்டு வேறு ஊருக்குச் சென்று  அங்கு அரசன் முன் வழக்குரைப்பதாகவும் கனவு கண்டதாக கூறுவதனை ,

…..  இடுதேள் இட்டு  என்தன்  மேல்
கோவலற்கு உற்றது ஓர்தீங்கு என்று  அதுகேட்டுக்
காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன்     (சிலம்பு,9-48-50)

எனும் பாடலடிகள் மூலம் அறியமுடிகின்றது.

கோவலனுக்குப் பின்னர் நிகழப் போகிற நிகழ்வை முன்கூட்டியே கனவின் மூலம் உணர்ந்து தன் தோழியிடம் கூறுகின்றாள்.  கண்ணகியின் கனவு நிகழ்ந்த பிறகு தேவந்தி, வாழ்த்துக் காதையில்,

செய்தவம் இல்லாதேன்
தீக்கனாக் கேட்டநாள் எய்த உணராதிருந்தேன் (சிலம்பு ,29-5)

என்று கூறிப் புலம்புகிறாள். இதன் மூலம்  காணும் கனவுகள் பலிக்கும் என்ற உண்மையை இளங்கோவடிகள் எடுத்தியம்பியுள்ளார். எனும் உண்மையை அறிய இயல்கின்றது.

கோவலன் கனவு

கோவலன் கனவைக் குறியீட்டுக் கனவாகவும், பின் வரக்கூடியதை முன்பே கூறுவதாகவும் கொள்ளலாம். கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து வந்த சமயத்தில்  தான் கண்ட கனவு பற்றி மாடல மறையோனிடம்,

மாமலர் வாளிவறு நிலத்து எறிந்து
காமக் கடவுள் கையற்று ஏங்க    (சிலம்பு,15  101-102)

என்று கூறுகின்றான். இக்கனவு மூலம் கோவலன் மாதவியை  விட்டுப் பிரிந்து வந்தமையால் காமக்கடவுள் கையற்று ஏங்கி அழுவதாகவும்  தன் வாழ்வின் வீழ்வுக்கு காமமே காரணம் என்றும் கருதுவதாக அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. கோவலன் மாதவியோடு ஊடல் கொண்டதும், மதுரைக்குப் புறப்பட்டதும் புகாரில் துன்பம் நேரும் என்ற பயத்தின் காரணமாகவே என்பதைப் புலியூர்க் கேசிகன் தரும் உரை விளக்கத்தால் அறியலாம்.

கோவலனுக்கு எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சியை முன்கூட்டியே கனவில் உணர்த்துவதாக அமைந்திருப்பதனை,

கூறைக் கோள் பட்டுக் கோட்டுமா ஊரவும்
அணித்தகு புரிகுழை ஆயிழை தன்னொடும்
பிணிப்பு அறுத்தோர்  தம் பெற்றி எய்தவும்  (சிலம்பு,15.98-100)

எனும் பாடலடிகள் வாயிலாக உணர முடிகின்றது. கோவலன் ஆடை பிறரால் பறிக்கப்பட்ட நிகழ்ச்சியின் மூலம்  அவன் மீது பொய்க்குற்றம் சுமத்தப்படும் என்பதையும், எருமைக் கடாவின் மீது ஊர்ந்து செல்வதின் மூலம் எமனின் வாகனம் எருமை என்பதையும், கோவலன் அவமானப்பட்டு இறக்கப் போகிறான்  என்பதையும்  இக்கனவு நிகழ்ச்சி எடுத்தியம்புகின்றது. மேலும் கோட்டுமா ஊரவும்” என்று கனவில் கொம்பு வைத்த பன்றி வந்ததாகவும் கூறுகின்றான்.

இவ்வாறு கனவில் பன்றி வந்தால் அரசனால் ஆபத்து உண்டாகும் என்று கனா நூல் கூறுகின்றது. அதேபோல்  பாண்டிய மன்னனால் கோவலனுக்கு ஆபத்து உண்டாகின்றது. இக்கனவு நிகழ்வைப் பெரிதுபடுத்தாமல் மதரைக்குச் சென்ற கோவலன்  கொலையுண்டான். இதன் மூலம்  கனவில் நிகழும் நிகழ்வுகள் எதிர் காலம் பற்றிய பயத்தை மக்கள் மனதில் விதைத்துள்ளது  என்பது தெரியவருகின்றது.

கோப்பெருந்தேவியின் கனவு

கோவலன் கொலையுண்ட அடுத்த நாள் பல தீய சகுனங்கள் நடப்பது போல ஒரு தீக்கனவு காண்கிறாள் கோப்பெருந்தேவி. வெண்கொற்றக்குடை கீழே விழுதல், கடைமணியானது இடைவிடாது ஒலி எழுப்புதல், திசைகள் எங்கும் அதிர்ச்சி,  ஞாயிற்றை இருள் விழுங்குதல் போன்ற பல்வேறு சகுனங்கள் நடைபெறுவதாகத் தோழியிடம்  அரசி கூறுகிறாள்.

இக்கனவின் மூலம் பாண்டியனுக்கும் மதுரை நகரத்திற்கும் ஏதோ தீங்கு நடைப்பெறப் போகிறது என்பதை இளங்கோவடிகள் குறிப்பால் உணர்த்தியுள்ளமையை உணரமுடிகிறது. பாண்டிமாதேவியின் கனவு இயற்கைக்கு மறுதலையான நிகழ்ச்சிகளால் தீய நிமித்தங்களாகக் காட்டப்பட்டுள்ளன.

வெண்கொற்றக் குடையோடு கோல்விழுந்து கடைமணி ஓசை எழுப்புவது- பாண்டிய மன்னனின் அரசாட்சிக்கு வருகின்ற தீமையை முன்கூட்டியே உணர்த்துவதாக அமைந்துள்ளது. கதிரை இருள் விழுங்கல் என்பது-பாண்டிமாதேவியின் நிலையை உணர்த்துவதாகக் கொள்ளலாம். திசை அதிர்தல், பகலில் விண்மீன் விழல், வானவில் இரவில் தெரிதல் ஆகியவை இயற்கையின் மாற்றங்களாகி நாட்டிற்கு வரும் துயரையும், நகருக்கு வரும் அழிவையும் சுட்டுவனவாகக் கருதப்படுகிறது.

இக்கனவை இளங்கோவடிகள் கருப்பம் என்று கூறி மறுபடியும் தந்திருப்பதால், முழுக்க முழுக்க தீயநிமித்ததைக் குறிப்பதாகும். அரசு உடனடியாக விழப்போகிறது என்பதை இந்நிமித்தங்கள் வழியாக உணர்த்தியுள்ளார்.

இவ்வாறு மூன்று கனவுகளும் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை விளக்கிக் காட்டுவனவாக  அமைந்துள்ளன. இன்றும் கனவுகள் பற்றிய நம்பிக்கை  மக்களிடையே வழக்கத்தில் உள்ளன. கனவில் நல்லவை நிகழக் கண்டால் தீங்கு நிகழும் எனவும், தீயவைக் கண்டால் நல்லது நடக்கும் எனவும் கூறிவருகின்றனர்.

நம்பிக்கைகள்

 மக்கள் சமுதாயத்தில் ஒவ்வொரு இனமும் தனக்கெனச் சில பழக்க வழக்கங்களையும்,  நம்பிக்கைகளையும் கொண்டுள்ளன. இன்றைய அறிவியல் உலகில், பழந்தமிழ் மக்களின் நம்பிக்கைகள் அறிவுக்குப்  பொருந்தாதனவாகத் தோன்றலாம். எனினும் ஒரு நாட்டின் வரலாற்றில் இத்தகைய நம்பிக்கைகள் பல அவர்களின் வாழ்வோடு இரண்டறப் பின்னிப்பிணைந்து  கிடக்கின்றன  எனும் உண்மையை  மறுக்க இயலாது.

நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் பண்பாட்டு வளர்ச்சியின்  படிக்கற்கள் எனப்படுகின்றன. அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே  நம்பிக்கைகள் என்பர்.

இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களை  உணராத பொழுதும், மனித வாழ்வில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கற்பிக்க இயலாத பொழுதும் மனித மனமானது சிலவற்றைப் படைத்துக் காரணம் கற்பித்துக் கொள்கிறது. அவைகளே நம்பிக்கைகளாக  உருவாகின்றன.

நம்பிக்கைகள்  காலம் காலமாக ஒரு தலைமுறையினடமிருந்து மற்றொரு தலைமுறையினருக்குப் பரவி வருகின்றன. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரைப் பலவிதமான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளன. நம்பிக்கைகளே மனித வாழ்வினை  இயக்குகின்றன. என்ற வகையில் காப்பியங்களில்  இந்நம்பிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

தொல்காப்பியர் காலம் முதல் நல்ல சகுனம் பார்த்தல் நல்லச் சொற்களைக்  கேட்டபின்பு  போருக்குச் செல்லுதல் ஆகிய நம்பிக்கைகள் வழக்கில்  இருந்தன என்பதை,

படையியங்கு அரவம் பாக்கத்து விரிச்சி  (தொல்,பொருள்,-61)

எனும் நூற்பா வழிஅறியலாம்.  போருக்குச் செல்வதற்கு வீரர்கள் வெட்சி மாலையை அணிந்து கொண்டு தயராகும் போது காரி எனும் பறவை ஒலி எழுப்பினால் அது நல்ல சகுனமாகக் கருதப்பட்டது என்பதை,

வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
கட்சியுள் காரி யெழும்          (புறப்.வெட்சி-3)

எனும் பாடலடிகளால் அறியலாம். பண்டைக்  காலத்தில்  காட்டிடையே மக்கள்  செல்லும்பொழுது ஆறலை கள்வர் மிகுந்த தொல்லை கொடுத்துக் கொண்டேயிருப்பர். ஆறலை  கள்வர்  நடமாட்டத்தைக் “கணத்துள்” என்ற பறவை  சத்தம் எழுப்பி மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த  செய்தியை  சங்க இலக்கியத்தில்

ஆற்றயலிருந்த இருந்தோட் டஞ்சிறை
நெடுங்காற்  கணத்துள் ஆளறி வுறீஇ
ஆறு செல் வம்பலர்  படைதலை பெயர்த்து  (குறுந்,-350)

எனும் குறுந்தொகைப் பாடலடிகள்  மூலம் அறியலாம்.

கூகை அலறினால் சாவு வரும்  என்ற நம்பிக்கை பண்டைத் தமிழரிடையேயும்  இன்றும் தமிழகத்தில் நிலவி வருவதனை அறியலாம். இதனைப் புறநானூறு                அஞ்சுவரு குராஅல் குரலுந் தூற்றும் (புறம்-280)

எனும் பாடலடி மூலம் எடுத்தியம்புகின்றது. காகம் கத்தினால் விருந்தினர் வருவார் என்பது அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழரிடையே நிலவி  வரும் நம்பிக்கையாகும். இதனை,

மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை  மரபின் கிளையோ டார   (குறுந்-250)

எனும் குறுந்தொகைப் பாடலடிகள் மூலம் அறிய முடிகின்றது. இவ்வாறு பழந்தமிழர்களின்  நம்பிக்கைகளைத்  தொல்காப்பியர் காலம் முதல் சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது. இரட்டைக்காப்பியங்களிலும் பல நம்பிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அந்நம்பிக்கைகளை  இன்றும் மக்கள்  கடைப்பிடித்து வருகின்றனர்.

தெய்வம் உறுதல்

தெய்வம் உறுதல் என்பது  குலதெய்வத்திற்கு படையலிட்டுப் பூசை  செய்யும் பொழுது ஏதேனும் செய்ய வேண்டிய முறைகளை மறந்து விட்டால் அக்குலத்தில் உள்ள வயதில் மூத்தப் பெண்ணின் மீது தெய்வம் வந்து  அக்குறையை தீர்க்கும் பொருட்டு தெய்வமுற்று கூறுதல் ஆகும். இதனை அருள் கூறுதல் என்றும் சாமியாடுதல் என்றும் கூறுவர். அவ்வகையில் சிலப்பதிகார வேட்டுவவரியில் மறவர் குலத்தில் பிறந்தப் பெண், அக்குலத்தின் நேர்த்திக் கடனை  தீர்க்கும் பொருட்டு தெய்வம்  உற்றனள்.

அவள் உடம்பின் மயிர்கள் குத்திட்டு நின்றன. கைகளை அகல எடுத்து மேலே உயர்த்தினாள். கானவர் வியந்து நின்றனர். அவ்வூர் நடுவிலே, அவர்கள் கூட்டுணவு உண்ணும் ஊர்மன்றம் இருக்கும். அம்மன்றத்தில் அவள் அடிபெயர்த்து வைத்து தெய்வம் உற்றவளாகி வெறியாடினாள் . பகைவர்களின் ஊர் ஆரவாரம் மிகுந்துள்ளது. ஆநிரைகள் திரண்டுள்ளன. வலிய வில்லினை உடைய இம்மன்றமோ பாழ்பட்டு விட்டது. மறக்குடியில் வழிப்பறியால் வளம் ஏதும் வரவில்லை. அறக்குடியினரைப் போல் யாவரும்  உணவு மறந்து செயலிழந்து அடங்கினர்.

கலையமர் செல்வி கடன்உணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போர் அல்லாள்
மட்டுஉண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின்
கட்டுஉண் மாக்கள் கடந்தரும்     (சிலம்பு,12,  16-19)

என்று தெய்வமுற்றப் பெண் முழங்கினாள். இதன் மூலம் கொற்றவைக்குத் தரவேண்டிய நேர்த்திக் கடனை முறைப்படி தாருங்கள்  என்று கூறியதை  அறிய முடிகின்றது. இன்றும் இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது. குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யும் பொழுது இவ்வாறு  சாமியாடுவதைக் காணமுடிகின்றது. மக்கள் காலங்காலமாக உணர்வாலும் செயலாலும் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை உணர இயல்கின்றது.

கண்துடித்தல்

கண்துடித்தல், பல்லி கத்துதல் போன்றவைகளின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதை இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. உடம்பிலுள்ள ஒரு பகுதி  துடிப்பது கொண்டு எதிர்காலத்தைக் கணிப்பது உண்டு. பெண்களுக்கு வலக் கண் துடிப்பது நல்லது  என எட்கர் தெர்ஸ்டன் கூறுவதும்  இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திர விழாவின் போது கண்ணகியின் கருங் கண்ணும்  மாதவியின் செங்கண்ணும் தத்தம் உள்ளத்தின் நினைவை மறைத்துத் தத்தம் எண்ணத்தை உள் ஒளிக்க முயன்று நீர் வடித்தன.  கண்ணகிக்கு கோவலனை பிரிந்த துயரால் இடக் கண் துடித்தது. மாதவிக்கு ஆனந்தம் மிகுதியால்  வலக் கண் துடித்தது. என்பதை

                            கண்ணகி கருங்கண்ணும் ,மாதவி செங்கணும்
                            உள்நிறை கரந்து ,அகத்து ஒளித்து, நீர் உகுத்தன
                            எண்ணுமுறை,இடத்தினும் வலத்தினும் துடித்தன
                            விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்து  (சிலம்பு,5. 236-240)

எனும் பாடலடிகள் மூலம் அறிய முடிகின்றது. இவ்வாறே சீவகனின் தாய் விசயை, விடியற்காலையில் கனவொன்று கண்டேன். என் வலக்கண்ணும் துடிக்கின்றது.  பல்லியும் நல்ல இடத்தில் கத்துகின்றது .என் மகன் வருவானோ என்று எண்ணும் போதே சீவகன் சென்று நின்றான். என்று கூறப்பட்டிருப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கைகளை அறிய முடிகின்றது.

பேய் நம்பிக்கை

குழந்தை பெற்ற பெண்கள், ஈன்ற பத்தாவது நாளில் பெண்கள் சூழச் சென்று, இரவிலே ஈன்ற துன்பம் தீரக் குளத்து நீரில் நீராடுவது மரபு. அப்போது அவர்களை பேய்தீண்டாதிருக்க வேப்பிலையையும் வெண்சிறுகடுகையும் தடவிக்கொண்டு  செல்வர் என்பதை,

                            அரவாய்க்  கடிப்பகை, ஐயவிக் கடிப்பகை
                            விரவிய மகளிர் ஏந்திய தூமத்துப்
                            புதல்வரைப் பயந்த புனிறுதீர் கயக்கம்
                            தீர்வினை மகளிர் குளனாடு அரவமும்   (மணி,7:  73-79)

எனும் பாடலடிகள் வழி அறிய முடிகின்றது.

இதன்மூலம் குழந்தை பெற்ற பெண்களைப் பேய் தாக்கும்  என்ற உண்மையை  உணரமுடிகின்றது. இன்றும்  குழந்தைபெற்ற  மகளிர் மற்றும் பூப்படைந்த  பெண்குழந்தைகள் வெளியில் செல்லும்  பொழுது கையில் வேப்பிலையைக்  கொண்டு செல்வதை நாம் காணலாம்; இச்செய்திகளின் மூலம்  பேய் பற்றிய நம்பிக்கை காலங்காலமாக இருந்து வருவதனைக்  காணமுடிகின்றது.

தொல்காப்பியர் காலம் முதல் இன்று வரை இக்கனவுகளும் நம்பிக்கைகளும் மக்கள் வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருப்பதனைக்  காண முடிகின்றது. நாம் நினைக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிவருகின்றன. ஆகவே எதிர்மறையான எண்ணங்களை எண்ண வேண்டாம். நல்ல எண்ணங்களையே எண்ண வேண்டும் எனும் சிந்தனையை மக்களிடம் விதைத்துள்ளது காப்பியங்கள். குழந்தைபெற்ற மகளிரையும் பூப்படைந்த பெண் குழந்தைகளையும் தொற்று நோய்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள கிருமிநாசினியாக வெண்சிறு கடுகையும் வேப்பிலையையும் நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்ற அறிவியல் உண்மையை அறியமுடிகின்றது.

துணைநூற் பட்டியல்

  1. சிலப்பதிகாரம் – புலியூர்க்கேசிகன்
  2. மணிமேகலை – புலியூர்க்கேசிகன்
  3. தொல்காப்பியம் – இளம்பூரணர்
  4. திருக்குறள் உரை வளம் காமத்துப்பால் – ச. தண்டபாணிதேசிகர்
  5. குறுந்தொகை – புலியூர்க்கேசிகன்
  6. புறநானூறு – புலியூர்க்கேசிகன்

*****

கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,   தஞ்சாவூர்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இரட்டைக் காப்பியங்கள் காட்டும் கனவுகளும் நம்பிக்கைகளும்

  1. இரட்டைக் காப்பியங்களில் காணப்பட்ட கனவுகள் குறித்து மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள் .. வாழ்த்துக்கள்

  2. கனவுகள் குறித்தும், நம்பிக்கைகள் குறித்தும் ஆசிரியர் வழங்கியுள்ள கருத்துக்கள் அருமை.

Leave a Reply to முனைவர் மு.புஷ்பரெஜினா

Your email address will not be published. Required fields are marked *