-முனைவர் ஆ. சந்திரன்

கருங்குருவியின் வால் மேலும் கீழும் அசைந்துகொண்டிருப்பதை வறட்டுப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த தாடிக்காரன். அவனுக்குப் பித்து பிடித்திருப்பதாக அவ்வூர் மக்கள் திடமாக நம்பினார்கள். அதனால் அவனுக்கு அப்பெயரே நிலைத்துப் போனது; பித்தன். ஆனால் அவனுடைய பெயர் மாணிக்கம். பெயருக்கு ஏற்பத்தான் அவனும் இருந்தான் என்பது தனிக்கதை.

ஊர்மக்களால் பித்தன் என்றும் பிச்சைக்காரன் என்று அழைக்கப்பட்ட மாணிக்கம் பாழடைந்த அந்த இரும்புக் கேட்டின் மேல் மெல்ல அடியெடுத்து வைத்து பக்கவாட்டில் நடந்துகொண்டிருந்த கருங்குருவியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

கீச்… கீச்… என்ற குருவியின் ஓசையைக் காதில்வாங்கிய அவனுடைய மனம் ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கியிருந்தது.

காட்டூரில் ரயில் பயணத்திற்கான வெள்ளோட்டம் அப்பொழுதுதான் முதன்முறையாக நடந்தது. புகையைக் கக்கிக்கொண்டு சீரான வேகத்தில் ரயில் அந்த ஊரைநோக்கி வந்துகொண்டிருந்தது. வயிறுமுட்டத் தின்ற சாரைப்பாம்பாய் வளைந்து நெளிந்து மெதுவாக  நடைமேடையில் நுழைந்து நின்றது. ரயில்வே ஊழியர்கள் ஒன்றுகூடி ரயிலுக்குக் கிடாய்வெட்டி ஆரத்தியெல்லாம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் பக்தி தலைக்கேறியவனாய்க் காணப்பட்டான்.

ஊரே அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. அதிசயமான அந்தக் காட்சியை மக்களிடம் உதிர்த்துவிட்டு மெல்ல ரயில் அங்கிருந்து புறப்பட்டுப் போனது.

ரயில்போன சிறிது நேரத்தில், தண்டவாளத்தின் இரு மருங்கிலும் தலைகவிழ்ந்து நின்ற நெல்மணிகள் நிறைந்த வயலுக்குள் கல்லெறிந்த தேன் கூட்டிலிருந்து பறந்து செல்லும் தேனீக்களாய்ப் புகுந்தனர் வேடிக்கை பார்க்கக் கூடியவர்கள். வயல்வெளிக்குள் சென்ற ரயிலின் பிம்பங்கள் மறைய வாரங்கள் பல ஆயின.

அதன் பிறகு காட்டூர் ரயில் நிலையத்தைத் தினமும் பல ரயில்கள் கடந்து சென்றன. என்றாலும், மக்கள் எவ்வித மாற்றமுமின்றி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது….மணிக்கம் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அன்றிரவு வானில் ஒரே நேர்கோட்டில் வரிசையாக இருந்த மூன்று நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அழகிய அக்காட்சியை அவன் குழந்தைப் பருவத்திலிருந்தே பார்த்து வருகிறான். அதற்குமுன் எத்தனையோ முறை நட்சத்திரங்களைப் பார்த்தபோதும் இல்லாத ஒரு வியப்பு அவனுக்கு அன்று தோன்றியது. அது புதுமையாக இருந்தது அவனுக்கு. எண்ணிறந்த நட்சத்திரங்களின் நடுவே வரிசையாக சம அளவில் இருக்கும் அந்தக் காட்சி அவனுடைய மனதில் வடுவாக நிலைத்துப் போனது.

அவன் வானத்து நட்சத்திரங்களை எண்ணத்தொடங்கிய சமயத்தில் அவனுடைய வயது சிறுவர்களில் சிலர் கல்லை வரிசையாக அடுக்கிக்கொண்டிருந்தார்கள். சிலர் சிறுசிறு செடிகளைப் பிடுங்கி சிறிய குழிகளை நோண்டி அதில் நட்டு வளர்க்கும் வேலையில் மூழ்கியிருந்தார்கள். இன்னும் சிலர் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக நடந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். சிலருக்குச் சத்தமாகக் கத்திப் பேசுவதற்குப் பிடித்திருந்தது. எனவே அவனுடன் விளையாட யாருக்கும் பிடிக்காமல் போனதில் வியப்பொன்றும் இல்லை. அதைப் பற்றி அவன் ஒன்றும் அலட்டிக்கொள்ளவும் இல்லை.

ஒரு நாள் அப்பாவுடன் வயலுக்கு நீர்பாய்ச்சச் சென்றிருந்த மாணிக்கம் வானை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

கருமேகங்கள் வானில் வேமாகச் சென்று கொண்டிருந்தன. நீரைச் சுமந்துகொண்டிருந்த அவற்றைப் பார்த்தவன் தனக்குப் பழக்கமான ஆடு, மாடு, அம்மா, முறுக்குமீசை வைத்திருந்த அப்பா, தங்கச்சிப் பாப்பா, கருவுற்றிருந்த சித்தி என ஒப்பிட்டுக் கொண்டிருந்தான்.

நீரின் சுமையைப் பொறுக்க முடியாத மேகத்துண்டுகள் சில அவனுடைய ஒப்பனையில் மாட்டாமல் தப்பி ஓடிக்கொண்டிருந்தன. அவற்றினுடன் போட்டியிடும் விதமாக வயலில் இருந்து பூச்சிகள் படையெடுக்க ஆரம்பித்தன.

அவ்வாறு புறப்பட்ட தும்பிகளுள் ஒன்று நெற்றியில் மோதி அவனுடைய கவனத்தைச் சிதைத்தது.

அப்பூச்சியைப் பிடித்து விளையாட அரம்பித்தான். அதுவும் அவனுடைய விரல்களின் மேல் நடனம் பழக ஆசைப்படுவதுபோல் நடந்துகொண்டது.

சிறிது நேரத்தில் அவனை நோக்கி ஏராளமான பூச்சிகள் படையெடுத்தன. ஒரு கட்டத்தில் சூறாவளியில் சிக்குண்ட இரும்புத் தூணாய்ப் பூச்சிகளுக்குள் நின்றான் அவன்.

“ஏய் மாணிக்கம்! மழைவரும் போல் இருக்கு”  என்று சற்றுத் தொலைவில் இருந்த தன் மகனை அழைத்தவாறே வெண்டைக்காய்த் தோட்டத்திற்குள் சலசலப்புடன் ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் நீரின் மடையை நெல் வயலுக்குள் திருப்பிவிட்டு மோட்டாரை நீறுத்த ஓடினான் மாணிக்கத்தின் அப்பா வேலாயுதம். அதற்குள் வானம் சிந்திய நீர்த்துளிகள் அவனை முழுமையான நீராட்டின.

தன்னுடைய தந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது வெள்ள நீர் முழங்காலைக் கடந்து போனதால் தந்தையின் தோள்மீது அமர்ந்து வீட்டிற்குப் போனான்.

தன்னுடைய அப்பாவின் அருகில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் எப்போது உறங்கினான் என்று தெரியாது. கிழக்கில் உதித்த கதிரவனின் கரங்கள் அவனுடைய கண்களைத் தழுவ உறக்கம் அவனை விட்டு விடைபெற்றுச் சென்றது.

அவன் எழுந்த போது அம்மா மாட்டிற்குத் தண்ணீர் வைத்துக்கொண்டிருந்தாள். அப்பா அப்போது வயலில் இருப்பார் என்று தெரியும்; அதனால் அவன் வேகமாக நடந்து செல்லும் தொலைவிலிருந்த வயலை நோக்கி நடந்தான். இல்லை… இல்லை… ஓடினான்.

நேற்றுப் பெய்த மழையால் புத்துணர்ச்சி பெற்ற நெல்மணிகள் அவனுடைய கால்களை வருடி மகிழ்ந்தன. இல்லை…இல்லை… அவன் அவற்றை வருடி மகிழ்ந்தான்.

நெல்மணிகளின் புன்னகையுடன் பள்ளியை அடைந்தான்.

ஆங்கில ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். ”ரெயின் ரெயின் கோ அவே”  என்ற பாடலைப் பாடியமைக்காக அவனுக்கு பள்ளியில் நல்ல பெயர் உண்டானது. பல முறை அப்பாடலைப் பாடுமாறு பள்ளியில் கேட்டதுண்டு. அவனும் மகிழ்ச்சியாகப் பாடியுள்ளான்.

அவன் வளர வளர வயலோடு சேர்த்து வானத்து நட்சத்திரங்களுடனும் நெருக்கமானான். மனிதர்களுடன் பழகுவதைவிட அதிக நேரம் அவனுடைய நெருக்கம் அதிகமாக இருந்தது. வயலில் இருக்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதால் அவனுக்கு நேரம் போவதே தெரிவதில்லை. சில நேரம் அதனால் கல்லூரிக்குத் தாமதமாகப் போனதுண்டு.

அப்படிப் போகும்போது அவனை ஆசிரியர்கள் மட்டுமன்றி சக மாணவர்களும் கிண்டல் செய்வதுண்டு. அப்படி ஒரு நாள் அவனது வரவால் தன்னுடைய பாடம் தடைப்படுவதாகக் கோபங்கொண்ட ஆசிரியர், “ஏன் லேட்”….  என்றார் சத்தமாக.

“வயல்ல கொஞ்சம் வேலையிருந்தது…… அதனால…… ” என்று மாணிக்கம் தயங்கியவாரே மெதுவாகச் சொல்ல…..

சரி… சரி…  வா! வா! என்றவர், தன் கடமையைத் கடுகடுப்புடன் தொடர்ந்தார்.

மதியம் சாப்பிட்டு முடித்துவிட்டு கைகழுவச் சென்றபோது அவனுக்கும் ரமேஷ்க்கும் சின்னதாக ஒரு கைகலப்பு. பிரச்சனை ஆசிரியர் வரை போனது.

இருவரும் விசாரணை வளையத்தில் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.

ரமேஷ் தரப்பில் அவன்தான் என்னை முதலில் அடித்தான் என்று சொல்லப்பட்டதால் ஏன் அடித்தாய் என்ற கேள்வி மாணிக்கத்தின் மீது பெரிதாக எழுந்தது.

“காட்டுவாசின்னு என்னைத் திட்டினான் அதனால் தான் அவனை அடித்தேன்னு” நடந்ததைச் சொல்லி பூமியைப் பார்த்து நின்றான் மாணிக்கம்.

அந்த நிகழ்விற்குப் பிறகு அவன் தலை வானத்தை நோக்கியே நின்றது எப்போதும்.

அதற்குக் காரணம் அவனுடை கண் பார்வைக்கு அன்று புதிய ஒளி கிடைத்தது. ஆசிரியர் வழியில்.

மனித இனத்தின் உன்னதத்தைப் பற்றிய அந்த விளக்கம் அவனுடை மனதில் பசுமையாய்க் குடிகொண்டது.

தன்னுடைய ஊரின் சிறப்பைப் பற்றி அறிந்துகொள்ள அவன் அன்று தன்னுடைய பயணத்தைத் தொடங்கினான்.

காட்டில் வாழும் யானை, புலி, சிங்கம், ஓநாய்களைப் பற்றி அறிந்திருந்தவனுக்கு அவனுடைய காட்டூரின் வரலாறும் அதன் அருமையும் விளங்கியது.

தன்னுடைய சிறப்பை மனதில் சுமந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்தவனுடைய பார்வையில் தண்டவாளத்தின் இருபுறமும் ஆங்காங்கே புதிதாக முளைத்திருந்த வீடுகள், ஊரின் மையப்பகுதியில் இருந்த இரண்டு பெரிய உரக்கடை முதலியன பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

பேருந்திலிருந்து இறங்கி வீடு நோக்கி நடந்துசென்றவன் வழக்கமாகக் குடிக்கும் பன்னீர் சோடாவைக் குடிக்க பெட்டிக் கடையை நோக்கி போனான். அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

குழந்தைப் பருவத்திலிருந்து பார்த்து வந்த பெட்டிக்கடை அந்த இடத்தில் இல்லை. அதற்குச் சற்றுத் தள்ளி பெரிய குளிர்பானக் கடை ஒன்று புதிதாய் முளைத்திருந்தது. பளபளப்பான டிஜிட்டல் பேனருடன் இருந்த அந்தக் கடையை உற்றுப்பார்த்தவனுக்குக்  காணாமல்போன பெட்டிக்கடை மனக் கண்ணில்  தெளிவாய்த் தெரிந்தது.

அதைப்பற்றி ஊரில் உள்ள மக்களிடம் கூறினான். அவன் கூறியதைப் பலர் நம்பவில்லை. சிலர் நம்பினாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

விடாப்பிடியாய் தன்னுடைய கருத்தைக் கூறிக்கொண்டு வந்துகொண்டிருந்த அவனுடைய பாதையில் ஒருத்தன் குறுக்கிட்டான். யாருடைய கண்ணுக்கும் எளிதாகத் தெரியாமல் இருக்கும் அவன் என்ன என்ன செய்வான் என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

அவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் வானிலிருந்த மூன்று நட்சத்திரங்களில் ஒன்று கீழே விழுந்தது. அவனுக்குப் பிரமை உண்டாக அதிர்ந்தான். அவனுடைய அந்த அதிர்ச்சியைப் பார்த்து அவ்வளவு காலம் அவனுடன் பயணித்த கருங்குருவி வாலாட்டிக்கொண்டு அங்கிருந்து பறந்துபோனது.

அதுவரை கருங்குருவி இருந்த இடத்திற்குப் பின்னால் மறைந்திருந்த ஒற்றைக் கண்ணனைக் கண்கொட்டாமல் பார்த்தான் மாணிக்கம்.

அவனுடைய பார்வையில் வழக்கம் போல் அன்றும் எவ்வித பதற்றமும் இல்லை…….

கம்பீரமாய் நடக்க ஆரம்பித்தான்…

*****

கதாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
தமிழ்த் துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி)
திருப்பத்தூர், வேலூர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *