விட்டலாச் சாரியாரின் படமும் – பெரும் விந்தைசெய்ய மாறுதுதான் தடமும் – ரத்தம் சொட்டுகின்ற பேய்பிசாசு செய்மாயா ஜாலங்கள் அன்று – கிராபிக்ஸ் – இன்று!
ஆந்திரரை கொல்டிகளும் என்று – அன்று அங்கலாய்த்த தமிழினமும் இன்று – கை ஏந்தவந்த கிராஃபிக்ஸை ஏற்றுவக்கும் செயல்சகிக்க வில்லை – ரசிகர் – தொல்லை!
அறிவியலின் நுட்பங்கள் கொண்டு – காட்சி அதிரடியாய் மாறுவதைக் கண்டு – ரசிகர் அறிவின்றிக் கரம்தட்டி ஆரவாரம் செய்கின்றார் மிகுந்து – அரங்கு – புகுந்து!
அறிவைமிக விழுங்குதுதான் நுட்பம் – மேலும் ஆழமாகும் நடிகர்ரசிகர் நட்பும் – நன்கு புரிந்துகொண்ட இயக்குனர்கள் புத்தியற்ற ரசிகர்கண்டு சிரிப்பார் – கயிறு – திரிப்பார்!
தூக்கிவிடும் ஊடகங்கள் தாங்கும் – மகிழ்ந்து தருகின்ற பணத்திற்காய் ஏங்கும் – நாட்டை சீக்காளி ஆக்கும்துயர் சீர்கெட்ட செயலாற்றிப் பிழைக்கும் – தவறு – இழைக்கும்!
தமிழ்த்திரையின் வளர்ச்சிஉச்ச கட்டம் – என்று தம்பட்டம் அடித்தலுமே மட்டம் – கடலுள் அமிழும்கலம் தன்னைவிட்டு அகலாது அழியும்ரசிகர் கூட்டம் – கொள்வார் – வாட்டம்!
என்றைக்குத் தணியும்திரை மோகம்? – மேலும் இதுவளரின் நாடுமிகச் சாகும் – நன்கு கொன்றிதனைப் புதைப்பதற்குக் கொள்கைதனை யார்வகுப்பார் இங்கு? – கொள்வோம் – பங்கு!

கவிஞர் இடக்கரத்தான்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *