-திருச்சி புலவர் இராமமூர்த்தி

முன்னர் ‘வளவ நின் புதல்வன் ‘ என்ற பாடலில் கொலைக் குற்றம் செய்தவனுக்கு ஆதரவான நீதி மன்ற வாதங்களை எடுத்துரைத்த அமைச்சரின் தொகுப்புரையைக் கண்டோம். அதனைப் போலவே கொலை செய்யப்பட்ட ஆன்கன்றுக்கு ஆதரவாக அரசன் கூறிய சட்டம் மற்றும் நீதி சான்ற நுட்பம் மிக்க வாதங்களைச் சேக்கிழார் பாடிய சிறப்பை இக்கட்டுரையில் காணலாம்.

மனுநீதிச் சோழன் அமர்ந்திருந்த அறைக்குள் எந்த  அவலவோசையும், இதுவரை கேட்டதில்லை. புதிதாக அரசன் செவியில் விழுந்த ஆராய்ச்சிமணி யோசை அரசனை, திடுக்கிடச் செய்தது. இந்த ஓசை, அரசனுக்குப் பழி உண்டாயிற்று என்ற அறிவிப்போ, அவன் முன்னோர் செய்த பாவத்தின் அறிவிப்போ மரணத்தை உண்டாக்கும் கூற்றுவன் ஏறிவரும் எருமையின் கழுத்து மணியின் ஆரவாரமோ என்று எண்ணி வருந்தினான். ஆகவே ஏதோவொரு மரணத்தினை முன்னாள் உணர்ந்து கொண்டான்.  மணியோசை கேட்ட அரசன் தானே அரியணையிலிருந்து இறங்கி வாயிலுக்கு ஓடி வந்தான்! அங்கிருந்த ஏவலர்கள் முன்னே வந்து அங்கிருந்த பசுவைக் காட்டினர். ‘இப்பசு இங்கிருந்த மணியை அசைத்தது!’ என்றனர்!  நாட்டில் என்ன நடந்தாலும் அதன் காரணத்தை அறிந்து கூறும் கடமை அமைச்சர்களுக்கு உண்டு. ஒரு பசு இப்படித் தானாக மணியை அசைத்து அடிக்குமா? என்ற ஐயத்துடன் அமைச்சர்களை அரசன் நோக்கினான். அவர்களுள் அறிவில் மிக்க அமைச்சர், இளங்கன்று தேர்க்காலில் புகுந்து இறந்த செய்தியைப் பக்குவமாக உரைத்தார்.

அதனைக் கேட்ட அரசன் உடனே அந்தப் பசு அடைந்த துன்பத்தை அடைந்தான். இது மிகச்சிறந்த  மனித இயல்பாகும். மேலும் தன் மகவை இழந்த தாய்ப்பசுபோல் வருந்தினான்; எல்லையற்ற துன்பம் அடைந்தான். ஏங்கினான்; மனக்கலக்கம் கொண்டான். இப்பசுவின் துன்பத்தை எவ்வாறு நீக்குவது என்று எண்ணினான்; இதனை நான் செய்யவில்லை, வேறு யார் செய்தனரோ?’’ என்று எண்ணினான். உலகத்து உயிர்கள் அனைத்தின் நல்வாழ்வுக்கும் உத்தரவாதம் அளிக்கும் தன் ஆட்சியில் ஒரு தாய்ப்பசு துன்புற்றதே என்று எண்ணி வருந்தினான்.  என்ன செய்தால் இத்துன்பம் தீரும்? என்றெண்ணி அப்பசுவை நோக்கி, மிகவும் சோர்வடைந்தான்!

அரசன் துன்புறுவதைக் கண்ட அமைச்சர்கள் பதறிப்போய், அரசனுக்கு ஆறுதல் கூறினர்.  கொலை பலவகையானது. போர்வீரன் தன்னைக் கொல்ல  வந்த எதிரியைக் கொல்வது ஒருவகை; பெருங்குற்றவாளியை மற்றவரிடமிருந்து பாதுகாக்க அரசன் கொல்வது ஒருவகை; எளியோரைக் காக்கக் கொடிய விலங்கைக் கொல்லுதல் ஒருவகை; ஊரை அழிக்கும் பூச்சிகளைக் கொல்லுதல் ஒருவகை; இவற்றையே தன்னால், தன்பரிசனத்தால்,பகைத்திறத்தால்,கள்வரால், உயிர்களால் வரும்  பேராபத்தினை நீக்கும் அரசன் செயல்களாக மன்னனே கூறுகிறான். இவ்வாறன்றி எதிர்பாராமல் ஒரு கொலை நடந்தால், கொலையுண்ட உயிரின் பெருமை, சிறுமைகளுக்கேற்ப அவ்வுயிர்க்கொலைக்கு உரிய கழுவாய் தேட, முன்னோர் கூறிய முறையில் நடக்கலாம்! அதிலும் மற்றோர் உயிரைக்  கொன்று கழுவாய் தேடல் தவறு! ஓருயிரைக் கொன்றால் அத்தகைய உயிர்களைப் பலவகையில் காத்தலும் கழுவாயே! ‘’இவ்வகையில் பசு என்கிற, மிக நல்ல விலங்கைக் கொன்ற பாவத்துக்குக் கழுவாய் இன்னது என முன்னோர் வகுத்துள்ள வழியில் நடந்து கொள்ளலாம்!’’ என்று அமைச்சர்கள் கூறினர். அவ்வாறு செய்யுங்கால் பாவத்தைப் போக்கும் வேள்வி முதலாயின செய்யலாம்! என்றனர். இவ்வாறு செய்வதால் மந்திரங்கள் கூறி மன்றாடி இறைவனிடம் வேண்டி வழிபடுதல் நன்று என்றாலும், இங்கே அதனை, வழக்கன்று, சழக்கு என்கிறான் மன்னன். உண்மையான அறநெறி இத்தகைய வேள்விமுறைகளை ஏற்றுக் கொள்ளாது. என்பது அரசனின் வாதம்.

‘’அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று!’’ என்பது வள்ளுவம்.

‘’கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
 களைகட் டதனோடு  நேர்!’’ என்பதும்  திருக்குறளே! அதனால் அரசன் தன் மைந்தனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்று,  இழந்து விடுவானோ? என்றெண்ணி அமைச்சர்கள் கூறிய கழுவாய் முறையைச் சழக்கு என்று மறுக்கிறான்!

‘‘வழக்கென்று நீர் மொழிந்தால் மற்றதுதான் வலிப்பட்டுக்
குழக்கன்றை இழந்தலறும் கோ உறு நோய் மருந்தாமோ?’’ என்கிறான்.  ஓர் உயிரைக் கொல்லும் அதிகாரம் எவர்க்கும் இல்லை.  அவ்வுயிரும் ‘’திருவாரூர்ப் பிறக்க முத்தி‘’ என்ற உரைப்படி முத்திக்கு உரிய உயிராகும். அத்தகைய ஓர் உயிரைக் கொல்லும் அதிகாரம் எவர்க்கும் இல்லை. கன்றின் உயிரின் சிறப்பு அத்தகையது! அவ்வாறு கொன்றால், கொன்றவரைக் கொல்லுதலே அரச நீதி! ஆதலால் நான் என் மைந்தனைத் தேர்க்காலில் இட விரும்புகிறேன் என்று தன்  அமைச்சன் ஒருவனை அவ்வாறு செய்யுமாறு ஏவினான்!

அரசனிட்ட கட்டளையை மறுக்க வியலாத அமைச்சன், திருவாரூரில்  பிறந்த இளவரசனின் உயிரைக் கொல்வது அரசநிந்தனையும், கொள்கைக் குற்றமும் ஆதலால், தானே தன் உயிரை மாய்த்துக் கொண்டான்!

‘’தன்னுயிர்  நீப்பினும் செய்யற்க  தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை!’’ குறள் நெறியின் படியும்,

‘’அறிவினால் ஆகுவதுண்டோ  பிறிதின் நோய்
தன்னோய்போற் போற்றாக்  கடை!’’ என்ற குறள் நெறியின் படியும் அமைச்சன்  செய்தது தன்மானம் காத்தல், கொள்கை காத்தல் என்ற தூய அறநெறியின் பாற்பட்டதாகும். இதனைக் கேள்வியுற்ற அரசன், தன்  எண்ணமே அமைச்சனையும் கொன்றது என்று பெரிதும் வருந்தினான். இங்கே வள்ளுவர் கூறிய குறட்பாக்களில் , பிறர் என்று கூறாமல் பிறிது , பிறிதின் நோய் என்று, அஃறிணை உயிர்களையும் கருதிய ஆன்மநேய உயிரிரக்கம் புலப்படுகிறது.  அந்த நெறியே மன்னனின் ஆன்மநேய உயிரிரக்கத்தைத் தூண்டியது. அதனாலும், யாரும் அறியாத வகையில் தேரினிடையே புகுந்த அந்தக் கன்றின் செயல் தெய்வத் தன்மை வாய்ந் தாகவும், கன்றை இழந்த பசுவின் கதறலும், கொம்பால் மணிக்கயிற்றை அசைத்து நீதிகேட்ட செயல், விலங்குத் தன்மைக்கு அப்பாற்பட்ட தெய்வச்  செயலாகவும் கருதிய மன்னனின் உய்த்துணர்திறம், இங்கே உற்று நோக்கத்தக்கது. ஆகவே, ஒரு பறவையின் பசி போக்கத் தானேதன் தசையை அரிந்து கொடுத்த வளவனின் பரம்பரை உயிரிரக்கம் கன்றையும் உயர்ந்த உயிராகக் கருதத் தூண்டியது.  அதனால்தான் அமைச்சர்களிடம்,‘’எந்தக் காலத்தில், எந்தப் பசு, இப்படி ஆராய்ச்சி மணியை அசைத்து நீதி கேட்டது?’’ என்று வியந்து கேட்டான். இதனைச் சேக்கிழார், 

“எவ்வுலகில் எப்பெற்றம் இப்பெற்றித் தாம்இடரால்
வெவ்வுயிர்த்துக் கதறிமணி எறிந்து விழுந்தது? விளம்பீர்!” எனக் கேட்டதாக எழுதினர்! ஆகவே பசுவையும் கன்றையும் மேம்பட்ட உயிராகக் கருதித் தன்  மரபுக்கே உரிய ஒரே  மகனை இழக்கக் கருதிய செயல், அறத்தின் பாற்பட்டதே ஆகும். அதனால்தான் ,’’இச்சழக்கு இன்று நான் இயைந்தால் தருமந்தான் சலியாதோ?’’ என்று மிக நுட்பமாக அரசன் கேட்டான்! இவையனைத்தும் குற்றம் செய்த இளவரசனுக்கு எதிரான நியாயமான  வாதங்களாகவே அமைந்து நம் உள்ளத்திற்கு நிறைவு தருகின்றன! அன்று அரசனே நீதி வழங்கும் நிலையில் இருந்தமையால், குற்றம்செய்த மகனை உறவென்று கருதாமல் நீதி வழங்கிய சிறப்பு  புலப்படுகிறது!  இத்தகைய அரசாட்சி எங்கும் காணுதற்கரிது! இதனை முழுவதுமாக விளக்கும் சேக்கிழாரின் பாடலைக் காண்போம்!

‘’ஒருமைந்தன்  தங்குலத்துக்கு  உள்ளான்என்  பதும்உணரான்
‘தருமம்தன்  வழிச்செல்கை  கடன்’என்று   தன்மைந்தன்
 மருமம்தன்  தேராழி   உறவூர்ந்தான்   மனுவேந்தன்
 அருமந்த   அரசாட்சி அரிதோ? மற்  றெளிதோதான்!

இப்பாடலில் வழக்குத் தொடுப்பதற்கும், வழக்கை மறுப்பதற்கும் உரிய இருவகை வாதங்களும்  அமைந்து, நம்மை வியக்க வைக்கின்றன!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *